Saturday, December 22, 2018

என் புரட்சி-12- சைத்தான்

12. சைத்தான்

14 வீடுகளில் கொள்ளையடித்ததாக எங்கள் மீது வழக்கு போடப்பட்டிருந்தது. மிடில்செக்ஸ் கவுண்ட்டி நீதிமன்றத்திற்கு போலீஸார் எங்களை அழைத்து வந்திருந்தனர். நீதிபதியின் வருகைக்காக காத்திருந்தோம். சோஃபியாவும் அவள் தங்கையும் தனியாக அமர வைக்கப்பட்டிருந்தனர். அப்போது, நீதிமன்றத்தில் இருந்தவர்களின் பேசு பொருளாக நாங்கள்தான் இருந்தோம்.
‘வெள்ளைக்காரிகளோடு சேர்ந்து கொள்ளையடிக்கும் அளவுக்கு அமெரிக்காவில் இருக்குற நீக்ரோக்களுக்கு துணிச்சல் வந்து விட்டது?..- இதுதான் அவர்களின் விவாதப் பொருளாக இருந்தது. கொள்ளையடித்ததைக் காட்டிலும், எப்படி வெள்ளைக்காரிகளோடு கறுப்பர்கள் இவ்வளவு நெருக்கமானார்கள் என்ற ஆராய்ச்சிதான் அந்த விவாதங்களின் மையப் பொருளாக இருந்தது. திருட்டுக் குற்றத்தை விட மிகப் பெரிய குற்றமாக, வெள்ளைக்காரிகளோடு பழகியதை அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியாமல், அவர்களின் அறவுணர்ச்சி அவர்களை சீற்றம் கொள்ளச் செய்தது.
நீதிமன்ற வளாகத்தில் சூடுபிடித்த இந்த விவாதங்களை நான் பொருட்படுத்தவில்லை. அமைதியாக அவர்களின் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தேன்.
‘‘ஜீஸஸ நல்லா பிரே பண்ணிக்கடா’’
ஷார்ட்டியின் அம்மா கேட்டுக் கொண்டார். ஷார்ட்டியின் தாயார் மிகுந்த இறைபக்திகொண்டவர். தன்பிள்ளையும் அப்படி இருக்க வேண்டும் என்று விரும்பியவர்.
என் தரப்பில் நீதிமன்றத்திற்கு வந்திருந்த அக்கா யெல்லாவும், தம்பி ரெஜினால்டும் தீர்ப்புக்காக காத்திருந்தனர்.
ஷார்ட்டி, தேவனை நினைவுகூர்ந்ததோடு, மார்பில் சிலுவை அடையாளத்தைப் போட்டுக் கொண்டார். ஒருவித பதற்றத்தோடு அவர் இருந்தார்.
நீதிபதி வந்ததும், அவர் முன் நாங்கள் இருவரும் எழுந்து நின்றோம். முதலில் ஷார்ட்டி மீதான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பளித்த நீதிபதி தண்டனை விவரங்களை அறிவித்தார்.
‘‘முதல் குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் தண்டனை’’
‘‘இரண்டாவது குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் தண்டனை’’
‘‘மூன்றாவது குற்றத்திற்கு’’
தண்டனைக் காலத்தை நீதிபதி அறிவிக்க அறிவிக்க ஷார்ட்டியின் கால்கள் தடுமாறி, நிலைகுலைந்து போனார்.
‘‘நூறு ஆண்டுகள் சிறைத் தண்டனை. தண்டனைக் காலத்தை கைதி ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்.’’ நீதிபதி இறுதியாக சொல்லி முடித்தார்.
‘‘ரெட். மொத்தம் நூறு வருஷம் ஜெயில்ல இருக்கனுமா?’’ ஷார்ட்டியின் அப்பாவித்தனமான கேள்வியை நான் சிரித்துக் கொண்டே எதிர்கொண்டேன்.
வெள்ளைக்கார நீதிமன்றத்தின் கிறுக்குத்தனத்தை நினைத்து புன்னகைத்தேன். எனக்கும் இதே தண்டனைதான் கிடைக்கும் என்பதை அறிந்த நான் அதனை எதிர்கொள்ள மனதளவில் தயாரானேன்.
