கறுப்பு மனிதன் Vs வெள்ளைப் பிசாசு
நான் விடுதலையாகப் போகும் நாளை எண்ணிக் கொண்டிருந்தேன். அந்த நினைப்பு என்னை அழுத்தியது. தம்பி ரெஜினால்ட் வந்து, எப்படியாவது என்னை வெளியில் அழைத்துச் சென்று விடுவான் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.
மதிய உணவுக்காக, வரிசையில் நின்று சாப்பாடு வாங்கிய போது வழக்கம் போல பன்றி இறைச்சி தரப்பட்டது. இறைச்சித் தட்டை சக கைதியிடம் கொடுத்தேன். உணவுக்கூடத்துக்கு வரும் முன்பே, தம்பி ரெஜினால்ட் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த வார்த்தைகளை நினைவுபடுத்திக் கொண்டேன்.
“நான் பன்றிக் கறி சாப்பிடுறதில்ல..”
பன்றி இறைச்சியைப் பெற்றுக் கொண்ட அந்தக் கைதி, என்னை ஒரு மாதிரியாக பார்த்தார். அமெரிக்காவில், அதுவும் ஒரு கறுப்பினத்தவன் பன்றி இறைச்சி சாப்பிடமாட்டான் என்பது, நம்புவதற்கு சிரமமான ஒன்றாகும்.
சிறையில் வழக்கத்துக்கு மாறாக எது நடந்தாலும் அது அங்கு விவாதப் பொருளாகிவிடும். இப்போது சிறையின் விவாதப் பொருள்:
‘சைத்தான் பன்றிக் கறி சாப்பிடுறதில்லையாம்!’
சிறைக்குள் என்னுடைய மாற்றத்தை கவனித்து வந்த அக்கா யெல்லா, சார்லஸ் டவுன் சிறையிலிருந்து மசாசூட்டஸ் நகரில் உள்ள நார்ஃபோல்க் சிறைக்கு என்னை மாற்ற முயற்சி எடுத்து வந்தாள்.
நாகரிகமான சிறை என்று சொல்லலாம் நார்ஃபோல்க் சிறையை. நான் அங்கு மாற்றப்பட்டேன். ஒரு தொகுப்பு வீடு போல இருந்த நார்போல்க் சிறையின் சிறப்பம்சம் அங்கு இருந்த நூலகம்தான். அது என்னுடைய வாசிப்பு பசிக்கு நன்றாக தீனி போட்டது.
இருந்தாலும் தம்பி ரெஜினால்டின் அந்த வார்த்தை இன்னும் நினைவில் இருந்து அகலவில்லை. இந்தச் சிறைக்கு வந்த பின்பும் நான் சிகரெட் புகைக்கவில்லை, பன்றி இறைச்சி சாப்பிடவில்லை. எப்படியும் தம்பி ரெஜினால்ட் என்னை சிறையில் இருந்து விடுவிப்பான் என்று நம்பினேன்.
ஒரு நாள், என்னைப் பார்க்க சிறைக்கு வந்தான் ரெஜினால்ட். நான் உற்சாகமானேன். குடும்ப உறுப்பினர்களின் நிலைமைகளைச் சொன்ன அவன், ஹார்லெம் நகரில் நடந்த சம்பவங்களைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தான். ஆனால் என்னை விடுதலை செய்வதைப் பற்றி அவன் வாய் திறக்கவில்லை.
“மால்கம், எல்லா விஷயமும் தெரிஞ்சவன் யாராவது இருப்பானா?” திடீரென, பேச்சுக்கு சம்பந்தமில்லாமல் கேட்டான். எதையோ சொல்ல வந்த அவன் சுற்றி வளைத்துப் பேசினான். இது எனக்குப் பிடிக்காது. எனக்கு எப்போதும் நேர்வழிப் பேச்சுதான்.
“இருக்காரு… எல்லாமும் தெரிஞ்சவரு கடவுள்” அவனை முறைத்தாவறு பதில் சொன்னேன்.
