Saturday, December 22, 2018

என் புரட்சி-13-கம்பிகளுக்குப் பின்னால்…

கம்பிகளுக்குப் பின்னால்…

பாஸ்டனில் ஷார்ட்டி, ஹார்லெம்மில் சேமி மாமா போல சிறைக்குள்ளும் எனக்கு ஒரு நட்பு கிடைத்தது. அவர் பெயர் பிம்பி. கொள்ளை வழக்கில் தண்டனை பெற்று உள்ளே வந்த பிம்பி சிறைக் கைதிகளுக்கு ஆதர்சமாக விளங்கினார். கறுப்பினக் கைதிகளை மதிக்காத, வெள்ளை காவலர்கள்கூட பிம்பியின் கருத்துகளைக் கேட்டனர்.
அதிகம் வாசிக்கும் பழக்கம் கொண்டவர், மனித நடத்தைகள் குறித்த உளவியலில் சிறந்த அறிவு பெற்றவர். என் மீதும் சாதகமான பாதிப்பைச் செலுத்தினார் பிம்பி. ஆனால் ஆதிக்கம் செலுத்த நான் அனுமதித்தது இல்லை. என்னைப் பற்றி, நான் சிறைக்கு வந்த பின்னணியைப் பற்றி முழுமையாக என்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
ஒரு நாள் மாலை நேரத்தில், சிறை வளாகத்தில் என்னைச் சந்தித்த அவர், “மால்கம், உனக்கு அறிவிருக்கு… அதைப் பயன்படுத்திக்க”என கேட்டுக் கொண்டார்.
அவரது கண்களைப் பார்த்தேன். அவருக்கு பதில் எதுவும் சொல்லவில்லை.
“நீ ஏன் விட்டுப் போன படிப்பை மேற்கொண்டு படிக்கக் கூடாது? ஜெயில்ல இருக்கிற லைப்ரரியையும் யூஸ் பண்ணிக்கோ”. என் மீது அக்கறை காட்டினார். தனிப்பட்ட முறையில் அல்ல. கறுப்பர்களின் நலனில் அக்கறை கொண்டதாகவே அவரது ஆலோசனை இருந்தது.
வெளிப்படையாக பேசும் இயல்பு கொண்ட பிம்பியின் இந்த அறிவுரை எனக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் கல்வியைப் பற்றி பிம்பி சொன்ன வார்த்தைகளை என்னால் சாதாரணமாக கடந்து போக முடியவில்லை.
அன்று இரவு சிறை அறையில் நான் கொந்தளிப்புடன் இருந்தேன். என்னையுமறியாமல் என் பள்ளிக்கூட நாட்களின் நினைவுகள் மேலெழுந்தன.
அப்பா கொல்லப்பட்டபின், அம்மாவுக்கு மனநிலை சரியில்லை என, சமூக நலத்துறை அதிகாரிகள் கட்டம் கட்டி வலுக்கட்டாயமாக அம்மாவை எங்களிடம் இருந்து பிரித்து அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். நீதிபதியின் உத்தரவால், நாங்கள் வெவ்வெறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டோம். சிறுவர்களான நாங்கள் அனாதைகளாகக் கருதப்பட்டு பிரிக்கப்பட்டோம்.
நான் மேசன் நகரில் இருந்த சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டேன். அங்கு படித்துக் கொண்டே ஓர் ஆங்கிலேயரின் உணவு விடுதியில் வேலையும் பார்த்தேன். அப்போது எனக்கு வயது 13.
