Saturday, December 22, 2018

என் புரட்சி-1-ரெட்

ரெட்
ரோஸ்லேண்ட் நடன அரங்கை இசை வியாபித்திருந்தது. ஆண்களும் பெண்களும் லிண்டி ஹாப் நடனத்தை, வெறி பிடித்தவர்கள் போல ஆடிக் கொண்டிருந்தனர்.
வேலைக்குப் புதிதாக சேர்ந்த எனக்கு பாஸ்டன் நகரின் இசைக் குழுக்களும், அரங்குகளில் அரங்கேறும் நடனமும் கண்கொள்ளா அதிசயமாகத் தெரிந்தன.
இசை உச்சஸ்தாயியை எட்டி அரங்கம் அதிர்ந்தது.
மாடத்தில் நின்றிருந்த நான், கீழே ஆடும் பேயாட்டத்தைப் பார்த்து மிரண்டேன். பிரஷ்-ஷை கையில் வைத்துக் கொண்டு, மேலும் கீழும் குதித்தேன்.
எனக்கு நடனமாடத் தெரியாது. இருந்தாலும் இசைக்கேற்ப உற்சாக மிகுதியில் துள்ளினேன்.
‘‘ரெட், ஷூ-க்கு பாலிஷ் போட வெயிட் பண்றாங்கடா… சீக்கிரம் போ…’’ விரட்டாத குறையாக அலட்டினார் அரங்கின் மேலாளர்.
வேண்டா வெறுப்பாக கழிவறைக்குச் சென்றேன். சுய தேவையை முடித்து விட்டு வெளியே வந்தவர்கள் தங்கள் காலணிகளை பாலிஷ் செய்வதற்காக, பலகையின் மீது கால் வைத்தவர்களாக நின்றனர்.
இசைக்கேற்ப என் துண்டும் பிரஷ்ஷைப் பிடித்த கைகளும் பரபரப்பாக வேலை செய்ய, விரைவாக வெள்ளையர்களின் காலணிகளுக்கு பாலிஷ் போட்டு விட்டேன்.
என்னுடைய வயதை ஒத்த கறுப்பர்களுடன் ஒப்பிடும் போது, நான் சற்று நல்ல வேலை செய்வதாக உணர்ந்தேன். படிப்பை பாதியில் விட்ட என்னைப் போன்ற சேரிக் கறுப்பர்களுக்கு ஷூ பாலிஷ் போடும் வேலையைப் போன்ற வேலைதானே கிடைக்கும்.
என் வயதுடைய அமெரிக்க வெள்ளையின சிறுவர்கள் இந்த நேரத்தில் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? என் மனம் யோசித்தது. மாலை மறைந்து, இருள் சூழ்ந்த இந்த அரங்கில் நடனமாடக் குவியும் வெள்ளைக்காரர்களுக்கு என்றாவது ஒரு நாள் ஒரு வெள்ளைக்காரச் சிறுவன் ஷூ பாலிஷ் போட்டு விட்டிருப்பானா?
அறிமுகமில்லாத இந்த நகரத்தில் ஷூ பாலிஷ் போடும் வேலை கிடைத்ததே பெரிய விஷயம்தான். நான் வேண்டாமென்றால், இந்த ஷூ பாலிஷ் போடும் வேலையைச் செய்ய எத்தனையோ கறுப்பர்கள் உண்டு.
தந்தையை இழந்த நான் சாப்பாட்டுக்கு பட்ட கஷ்டம் என் நினைவை அழுத்திக் கொண்டே இருந்தது. அதனால் ஷூ-க்களுக்கு பாலிஷ் போடும் வேலை கவுரவக் குறைச்சலாக எனக்கு தெரியவில்லை.
வெள்ளையர்களின் அடிமைகளே கறுப்பர்கள் என்ற சிந்தனை ஆழ் மனதில் பாறை போல உறைந்த பின், நான் செய்யும் தொழிலை கேவலமானதாக யாரும் பார்க்கப் போவதில்லை. பிறகு ஏன் நான் கூச்சப்பட வேண்டும்?
எல்லா கறுப்பர்களையும் போல, இந்த வேலையைச் செய்ய பழகிக் கொண்டேன். ஆனால் என் தந்தையைக் கொன்ற வெள்ளையர்கள் மீதான வெறுப்பு மட்டும் என்னிடம் குறையவில்லை.