“யெஸ்… அல்லாஹ்… இறைவனின் அறிவு முழுமையானது. பிசாசின் அறிவு அறைகுறையானது.”
யாராவது எதையாவது சொல்ல முயல்கிறார்கள் என்றால் நாம் கவனமாக கேட்க வேண்டும். ரெஜினால்ட் சுற்றி வளைத்து ஏதோ சொல்ல வருகிறான் எனப் புரிந்து கொண்டேன்.
“பிசாசுகளின் காலம் முடிந்து விட்டது. பிசாசுகளை ஒழித்துக்கட்ட, அல்லாஹ் நமது மண்ணில் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறார்!”
ரெஜினால்ட் பேசப் பேச நான் உன்னிப்பாகக் கேட்டேன்.
“பிசாசுகளா?” நான் ஆச்சரியமாகக் கேட்டேன்.
அங்கு அருகில் பேசிக் கொண்டிருந்த வெள்ளைக்காரர்களை சாடையாக சுட்டிக் காட்டிய ரெஜினால்ட், “அந்த வெள்ளைப் பிசாசுகள்” என்றான்.
புரிந்து கொண்ட நான், “அப்போ இறைத்தூதர்?”
“அவர் ஒரு கறுப்பர்தான்… எலிஜா முஹம்மத்”
ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்கும் போதே, வெள்யைர்களை அவன் பிசாசு என்றவுடன், என் வாழ்வில் குறுக்கிட்ட அனைத்து வெள்ளையர்களும் மனக் கண் முன் வந்து போனார்கள்.
“எல்லா வெள்ளையர்களுமே பிசாசுகளா? விதிவிலக்கே கிடையாதா? எல்லாருமேயா?”
“ஆமாம். எல்லோரும்தான்… பிசாசுகளில் நல்ல பிசாசு, கெட்ட பிசாசு இருக்கா மால்கம்?”
சிறையில் இருந்து விடுதலையாகும் வழியைச் சொல்லாமலேயே ரெஜினால்ட் கிளம்பிவிட்டான். ஆனால் அவன் சொன்ன கருத்துக்கள் என்னை உலுக்கி தூங்கவிடாமல் செய்தது.
என் அப்பாவைக் கொன்ற வெள்ளை பயங்கரவாதிகள், அம்மாவை மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வெள்ளை அதிகாரிகள், பள்ளியில் படித்த வெள்ளை மாணவர்கள், என்னை உதாசீனப்படுத்திய வெள்ளை ஆசிரியர், பாஸ்டனில், ஹார்லெம்மில் என்னிடம் பழக்கம் வைத்திருந்த வெள்ளையர்கள், சோஃபியா, அவரது கணவர், என்னைக் காட்டிக் கொடுத்த கைக்கெடிகாரக் கடை அன்பர், எனக்கு தண்டனை விதித்த வெள்ளை நீதிபதி, சிறையில் இருந்த வெள்ளைக் கைதிகள்… இப்படி நான் சந்தித்த அனைத்து வெள்ளையர்களும் என் முன் வந்து “நான் பிசாசு” என்று சொல்லி விட்டு செல்வது போல உணர்ந்தேன்.
சிறிது நாட்கள் கழித்து மீண்டும் சிறையில் என்னைப் பார்க்க வந்தான் தம்பி ரெஜினால்ட். வெள்ளைப் பிசாசுகள் பற்றி தான் உசுப்பி விட்ட சிந்தனை, என்னிடம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா என என்னை நோட்டமிட்டான்.
“மால்கம் நீ யார்?” கூர்மையான கேள்வியை என் முன் வைத்தான் தம்பி ரெஜினால்ட். பதிலளிக்க முடியாமல் திணறினேன்.
“உன்னுடைய குடும்பப் பெயர் என்ன? உன் தாயகம் எது? உன் மொழி எது? உன் இனம் எது? உன் முன்னோர்களின் வரலாறு உனக்குத் தெரியுமா?”
