Saturday, December 22, 2018

என் புரட்சி-16-என்னை வடிவமைத்த சிறை

என்னை வடிவமைத்த சிறை
எலிஜா முஹம்மதுவுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதி வந்தேன். அவரும் எனக்கு பதில் கடிதங்கள் எழுதினார். அதில் நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் அடிப்படைக் கொள்கைகளை விளக்கினார். சிறையில் இருந்த என்னைப் பார்க்க வந்த ஹில்டாவும் ரெஜினால்டும் வெள்ளையர்களின் மேலாதிக்கம் பற்றியும், கறுப்பர்களின் அடிமை மனநிலை பற்றியும், எலிஜா முஹம்மது கூட்டங்களில் போதித்தவற்றை எனக்கு சொன்னார்கள்.
இவர்களுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதும் போது, என்னுடைய உள்ளுணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை என்பதையும், மொழியைப் பயன்படுத்துவதில் நான் மிகவும் பின் தங்கியிருப்பதையும் உணர்ந்தேன். இதனைப் போக்கி, ஆங்கில மொழியில் நேர்த்தியாக எழுதுவதற்காக அகராதியின் உதவியை நாடினேன். ஒரு நாளைக்கு ஒரு பக்கம் வீதம், அந்தப் பக்கங்களில் உள்ள வார்த்தைகளை தாளில் எழுதிப் பார்த்து மனனம் செய்தேன்.
நானே மலைக்கும் விதமாக, ஆங்கில அகர வரிசையில் அமைந்த ஆயிரக்கணக்கான வார்த்தைகளை அதன் மூலச் சொல் விளக்கங்களோடு கற்றேன். இந்த முறையிலேயே கொஞ்சம் கொஞ்சமாகக் கற்று, இறுதியில் முழு அகராதியையும் மனனம் செய்தேன். ஏறக்குறைய பத்து இலட்சம் வார்த்தைகளைக் கற்றுக் கொண்டேன்.
ஓர் அகராதியையே கற்றுக் கொள்ள முடியும் என்பதை அறிந்த எனக்கு புதிய நம்பிக்கை பிறந்தது. இந்த நம்பிக்கை தந்த உந்துதலால், ஆங்கில புத்தகங்களை அதுவும் காத்திரமான புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன்.
எலிஜா முஹம்மது எனக்கு எழுதிய கடிதங்களில் போதித்த கருத்துகளுக்கு, நான் புத்தகங்களில் ஆதாரங்களைத் தேடி ஆழமாகக் கற்றேன். நார்ஃபோல்க் சிறைக்குடியிருப்பு நூலகம் எனது வாசிப்பு பசிக்கு நன்றாக தீனி போட்டது.
W.E.B.DuBois எழுதிய Souls of Black Folk என்ற புத்தகம் என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. ஆஃப்ரிக்காவிலிருந்த கறுப்பர்கள் அமெரிக்காவிற்கு கடத்திக் கொண்டுவரப்படுவதற்கு முன், அவர்களது வாழ்நிலை குறித்து இந்தப் புத்தகம் விரிவாகப் பேசியது.
என் இனத்தின் மூல வேர் அமெரிக்காவில் இல்லை; நான் வெள்ளையனின் அடிமை இல்லை; அடிமைச் சங்கிலியை என் மீது பிணைத்ததே இந்த வெள்ளையன்தான். இப்படி ஒவ்வொரு பக்கத்தையும் படித்து செல்லச் செல்ல, து புவா-வின் ஆய்வுகள் எனது சிந்தனையைத் தூண்டின.
ஒரு புத்தகம் முடிய, அந்த நூலின் கருத்துகளை ஒட்டிய அடுத்த புத்தகத்தை தேடிப் படித்தேன். அந்த வரிசையில் Negro Histroy என்ற புத்தகம் விறுவிறுப்பான வாசிப்பு அனுபவத்தையும் ஆழமான வரலாற்றுத் தகவல்களையும் தந்து, கறுப்பர்கள் குறித்து என் உள்ளத்தில் இருந்த அறியாமையை முழுமையாக அகற்றியது.
“மால்கம், போய் தூங்கு… நேரமாகியிடுச்சி…” சிறை வராந்தாவில் ரோந்து வந்த காவலர் அதற்றினார். எனது அறை மின் விளக்கை அணைத்தார்.