7-ம் வகுப்பில் நான் ஒருவன்தான் கறுப்பன். அங்கிருந்த வெள்ளை மாணவர்கள் என்னோடு சகஜமாக பழகினர். இருந்தாலும் அவர்களின் உள்ளுணர்வில் நான் ஒரு கறுப்பு அடிமை என்ற எண்ணம் இருக்கத்தான் செய்தது. வகுப்பில் முதல் மாணவனாக, கெட்டிக்கார மாணவனாக இருந்ததால், வகுப்புத் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
அம்மாவை மருத்துவமனையில் சேர்த்த பின், எங்கள் பூர்வீக வீட்டில் அண்ணன் வில்ஃப்ரட்டும் அக்கா ஹில்டாவும் இருந்தனர். வாரந்தோறும் சனிக்கிழமை லேன்சிங் நகரில் இருக்கும் எங்கள் வீட்டிற்கு சென்று சகோதர, சகோதரிகளை பார்த்து விடுவேன். அப்போது ஒரு நாள் அக்கா யெல்லா பாஸ்டனில் இருந்து வந்திருந்தார். அவர் என் தந்தையின் முதல் மனைவியின் மகள். அவரது நடத்தைகள் என் தந்தையை நினைவுபடுத்தியது.
கம்பீரமாக இருந்த அக்கா யெல்லா-வின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் என்னை ஆகர்ஷித்த அந்தத் தருணம் நன்றாக என் நினைவில் உள்ளது.
‘லிட்டில்-லின் வாரிசுகளான நாம இனியும் பிரிந்திருக்கக் கூடாது. ஒற்றுமையா இருக்கணும்’ ஒரு தாயைப் போல அன்பு காட்டினாள் அக்கா யெல்லா.
தந்தை கொல்லப்பட்ட பின், தாயையும் பிரிந்து அனாதைகளாக தவித்த நிலையில், அக்கா யெல்லா-வின் வார்த்தைகள் எங்களுக்கு உயிரூட்டின. வாழ்வு முடிந்திடவில்லை, இன்னும் இருக்கிறது என்ற நம்பிக்கை பிறந்தது.
‘மால்கம், நீ என்ன படிக்கிற..?’
‘‘நான்தான் வகுப்பில் முதல் மாணவன், வகுப்புத் தலைவன்’’ என்று பெருமையாகச் சொன்னேன். பெருமிதத்தோடு என்னைப் பார்த்த அக்கா யெல்லா, கோடை விடுமுறையில் பாஸ்டன் நகரில் உள்ள தனது வீட்டுக்கு வரச் சொன்னார்.
நானும் பாஸ்டன் சென்றேன். கறுப்பர்களின் உலகமான அந்த நகர் என்னை வியப்பில் ஆழ்த்தியது. கறுப்பர்களை பெருமளவில் கொண்ட அந்த நகரில் சில நாட்கள் இருந்தது, என்னிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
லேன்சிங் திரும்பி, 8-ம் வகுப்பில் படிப்பைத் தொடர்ந்தேன். பாஸ்டனில் இருந்து வந்த பின், அங்கு கறுப்பர்களுடன் இயல்பாக இருந்து விட்டு, இங்கு வெள்ளையர்கள் மத்தியில் வாழ்வதை சங்கடமாக உணர்ந்தேன்.
என் தந்தை ஏர்ல் லிட்டில் கொல்லப்பட்ட சம்பவத்தால் வெள்ளையர்கள் மீதான வெறுப்பு என் உள்ளத்தில் வேர் விட்டிருந்த நிலையில், ஒரு நாள் வகுப்பறையில் தனிமையில் இருக்கும் போது ஆங்கில ஆசிரியருடன் நிகழ்ந்த உரையாடல், வெள்ளையர்கள் மீதான வெறுப்பை உறுதியாக என் உள்ளத்தில் நிலைகொள்ளச் செய்தது.
‘மால்கம், எதிர்காலத்தில் நீ என்னவாக ஆசைப்படுகிறாய்..?’
