மிஸ்டர் ரெட்
திருடுவது. வீடு புகுந்து திருடுவது. இதுதான் என் திட்டம். நான் சிந்தித்து வைத்திருந்த அடுத்த தொழில், புராஜெக்ட் இதுதான். ஷார்ட்டிக்காக -நிறைய வருமானம் கிடைப்பதற்காக வீடுகளில் கொள்ளை அடிக்கும் தொழிலைத் தேர்வு செய்தேன்.
திருட்டுத் தொழிலில் இறங்கலாம் என்று சொன்னவுடன், மறுப்புத் தெரிவிக்காமல் ஷார்ட்டி ஒப்புக் கொண்டார். அவர் ஒரு ஆலோசனையும் சொன்னார். தன்னுடைய நண்பன் ரூடியையும் இந்தத் தொழிலில் சேர்த்துக் கொள்ளலாமென்றார்.
‘‘என்ன பிளான் ரெட்…’’
‘‘ஷார்ட்டி… கொள்ளையடிப்பதில் பலவகை உள்ளது ஃப்ரெண்ட்…’’
“ஓ ஹோ…” ஷார்ட்டி புன்னகைத்தார்.
‘‘கடையில திருடுறது… குடோன்ல திருடுறது… அபார்ட்மெண்ட்ல திருடுறது… தனி வீட்டுல திருடுறது… ஹாஸ்டல்ல திருடுறது… இப்படி நிறைய இருக்கு நண்பா…’’
‘‘ம்… நிறைய அனுபவம் இருக்கும் போலயே… அப்புறம்…’’ ஷார்ட்டி ஆர்வமாக கேட்டார்.
‘‘பகல்ல திருடுறது… ராத்திரில திருடுறது… யாரும் இல்லாத வீட்டுல திருடுறது… நாம எந்த குரூப்புன்னு முடிவு செய்யணும்…’’
எதுவாக இருந்தாலும் பகலில் கொள்ளையடிக்கக் கூடாது என மனதில் நினைத்துக் கொண்டேன். ஹார்லெம் அனுபவம் இன்னும் நினைவில் இருந்து எனக்கு அகலவில்லை.
ஆறடி உயரம், செம்பழுப்பு நிற தோற்றம், காங்க் செய்து செம்பட்டையான என் தலைமுடி – என்ற அடையாளம் என்னை எளிதில் காட்டிக் கொடுத்துவிடும். பகலில் திருடினால், பொதுமக்கள் அடையாளத்தை காவல்துறையில் எளிதாக சொல்லிவிடுவார்கள் என்று பயந்தேன். இருந்தாலும் இந்த பயத்தை, -பலஹீனத்தை நான் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. ஷார்ட்டியிடமும் சொல்லிக் கொள்ளவில்லை.
‘‘என்ன யோசிக்கிற ரெட்…’’
‘‘இல்ல… நாம பண்ணப் போற தொழிலுக்கு, நமக்கு ஒரு நல்ல உளவாளி தேவ… நம்பிக்கையான திறமையான ஆளா அந்த உளவாளி இருக்கணும்…’’
‘‘அதான் நான் சொன்னேனே… ரூடி… விருந்து நிகழ்ச்சிகளில் சர்வராக வேலை செய்திருக்கிறான். அவனது குள்ளமான உருவம், புத்திசாலித்தனம் நமக்கு நிச்சயம் பயன்படும்…’’
‘‘ஓகே… இருந்தாலும் பிளான்ல இன்னும் தெளிவும் துல்லியமும் வேணும்’’
‘‘என்ன தெளிவு… என்ன துல்லியம்… புரியும்படி சொல்லு ரெட்..?’’
‘‘ரூடிக்கு ஒரு சில இடம்தான் தெரியும். அதை மட்டும் நாம நம்பியிருந்தா, நம்ம தொழில பெரிசா பண்ண முடியாது’’
‘‘அதுக்கு..?’’
‘‘வெள்ளைக்காரர்கள் நம்ம டீமில் இருந்தால், இன்னும் பெட்டரா இருக்கும்…’’
‘‘வெள்ளைக்காரங்களா…
வெள்ளைக்காரப் போலீஸ நாம சேர்த்துக்கலாமா..?’’ கோபமாகக் கேட்டார் ஷார்ட்டி.
‘‘ஜெயிலுக்குப் போலாமா..?’’ கடுப்பாக பதில் சொன்னேன்.
‘‘சீரியஸா இரு ரெட்… உன் ஆளையும் என் ஆளையும் நம்ம டீம்-ல சேர்த்துக்கலாமே…’’
‘‘ஆளா..?’’ குழம்பிப் போய் கேட்டேன்.
