பாஸ்டன்தான் கறுப்பர்களின் சொர்க்கம் என்று நினைத்திருந்த எனது எண்ணத்தை மாற்றியது அக்கா யெல்லாவின் அந்த முடிவு.
அவருக்குத் தெரிந்தவர் மூலம் நியூயார்க்கில் ரயிலில் உணவு விற்பனை செய்யும் வேலை எனக்கு கிடைத்தது.
ஹார்லெம் நகரம். கறுப்பர்களின் சொர்க்கம். அது இப்போது எனது உலகமாகியது. அந்த நகரத்தின் பிரம்மாண்டம், ஆரவாரமெல்லாம் எனக்கு ஆர்வத்தைத் தூண்டவில்லை. ஆனால் கறுப்பினத் தலைவரும், எனது தந்தையின் ஆதர்சமுமான மார்கஸ் கார்வி-யின் தொண்டர்கள், ஹார்லெம் நகரில் நடத்திய கறுப்பர்களின் பேரணிதான் எனக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது. அந்த ஃபோட்டக்களை என் தந்தை எனக்கு காட்டியது நினைவுக்கு வந்தது.
ரயிலில் வேலை கிடைத்தவுடன் ஹார்லெம் நகரில் பிரபலமாக இருந்த ஸ்மால் பாரடைஸ் இரவு விடுதிக்கு அருகில் வாடகைக்கு வீடு பார்த்தேன்.
ஹார்லெம் நகரை வீதி வீதியாக சுற்றிப் பார்த்தேன். அமெரிக்காவை நிர்மாணம் செய்யும் கறுப்பர்கள், சேரிகளில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி கிடந்தனர்.
அசிங்கமான தெருக்கள். கஞ்சா போதையில் புரண்டு தெருக்களில் கிடந்த கறுப்பர்கள். அலங்கோலமான வீடுகள். ‘காங்க்’ செய்வதற்கான கடைகள். அதிலிருந்து வெளியாகும் மூக்கைத் துளைக்கும் முடி கருகும் நெடி.
விபச்சாரம், சாராயம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை, சூதாட்டம், வழிப்பறி. இந்த சட்ட விரோத செயல்களே ஹார்லெம்வாசிகளின் தொழில்.
முக்கியமான ஒன்றையும் குறிப்பிட வேண்டும்.
தேவாலயம்.
குருவி கூட்டைப் போலவும், தீப்பெட்டிகளைப் போலவும் வீடுகள் இருந்தாலும், சர்ச்சுகளுக்கு குறைவில்லை.
சொர்க்கத்தைக் காட்டி, அதில் நீங்கள் சுகமாக இருப்பீர்கள் என்று நம்ப வைத்து, கறுப்பர்களை அடிமையாகவே வைத்திருக்க இந்த சர்ச்சுகள் வெள்ளையர்களுக்கு உதவின.
ஏசுவையும் வெறுத்தேன். கிறிஸ்தவத்தையும் வெறுத்தேன்.
யாங்கி கிளிப்பர் ரயில் கிளம்பியது. வேகம் அதிகரித்தது. அதற்கு இணையாக எனக்கு வெள்ளையர்கள் மீதான கோபமும் அதிகரித்தது.
“காஃபி…கேண்டி…ஐஸ் க்ரீம்…” கூவிக் கொண்டே பயணிகளைக் கடந்தேன்.
விரைவாகவும், நேர்த்தியாகவும், கொஞ்சம் மரியாதையோடும் வியாபாரம் செய்வதாக பாசாங்கு செய்தால் போதும், வெள்ளைக்காரனை ஏமாற்றி விடலாம். எளிதில் வியாபாரம் செய்யலாம். அதிக டிப்சுகளையும் பெறலாம். இதெல்லாம் ஷூ பாலிஷ் போடும் தொழிலில் கற்று வைத்திருந்தேன். அது இங்கும் செல்லுபடியானது.
ரயிலில் விற்பனை செய்யும் பையன்களிலேயே நான்தான் அதிகம் விற்பனை செய்து வந்தேன். கூடவே அதிக சேட்டை செய்யும் பையன் என்ற பெயரையும் எடுத்தேன். இதுதொடர்பாக உணவு விடுதி நிர்வாகத்துக்கு பலமுறை புகார் சென்றிருந்தது.
