எனக்கு மூன்று விஷயங்கள் அப்போது பிடிக்கவில்லை.
ஜெயில், வேலை, ராணுவம்.
அதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஆனால் தம்பி ரெஜினால்ட் பல விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தான். அவன் சொன்ன ஒரு தகவலால் இருவருமே சிரித்து விட்டோம். குடும்ப உறுப்பினர்களின் தற்போதைய நிலையை அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.
‘‘மால்கம், அண்ணன் வில்ஃப்ரட் மதம் மாறிட்டான்’’
‘‘மதம் மாறிட்டானா?’’
‘‘ஆமா, இஸ்லாம் மதம். இப்ப அவன் எப்பவுமே தொப்பியோடதான் இருக்கிறான்.’’
வில்ஃப்ரட்டை தொப்பியுடன் கற்பனை செய்து பார்த்த நான் சிரித்துக் கொண்டே இருந்தேன்.
ரெஜினால்ட் எனக்கு அடுத்துப் பிறந்தவன்.
அக்கா யெல்லா என்னுடன் கூடப் பிறந்தவர் கிடையாது. என் தந்தை, ஏர்ல் லிட்டில்-லின் முதல் மனைவிக்குப் பிறந்தவர்.
லூயிசா லிட்டில். என் அம்மா. என் அம்மாவை திருமணம் செய்த பிறகு, வில்ஃப்ரட், ஹில்டா, பில்ஃபர்ட் பிறந்தனர். அடுத்தது நான்.
ரெஜினால்ட் கப்பலில் வேலை பார்த்து வந்தான். நான் வசதியாக இருப்பதாக அவன் நினைத்துக் கொண்டான். புத்தாடைகள் வாங்கிக் கொடுத்தேன்.
‘‘நாம விரும்புறத அடையனும்னா, அது ஏற்கனவே நம்மள்ட்ட இருக்கிறது மாதிரி தோற்றத்தை உருவாக்கிக் கொள்ளனும் ரெஜினால்ட்.’’
நான், அவனுக்கு ஹார்லெம் நகரிலேயே வேலை ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தேன். அவனை வழியனுப்பி வைத்து விட்டு வந்த எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
சேமி மாமாவிடமிருந்து கடிதம் வந்திருந்தது. ராணுவத்தில் சேருவதற்கான அழைப்புக் கடிதம் அது. அவருடைய முகவரிக்கு வந்திருந்ததை எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.
எனக்கு ராணுவத்தில் சேர அழைப்புக் கடிதம் வந்திருப்பது அறிந்து, பக்கத்து அறைகளில் இருந்தவர்கள் கூடி விட்டனர்.
‘‘ஏய் ரெட், கடைசில உன்னையும் அவங்க விட்டு வைக்கலியா?’’
‘‘போரில் கலந்து கொண்டு சாவதற்குத்தான் கறுப்பர்களின் உயிர் வெள்ளையனுக்கு தேவைப்படுகிறது’’ நான் பதில் சொன்னேன்.
‘‘கடிதத்தைப் படி ரெட்’’ ஆவலோடு கேட்டார்கள்.
‘‘இன்னும் பத்து தினங்களுக்குள் மால்கம் லிட்டில்-லாகிய தாங்கள், அருகில் இருக்கும் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமிற்குச் சென்று, அங்கு மேற்கொள்ளப்படும் சோதனைகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்’’
சப்தமாகப் படித்தேன்.
‘ஏய் ரெட் உன் பேரு மால்கம்-மா?’’
அப்போதுதான் அவர்களுக்கு என் இயற்பெயர் தெரிந்தது. அது 1943-ம் ஆண்டு. யுத்தத்திற்கு கட்டாயமாக ஆள் சேர்த்தனர். ஆனால் ஷார்ட்டி இதில் இருந்து தப்பித்து விட்டதாக அறிந்தேன்.
அன்று முழுவதும், எப்படியாவது ராணுவத்தில் சேருவதிலிருந்து விலக்கு பெறுவது பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். வெள்ளைக்காரர்களின் உளவியலை அறிந்து வைத்திருந்த நான், ஒரு திட்டம் தீட்டினேன்.
ஒரு காமெடி நடிகனைப் போல கண்களை உறுத்தும் வண்ணத்தில் ஆடைகளை அணிந்து கொண்டேன். பார்க்கவே சகிக்காத அளவுக்கு, சிவப்பு நிறம் அதிகளவில் இருக்குமாறு தலைமுடியை ஸ்பெஷலாக ‘காங்க்’ செய்து கொண்டேன்.
ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகத்திற்கு அருகில் சென்றவுடன், அங்கு நின்றிருந்த ராணுவ வீரர் பார்த்து மிரளும் அளவுக்கு, தள்ளாடிய படியும், தாவிக் குதித்தபடியும் சென்று,
‘‘ஹலோ, உங்க ஃபார்மலிட்டிஸை எல்லாம் சீக்கிரம் முடிங்கப்பா. உடனே நான் களத்துக்குப் போகணும். ரொம்ப நேரமெல்லாம் வெயிட் பண்ண முடியாது.’’
