Saturday, December 22, 2018

என் புரட்சி-4-17 வயது டான்

17 வயது டான்
.25   ரக துப்பாக் கியை நடு முதுகில் சொருகினேன்.
ஒல்லியாக சிகரெட் போல கஞ்சாவைச் சுருட்டி முடித்தேன். 50 சிகரெட்டுகளை அழகாக பேக் செய்து, அக்குளில் வைத்துக் கொண்டு கோர்ட்டை எடுத்து மாட்டினேன். கிளம்பினேன்.
கஞ்சா விற்பனை செய்வது, இதுதான் இப்போது என் தொழில்.
சேமி மாமாதான் இந்த தொழிலைச் செய்ய ஆலோசனை சொன்னார்.
நான் வழக்கமாகச் செல்லும் உணவு விடுதிக்குச் சென்றேன். எனக்காக என் வாடிக்கையாளர்கள் காத்திருந்தனர். இசைக் குழுக்களில் இருந்த இசைக் கலைஞர்கள் பாதிப் பேர் கஞ்சாவுக்கு அடிமைகள்.
‘‘ஹலோ ரெட் எவ்வளவு நேரம்தான் வெயிட் பண்றது?’’ இசைக் கலைஞர்களின் ஆவலில் கோபமும் வெளிப்பட்டது.
‘‘நல்ல சரக்கு தேவைன்னா வெயிட் பண்ணித்தான் ஆகணும் ஃப்ரெண்ட்’’ இசைக் கலைஞர்களின் கோபத்துக்கு பந்தாவாக பதிலளித்தேன்.
அவர்களுடன் சேர்ந்து நானும் கஞ்சா புகைத்தேன். போதையில் மிதந்தேன்.
தொழில் களைகட்டியது. பணம் என்னிடம் அதிகமாக புழங்கியது.
போலிஸ் உளவாளிகள் மோப்பம் பிடித்து விட்டனர். அந்த நகரத்தின் தாதாக்களின் ஹிட் லிஸ்ட்டிலும் என் பெயர் இடம் பெற்றது.
ஒருபுறம் போலீஸ். மறுபுறம் ஹார்லெம் நிழலுலக தாதாக்கள். கஞ்சா வியாபாரத்தில் தனி ஒருவனாக கோலோச்சத் தொடங்கியதும், அந்தக் கறுப்பு நகரில் செயல்பட்டு வந்த அடியாள் குழுக்கள், தங்கள் குழுக்களில் என்னைச் சேர்க்க பலமுறை முயன்றனர்.
என்னைப் போலவே கறுப்பு இளைஞர்கள் பலரும் இப்படித்தான் மீள முடியா உலகில் சிக்கிக் கொள்கின்றனர்.
17 வயதில், சேரி வாழ்க்கையின் அத்தனை கெட்ட பழக்கங்களுடன், தாதாக்களே மிரளும் தாதாவாக வலம் வந்தேன்.
ஒரு நாள் தொழிலுக்குச் செல்லும் போது, சிலர் என்னைப் பின் தொடர்ந்தனர். நான் சுதாரித்துக் கொண்டேன். தெருக்களில், சந்து பொந்துகளில் விரைவாக நடந்தேன். வேறு வழியாக வந்து உளவாளிகள் என்னை மடக்கிப் பிடித்தனர். என் உடலை சோதனைப் போட்டனர். அவர்களால் என் முதுகில் இருந்த துப்பாக்கியைக் கண்டு பிடிக்க முடியவில்லை. கஞ்சா பொட்டலங்களும் என்னிடம் இல்லை. போலிஸார் ஏமாந்தனர்.
கஞ்சாவுடன் என்னைப் பிடித்திருந்தால் போலிசுக்கு எவ்வளவு கோபம் வருமோ, அதைவிட இப்போது அதிக கடுப்புடன் சென்றனர்.
போலிசார் ரொம்ப தூரம் சென்று விட்டதை உறுதி செய்த பின், நான் வந்த வழியிலேயே திரும்பி ஓடினேன். நான் கஞ்சா பொட்டலங்களை விட்ட இடத்தில் தேடினேன்.
போலிசார் துரத்தத் தொடங்கியவுடன், வேகமாக நடந்து கொண்டே போலிசார் கண்களில் படாதவாறு, கையைத் தூக்கி அக்குளில் இருந்த கஞ்சா பொட்டலங்களை கீழே விழுமாறு செய்திருந்தேன். அந்த இடத்தை நினைவில் வைத்துக் கொண்டேன்.
கஞ்சா பொட்டலங்கள் நான் விட்ட இடத்திலேயே கிடந்தன. நானும் தப்பித்தேன். என் முதலும் தப்பித்தது.
தொழிலுக்குச் செல்லும் போது கூட்டம் இல்லாத பகுதியில் செல்வதுதான் என் வழக்கம்.
ஒரு நாள் கூட்டம் இருக்கும் பகுதியில் வேறு வேலையாகச் சென்று கொண்டிருந்தேன். திடீரென சூழ்ந்து கொண்ட போலிசார் என்னைச் சோதனை செய்தனர்.