‘‘ஆமாம் ரெட்… சோஃபியா… அவ சிஸ்டர்’’
‘‘யெஸ்… செம்ம ஐடியா… நான் சொன்னா சோஃபி தட்டமாட்டாள். சோஃபிக்காக அவள் தங்கை எதுவேண்டுமானாலும் செய்வாள்…’’
திட்டம் தீட்டுவதற்காக சோஃபியாவையும் அவள் தங்கையையும் என் அறைக்கு வரவழைத்தேன். ரூடி-யை ஷார்ட்டி வரவழைத்தார். நாங்கள் ஐந்து பேரும்ஆலோசனை செய்தோம்.
நான் எதிரில் கட்டிலில் அமர்ந்து கொண்டு, அவர்களின் ஆலோசனையில் கவனம் செலுத்தாமல் துப்பாக்கியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தேன். ‘‘முதல்ல எந்த இடத்தை, தெருவை, வீட்டை கொள்ளையடிப்பது… இத நாம ஃபிக்ஸ் பண்ணணும்…’’ சோஃபியா ஆலோசனையைத் தொடங்கி வைக்கும் விதமாகப் பேசினாள்.
‘‘அந்த வீட்டை முடிவு செய்த பின்னாடி, விற்பனைப் பிரநிதி போல ஒரு ஆளு போய், வீட்டின் கட்டமைப்புகளை வரைபடமாக வரைந்து தர வேண்டும்…‘‘சோஃபியாவின் தங்கை ஆலோசனை சொன்னாள்.
ரூடி தனக்குத் தெரிந்த பகுதிகளை வரிசையாக பட்டியலிட்டான். இப்படி ஒவ்வொருவரும் திருட்டுத் திட்டத்தை செயல்படுத்த துல்லியமான திட்டங்களை வகுத்தனர்.
நான் இது எதிலும் கலந்து கொள்ளாமல் தனியாக அமர்ந்திருந்தேன். இதுவரை ஹார்லெம்மில் கஞ்சா விற்றது, வழிப்பறியில் ஈடுபட்டது போன்ற தொழில்களில் தனியாக ஈடுபட்டு வந்த நான், முதன் முதலாக கூட்டாக கொள்ளையடிக்கும் தொழிலில் இறங்குவதால் இதில் சிக்கல் எதுவும் வந்து விடுமோ எனப் பயந்து ஆழமாகச் சிந்தித்தேன். யாரும் எந்த ரகசியத்தையும் வெளியில் சொல்லி விடக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த குழுவில் யார் பெரிய ஆள் என்ற விவாதம் எழுந்து, ஒருவரையொருவர் பொறாமை காரணமாக காட்டிக் கொடுத்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.
அதனால், இந்த கேங்குக்கு யார் பாஸ் என்பதை தீர்மானிக்க வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தேன்.
‘‘ஃப்ரெண்ட்ஸ் இங்க பாருங்க’’ நான்கு பேரின் கவனத்தையும் என் பக்கம் திருப்பினேன்.
‘‘என்ன ரெட்.’’
‘‘இந்த துப்பாக்கியில இருக்குற எல்லா தோட்டாக்களையும் வெளியே எடுத்துட்டேன்.’’ தோட்டாக்களை மேலே தூக்கி வீசிப் பிடித்துக் காட்டிச் சொன்னேன்.
‘‘ஓகே… அதுக்கு என்ன..?’’ சோஃபியா கேட்டாள்.
நான் ஐந்து தோட்டாக்களையும் கீழே வைத்து விட்டு, ஒரு தோட்டாவை மட்டும் டிரிக்கரில் சொருகுவது போலச் செய்து, டிரிக்கரை சுற்றி விட்டேன்.
ஷார்ட்டி, ரூடி, சோஃபி, அவள் தங்கை – நால்வரும் அமைதியாகப் பார்த்தனர். துப்பாக்கியை நெற்றிப் பொட்டில் வைத்து…
‘‘சுடப் போறேன்’’ கண்களை அகல விரித்து முறைத்துப் பார்த்தேன். எல்லோரும் பயந்து விட்டனர்.
‘‘வேணாம் ரெட்…’’ நான்கு பேரும் அரண்டு நடுங்கினர். விசையை அழுத்தினேன். எல்லோரும் காதுகளைப் பொத்தி, முழங்கால்களை மடக்கி மார்போடு சேர்த்து அச்சத்தில் அரண்டனர்.
ஆனால் எனக்கு எதுவும் ஆகவில்லை. தோட்டா இல்லாததால், துப்பாக்கி வெடிக்கவில்லை. துப்பாக்கியை விலக்கியதும் எல்லோரும் ஆசுவாசமடைந்தனர். மீண்டும் துப்பாக்கியை நெற்றிப் பொட்டில் வைத்து மீண்டும் விசையை அழுத்தமுயன்றேன். எல்லோரும் பயந்து போய், ‘‘வேணாம் ரெட்… இந்த விபரீத விளையாட்டு வேணாம்… ப்ளீஸ்…’’
‘‘பார்த்துக்குங்க…’’
தொடரும்
-ஃபனான்
No comments:
Post a Comment