Saturday, December 22, 2018

என் புரட்சி-11-சிக்கினேன்

சிக்கினேன்
எதையும் நேர்த்தியாக செய்வதுதான் எனக்குப் பிடிக்கும். அது போதைப்பொருள் விற்பதாக இருந்தாலும் சரி, திருட்டுத் தொழிலாக இருந்தாலும் சரி.
வீடுகளில் இரவு நேரங்களில் புகுந்து திருடுவது என்று முடிவெடுத்தபின், நூறு சதவீதம் திட்டத்தை முழுமையாகப் போட்டு, கச்சிதமாக திருடி வந்தோம். திருடியதை உடனடியாக விற்று பணமாக்கினோம். திருட்டுப் பொருட்களை வாங்குவதற்கு சில வியாபாரிகள் இருந்தனர். நாங்கள் கஷ்டப்பட்டு திருடிய பொருட்களுக்கு அந்த வியாபாரிகள் குறைவான விலையே கொடுத்தனர்.
தொழில் சிறப்பாக போய்க் கொண்டிருந்து. ஒரு கொள்ளைக்கும், அடுத்த கொள்ளைக்கும் போதிய இடைவெளி விட்டோம். தொழிலுக்குச் செல்லாத நாளில் வழக்கமாகச் செல்லும் விடுதிக்குச் சென்றேன். சோஃபியாவுடன் சுற்றினேன். எங்கள் மீது பிறருக்கு சந்தேகம் வராதபடி நாங்கள் நடந்து கொண்டோம்.
நான் வழக்கத்தை விட அதிகமான விழிப்போடு இருந்தேன். ஹார்லெம் நகரின் அடியாள் தொழிலில் நான் கற்றுக் கொண்ட பாடங்களும், போலீஸாரின் உளவியலையும் அறிந்துவைத்திருந்ததும் திருட்டுத்தொழிலில் போலீஸாரின் கண்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை எனக்குத் தந்தது. ஒரு நாள் வழக்கம் போல, மதுக்கடைக்குச் சென்ற போது, அங்கிருந்த மேலாளர் வழக்கத்திற்கு மாறாக மற்ற வாடிக்கையாளர்களை வரவேற்பதுபோல வரவேற்றார். நட்பாக நடந்து கொள்ளக் கூடியவர் அவர்.
‘‘ஹலோ சார் வெல்கம்’’ சொல்லி விட்டு என்னிடமிருந்து பார்வையை விலக்கிக் கொண்டவர், மற்ற வேலைகளில் மூழ்கினார். அவருடைய பார்வையும் வித்தியாசமாக இருந்தது. எனக்குப் புரியவில்லை.
இப்படி அவர் நடந்து கொண்டதே கிடையாது. ஏன் இப்படி இவர் நடந்து கொள்கிறார் என சிந்தித்துக் கொண்டே கடைக்குள்ளே நுழைந்த நான், அங்கு சோஃபியாவும், அவள் தங்கையும் இன்னொரு வெள்ளைக்காரரும் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். என் கவனம் அங்கு சென்றது.
அந்தக் கடையின் பணியாளர்கள் அனைவரும் சோஃபியாவைத் தெரியாதது போலவே நடந்து கொண்டனர். அந்த வெள்ளைக்காரரைக் கவனிக்காமல் சோஃபியா அருகில் சென்றேன்.
‘‘ஹாய் பேபி’’
சோஃபியா ஒரு மாதிரியாக நெளிந்து, அறிமுகமே இல்லாத நபராக என்னைப் பார்ப்பது போல் பார்த்து சம்பிரதாயமாக, ‘‘ஹலோ’’ என்றாள்.
எனக்குப் புரியவில்லை. பின்புதான் அவள் அருகில் இருந்தவரின் அங்க அடையாளங்களை வைத்து, ராணுவ வீரர் ஒருவர் அருகில் இருப்பதைக் கண்டு மிரண்டு போனேன். அந்த வெள்ளைக்காரர் சோஃபியாவின் கணவரின் நண்பர். ராணுவ வீரர்.