வெள்ளையர்களை சீண்டிப் பார்ப்பதும், துடுக்குத்தனமான பேச்சும் என் இயல்பான சுபாவம்.
ஒரு நாள் ரயிலில், “டேய் கறுப்பு அடிமையே…உன்னோடு மல்லுக்கட்டப் போகிறேன். வாடா நாயே சண்டைக்கு…”  பெருத்த உடம்போடு, ஒரு ராணுவ வீரர் போதையில் உளறினார்.
“ரெட் வேணாம்…வா..அடுத்த பெட்டிக்கு போகலாம்…” சக பணியாளன் என் கைகளைப் பற்றி இழுத்தான்.
பயணிகள் எல்லோரும் பார்த்தனர். எனக்கு அவமானமாக இருந்தது.
கழிப்பறை அருகில், சுவற்றில் ஒரு காலை மடக்கி வைத்து சாய்ந்து நின்று கொண்டு, ஒற்றை விரலில் தட்டை ஸ்டைலாக சுற்றி விட்டவனாக, அந்த வெள்ளைக்காரனை முறைத்துப் பார்த்தேன்.
“ஹலோ மிஸ்டர் சாம்… ஒரு சின்னப் பையனோட சண்டைக்கு வரப் போறீங்களா… தோத்துட்டா அசிங்கமாயிடுமே ஜெண்டில்மேன்…”
வெள்ளை ராணுவ வீரனை உசுப்பேற்றினேன்.
அவர் அருகில் ராணுவ வீரர்கள் யாரும் இல்லை. பெட்டியில் இருந்த அனைத்துப் பயணிகளும், வெள்ளை ராணுவ வீரனுக்கும், கறுப்பு அடிமைக்கும் இடையிலான கைகலப்பை பார்க்கத் தயாராக இருந்தனர்.
“மிஸ்டர் சாம்… இவ்வளவு ட்ரெஸ்ஸோடு ஒரு சின்னப் பையன்ட்ட மோத வெக்கமாயில்ல…” போதை தலைக்கேறிய அந்த ராணுவ வீரனைச் சீண்டினேன்.
வெறிப் பிடித்தவன் போல, தன்னுடைய மேல் கோட்டை அந்த ராணுவ வீரர் கழற்றி வீசினார்.
நான் பலமாகச் சிரித்தேன். இன்னும் ஆடைகள் அதிகமாக தங்கள் உடலில் இருப்பதாகச் சொன்னேன்.
ஒவ்வொரு ஆடையாக அந்த வெள்ளைக்காரன் கழற்றினார். இறுதியில் ஜட்டியோடு அந்த ராணுவ வீரர் நின்றார்.
பெருத்த உடம்போடு, நிர்வாணமாக போதையில் தள்ளாடிய அந்த ராணுவ வீரரைப் பார்த்து பயணிகள் அனைவரும் சிரித்தனர்.
அடித்து உதைத்திருந்தால் கூட அந்த வெள்ளைக்காரனை இவ்வளவு அவமானப்படுத்தியிருக்க முடியாது.
அங்கு வந்த ராணுவ வீரர்கள் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
எனக்கு வேலை பறிபோனது.
பாஸ்டனிலிருந்து என்னைத் தேடி அவ்வப்போது சோஃபியா வந்து விடுவாள். அவளுக்கு நியூயார்க் நகரைச் சுற்றிக் காட்டினேன். இசை அரங்கம் அவளை வெகுவாக ஈர்த்தது. நியூயார்க் நகரைப் பார்த்து பிரமித்துப் போனாள்.
பாஸ்டனைப் போலவே, ஹார்லெம் நகர இளைஞர்களும், என்னைப் பார்த்து பொறாமை அடைந்தனர். ஒரு அழகான வெள்ளைக்காரியோடு சுற்றியதற்காக!
அடுத்த வேலை தேடுவதற்கு முன்பாக, என் மனம் வெறுத்த இன்னொரு முக்கியமான வேலையைப் பார்த்தேன்.
(தொடரும்)