Saturday, December 22, 2018

என் புரட்சி-3-நல்ல விபச்சாரிகள்

நல்ல விபச்சாரிகள்


வேலை இழந்த தருணத்தைப் பயன்படுத்தி, கலாமஸு நகரில் இருந்த மனநல மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த அம்மாவைப் பார்த்தேன்.
அம்மா உயிருடன் இருப்பதையே நான் மறந்துதான் வாழ்ந்து வந்தேன்.
அந்த நினைப்பு இல்லாதவாறு என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன்.
அம்மா இருந்த கோலத்தைப் பார்த்து, சிறுவயது நினைவுகளெல்லாம் மேலெழுந்து என் மனதை அழுத்தியது. அப்பா கொடூரமாக கொலை செய்யப்பட்டது, என்னையும் உடன் பிறந்தவர்களையும் வளர்த்து ஆளாக்க அம்மா கஷ்டப்பட்டது, அவர் மனநோயாளியாகி விட்டதாக வலுக்கட்டாயமாக மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது என துயர நாட்கள் என் கண்களை குளமாக்கின.
அந்தக் கொடுங் கனவுகளை எதிர் கொள்ளத் துணிச்சல் இல்லாததால்தான், அம்மாவை மருத்துவமனைக்குச் சென்று பார்ப்பதையே தவிர்த்து வந்தேன்.
அம்மா என்னைப் பார்த்து அடையாளம் கண்டு கொண்டு, மெலிதாக சிரித்தார். மனம் பாரமாகியது. நான் வாழ்ந்த உலகிலிருந்து அப்போதுதான் வெளியே வந்தேன். உற்சாகம் குன்றியவனாக மன வருத்தத்தோடு ஹார்லெம் திரும்பினேன்.
பாஸ்டனில் ஒரு ஷார்ட்டி போல, இங்கு எனக்கு சேமி ‘மாமா’ நல்ல நண்பராக இருந்தார். விபச்சார தரகரான அவரை எல்லோரும் அப்படித்தான் அழைத்தனர்.
‘‘ரெட் ஃபீல் பண்ணாத, அந்த வேலை இல்லன்னா, இன்னொரு வேலை’’.
எனக்கு வேலை இல்லை என்பதை, அவரின் வார்த்தைகள் நினைவுபடுத்தின.
தனது ‘தொழில்’ சார்ந்த பகுதியிலேயே சேமி மாமா எனக்கு வீடு பார்த்து தந்தார். ஷார்ட்டி எனக்கு போதைப் பொருளை அறிமுகப்படுத்தினார். சேமி மாமா, கறுப்பு நிழலுலகின் இன்னொரு பாதையை காட்டினார்.
காலையிலேயே நான் தங்கியிருந்த குடியிருப்பு களைகட்டியது.
ஆஃபீசுக்கு டிப்டாப்-பாக கிளம்பிய நிறைய ஆண்கள் இங்கு வந்தனர். எனக்கு பயங்கர ஆச்சரியம்.
இவர்களுக்கெல்லாம் மனைவிகள் இருப்பார்கள்தானே அவ்வளவு ஏன் வீட்டிலிருந்துதானே கிளம்புகிறார்கள். நேரடியாக விபச்சாரிகளிடம் வரக் காரணம் என்ன?
விதவிதமான சிற்றின்பத்திற்காக வெள்ளை ஆண்கள், கறுப்பு பெண்களை நாடி வருவது எனக்குத் தெரியும். ஆனால் இங்கே..? வேலைக்குப் போகுற வழியில் விபச்சாரிகளைத் தேடி வரவேண்டியதன் அவசியம் என்ன?
‘‘என்ன ரெட் இப்படி பார்க்குற’’ விபச்சார விடுதியில் இருந்த சிஸ்டர் கேட்டார்.