ஒரு சில நாட்களுக்குப் பிறகு இசைக் கச்சேரி முடிந்த பின், சில வெள்ளையர்கள் என்னைச் சுற்றிச் சுற்றி வந்தனர். சிலர் கேட்டே விட்டனர். பின்புதான் எனக்கு ‘தொழில்’ பிடிபட்டது.
ஆணுறைகளையும், கஞ்சாவையும் கூடவே விபச்சாரிகள் எங்கு காத்திருக்கின்றனர் என்ற தகவலையும் என்னை அணுகியவர்களிடம் விற்பனை செய்தேன்.
‘‘ஏய்… ரெட்… வேல எப்படி போகுது?’’
வேலையை முடித்து விட்டு அரங்கிலிருந்து வெளியே வந்த நான், காரில் இருந்தவர் கேட்ட கேள்வியால் அசந்து போய் நின்றேன். அவரை அடையாளம் கண்டு கொண்டு புன்னகையை வெளிப்படுத்தினேன்.
ரோஸ்லேண்ட் அரங்கில் ஃப்ரட்டி பார்த்து வந்த வேலையைத்தான் நான் இப்போது செய்து வருகிறேன். லாட்டரியில் பரிசாக கிடைத்த பணத்தில் கார் ஒன்றை வாங்கி ஒய்யாரமாக பவனி வந்தார் ஃப்ரட்டி.
ஒரு சில நாட்களுக்கு முன்பு இதே ரோஸ்லேண்ட் அரங்கில், ஷூ-க்களுக்கு பாலிஷ் போட்ட வேலையைச் செய்தவர்தான் இந்த ஃப்ரட்டி.
‘‘ஆங்… நீங்க ஷூ-க்கு பாலிஷ் போட மட்டும்தான் சொல்லித் தந்தீங்க. நீங்க முக்கிமான சில விஷயங்களை சொல்லித் தரல… அதெல்லாம் இப்போ எனக்கு அத்துப்படி’’
ஃப்ரட்டியும் நானும் சிரித்து விட்டோம். ஷூ பாலிஷ் போடுவதைத் தவிர பிற ‘தொழில்களும்’ எனக்கு பிடிபட்டு விட்டதால் அவர் மகிழ்ந்தார்.
பாஸ்டன் நகருக்கு வந்தவுடன் அக்கா யெல்லா வீட்டில் தங்கினாலும், அவள் விரும்பிய வேலையை நான் தேர்ந்தெடுக்கவில்லை. அந்தப் பகுதியில் அறிமுகமான ஷார்ட்டி மூலம்தான் ஷூ பாலிஷ் போடும் வேலையே கிடைத்தது.
ஷார்ட்டியின் மூலம் பல நண்பர்கள் ராக்ஸ்பரி ஏரியாவில் அறிமுகமானார்கள். கூடவே அனைத்து கெட்ட பழக்கங்களும்…லேன்சிங் நகரத்தில் இருந்து, அக்கா யெல்லா-வின் வீட்டிற்கு வந்த நான், அசல் பட்டிக்காட்டானாகவே இருந்தேன்.
ஆனால் பாஸ்டன் நகருக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே கெட்ட வார்த்தைகள் பேச, சிகரெட் பிடிக்க, மது குடிக்க, கஞ்சா புகைக்க என எல்லா சேரிக் கறுப்பு இளைஞர்களைப் போலவே விரைவிலேயே நானும் மாறினேன். இன்னும் 15 வயதுகூட எனக்கு முடியவில்லை.
இதனை விட ஒரு முக்கியமான மாற்றத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
வெள்ளைக்காரர்கள் போல தலைமுடியை மாற்றி, ‘காங்க்’ செய்து கொள்ளும் கறுப்பர்களின் சுய அவமரியாதைச் சிந்தனைக்கு நானும் ஆட்பட்டேன். வெள்ளையர்கள் உயர்வானவர்கள் என்ற அடிமைச் சிந்தனையின் வெளிப்பாடாக, அவர்களைப் போல கறுப்பர்களும் தங்கள் தலைமுடியை மாற்றிக் கொண்டனர். அதற்கு நானும் விதிவிலக்கல்ல. என் தலைமுடியை ‘காங்க்’ செய்து கொண்டேன். இதற்கு உதவியதும் ஷார்ட்டிதான்…
ஷூ பாலிஷ் போடும் நேரம் தவிர்த்து பெரும்பாலும் ஷார்ட்டியுடனே இருந்தேன்.
