என் புரட்சி அவசியப்படும் எந்த வழிமுறைகளிலாவது…
15. “இறைவன் முன் மண்டியிட்டேன்”
நார்ஃபோல்க் சிறை அமைதியிழந்தது. அதிகாரிகள் அங்கும் இங்கும் அவசரமாக அலைந்தனர். பரபரப்பாகக் காணப்பட்ட அவர்கள், ஒவ்வொரு அறையாக, கைதிகளிடம் விசாரணை செய்தனர். சிறைக்குள் ஏதோ விபரீதம் நடந்து விட்டதோ அல்லது கைதி யாரேனும் தப்பித்து விட்டானோ என சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
என் அறைக்கு வந்த காவலர்கள் சக கைதிகளிடம், அவர்கள் உறவினர்கள் எந்தப் பகுதியில் இருக்கின்றனர், யார், யாருக்கு கடிதம் எழுதுகின்றீர்கள் போன்ற விவரங்களைக் கேட்டனர். ஆனால், என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு, என்னிடம் மட்டும் விசாரிக்காமல் சென்று விட்டனர்.
…
ஒரு வெள்ளைக் காகிதத்தில் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில், கடிதம் எழுதினேன். திருத்தித் திருத்தி எழுதினேன். இருபத்தி ஐந்து முறையாவது திருத்தி எழுதியிருப்பேன். என் உள்ளத்தில் இருந்தவைகளை ஓரளவுக்கு இலக்கணத்தோடு எழுத முயன்றேன். ஆனால் கையெழுத்து மிகவும் மோசமாகத்தான் இருந்தது. அதுதான் அவருக்கு நான் எழுதிய முதல் கடிதம். அந்தக் கடிதம் என் வாழ்வைப் புரட்டிப் போட்டது. அது முதல் “என் புரட்சி” தொடங்கி விட்டது.
மதிப்புமிகுந்த எலிஜா முஹம்மத் அவர்களுக்கு, நார்ஃபோல்க் சிறையிலிருந்து மால்கம் லிட்டில் எழுதுகிறேன். உங்களை நான் பார்த்ததில்லை. உங்களைப் பற்றி என்னுடைய சகோதர, சகோதரிகள் நிறையச் சொல்லியிருக்கிறார்கள். உங்களைப் பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்.
நீங்கள் அமெரிக்காவில் கறுப்பர்கள் மத்தியில் மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தை, என்னுடைய தம்பி ரெஜினால்ட் எனக்குச் சொல்லியிருக்கிறான்.
வெள்ளையர்கள் எப்படி எப்படியெல்லாம் கறுப்பர்களை ஏமாற்றி வருகிறார்கள், அவர்களை குற்றத்தின் பிறப்பிடமாக மாற்றி வைத்திருக்கிறார்கள் என்பதற்கு நானும் சாட்சி.
கறுப்பர்களிடம் நீங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சிப்பூர்வமான மாற்றத்தில் நானும் பங்கேற்க ஆசைப்படுகிறேன்.
நீங்களும் சிறையில் இருந்ததாக நான் கேள்விப்பட்டேன். என்னுடைய இந்தக் கடிதத்தில் இருக்கும் பிழைகளுக்காக என்னை மன்னிப்பீராக!
நன்றி.
இறுதியில் ரெஜினால்டும் என்னுடைய மற்ற சகோதர, சகோதரிகளும் என் தொடர்பான முயற்சியில் வெற்றி பெற்று விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். ஆமாம், அவர்கள் மிகவும் விரும்பியது போல, நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் தலைவர் எலிஜா முஹம்மதுவுக்கு கடிதம் எழுதினேன்.
என்னுடைய இந்தக் கடிதத்திற்கு அல்லாஹ்வின் தூதர் என்று சொல்லிக் கொண்ட எலிஜா முஹம்மதுவிடமிருந்து பதில் கடிதம் வந்தது, எனக்கு நம்பமுடியாத வியப்பைத் தந்தது.
சகோதரர் மால்கம் லிட்டிலுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றேன். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நீங்கள் நலமுடன் இருக்க பிரார்த்திக்கிறேன்.
கறுப்பர்கள் தங்கள் சுய வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும், அவர்கள் அமெரிக்காவின் பூர்வீக குடிகள் அல்ல. ஆஃப்ரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்டவர்கள். இழிவுகளிலிருந்து விடுதலை பெற, கறுப்பின மக்களுக்கு தனித் தேசம் கிடைப்பது ஒன்றே வழி.
நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் இந்தக் கொள்கைகளை, உங்கள் தம்பி ரெஜினால்ட் உங்களிடம் போதித்ததை நான் அறிவேன்.
உங்களைப் போல ஆயிரக்கணக்கான கறுப்பர்கள் சிறையில் காலம் தள்ள காரணம் என்ன?
அமெரிக்காவில் கறுப்பர்கள் வாழும் பகுதிகளில் இரண்டு அடையாளங்களை தவறாமல் பார்க்க முடியும். அறியாமை மற்றும்-வறுமை.
கல்வியறிவில்லாமல், கவுரவமான எந்தத் தொழிலும் செய்யாமல் கறுப்பர்கள் அடிமையாக சேரிகளில் உழல்வதற்கு யார் காரணம்?
வெள்ளையினச் சமூக அடக்கு ஒடுக்குமுறையின் குறியீடுதான் அமெரிக்க கறுப்பினச் சமூகம்.