‘‘இல்ல, சிஸ்டர் டெய்லி ஆறு மணில இருந்து, ஏழரை மணிக்குள்ள இங்க நிறைய பேர் வர்றாங்க விபச்சார விடுதின்னா அதுக்கு ரெகுலர் கஸ்டமர் இருப்பாங்க. ஆனா இங்க தினம் தினம் புதுப் புது ஆளா வர்ராங்களே’’
அவர் என்னை கேலியாகப் பார்க்கும் பாவனையில் சிரித்தார்.
எனக்கு சங்கடமாகி விட்டது. தவறான கேள்வியை கேட்டு விட்டேனோ? வயது முதிர்ச்சி இல்லாமலோ அல்லது பெண்களின் சுபாவம் பற்றித் தெரியாமலோ கேட்டு விட்டதாக தோன்றியது.
‘‘ரெட், வேலை முடிந்து வீட்டுக்கு வரும் கணவன்மார்களை காயடிப்பதுதான், அவர்கள் இங்க வர்றதுக்கு காரணம்’’
‘‘காயடிப்பதா-?’’
‘‘உனக்கு ஒய்ஃப் இல்லைல அதான் உனக்குப் புரியல’’.
“அதான் சிஸ்டர் எனக்குப் புரியும்படி சொல்லுங்க”
‘‘அதிகாரம்  செலுத்துவது,  எதையாவது கேட்டு நச்சரிப்பது, எதனையாவது சொல்லி எப்போதுமே குற்றம் சுமத்துவது… இதுதான் பொண்டாட்டிகளின் வழக்கம் ரெட்’’.
‘‘அதுக்கு?’’
‘‘இதுதான் சைக்காலிஜகலா ஆண்களை காயடிப்பது… அவர்கள் திருப்தியாக இல்லற வாழ்வில் ஈடுபடாமல், ஒப்புக்கு வாழ்கிறார்கள். மனைவியின் அழுத்தத்திலிருந்து விடுபட காலையில் எங்களைத் தேடி வந்து விடுகிறார்கள்’’
பெண்களைப் பற்றிய உளவியலைக் கற்றுத் தந்ததோடு, விபச்சாரிகள் பற்றிய ஒட்டுமொத்த பார்வையையும் அந்த சிஸ்டர் மாற்றினார். அங்கிருந்த விபச்சாரத் தொழில் செய்தவர்களெல்லாம் சகோதர பாசத்துடன் என்னிடம் பழகினர்.
  • •••••
ரயில்வேயில் வேலை செய்த அனுபவமும், இதுவரை எந்த வழக்கும் என் மீது இல்லாததும் விரைவாக வேலை கிடைக்க உதவியது. ஒரு மதுக்கடையில் வேலைக்குச் சேர்ந்தேன்.
என்னைத் தேடி நான் தங்கியிருந்த இடத்திற்கே சோஃபியா வந்துவிட்டாள்.
‘‘என்ன ரெட் இங்க தங்கி இருக்க?’’ அதிர்ச்சியடைந்த சோஃபியா கோபமாக அரற்றினாள்.
‘‘ஏன் என்னாச்சி சோஃபி…’’
‘‘வேணாம். இந்த இடத்த விட்டு கிளம்பு. இங்க நீ தங்க வேணாம். உடனே கிளம்பு’’. சோஃபியா அவசரப்படுத்தனாள்.
விபச்சாரிகளோடு நான் தங்கியிருப்பதை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
சோஃபியாவை, அந்த சிஸ்டர்  சமாதானப் படுத்தினார். என்னை சகோதர பாசத்துடன் பார்ப்பதாகவே அந்தக் குடியிருப்பில் இருந்த பெண்கள் உறுதியளித்தனர்.
‘‘உன்னைத் தவிர வேறு எந்தப் பெண் பக்கமும் ரெட் போகாம நாங்க பார்த்துக்கிறோம்’’. சிஸ்டர் உறுதியளித்தாள்.
