Saturday, December 22, 2018

என் புரட்சி-5-சப்தமில்லாமல் வளர்ந்த அபாயம்

சப்தமில்லாமல் வளர்ந்த அபாயம்
பீரங்கிக் குண்டுகளும் அணுகுண்டுகளும் கொண்டு உலக வரைபடம் திருத்தி வரையப்பட்டுக் கொண்டிருந்தது. உலக வரலாறு இரத்தத்தால் எழுதப்பட்ட காலம் அது. நாடு பிடிக்கும் பேராசையில் அன்றைய நாட்களின் வல்லரசுகள் என்று மூக்கை துருத்திக் கொண்டிருந்த நாடுகள், ஆக்கிரமிப்பு போர்களில் ஈடுபட்டன.
நேச நாடுகள் என்றும் அச்சு நாடுகள் என்றும் அணி சேர்ந்து போரிட்டு, வரலாற்றில் அதுநாள் வரை இல்லாத அளவுக்கு மக்கள் மாள காரணமாக இருந்த ‘இரண்டாம் உலகப் போர்’ உச்சகட்டத்தை எட்டியிருந்தது.
நேச நாடுகளுக்கு தனது ஆதரவை வழங்கி வந்த அமெரிக்கா, ஒருபுறம் தளவாடங்களை விற்று போருக்கு மறைமுகமாக உதவி வந்தது. மறுபுறம் தனது துருப்புகளையும் தயார்படுத்தி போருக்கு ஆயத்தமாக இருந்தது.
ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய அச்சு நாடுகள் கூட்டணியை எதிர்த்த பிரிட்டன், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேச நாடுகள் கூட்டணிக்கு அமெரிக்கா தார்மீக ஆதரவு வழங்கி வந்தது.
1941ம் ஆண்டு, டிசம்பர் 7-ம் தேதி. அன்றைய விடியல் அமெரிக்கர்களை இருளில் தள்ளியது. பேர்ல் துறைமுகம் பிரளயத்தில் தத்தளித்த செய்தி கேட்டு வெள்ளை மாளிகை அதிர்ந்தது. அமெரிக்க பேர்ல் கடற்படைத் தளத்தைத் தாக்கி அதகளம் செய்தது ஜப்பான். நேரடியாக போரில் குதிக்க அமெரிக்காவுக்கு இந்தக் காரணம் போதுமானதாக இருந்தது.
போர் முனையில் தேசத்தின் பெயரால் உயிர் துறந்து தேசப்பற்றை நிரூபிக்க அமெரிக்காவுக்கு இளைஞர்கள் பட்டாளம் தேவைப்பட்டது. ‘வெள்ளை’ ரத்தம் கொண்ட இளைஞர்கள், ‘கறுப்பு’ ரத்தம் கொண்ட இளைஞர்கள் என்ற பேதமெல்லாம் அப்போது பார்க்கப்படவில்லை.
21 வயது முதல் 35 வயது வரையுள்ள இளைஞர்கள் அமெரிக்க ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு போர் முனைக்கு அனுப்பப்படுவது வழக்கம்.
இரண்டாம் உலகப் போரை முன்னிட்டு, பிரத்யேகமாக ‘கட்டாய ஆள் சேர்ப்பு சட்டம்’ இயற்றப்பட்டு, அதன் மூலம் அமெரிக்க ராணுவத்தில் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக சேர்க்கப்பட்டனர், வலுக்கட்டாயமாக என்றுதான் சொல்ல வேண்டும்.
வலுக்கட்டாயமாக இளைஞர்கள் ராணுவத்தில் இணைக்கப்பட்டாலும், பட்டாளத்தில் வேலை செய்வதை அமெரிக்க இளைஞர்கள் கவுரவமாகவே பார்த்தனர். வெள்ளையர்களும் கறுப்பர்களும் அந்நாட்டு ராணுவத்தில் இணைய கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டனர். தேக ஆரோக்கியம் குன்றியவர்கள், குணப்படுத்த முடியாத ரோகிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் இந்தச் சட்டத்திலிருந்து விலக்கு பெற்றனர்.
சிகாகோ நகரத்தில் ஒரு கறுப்பர், தான் ராணுவத்தில் சேர மாட்டேன் என கலகம் செய்தார். தன்னைப் பின்பற்றுபவர்களும் ராணுவத்தில் சேர மாட்டார்கள் என அதிரடியாக அறிவித்தார். தேசப்பற்றாவது… ராணுவ சேவையாவது… அடாவடியான போருக்காக கறுப்பர்கள் ஏன் உயிர் துறக்க வேண்டும்? என மார்தட்டினார். அமெரிக்க தேசம் முழுவதும் தேசப்பற்று வழிந்தோடிய அந்த வரலாற்று தருணத்தில், தேசத்திற்கு எதிரான ஒரு வன்முழக்கத்தால் ஒட்டுமொத்த அமெரிக்கர்களையும் அவர் திரும்பிப் பார்க்க வைத்தார். ஒல்லியான தேகம். அவ்வளவு கறுப்பு கிடையாது அவர். ஆனால் கறுப்பர்களுக்காகப் போராடக் கூடிய அமைப்பின் தலைவர் அவர்.