சிறை விதியின்படி இரவு 10 மணிக்கு அறை விளக்குகள் அணைக்கப்பட்டு விடும். அனைத்து கைதிகளும் கட்டாயம் தூங்க வேண்டும்.
‘நீக்ரோ ஹிஸ்டரி’ நூலின் பக்கங்கள் என்னை இருப்பு கொள்ளாமல் செய்து, முழுமையாக படித்து முடிக்கத் தூண்டியது. Carter G.Woodson ன் எழுத்துக்கள், கறுப்பர்கள் அடிமைகளாக அமெரிக்காவுக்கு கடத்தி வரப்படுவதற்கு முன்பு, ஆஃப்ரிக்காவில் அவர்கள் கோலோச்சிய பேரரசுகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது. அதேசமயம், அடிமைகளாக்கப்பட்ட ஆரம்ப நாட்களில், அடிமை விலங்கை உடைத்தெறிய அவர்கள் நடத்திய கடுமையான போராட்டமும் இந்த நூலில் விவரிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அறையில் வெளிச்சம் இல்லாததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன்.
எனது அறையை ஒட்டி வராந்தாவில் இருந்த விளக்கின் வெளிச்சம் என் அறைக்குள்ளும் பரவியது. இது எனக்கு வசதியாகவும், புத்தகத்தை வாசிக்கப் போதுமான வெளிச்சமாகவும் இருந்தது. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு முறை ரோந்துக் காவலர் என் அறை அருகே சுற்றி வந்தார்.
சரியாக 58 நிமிடங்கள், வராந்தாவில் கிடைத்த வெளிச்சத்தில் வாசித்தேன். ரோந்துக் காவலர் சுற்றி வந்து, என் அறைக்கு அருகில் வரும் காலடிச் சத்தம் கேட்டவுடன், படுக்கையில் தாவிப் படுத்து தூங்குவது போல் நடித்தேன். அவர் சென்றவுடன், மீண்டும் வாசிக்க ஆரம்பித்து விடுவேன். இப்படியே அதிகாலை நான்கு மணி வரை படித்தேன்.
இரவில் அதிகபட்சம் நான்கு மணி நேரம் தூங்கினால் எனக்குப் போதுமானதாக இருந்தது. தெருவில் அடியாளாக, போதைப் பொருள் விற்பவனாக, விபச்சாரத் தரகனாக சுற்றித் திரிந்த நாட்களில் இதைவிட குறைவான நேரம்தானே நான் தூங்கியிருக்கிறேன்.
கறுப்பர்களே உலகில் சிறந்தவர்கள் என்ற சிந்தனையை என்னுள் ஆழமாக விதைக்க Gregor
Mendel எழுதிய Findings In Genetics என்ற நூல் உதவியது. ‘மரபுத் தோற்றவியலின் கண்டுபிடிப்புகள்’ என்ற அந்தப் புத்தகத்தில், ஆதி மனிதன் என்ன நிறம் என்ற கருப்பொருள் பற்றி விவாதிக்கப்பட்டது. கறுப்பு மனிதன் ஆதி மனிதனாக இருந்து, மரபணுக்களில் மாற்றம் ஏற்பட்டு வெள்ளை மனிதன் உருவாக முடியும்.
ஆனால் ஆதி மனிதன் வெள்ளையாக இருந்தால், மரபணு மாற்றத்தால் கறுப்பு மனிதன் உருவாக முடியாது என்ற கருத்தைப் புரிந்து கொள்ள கிரிகர் மெண்டலின் எழுத்துக்கள் எனக்கு உதவின. நார்ஃபோல்க் சிறைக் குடியிருப்பில் இருந்த நூலகத்துக்கு பார்க்ஹர்ஸ்ட் என்ற கோடீஸ்வரர் ஆயிரக் கணக்கான பழைய புத்தகங்களை அறக்கொடையாக வழங்கியிருந்தார். அந்தப் புத்தகங்களை வைக்க போதுமான அலமாரி இல்லாததால், பெட்டிகளில் நூற்றுக்கணக்கான அரிய புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. மதம் மற்றும் வரலாற்றுத் துறையில் பார்க்ஹர்ஸ்ட் மிகுந்த ஆர்வம் காட்டியிருப்பார் போலும்! இந்த இரண்டு துறைகள் பற்றிய ஏராளமான புத்தகங்கள் நூலகத்தில் இருந்தன.