பெருமூச்சு விட்டு சமாதானமடைந்த சோஃபியா சிரித்து விட்டாள்.
அவளை அழைத்துக் கொண்டு உணவு விடுதிக்குச் சென்றேன். அந்தப் பகுதியில் சமத்துவம் பேசிக் கொண்டு திரிந்த ஒரு வெள்ளைக்கார இளைஞனும் அங்கு இருந்தான்.
அவனிடம் சோஃபியாவை அறிமுகப்படுத்தி விட்டு, அருகில் இருந்த இருக்கைகளில் இருந்தவர்களிடம் பேசுவதற்காக சென்று விட்டேன்.
நான் திரும்பி வந்தபோது சோஃபியாவின் முகம் வாடியிருந்தது. எதையுமே பெண்களாகச் சொல்லும் வரை நான் எதுவும் கேட்பது கிடையாது.
‘‘ரெட்அவன் அப்படிச் சொல்லிட்டான்’’ எரிந்து விழுந்தாள்.
நான் அமைதியாக இருந்தேன்.
‘‘வெள்ளைக்காரி நான், கறுப்பன்கூட சுற்றக் கூடாதாம்’’.
இனவெறி பிடித்த வெள்ளைச் சமூகத்தில், கறுப்பர் & வெள்ளையர் ஒற்றுமை பேசி நமக்கு நம்பிக்கையளிப்பது போல சிலர் நடந்து கொண்டாலும், ஒரு கறுப்பன், வெள்ளைக்கார பெண்ணுடன் பழகுவது வெள்ளையர்களுக்கு எப்போதுமே பிடிக்காது என்பதைப் புரிந்து கொண்டேன்.
  • ••••
ஹார்லெம் பகுதியில் சில கடைகளுக்குச் செல்வதற்கு ராணுவ வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் ராணுவ வீரர்களின் ஒழுக்க வரையறைகளுக்கு தீங்கு இல்லாத வகையில் வாடிக்கையாளர்களிடம் நடந்து கொண்டேன்.
இந்தப் புரிதலுடன் வேலை செய்து வந்த நான், ஒரு நாள் பெரும் தவறிழைத்து விட்டேன். அன்று மதுக்கடைக்கு வந்திருந்த ஒரு ஆசாமி, மிகவும் அமைதியாகக் காணப்பட்டார். இதனால் அவரிடம், ‘ஆள்’ வேண்டுமா எனக் கேட்டு விட்டேன்.
அவரின் பார்வை வினோதமாக இருக்க, நான் சுதாரித்துக் கொண்டேன்.
அந்த நபர் ராணுவ உளவாளி. வழக்கு என் மீது பதியப்படும் என எதிர்பார்த்தேன். ஆதாரம் இல்லாததால் தப்பித்தேன். அதேசமயம் அந்தக் கடைக்கு என்னால் தொந்தரவு இருக்கும் என நினைத்து நானே வேலையை விட்டு நின்று விட்டேன்.
ஒரு பக்கம் வேலை பறிபோனது.  மறுபக்கம் பேரிடியாக அந்தச் செய்தி.
சோஃபியாவிடம் தொலைபேசியில் பேசினேன்.
‘‘சோஃபி, பெரிய சிக்கல்ல இருந்து நான் தப்பிச்சிட்டேன்’’ விலாவரியாக விளக்கினேன்.
‘‘ஓகே. ரெட். கவனமா இரு. ஆங் நானும் ஒரு முக்கியமான விஷயம் உன்ட்ட சொல்லனும்…’’ அவள் குரலில் பதற்றமும் பயமும் தெரிந்தது.
‘‘என்ன?’’
‘‘எனக்கு ஒரு வெள்ளைக்காரனோட மேரேஜ் முடிஞ்சிருச்சி. அவர் ராணுவத்துல வேலை பார்க்கிறாரு. அடுத்த வாரம் என்னால, நியூயார்க் வர முடியாது’’.
(தொடரும்)

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...