வரலாற்றையும், உண்மையையும் அறிந்து கொள்ள உந்துதல் கொண்ட உங்களை நான் பாராட்டுகிறேன். நீங்களும் விரைவில், இந்த அமைப்பில் இணைவீர்கள் என்று நம்புகிறேன்.
கறுப்பர்களின் அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரே வாழ்வியல் கொள்கை இஸ்லாம்தான். அல்லாஹ்வை வணங்குங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்கள் சகோதரன்
எலிஜா முஹம்மத்.
ஐந்து டாலர் பணமும் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். இது போல சிறைக் கைதிகள் எழுதும் கடிதங்களுக்கு பதில் எழுதும் போது கூடவே பணம் அனுப்புவதும் எலிஜா முஹம்மதுவின் வழக்கம் என கேள்விப்பட்டேன்.
அந்தக் கடிதம், சிறை அறையில் இருந்த என்னை இருப்பு கொள்ளாமல் செய்தது. ஏதாவதொன்று செய்தாக வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.
“அல்லாஹ்வை வணங்கு” – எலிஜா முஹம்மதுவின் இந்த வார்த்தைகள் என் காதுகளில் திரும்பத் திரும்ப ஒலித்தன.
முழந்தாழிட்டு அல்லாஹ்வை தொழ முயன்றேன். என்னால் முடியவில்லை. மண்டியிட என்னால் முடியவில்லை. வெட்கமும் குழப்பமும் அடைந்தேன்.
திருடுவதற்காக கள்ளத்தனமாக பூட்டை உடைக்கும் போது மட்டுமே என் கால்கள் மண்டியிட்டிருக்கின்றன. வேறு எதற்காகவும், யாருக்காகவும் இதுவரை நான் மண்டியிட்டதில்லை. மிகவும் சிரமப்பட்டு, முழந்தாழிட்டு அல்லாஹ்வைத் தொழுதேன்.
நார்ஃபோல்க் சிறையில் துறவு வாழ்க்கை வாழ்ந்தவன் நானாகத்தான் இருப்பேன். எப்போதுமே நான் சோம்பேறியாக இருந்தது கிடையாது. ஏதாவதொரு விஷயம் குறித்து உறுதியான நம்பிக்கை ஏற்பட்டு விட்டால், அது தொடர்பான காரியங்களில் உடனடியாக இறங்கி விடுவேன்.
இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு முஸ்லிமான நான், உடனடியாக என்னுடைய பழைய நண்பர்களுக்கு கடிதம் எழுதினேன். நண்பர் சேமி மாமா, உணவு விடுதி உரிமையாளர் என என்னுடைய தெரு வாழ்க்கையில் தொடர்புடைய ஒவ்வொருவருக்கும் கடிதம் எழுதினேன்.
அவர்களின் சரியான முகவரி எனக்குத் தெரியாது. இருந்தாலும் அவர்கள் அடிக்கடி வரும் உணவு விடுதிகளின் முகவரிகளுக்கு அந்தக் கடிதங்களை அனுப்பி வைத்தேன்.
வெள்ளையர்களின் ஆதிக்கம், கறுப்பர்களின் அடிமைத்தனம் பற்றியெல்லாம் அதில் குறிப்பிட்டு, நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பு பற்றியும் அந்தக் கடிதத்தில் விவரித்திருந்தேன். அவர்களுக்கு அந்தக் கடிதங்கள் கிடைத்ததா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. கிடைத்திருந்தாலும், அவர்களால் அதனை வாசித்தறிந்திருக்க முடியாது.
ஆமாம்… ரவுடியாக, தெருப் பொறுக்கியாக, கஞ்சா விற்பவராக சுற்றித் திரியும் எந்தக் கறுப்பனுக்கும் கல்வியறிவு அவ்வளவாக கிடையாது. பதிலும் யாரும் எனக்கு எழுதவில்லை.
நான் அவர்களை போலிருந்து, எனக்கொரு கடிதம் வந்திருந்தால், அதனை ஒரு பொருட்டாகவே மதித்திருக்க மாட்டேன்.
இத்தோடு நின்று விடாமல், வெள்ளையர்களுக்கும், அதிலும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் நான் கடிதங்கள் எழுதினேன். பாஸ்டன் நகர மேயர், மசாசூசெட்ஸ் ஆளுநர், அவ்வளவு ஏன் அதிபர் ஹேரி ட்ரூமனுக்கும் கூட கடிதம் எழுதினேன். அவர்களின் கைகளுக்கு அந்தக் கடிதம் கிடைத்திருக்குமா என்பது கூட எனக்குத் தெரியாது.
ஆனால், இவர்களுக்கெல்லாம் கடிதம் எழுதிய அடுத்த சில நாட்களில்தான், சிறை அறைகளில் அதிகாரிகள் பரபரப்பாக சோதனை நடத்தினர். சிறையில் கடிதங்களை தணிக்கை செய்வது வழக்கமான நடைமுறைதான். ஆனால் நான் எழுதிய கடிதங்களையும், எனக்கு வந்த கடிதங்களையும் நகல் எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், அதற்காக அமெரிக்க உளவு அமைப்பான எஃப்.பி.ஐ. தனிக் கோப்பு ஒன்றையே பராமரித்து வருவதாகவும் அறிந்தேன்.
கடிதம் எழுதியதாலேயே, உள்நாட்டு பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்க வாய்ப்புள்ளவனாக கருதி எஃப்.பி.ஐ. கண்காணிக்கத் தொடங்கிய நிலையில், அடுத்து நான் செய்யப் போகும் அபாயங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
தொடரும்
ஃபனான்
No comments:
Post a Comment