‘ஏககாலத்தில்’ என்பதற்கு ஷார்ட்டிக்கு அர்த்தம் தெரியவில்லை. சில வினாடிகளில் என்னைப் போலவே கடவுள் மறுப்பாளராக மாறினார் ஷார்ட்டி.
முதல் முறையாக திருட்டுக் குற்றத்தில் பிடிபடுபவர்களுக்கு 2 ஆண்டுகள்தான் சிறைத்தண்டனை வழங்க வேண்டும். இதுதான் அமெரிக்காவில் சிறைத்தண்டனை சட்ட விதி. ஆனால் எங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை திருட்டுக் குற்றத்திற்காக அல்ல. வெள்ளைப் பெண்களுடன் பழகியதற்காகத்தான். இதனை எளிதாக நான் புரிந்து கொண்டேன்.
கறுப்பர்கள் திருடுவது ஒன்றும் அவர்களைப் பொறுத்தவரை பெரிய குற்றம் இல்லைதானே. கறுப்பர் இனம் என்பது குற்றப்பரம்பரைதானே. வெள்ளையர்களின் கவலையெல்லாம், நாங்கள் அந்தப் பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டிருப்போமா என்பதுதான்.
சோஃபியாவுக்கும் அவள் தங்கைக்கும் நிபந்தனையில்லாமல் ஜாமின் கிடைத்தது.
சார்லஸ் டவுண் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டேன். மீசை முளைக்காத எனக்கு வயது 21. போதை இல்லாமல் என்னால், நிதானமாக சிறைக்குள் இருக்க முடியவில்லை. போதையையே சுவாசமாகக் கொண்ட எனக்கு, எந்த போதைப் பொருளும் சிறைக்குள் கிடைக்காததால் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. அதே சமயம் சிறைக்குள்ளே சாதிக்காய் மூலம் போதை ஏற்றிக் கொள்ளும் பழக்கம் கைதிகள் மத்தியில் இருந்தது.
ஒரு சில நாட்களில் அதற்கு என்னை பழக்கப்படுத்திக் கொண்டு சாதிக்காய் மூலம் போதை உணர்வைப் பெற்றேன்.
நிறத்தில் கறுப்பனாக இருந்தாலும் இதுவரை சுதந்திர மனிதனாகத்தான் நான் வாழ்ந்தேன். என்னை யாரும் கட்டுப்படுத்தியது கிடையாது. ஆனால் சிறை வாழ்க்கை என்னை முடக்கிப் போட்டது. எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இப்படி அடைபட்டுக் கிடந்தது கிடையாது. இந்தக் கறுப்பனை சிறைக் காவலர்கள் கேவலமாக நடத்தினர். அதற்கு சற்றும் சளைக்காமல் என் கலகத்தை சிறைக்குள் நான் ஆரம்பித்தேன்.
நீண்ட வரிசையில் காத்திருந்து, சாப்பாட்டைப் பெறுவது என் தன்மானத்துக்கு விடப்பட்ட சவாலாக இருந்தது.
‘‘டேய்… 22843 வரிசையில் வாடா…’’
சிறையில் கைதிகளுக்கு பெயர்கள் கிடையாது. எண்கள்தான். நம்பரைக் கூறி என்னை அழைப்பதை உச்சபட்ச அவமானமாக கருதினேன். என் நண்பர்கள் என்னை செல்லமாக அழைக்கும் ரெட் என்ற பெயரிலோ, என்னுடைய இயற்பெயரான மால்கம் லிட்டில் என்ற பெயரிலோ சிறைக் காவலர்கள் என்னை அழைக்கவில்லை.
வரிசையில் நின்று சாப்பாடு வாங்குவது, நம்பரைக் கொண்டு அழைத்தால் பதில் சொல்வது போன்ற சிறை விதிகளை சிறைக் கைதிகள் இயல்பாக பின்பற்றி வந்தனர். ஆனால் எனக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.