வெள்ளையர்களைப் பிசாசு என வரையறுத்த அவன், இப்போது வேறு ஒன்றைப் பற்றி பேச, பீடிகையிடுகிறான் என்பதைப் புரிந்து கொண்ட நான், அமைதியாக அவனது முகத்தைப் பார்த்தேன்.
“கறுப்பர்களின் பூர்வீகத்தைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ளாமல் அவர்களை மடையர்களாக வைத்துள்ளனர் வெள்ளைப் பிசாசுகள்…”
என்னை நேரடியாக முட்டாள் எனத் திட்டுவதாக குமைந்தேன்.
“உன் மூதாதையர்களைக் கொலை செய்து, உன் இனப் பெண்களைக் கற்பழித்து, உன் சுய அடையாளத்தை அழித்து விட்டனர் இந்த வெள்ளைப் பிசாசுகள்… கறுப்பர்களை அவர்களின் தாயகத்திலிருந்து அமெரிக்காவுக்கு கடத்தி வந்தது முதல், கறுப்பர்களின் துயர வரலாறு தொடங்குகிறது.”
இருவரும் நீண்ட நேரம் அமைதியாக இருந்தோம். பின்பு தம்பி ரெஜினால்ட் சென்று விட்டான். தீவிரமான கருத்துக்கள் மூலம் என்னை உலுக்கிய முதல் மனிதன் ரெஜினால்ட்தான்!
நூலகத்தில் இருந்த வரலாற்று நூல்களைத் தேடித் தேடி வாசித்தேன். மனித வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய குற்றம் என்றால், அது கறுப்பர்களைக் கடத்தி அவர்களை அடிமைகளாக வெள்ளையர்கள் வியாபாரம் செய்ததுதான் என்ற வரலாற்று உண்மையைக் கண்டு கொண்டேன். இந்தப் பூமியில் தங்களுடைய உண்மையான அடையாளம் பற்றி எதுவுமே தெரிந்து கொள்ளாத ஒரு இனம் உண்டென்றால், அது அமெரிக்காவில் வாழும் கறுப்பர்கள்தான்!
வெள்ளையர்கள் சுகபோகமாக வாழ, கறுப்பர்கள் அடிமை ஊழியம் செய்தால், அந்தக் கறுப்பர்கள் மரணத்திற்குப் பின் சொர்க்கத்தில் சுகபோகமாக இருக்கலாம் என ஏமாற்றப்பட்டு சுரண்டப்பட்டனர் அமெரிக்க கறுப்பர்கள் என்ற உண்மையையும் அழுத்தமாக உணர்ந்தேன்.
அடுத்து என்னைப் பார்க்க அக்கா ஹில்டா வந்தாள். எலிஜா முஹம்மத் பற்றியும், அவருக்கு இஸ்லாத்தைப் போதித்த கீ.ஞி ஃபார்ட் பற்றியும் அவள் எனக்கு வகுப்பெடுத்தாள். அப்போதுதான் எனக்குப் புரிந்தது, ரெஜினால்டும், ஹில்டா-வும், நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பில் என்னை இணைக்க முயல்கின்றனர் என்பது கிளம்பும்போது சொன்னாள்,
“மால்கம், எலிஜா முஹம்மதுவும் உன்னை மாதிரி ஜெயில்ல இருந்திருக்காரு… அவருக்கு கடிதம் எழுது…”
என்னுடைய சகோதர, சகோதரிகள் இஸ்லாத்தை தழுவியிருந்தனர். சிறையில் இருந்த நானும் அல்லாஹ்வைத் தொழுவதை அவர்கள் விரும்பினர். அவர்கள் எழுதிய கடிதங்களில், எலிஜா முஹம்மதுவின், நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பில் இணையுமாறு வலியுறுத்தினர்.
சிறையில் இருந்து தப்பித்து விடுதலையாவதைப் பற்றி இப்போது நான் சிந்திக்கவில்லை. ஆனால் அதைவிட ஆபத்தான ஒன்றைச் செய்வது என முடிவெடுத்தேன்.
தொடரும்
-ஃபனான்
-ஃபனான்
No comments:
Post a Comment