‘வழக்கறிஞராக வர விரும்புகிறேன் சார்… ’
அப்போது கறுப்பினத்தில் வழக்கறிஞர் தொழிலில் யாரையும் நான் பார்த்தது கிடையாது. யாரையும் பார்த்து இப்படி வர வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்படவில்லை. ஏதோ ஒரு உந்துதலில் அப்படி சொன்னேன். வழக்கறிஞரானால் குறைந்தபட்சம், உணவு விடுதியில் தட்டுகள் கழுவும் வேலை செய்ய வேண்டியதில்லை அல்லவா…
‘யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் மால்கம்… உனக்கு வழக்கறிஞர் தொழில் சரிப்பட்டு வராது. நீ ஏன் தச்சுத் தொழிலை தேர்ந்தெடுக்கக் கூடாது? நீ நன்றாக தச்சு வேலை பாக்குறியே…’
ஆசிரியரின் இந்த வார்த்தைகள் என் நெஞ்சில் முள்ளாய் குத்தின. கறுப்பு அடிமை வழக்கறிஞராவதை எந்த வெள்ளையன் விரும்புவான்?
அன்று அந்த ஆசிரியர் சொன்ன வார்த்தைகள் என்னை சிறைச்சாலை வரை கொண்டு வந்து விட்டது. நான் விரும்பியது போலவே படித்திருந்தால், வழக்கறிஞராக ஆகி இருப்பேனா? 8-ம் வகுப்போடு படிப்பை உதறிய நான், இப்போது பிம்பி-யின் அறிவுறுத்தலால் மீண்டும் படித்தால் என்ன என யோசித்தேன்.
வீதியில் திரிந்த காலத்தில் அக்கா யெல்லா-வுக்கு எழுதிய கடிதங்களை, அவளால் படித்திருக்கவே முடியாது. அவ்வளவு மோசமாக இருந்தது என் ஆங்கில அறிவு. அதனாலோ அல்லது எந்த ஆங்கில ஆசிரியரால் நான் இழிவுபடுத்தப்பட்டேனோ அதனாலோ என்னவோ ஆங்கில மொழியைப் பயில்வதென முடிவெடுத்தேன். அஞ்சல் வழிக் கல்வி மூலம் ஆங்கில இலக்கணம் படிக்கத் தொடங்கினேன். பள்ளியில் கற்றிருந்த இலக்கண அறிவை நினைவுக்கு கொண்டு வந்து, ஆங்கில மொழியை ஆழமாகக் கற்றேன்.
அஞ்சல் வழிக் கல்வி மூலம் கிடைத்த புலமையால், சிறையில் இருந்த புத்தகங்களை படிக்கத் தொடங்கினேன். நூலகத்தை பயன்படுத்த தொடங்கிய போது, பிம்பியின் நெருக்கம் இன்னும் அதிகமானது.
மொழியின் வேர்ச் சொற்களில் ஒளிந்திருக்கும் வரலாறுகளைச் சுட்டிக் காட்டினார் பிம்பி. அதனால் மொழியியலின் மீது அதீத ஆர்வம் ஏற்பட்டு, இலத்தீன் மொழியையும் அஞ்சல் வழியில் கற்றுக் கொள்ள முடிவெடுத்து அந்தப் படிப்பிலும் தேர்ந்தேன்.
சிறைக்குள் இருந்த எனக்கு சகோதர, சகோதரிகளிடமிருந்து அவ்வப்போது கடிதங்கள் வந்தன. ஒரு முறை ரெஜினால்ட் எழுதிய கடிதத்தில்,
‘மால்கம், இனிமேல் நீ பன்றி இறைச்சி சாப்பிடாதே…சிகரெட் புகைக்காதே…சிறையில் இருந்து விரைவில் விடுதலை பெறும் வழியை உனக்குச் சொல்கிறேன’ என்று எழுதியிருந்தான்.
எனக்கு இருப்பு கொள்ளவில்லை. இந்த நரகத்தில் இருந்து விடுதலையாவதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். எப்படி என்னை சிறையில் இருந்து வெளியில் எடுக்கப் போகிறான் தம்பி ரெஜினால்ட்? நான், இராணுவத்தில் சேருவதிலிருந்து அதிகாரியை ஏமாற்றி விலக்கு பெற்றேனே… அந்த மாதிரியா..? எப்படி என்னை விடுதலை செய்யப் போகிறான்? என்ன திட்டம் வைத்திருக்கிறான்?
(தொடரும்)
ஃபனான்

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...