இவற்றில் தேடிப் பிடித்து, முக்கியமான பிரசுரங்களின் தொகுப்பு ஒன்றை எடுத்தேன். அதன் முகப்பே என்னை அந்தத் தொகுப்பை எடுக்கத் தூண்டியது. அடிமை முறை ஒழிப்புச் சங்கம் – Abolitionist Anti Slavery Society வெளியிட்டிருந்த பிரசுரங்கள் தோலில் பைண்டிங் செய்யப்பட்டிருந்தன.
கறுப்பு அடிமைகளை வெள்ளையர்கள் எப்படி எப்படியெல்லாம் சித்திரவதை செய்தார்கள் என்பதை இந்தப் பிரசுரங்கள் விவரித்தன. கறுப்பினப் பெண்கள் கைகள் கட்டப்பட்டு, சவுக்கால் அடிக்கப்பட்டு வதைக்கப்பட்டனர். அவர்கள் கண் முன்பே அவர்களது குழந்தைகள் பிடுங்கப்பட்டு, நிரந்தரமாகப் பிரிக்கப்பட்டனர். தப்பியோடிய கறுப்பின அடிமைகளை நாய்களை ஏவி விட்டு கண்டு பிடித்தது, பிடித்த பின்னர் கடுமையான தண்டனைகளைத் தந்தது என, அந்தப் பிரசுரங்களைப் படிக்கப் படிக்க அதிர்ச்சியில் உறைந்தேன்.
ஒரு கறுப்பனாக, என்னுடைய மூதாதையர்கள் அனுபவித்த துயரத்தினால் நான் அடைந்த அதிர்ச்சியில் இருந்து எப்போதுமே என்னால் வெளியே வரமுடியாது.
இதுவரை மனித வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிக மோசமான பெரிய குற்றமென்று ஒன்றைச் சொல்ல வேண்டும் என்றால், அது, கறுப்பர்களைக் கடத்தி வந்து வெள்ளையர்கள் வியாபாரம் செய்ததாகத்தான் இருக்க முடியும்.
வெள்ளையர்கள் ஆஃப்ரிக்காவில் மட்டும் தங்கள் கோர முகத்தைக் காட்டவில்லை. சீனா, இந்தியா என எங்கெல்லாம் வெள்ளை நிறத்தவர்கள் சென்றார்களோ அங்கெல்லாம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு மூலம் வெள்ளையர்கள் அல்லாதவர்களைச் சுரண்டியதை வரலாற்றில் படித்தேன். சிறையில் எனது அறையில் என் கையில் புத்தகம் இல்லாமல் என்னைப் பார்க்க முடியாது. பத்து காவலர்களும் ஒரு மேற்பார்வையாளரும் சேர்ந்து என்னையும் புத்தகத்தையும் பிரிக்க முனைந்திருந்தால் கூட, அது முடியாமல்தான் போயிருக்கும். ஒரு பல்கலைக்கழக மாணவன் கூட இவ்வளவு புத்தகங்களைப் படித்திருக்க மாட்டான். சிறைக் குடியிருப்பு நூலகத்தில் இருந்த பெரும்பாலான புத்தகங்களை வாசித்து தீர்த்தேன். புத்தக வாசிப்பு எனது அறிவை விசாலப்படுத்தியது. நான் மற்ற கைதிகளிடம், குறிப்பாக கறுப்பினக் கைதிகளிடம், அமெரிக்க கறுப்பர்களின் உண்மையான வரலாற்றைப் பற்றிப் பேசினேன். அவர்கள் அதை நம்பமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்.
எதையுமே “வெள்ளைக்காரன் சொல்கிறான்” “இந்தப் புத்தகத்தில் வெள்ளைக்காரன் இப்படி எழுதியிருக்கிறான்” “பேப்பர்ல வந்த நியூஸ் இது” இப்படிச் சொன்னால்தான் கறுப்பன் நம்புவான் என்பது எனக்குத் தெரியும்.
ஓஸ்போர்ன் (Osborne)… கறுப்பு இளைஞரான இவர், நான் முஸ்லிமானதைக் கேள்விப்பட்டு, என்னிடம் இஸ்லாம் மதம் பற்றிக் கேட்டார்.
“அமெரிக்கர்கள் எல்லோருமே கிறிஸ்டியன்ஸ்தானே! அப்ப நீங்க எப்படி?!”
