Saturday, December 22, 2018

என் புரட்சி-8-முற்றுகையிடப்பட்டேன்!

முற்றுகையிடப்பட்டேன்!


போதைப் பொருள் விற்றது, வழிப்பறியில் ஈடுபட்டது, விபச்சாரத் தரகனாக மாறியது -இதெல்லாமே, ஹார்லெம் நகரின் மோசமான நபர்களில் ஒருவனாக என்னை அடையாளம் காணப் போதுமானதாக இருந்தது.
யூதர் ஒருவரின் சாராயக் கடையில், அன்றைய வியாபாரப் பணம் முழுவதையும் ஒருவன் கொள்ளையடித்துச் சென்று விட்டான். அந்தக் கொள்ளையன் என்னைப் போலவே இருந்ததால், அடையாளங்களின் அடிப்படையில் என் மீது சந்தேகப்பட்டு, அடியாட்கள் என் வீட்டிற்கு வந்தனர்.
நான் திருடவில்லை என உறுதியாக மறுத்து விட்டேன். அதனை நம்பி அவர்கள் சென்று விட்டனர். இருந்தாலும் இந்தப் பிரச்சினையில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக சில நாட்கள் தலைமறைவாக இருந்தேன்.
மீண்டும் ஹார்லெம் வந்து, ஒரு யூதரிடம் வேலைக்குச் சேர்ந்தேன். பழைய உணவு விடுதிகளையும் மதுக்கடைகளையும் வாங்கி சீரமைப்புச் செய்து, கொஞ்ச நாட்கள் கடையை நடத்தி விட்டு பின்பு, நல்ல விலைக்கு விற்று விடுவது அந்த யூதரின் வழக்கம்.
‘‘ரெட் கறுப்பர்கள் இல்லாவிட்டால் அமெரிக்காவில் யூதர்களின் நிலை மோசமாகி விடும்’’. அந்த யூத முதலாளி என்னிடம் சொன்னார்.
‘‘எப்படி?’’ நான் வியப்போடு கேட்டேன்.
‘‘வெள்ளையர்களை விட அறிவாளிகளாக இல்லாவிட்டால் அமெரிக்காவில், கறுப்பர்களைவிட யூதர்கள்தான் மோசமாக நடத்தப்படுவார்கள்’’ வெள்ளையர்களிடமிருந்து நீங்கள்தான் எங்களைக் காப்பாற்றியிருக்கிறீர்கள் என்ற பாவத்தோடு அவர் என்னைப் பார்த்தார்.
யூதர்களின் மேலாதிக்க மனோபாவத்தின் உளவியல் பின்னணியைப் புரிந்து கொண்டேன். அந்த வேலையும் கொஞ்ச நாட்களே நீடித்தது.
*****
ஹார்லெம்மில் வசிப்பவர்களிடம் எல்லா கெட்ட பழக்கமும் இருப்பதோடு, லாட்டரிச் சீட்டு வாங்கும் பழக்கமும் இருந்தது. என்றாவது ஒரு நாள் பரிசு விழுந்து, பணக்காரராகி விடலாம் என்ற ஆசைதான் இதற்கு காரணம். நானும் லாட்டரிச் சீட்டு வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தேன். வெஸ்ட் இண்டீஸ் ஆர்ச்சி என்பவர் இந்தத் தொழிலில் கொடிகட்டிப் பறந்தார்.
ஒரு முறை எனக்கு லாட்டரியில் பணம் விழுந்தது. வெஸ்ட் இண்டீஸ் ஆர்ச்சி முந்நூறு டாலர்கள் தந்தார். அன்று நான் சேமியின் அறையில் தங்கியிருந்தேன். கதவு தட்டப்பட்டது. சேமி கதவைத் திறந்தார். துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த வெஸ்ட் இண்டீஸ் ஆர்ச்சி,
‘‘ரெட், நீ என்னை ஏமாத்திட்ட… உனக்கு பரிசு விழவில்லை’’. ஏமாந்து பணத்தை என்னிடம் தந்து விட்டதாக அவர் உணர்ந்தார். ‘‘இல்ல, ஆர்ச்சி நீங்க நல்லா செக் பண்ணுங்க, பரிசு விழுந்திருக்கு’’. என் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாத ஆர்ச்சி, ‘‘24 மணி நேரம் உனக்கு அவகாசம். பணத்தை ஏற்பாடு பண்ணு’’
மிரட்டி விட்டுச் சென்றார். அடுத்த நாள், ஆர்ச்சியின் மிரட்டல் நினைவில்லாமல், மதுக்கடைக்குச் சென்றேன். நான் எதிர்பார்க்காத தருணத்தில் என் மீது துப்பாக்கியை வைத்து மிரட்டிய ஆர்ச்சி,
