தொலைந்த ஊசியைத் தேடுதல்
நீதி – உண்மை
உபநீதி – ஆழ்ந்த சிந்தனை, உள் நோக்குதல்
அத்வைத குருவான ஆதிசங்கரர், ஒரு நாள் தனது ஆசிரமத்தின் குடிசைக்கு வெளியே, நிலவு வெளிச்சத்தில் எதையோ தேடிக் கொடிண்டிருந்தார். அதைக் கண்ட அவரது சீடர்கள், இந்நேரத்தில் அவர் எதைத் தேடுகிறார் என ஆர்வத்துடன் கேட்டனர்.
ஆதி சங்கரர், தான் தொலைத்த ஊசியை தேடுவதாக பதிலளித்தார்.
சிறிது நேரம் தேடிய சீடர்கள் “குருவே!! தாங்கள் ஊசியை எங்கு தவற விட்டீர்கள்?” என்று கேட்டனர்.
அதற்கு ஆதி சங்கரர், குடிசைக்குள் படுக்கைக்கு அருகே தவற விட்டதாகக் கூறினார்.
குழம்பிய சீடர்கள் தயங்கியவாறே, “உள்ளே தவற விட்டதை ஏன் வெளியே தேடுகிறீர்கள்” என்று வினவ, குரு ஒன்றும் அறியாதது போல், “உள்ளே இருட்டாய் இருக்கிறது. விளக்கில் எண்ணையும் இல்லை. அதனால் வெளிச்சம் உள்ள இவ்விடத்தில் தேடுகிறேன்” என்றார்.
சீடர்கள் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு, “உள்ளே தொலைத்ததை வெளியே தேடினால் எப்படிக் கிடைக்கும்?” என்று கேட்டனர். குரு மெளனமாக புன்னகைத்தார். “நம் உள்ளத்தில் உள்ள இறைவனைத் தொலைவில் உள்ள கோயில்களுக்கு ஓடிச் சென்றோ, மலைகளுக்கு நடந்து சென்றோ தேடுகிறோம் அல்லவா? அது போல் தான் இதுவும். உள்ளே தொலைத்ததை வெளியில் ஏன் தேடுகிறோம்? ஏனென்றால், நம் உள்ளம் இருட்டாக இருக்கின்றது.
நீதி:
இறைவன் நம் உள்ளேயே ஆத்மஸ்வரூபமாய் இருக்கிறார். நாம் உள்ளே தொலைத்ததைக் கண்டு பிடிக்க நம் உள்ளங்களில் விளக்கேற்ற வேண்டும். மனதில் இருள் சூழ்ந்துள்ளதால் இறைவனை வெளியே கோயில், மலை, காடு என பல இடங்களில் நாம் தேடுகிறோம்; நம் உள்ளங்களில் இருக்கும் இறைவனைப் பார்ப்பதில்லை. அவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உண்மையாக இருந்தால், நம் உள் மனதைப் புரிந்து கொள்ளும் வகையிலும், உள்ளார்ந்த நோக்குதல் போன்ற அறிவையும் நமக்குக் கற்பிக்கும் வகையில் கடவுள் குருவை அனுப்புகிறார். உண்மையான குருவின் வார்த்தைகளுக்கு ஏற்ப, நம்பிக்கையும், ஒழுங்கு முறையாக நடந்து கொள்வதும் மிகவும் முக்கியமாகக் கருதப் படுகிறது.
No comments:
Post a Comment