எலிஜா முஹம்மத்.
அமெரிக்காவில் வாழும் கறுப்பர்களின் பூர்வீகம் ஆஃப்ரிக்காதான்…அவர்கள் வெள்ளையர்களோடு இணைந்து வாழ முடியாது. தனி தேசம் தேவை.  இதுதான் எலிஜா முஹம்மதுவின் கொள்கை.
இது இவரது கொள்கை என்பதைவிட, இவருக்கு இஸ்லாம் மார்க்கத்தை அறிமுகப்படுத்திய கீ.ஞி. ஃபார்ட் என்பாரின் கொள்கை என்றே சொல்லலாம். தனி தேசம் வேண்டும் என்பதாலேயே இந்த அமைப்புக்கு ‘‘நேஷன் ஆஃப் இஸ்லாம்’’ என பெயர் வைக்கப்பட்டது. பட்டுத் துணிகளை வீடுகளுக்கு சென்று விற்பனை செய்து கொண்டே இஸ்லாத்தை பிரச்சாரம் செய்து வந்தார் கீ.ஞி. ஃபார்ட். ஒரு கட்டத்தில் அவர் காணாமல் போனார். அவருக்குப் பின்னால் எலிஜா முஹம்மத் நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பை வளர்த்தார்.
நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் தலைவர் றிக்ஷீவீனீமீ விவீஸீவீstமீக்ஷீ என்றும், மாகாணங்களின் தலைவர்கள் விவீஸீவீstமீக்ஷீ என்றும் அழைக்கப்பட்டனர். கிறிஸ்தவ மிஷனரிகளின் கட்டமைப்பும் இப்படித்தான் இருக்கும். அடிமைத்தனத்தை அதிகாரப்பூர்வமாக்கிய கிறிஸ்தவத்திற்கு மாற்றாக கிளர்ந்தெழுந்த நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பும் மிஷனரிகளின் கட்டமைப்பையே பிரதிபலித்தது. இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்த நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பு, அமெரிக்க அரசுக்கு எதிராக, குறிப்பாக வெள்ளையர்களுக்கு எதிராக ரகசியமாக வளர்ந்து வந்தது. வெள்ளையர்களுக்கு  எதிராக இயக்கம் நடத்தி வந்த நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பு, ராணுவத்தில் இணைய சம்மதம் தெரிவிக்குமா? 21 வயது நிரம்பிய தன்னுடைய மகன் இம்மானுவேல், ராணுவத்தில் சேர மாட்டார் என அதிரடியாக அறிவித்தார் எலிஜா முஹம்மத்.
அமெரிக்க முஸ்லிம்கள் இந்தப் போரில் பங்கெடுக்க வேண்டிய அவசியமில்லை என கேட்டுக் கொண்டார். அது மட்டுமல்ல, ராணுவத்தில் கட்டாய சேவைக்கான வயதை எட்டிய நேஷன் ஆஃப் இஸ்லாம் தொண்டர்களும் ராணுவத்தில் சேர மாட்டார்கள் என்றும் கர்ஜித்தார். விழித்துக் கொண்டது சிஐஏ உளவு அமைப்பு. யார்  இந்த எலிஜா முஹம்மத்? நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பு எதைப் பிரச்சாரம் செய்கிறது? தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியது சிஐஏ.
கட்டாய ஆள் சேர்ப்பு சட்டத்தை மீறியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் எலிஜா முஹம்மத். மிலன் சிறையில் நான்கு ஆண்டுகள் இருந்த அவர், அங்கு முடங்கிப் போய் விடவில்லை. அமெரிக்காவில் கறுப்பர்களின் நிலை, தெருவில் நாய்களின் நிலைதான். சிறையில் கறுப்பர்கள் தனி ராஜாங்கம் நடத்தினர். குற்றங்களின் பிறப்பிடமாக கருதப்படும் சேரிக் கறுப்பர்களின் இறுதிப் புகலிடம் சிறைச்சாலைகள்தானே… இது எலிஜா முஹம்மதுக்கு வசதியாகப் போய்விட்டது.
அங்கிருந்த கறுப்பின கைதிகளிடம் பிரச்சாரம் செய்து தனது இயக்கத்துக்கு ஆள் சேர்த்தார். அமெரிக்காவில் சத்தமில்லாமல் நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பு வளர்ந்தது போலவே, சிறைக் கொட்டடிக்குள்ளும் இஸ்லாமிய விருட்சம் ஆழமாகவும், அமைதியாகவும் வேர் பாய்ச்சியது.
-தொடரும்

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...