‘‘நீ என்னைச் சுடலாம்னு நினைக்கிறாயா?’’ நிதானமாகவும், உனக்கு முன்பு நான் சுதாரித்துக் கொண்டேன் என்பது போலவும் கண்களை உருட்டினார். அடியாள் உலகில் யார் முந்துகிறாரோ அவர்தான் உயிர் தப்ப முடியும். இப்போது ஆர்ச்சி முந்திக் கொண்டார். நான் நிலைதடுமாறி நின்றேன்.
போதை கள்ளச் சந்தையில் அடியாளாக மாறிய நாளிலிருந்தே, கொல்லப்பட்டுத்தான் சாவோம் என்ற நினைப்பு எனக்குள்ளே ரொம்ப நாட்களாக ஓடிக் கொண்டிருந்தது. சாவதற்கு தருணம் வந்துவிட்டது, சுட்டுக் கொல்லப்படப் போகிறோம் என்று உணர்ந்தேன். அதிக போதையில் தள்ளாடிய ஆர்ச்சியை, சிலர் தடுத்தனர். அதிர்ஷ்டவசமாக நான் உயிர் தப்பினேன்.
*****
ஹார்லெம்மில் இத்தாலிக்காரர் ஒருவரிடமிருந்து பணத்தை ஒரு கும்பல் பறித்தது. அதனால் அந்த இத்தாலிக்காரரின் சூதாட்டத் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த வழக்கிலும் என்னை சந்தேகப்பட்டு, போலீசார் தேடினர்.
*****
மதுக்கடையில் ஒரு நாள், இளைஞன் ஒருவனிடம் ஏற்பட்ட தகராறில் அவனை அடித்து உதைத்தேன். அந்த இளைஞனின் நண்பர்களும் என்னைத் தேடி அலைந்தனர்.
*****
இன்னொரு நாள் மதுக்கடையில் போலீசார் என்னை நோக்கி வந்தனர். நல்ல வேளையாக சுதாரித்துக் கொண்ட நான், சட்டென அருகிலிருந்தவரிடம் என்னுடைய துப்பாக்கியைக் கொடுத்தேன்.
போலீசார் வந்து சோதனை செய்த போது என்னிடம் துப்பாக்கி இல்லை. நான் தப்பித்தேன். அவர்கள் என் அறைக்கு வந்து சோதனை செய்திருந்தால், என்னிடம் இருந்த போதைப் பொருட்களைப் பார்த்து, பல துப்பாக்கிகள் வைத்திருந்ததற்கு சமமான குற்றத்தை செய்த வழக்கில் என்னை கைது செய்திருப்பார்கள். நல்ல வேளையாக அதுவும் நடக்கவில்லை.
அடியாளான நான் பல முனைகளிலும் சுற்றி வளைக்கப்பட்டேன். யார், எப்போது என்னைக் கொல்வார்கள் என்ற பீதிக்கு ஆளானேன். அறையிலேயே முடங்கிக் கிடந்தேன். அபின், கஞ்சா, கோகெய்ன் என எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சாப்பிட்டு, போதையில் மிதந்தேன்.
இவற்றோடு சில நேரம் பென்ஸீட்ரின் மாத்திரைகளையும் போட்டு வந்தேன். பயம் ஒரு பக்கம். மறு பக்கம் போதை. நான் எந்த உலகத்தில் இருக்கிறேன் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பகல், இரவு மட்டுமல்ல, நாள் கணக்கு என்று எதுவுமே எனக்கு தெரியவில்லை.
மரண பயம் இல்லாதவனாக என்னை நானே வைத்திருக்க போதையில் மூழ்கினேன். சில நாட்கள் இப்படியே ஓடியது. ஒரு நாள், தெருவில் காலாற நடந்து சென்ற போது, என் அருகில் என்னை மோதுவது போல அதிவேகமாக கார் ஒன்று வந்து நின்றது. நான் பயத்தால் உறைந்து, தள்ளாடி நிலை தடுமாறினேன். இனி தப்பிக்க வழியில்லை, மரணம் என்னை நெருங்கி விட்டதாக பீதியடைந்தேன். காரிலிருந்து இறங்கி வந்த நபர், நான் சுதாரிப்பதற்குள் என்னை கட்டிப் பிடித்தார். அவரை உடனடியாக அடையாளம் கண்டுகொள்ளாத நான் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
‘‘ஹாய் ரெட்! ஹோம் பாய், நான்தான் ஷார்ட்டி’’
எனக்கு மீண்டும் உயிர் வந்தது.
தொடரும்…

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...