ஓஸ்போர்ன் சந்தேகத்தை தெளிவுபடுத்தும்படி கேட்டார். அவர் கேள்வியிலும் பார்வையிலும் புதிதாக எதையும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தைப் பார்த்தேன். வெள்ளைக்காரன் சொல்லியிருக்கிறான் என்ற தகவலோடு, கறுப்பர்களின் கீர்த்திமிக்க வரலாற்றையும், அவர்கள் அடிமைகளாக கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்ட துயரத்தையும் வகுப்பெடுப்பது போல பேசினேன். ஓஸ்போர்ன் ஆர்வமாகக் கேட்டார். இடையிடையே கேள்வி கேட்டார். உரையாடல் சுவாரஸ்யமாகச் சென்றது.
“உங்க மொழி என்ன?”
“இது என்ன அசட்டுத்தனமான கேள்வி? ஆங்கிலம்தான்…”
“அமெரிக்க கறுப்பர்களின் பூர்வீக மொழி அரபி. அமெரிக்காவுக்கு கடத்தி வரப்படுவதற்கு முன்பு, ஆஃப்ரிக்காவில் நம் மூதாதையர்கள் பேசிய மொழி அரபிதான்!” ஓஸ்போர்னுக்கு தெளிவுபடுத்தினேன்.
“நீங்க சொல்லுங்க பார்ப்போம்… ஆஃப்ரிக்காவிலிருந்து கடத்தி வரப்பட்ட மூதாதையர் வழிவந்த எனக்கு எப்படி லிட்டில்-னு வெள்ளைக்காரன் பேரு ஒட்டிக்கிச்சு?” கேள்வி கேட்டுவிட்டு என் பேச்சை நிறுத்தினேன். அந்தக் கறுப்பினக் கைதி, தனது பெயரின் பூர்வீகம் பற்றிய சிந்தனையோடு என் கண்களைப் பார்த்தார். நான் அவரை உற்றுக் கவனித்தேன்.
“வெள்ளைக்காரன் நம்ம பாட்டிய, பாட்டியோட பாட்டிய கற்பழிச்சு, அப்படிப் பிறந்த நமக்கு அவங்க பேர வச்சிருக்காங்களா?” இருவரும் அசிங்கத்தை அமைதியாக ஒப்புக் கொண்டோம்.
அமெரிக்க கறுப்பர்கள் பற்றிய வரலாற்று உண்மையை உடனே எல்லா கறுப்பர்களும் ஏற்றுக் கொண்டு விடமாட்டார்கள். அந்தளவுக்கு அவர்கள் வெள்ளையர்களால் மூளைச் சலவை செய்யப்பட்டிருந்தனர் என்பதை நான் அறிந்திருந்தேன்.
அதேசமயம் ஏற்றுக் கொள்ளும் கறுப்பினக் கைதிகளிடம், “வெள்ளையன் ஒரு பிசாசு” என்ற அடுத்த பாடத்தை எடுத்தேன்.
ஓஸ்போர்னிடமும் சில நாட்கள் கழித்து இரண்டாவது வகுப்பை எடுத்தேன்.
இப்படித்தான் நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பிற்கு ஆட்களைச் சேர்க்க வேண்டும் என்று தம்பி ரெஜினால்ட் வழிகாட்டியிருந்தான். இல்லாவிட்டால், விசுவாசத்தில் ஊறிப்போன சில கறுப்பர்கள், இந்த விஷயத்தை வெள்ளையர்களிடம் போட்டுக் கொடுத்து விடுவார்கள் என்றும் அவன் என்னை எச்சரித்திருந்தான்.
“வெள்ளையன் ஒரு பிசாசு” என்பதை நிரூபிக்க நான் ரொம்ப மெனக்கெடவில்லை. சிறை வாழ்க்கையும், சிறைக்கு அவர்கள் வந்ததற்கு காரணமுமே வெள்ளையன்தான் என்பதையும் ஒவ்வொரு கறுப்பினக் கைதியும் நன்கு புரிந்து வைத்திருந்தான்.
தங்கள் மக்கள் தொகை சதவீதத்தைக் காட்டிலும் சிறையில் அதிகமாக இருந்த கறுப்பர்கள், எளிதாக இஸ்லாம் மார்க்கத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர். சிறையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை ரகசியமாக அதிகரித்தது. என் மீதான உளவுத்துறையின் கண்காணிப்பும் சிறைக்குள்ளே அதிகரித்தது.
தொடரும்
ஃபனான்

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...