மேலாளரின் வரவேற்பின் அர்த்தம் அப்போதுதான் எனக்குப் புரிந்தது. கடைப் பணியாளர்களின் நடத்தைகளின் உள்அர்த்தமும் விளங்கியது. நான் சமாளித்துக் கொண்டு அருகில் இருந்த டேபிளில் அமர்ந்தேன். அப்போது அந்தக் கடைப் பணியாளர்களின் பார்வை என் முகத்தை நோக்கியது.
எனக்கும் வெள்ளைக்காரியான சோஃபியாவுக்குமான உறவு அந்த மதுக்கடையின் உரிமையாளர், பணியாளர்கள்அனைவருக்கும் நன்றாக தெரியும். அதேசமயம், அப்போது அந்த ராணுவ வீரருடன் சோஃபியா வந்திருப்பதை அவர்களால் என்னிடம் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை.
அன்றிரவே அந்த வெள்ளைக்கார ராணுவ வீரர் என் அறைக்கு வந்து, என்னை மிரட்டி விட்டுச் சென்றார். சோஃபியாவுடன் பழகுவதை நிறுத்திக் கொள்ளச் சொன்னார். இந்தச் சம்பவத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்னும் சொன்னால், இதனை நான் மறந்து போனேன்.
ஒரு சில நாட்களுக்குப் பின், வழக்கம் போல எங்கள் கொள்ளைத் தொழிலைத் தொடங்கினோம். அது கிறிஸ்துமஸ் காலம். அந்த நாட்களில் வீடுகளில் புதுப்புதுப் பொருட்களும் பரிசுப் பொருட்களும் குவிந்து கிடக்கும். எங்கள் கொள்ளைத் தொழில் அமோகமாக நடந்தது. பணமும், பரிசுப் பொருட்களும் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே கிடைத்தன.
ஒரு ‘சம்பவத்தின்’ போது அழகான கைக்கடிகாரம் ஒன்று கிடைத்தது. திருட்டுப் பொருட்களை உடனுக்குடன் விற்றுவிடும் எனக்கு, அதனை விற்க மனமில்லை. அதனை நானே உபயோகிக்கலாம் என விரும்பினேன். அதிலிருந்த சிறு பழுதை சரி செய்வதற்காக, வாட்ச் கடை ஒன்றில் கொடுத்தேன்.
‘‘சார்… இரண்டு நாளுக்குப் பிறகு வந்து வாங்கிக்கிங்க’’ கடைக்காரர் சொன்னார்.
இரண்டு நாட்கள் கழித்து கைக்கடிகாரத்தை வாங்கச் சென்ற போது, ஒருவர் திடீரென என்னை மடக்கினார். அவரின் நடவடிக்கையால் அவர் போலீஸ்காரராக இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு வந்தது. என்னிடம் துப்பாக்கி இருந்தும், முட்டாள்தனமாக நான் நடந்து கொள்ளவில்லை.
ஏதோ ஒரு உந்துதலால், நான் சாகசம் எதுவும் செய்யாமல், ‘‘சார் என் பேண்ட்ல இருக்குற துப்பாக்கியை எடுத்துக்கோங்க’’ என்றேன். அவர் போலீஸ்காரர் என்பதை உணர்ந்து கொண்ட நான் கைகள் இரண்டையும் தூக்கியவாறு சொன்னேன்.
மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டிருந்த மற்ற இரண்டு காவலர்கள் விரைந்து வந்து, என்னைப் பிடித்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். நல்ல வேளையாக நான் என் துப்பாக்கியை பயன்படுத்தவில்லை. நான் சுட்டிருந்தால், மறைந்திருந்த இருவரும் என்னைச் சுட்டு, அந்த நொடியிலேயே என்னைக் கொன்றிருப்பார்கள்.