சாப்பாட்டு தட்டை தூக்கி எறிந்தேன். அடிதடி, ரகளை. சிறைக் காவலர்களுடன் கைகலப்பில் இறங்கினேன். இந்தக் களேபரத்தை மற்ற கைதிகள் வேடிக்கை பார்த்தனர்.
முதன்முறையாக போலீஸாரிடம் அடி வாங்கினேன். வலி பொறுக்காத நான், ‘‘யோவ்… நீ கறுப்பனுக்கு பிறந்தவன்தானே… உன் கலர் அப்படித்தான் இருக்கு…ஆனா, நீ வெள்ளைக்காரன்னு சொல்லிட்டு திரியிறியா? ஜெயில்ல இருக்குற எல்லா கைதிகள்ட்டயும் இந்த ரகசியத்த சொல்லிடுவேன்.’’ இப்படி ஒரு சிறைக் காவலரின் காதில் முணுமுணுத்தேன்.
இந்த மாதிரி ‘யாரிடமும் சொல்லி விடாதே’ என கெஞ்சுவது போல இருந்தது அந்தக் காவலரின் பார்வை. கறுப்பன் என சிறைக் கைதிகள் மத்தியில் அறியப்படுவேனோ எனப் பயந்த அந்தக் காவலர், என்னை சமாதானம் செய்தார்.
‘‘எல்லாரும் போங்க… இனி இவன் ஒழுங்கா நடந்துப்பான்’’ எனச் சொல்லிக் கொண்டே கைதிகளை விரட்டினார் அந்தக் காவலர். கைதிகள் அவரவர்களின் அறைகளுக்குச் சென்றனர்.
கறுப்பன் என்ற அந்தஸ்துடன் இந்தப் பூமியில் இருப்பதை விட இறப்பதே மேல் என்பதுதான் வெள்ளைக்காரர்களின் கொள்கை.
இந்தச் சம்பவத்துக்காக, என்னைப் பழிவாங்கத் துடித்த அந்தக் காவலர் என்னை தனிமைச் சிறையில் அடைத்தார். கெட்ட வார்த்தையால் திட்டிக் கொண்டே கூண்டில் அடைக்கப்பட்ட சிறுத்தையைப் போல உறுமினேன். மற்ற கைதிகளோடு பேசி பொழுது போக்கும் வாய்ப்பும் பறிக்கப்பட்டது.
‘‘தேவனே… ஏன் என்னை கைவிட்டீர்…ஜீஸஸ் வாரும்… வந்து என் துக்கத்தை சந்தோசமாக்கும்…’’ பைபிளையும் கடவுளையும் வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டித் தீர்த்தேன்.
மேலே சுவரை வெறித்துப் பார்த்தவனாக படுத்த நான் சற்று நேரம் கழித்து அமைதியானேன். ஆசுவாசமடைந்த எனக்கு, பழைய காட்சிகள் நினைவுக்கு வந்தன.
லேன்சிங் நகருக்கு வெளியே இருந்த ஹெக்டர் குன்றின் உச்சியில், சிறு வயதில் இதே போல தனிமையில் படுத்துக் கொண்டு வானத்தையும் நகர்ந்து செல்லும் மேகக் கூட்டங்களையும் பார்த்து ரசித்து பகல் கனவு கண்டது நினைவுக்கு வந்தது. அந்தச் சிறுவயது நாட்களை நினைவு கூர்ந்தேன்.
பொந்து என்றழைக்கப்பட்ட தனிமைச் சிறையில் இதுபோல் சுவரைப் பார்த்து படுத்திருக்கும் போது, மிகப் பெரிய மக்கள் திரள் முன்பு உரையாற்றுவது போல கற்பனை செய்து கொண்டேன்.
ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குப் பின் மீண்டும் என்னை சாதாரண சிறை அறைக்கு மாற்றினார்கள். பிற கைதிகளுடன் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது மற்ற கைதிகள் எனக்கு வழங்கிய பெயர் ‘சைத்தான்’. பின்னர் அவர்கள் என்னை சைத்தான் என்றே அழைத்தனர்.
(தொடரும்)
ஃபனான்

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...