‘‘எல்லாரும் நல்லா பார்த்துக்குங்க’’
நடந்து சென்று கொண்டிருந்தவர்களின் கவனத்தை என் பக்கம் திருப்பும் வகையில் கத்தினேன். சிலர் அப்படியே நின்று வேடிக்கை பார்த்தனர்.
‘‘நல்லா, கவனிச்சுக்குங்க. இவங்களே கஞ்சா பொட்டலத்தை எடுத்து வந்து, என் கோர்ட்டில் வைத்து விட்டு, என்னைக் கைது செய்ய திட்டமிடுகிறார்கள்’’ திரும்பவும் கத்தினேன்.
ஆதாரம் இல்லாமல் யாரையும் கைது செய்து விட முடியாது என்பதால், கஞ்சாவை அவர்களாக வைத்து விட்டு, என்னை சிக்க வைக்க வாய்ப்பு இருந்தது. இதனால்தான் நான் இப்படி கத்தினேன்.
போலிசார் மீண்டும் ஏமாந்தனர். நான் அறைக்கு வந்தேன். அங்கும் போலீசார் புகுந்து சோதனை நடத்திய தடயங்கள் தெரிந்தன. உடனே அறையைக் காலி செய்தேன்.
கஞ்சாவை நேரடியாக விற்க முடியவில்லை. தெரு முனைகளில் உள்ள குப்பைத் தொட்டி, செஞ்சிலுவைச் சங்கம் வைத்திருந்த முதலுதவிப் பெட்டி போன்ற பொது இடங்களில் கஞ்சா சிகரெட்டுகளை வைத்து விடுவேன். வாடிக்கையாளர்கள் பணம் தந்து விட்டு, நான் சொல்லும் இடங்களில் போய் எடுத்துக் கொண்டனர்.
பாதுகாப்பாக தொழில் நடந்தாலும், இந்த நடைமுறையால் நிறைய வாடிக்கையாளர்களை இழந்தேன். பிரபல இசைக் கலைஞர்கள் இவ்வளவு தூரம் இறங்கி வரமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். வருமானம் குறைந்தது. நானும் சேமி மாமாவும் தீவிரமாக ஆலோசனை செய்தோம்.
‘‘ரெட் நீ ரயில்வேல வேலை செஞ்சிருக்கல்ல’’
‘‘ஆமாம்’’
‘‘அந்த பாஸ் உன்னிடம் இருக்குல்ல’’
‘‘திரும்பவும் ரயில்வேயில வேலை தேடச் சொல்றீங்களா யார் என் சுபாவத்துக்கு வேலை கொடுப்பாங்க  அதுவுமில்லாம  இப்ப  நான் கஞ்சா விற்பது உளவுத்துறைக்கு நல்லாவே தெரியும்…’’
‘‘ஐயோ அதுக்கு கேட்கல ரெட் ஏன் நீ வேற ஏரியாவுல போய் கஞ்சா விற்கக் கூடாது?’’
சேமி மாமாவின் இந்த ஆலோசனை எனக்கு பிடித்திருந்தது. இசைக் குழுக்கள் எங்கெல்லாம் பயணம் செய்ததோ, அங்கெல்லாம் நானும் இருந்தேன். இசைக் கலைஞர்களுக்கும் இது வசதியாக இருந்தது. சில இடங்களில் நான் இசைக் கலைஞன் என்றும் சொல்லிக் கொண்டு ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்திருக்கிறேன்.
ரயிலிலும் டிக்கெட் பரிசோதகர்களிடம் சிக்கவில்லை. வெள்ளையர்களை கறுப்பர்கள் ஏமாற்ற முடியும் என்பதைக்கூட வெள்ளையர்கள் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை.
‘மொபைல் கஞ்சா விற்னையாளன்’ ஆனேன்.
இதனால் ஹார்லெம் நகரில் போலிசாரின் கண்களில் இருந்து தப்பித்தது மட்டுமல்லாமல், நான் இந்தத் தொழிலை விட்டுவிட்டதாக போதைப் பொருள்  தடுப்பு பிரிவினர் நம்பவும் செய்தனர். தாதாக்களுக்கும் அவர்களின் போட்டியாளர்களில் ஒருவன் குறைந்ததாக நிம்மதி அடைந்தனர்.
தொழிலை முடித்து விட்டு ஒரு நாள் அறைக்குத் திரும்பியதும் ரெஜினால்ட் எனக்காக காத்திருந்தான். அவன் என் தம்பி.
(தொடரும்)
-ஃபனான் 

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...