கைக்கடிகாரத்தின் உரிமையாளர், திருடுபோனது தொடர்பாக காவல்துறையில் புகார் செய்த போது, அந்த கைக்கடிகாரத்தில் இருந்த குறிப்பிட்ட பழுது குறித்தும் புகாரில் தெரிவித்திருப்பார் என நினைக்கிறேன். அதனால் கைக்கடிகாரங்களைச் சீர் செய்யும் கடைகளில் சாதாரண உடையில் போலீசார் கண்காணித்து வந்திருக்கலாம் என புரிந்து கொண்டேன்.
சோஃபியாவும் அவளுடைய தங்கையும் பிடிபட்டனர். என்னைப் பிடித்த சற்று நேரத்தில் அக்காவும் தங்கையும் கைது செய்யப்பட்டனர்.
இசை நிகழ்ச்சியிலேயே வைத்து ஷார்ட்டியை போலீசார் கைது செய்தனர். தகவல் தெரிந்த ரூடி எப்படியோ தலைமறைவாகி விட்டார். ஒட்டுமொத்த கும்பலும்போலீஸின் பிடியில் அடுத்தடுத்து சிக்கினோம். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காவல்நிலையத்தில் நானும், ஷார்ட்டியும் தனியாக வைக்கப்பட்டிருந்தோம்.
சோஃபியாவையும் அவள் தங்கையையும் தனியாக விசாரித்தனர்.
‘‘ரெட் நீ எப்படியும் சிக்கித்தான் இருப்ப’’
‘‘என்ன ஷார்ட்டி சொல்றீங்க?’’
‘‘ரூடி போட்டுக் கொடுத்துட்டானா? ப்ளடி’’ ஆவேசமாக ஆத்திரத்தில் கேட்டேன்.
‘‘ச்சே இல்ல ரெட் அவன் ரொம்ப நல்லவன்’’ நிதானமாகச் சொன்னார். ‘‘பின்ன எப்படி?’’ கமுக்கமாக விழிகளை அகலத் திறந்தேன்.
‘‘இது நீயா சிக்கிக்கிட்டது. நானா இதச் சொல்லல’’ இடைவெளி விட்டு அமைதியானார்.
எப்போதும் விழிப்போடும் இருக்கும் நான், எங்கு ஏமாந்து போனேன் என யோசித்தேன்.
ஷார்ட்டி சொல்வதைப் பார்த்தால், கைக்கடிகாரத்தை சரி செய்ய கொடுத்ததை விட, பெரிய தவறு எங்கோ நடந்திருக்கிறது என சிந்தித்தேன். வேறு ஏதோ வகையில் கச்சிதமாக சிக்கிக் கொண்டதாக உணர்ந்தேன்.
என்னை இரக்கத்தோடு பார்த்த ஷார்ட்டி, ‘‘உன் ரூம்-க்கு சோஃபியாவின் ஹஸ்பண்ட் துப்பாக்கியோட போயிருக்கிறார் நீ அங்க இருந்திருந்தா உன்ன சுட்டுக் கொன்றிருப்பாரு நீ செத்திருப்ப’’ என் கண்களைப் பார்க்க விரும்பாத ஷார்ட்டி, தரையைப் பார்த்துக் கொண்டே விவரித்தார்.
நான் கைக்கடிகாரத்தை வாங்காமல்அறையில் இருந்திருந்தால் செத்திருப்பேன்.
போதைப்பொருள் விற்று, விபச்சாரத் தரகனாக இருந்து, அடியாளாக வலம் வந்த போதெல்லாம் பிடிபடாத நான், திருட்டுக்குற்றத்திற்காக போலீஸில் சிக்கிக் கொண்டேன்.ஆனால் ஷார்ட்டி சொன்ன தகவலைக் கேட்டு போலீஸில் பிடிபட்டதை விட உயிர் பிழைத்தது என் அதிர்ஷ்டம், இறைவனின் கிருபை என்று எண்ணிக் கொண்டேன்.
சாவிலிருந்து இரண்டாவது முறையாக தப்பித்ததற்காக, விதியை முதன்முறையாக நினைத்துப் பார்த்தேன்.
(தொடரும்)
-ஃபனான்

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...