இருந்தாலும் ஒரு குறை என்னை வாட்டியது. என் விருப்பத்திற்கேற்ப நடனம் ஆட & எனக்கு லிண்டி ஹாப் நடனம் ஆடத் தெரியாவிட்டாலும் & இந்தத் தொழிலில் நேரம் கிடைக்கவில்லை என்ற ஏக்கம் அதிகரித்தது. ஒரு முடிவெடுத்தேன்.
‘‘அக்கா, நான் அந்த வேலையை விட்டுட்டேன்’’
மகிழ்ச்சியாக உணர்ந்தாள் யெல்லா. தொடக்கத்தில் இருந்தே நான் செய்து வந்த வேலை அக்காவுக்கு பிடிக்கவில்லை.
‘‘அடுத்து என்ன செய்யப் போற மால்கம்?’’
அமைதியாக இருந்தேன்.
வீட்டுக்கு அருகிலேயே ஒரு உணவு விடுதியில் வேலை இருப்பதாகச் சொன்னாள். அதில் வேலை செய்ய எனக்கு விருப்பமில்லை. இருந்தாலும், இனியும் அக்காவின் விருப்பத்துக்கு மறுப்பு சொல்லாமல், வேலைக்குப் போனேன். உணவு விடுதியில் எட்டு மணி நேர வேலை என்பது என் நடனப் பசிக்கு தீனி போட்டது.
அந்த உணவு விடுதியில் எனக்கு ஒரு புது நட்பு கிடைத்தது. அங்கு வருபவர்களில் அவள் மிகவும் அமைதியாக காணப்பட்டாள். எப்போதும் புத்தகமும் கையுமாக வரும் அவள் நாளடைவில் எனக்கு நன்கு பழக்கமானாள். அவளின் வருகை என் வாழ்க்கையில் வசந்தத்தைக் கொண்டு வந்தது.
லாரா.
மிகவும் கட்டுப் பெட்டித்தனமான கிறிஸ்தவ நம்பிக்கை கொண்ட பாட்டியின் கீழ் வளர்ந்த அவள் வெளி உலகம் தெரியாமல் இருந்தாள். நான் நடன அரங்குகளுக்கு அழைத்துச் சென்று, அவளுடன் ஆசை தீர லிண்டி ஹாப் நடனம் ஆடினேன்.
அன்றொரு நாள் ஆடிக் கொண்டிருக்கும் போது, ஒரு வெள்ளைக்காரி அறிமுகமானாள். அவள் பெயர் சோஃபியா. அந்த நொடியிலிருந்து லாரா-வைக் கழற்றி விட்டேன்.
எல்லாக் கறுப்பனையும் போல எனக்கும் ஒரு வெள்ளைக்காரி கேர்ள் ஃபிரண்டாக கிடைத்தது, அந்தப் பகுதியில் எனக்கு ஒரு கவுரவத்தைப் பெற்றுத் தந்தது.
‘‘ஹாய் ரெட்…’’ ஷார்ட்டியுடன் இருந்த நண்பர்கள் என்னை அழைத்தனர். என்னைப் பார்க்க நான் வேலை செய்த இடத்துக்கே வந்து விட்டார் ஷார்ட்டி.
சோஃபியாவுடன் சுற்றத் தொடங்கியதிலிருந்து ஷார்ட்டியை தவிர்த்து வந்தேன்.
‘‘என்னோட வளர்ப்பு டா இவன்… இப்போ வெள்ளைக்காரியை பிடித்துக் கொண்டு என்னை மறந்து விட்டான்’’
ஷார்ட்டி கிண்டல் செய்தவுடன் அங்கிருந்த நண்பர்கள் சிரித்தனர்.
சோஃபியாவுடன் ஊர் சுற்றிய நான், ஒரு நாள் அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். லாராவை அழைத்துச் சென்ற போது மகிழ்ந்த யெல்லா, இப்போது பயங்கரமாக கோபமடைந்தாள். ஒரு வெள்ளைக்காரியுடன் திரிவது அக்காவுக்கு அறவே பிடிக்கவில்லை. கறுப்பு மீதும் கறுப்பர்கள் மீதும் அன்பும், வெள்ளையர்கள் மீது வெறுப்பும் கொண்டிருந்த ஆளுமை அக்கா யெல்லா.
சோஃபியாவிடமிருந்து என்னைப் பிரிக்க அக்கா ஒரு திட்டம் தீட்டினாள்.
(தொடரும்)

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...