நான் செய்த அலப்பறையால், அந்த ராணுவ வீரரும், அங்கிருந்த அதிகாரிகளும் மிரண்டு விட்டனர்.
ஐம்பது பேர், அந்த அறையில் அமர்ந்திருந்தனர். பெரும்பாலும் வெள்ளைக்காரர்கள். அவர்களை உள்ளே அனுப்ப ஒரு பெண் ஊழியர் இருந்தார். அவர் ஒரு கறுப்பர். முதல் தலைமுறையாக இந்த வேலைக்குச் சேர்ந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். காற்றோட்டம் இல்லாத அமைதியாக இருந்த அந்த அறையில், நான் உளறிக் கொண்டிருந்தேன்.
‘‘அமெரிக்க விரோதிகள் ஒவ்வொருவனையும் சுட்டுத் தள்ள வேண்டும். ஒருத்தனையும் விடக் கூடாது. எப்படியாவது நான் ரிட்டயர்ட் ஆகுறதுக்குள்ள ஜெனரலாகி விடுவேன்…’’
அங்கிருந்த அனைவரும் என்னைக் கொன்று விட வேண்டும் என்பது போல பார்த்தனர். அருகிலிருந்தவர் என் உளறல் தாங்காமல் எழுந்து அடுத்த இருக்கைக்கு சென்று விட்டார்.
தங்களின் முதல் பணி என்னைக் கொலை செய்வது, அதன் பிறகுதான் ராணுவத்தில் சேருவது என்பது போல, அங்கிருந்த பனிரெண்டு கறுப்பர்களும் என்னைக் கேலியாகப் பார்த்தனர்.
என் முறை வந்தது. அங்கிருந்த உளவியல் மருத்துவரை முதலில் பார்க்க வேண்டும். நான் அறைக்குச் செல்வதற்கு முன்பாக, அந்த மருத்துவரைப் பார்க்க கறுப்பினப் பெண் உள்ளே சென்றார். அவர் என்னைக் குறித்து தவறாக மருத்துவரிடம் சொல்லியிருப்பார் போல.
கறுப்பனுக்கு கறுப்பனேதான் எதிரி. வெள்ளைக்காரனிடம் தனது விசுவாசத்தைக் காட்ட சக கறுப்பனைக் காட்டிக் கொடுப்பதும், அவனைப் பற்றி தாழ்வாகச் சொல்லுவதும் கறுப்பர்களின் வாடிக்கைதான்.
ரொம்பவும் தொழில்முறையில் அந்த மருத்துவர் என்னிடம் நடந்து கொள்ள முயன்றார். என் உளறலை கவனமாகக் கேட்டார். அவர் சீரியஸாக என்னிடம் கேள்வி கேட்கத் தொடங்கும் போது, தடாலடியாக இருக்கையிலிருந்து எழுந்து, தரையில் படுத்து, இருபுறமும் பார்த்தேன்.
இந்த அறையிலிருந்து அடுத்த அறையை தரைவழியாகப் பார்க்கும் வகையிலேயே அறையின் அமைப்பு இருந்தது. இருக்கையில் அமர்ந்து, உளவியல் மருத்துவரின் முகத்துக்கு அருகில் என் முகத்தை வைத்து,
‘‘சார், பக்கத்து ரூம்-லயும் யாரும் இல்லை. கவனமா கேளுங்க நீங்களும் நானும் வடக்குப் பகுதியில இருந்து வந்திருக்கோம்’’
‘‘நான் வடக்குப் பகுதியில் இருந்து வந்திருக்கிறேனா?’’ அச்சத்தோடு என்னைப் பார்த்தார் உளவியல் மருத்துவர்.
‘‘ப்ச்ச் சத்தம் போடாதீங்க வெளியில் இருக்குறவங்களுக்கு கேட்டிட போகுது’’
வௌவௌத்துப் போன அந்த மருத்துவர் என்ன செய்வதென்று புரியாமல், என் தோற்றத்தைப் பார்த்து பயந்து, அமைதியானார்.
‘‘என்னைத் தெற்குப் பகுதிக்கு அனுப்புங்க. அங்கு இருக்கிற கறுப்பு ராணுவ வீரர்களை ஒன்று சேர்க்கனும்… ஆயுதங்களைக் கொள்ளையடிக்கனும்… வெள்ளையர்களைக் கொன்னு குவிக்கனும்…’’
ரகசிய திட்டத்தைச் சொல்லி விட்டு, ஆசுவாசமாவது போல இருக்கையில் அமர்ந்தேன்.
‘‘இன்று அவ்வளவுதான் மருத்துவ சோதனை, எல்லோரையும் நாளைக்கு வரச் சொல்.’’ வெறியோடு புறப்பட்ட மருத்துவர் கறுப்பின பெண் ஊழியரிடம் சொல்லிக் கொண்டே, கோபத்துடன் வெளியேறினார். என் திட்டம் வெற்றியடைந்ததாக மகிழ்ச்சியடைந்தேன். சில நாட்களில் என் முகவரிக்கு 4தி அட்டை வந்தது. அது ராணுவத்தில் சேருவதில் இருந்து விலக்கு அளிக்கும் அட்டையாகும்.
தொடரும்…
No comments:
Post a Comment