Saturday, December 22, 2018

என் புரட்சி-18-சிறையிலிருந்து விடுதலை

சிறையிலிருந்து விடுதலை
நான் விடுதலையாகும் தேதியை அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். சகோதர, சகோதரிகளுக்கும் எலிஜா முஹம்மதுவுக்கும் அதைப் பற்றித் தெரிவித்து கடிதம் எழுதினேன். ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி, 1952-ம் ஆண்டு, சார்லஸ் டவுண் சிறையில் இருந்து நான் விடுதலையானேன். 2353 நாட்கள் சிறையில் கழித்த நான், மீண்டும் சிறைக் கம்பிகளைப் பார்க்கக் கூடாது என்ற உறுதியோடு அந்தச் சிறையை திரும்பிப் பார்க்காமல் புறப்பட்டேன்.
அக்கா யெல்லாவின் வீட்டிற்குச் சென்றேன். அங்கு அக்கா ஹில்டாவும் இருந்தாள். நன்றாக எண்ணெய் தேய்த்து குளித்தேன். சிறைச்சாலை அழுக்கிலிருந்து விடுதலையான உணர்வைப் பெற்றேன். அடுத்து என்ன செய்வது என்று யோசித்தேன். படிப்பு இல்லை. போதைப் பொருள் விற்றது, விபச்சார தரகன், வீடுகளில் புகுந்து திருடியவன்,- இதற்காக சிறை சென்றவன். இத்தகைய குற்றப் பின்னணியுள்ள நான் வாழ்க்கையை நகர்த்த அடுத்து என்ன செய்ய முடியும்?
“மால்கம், திரும்ப பாஸ்டனுக்கா, ஹார்லெமுக்கா? எங்க போகப் போற?” அக்கா யெல்லா கேட்டாள். அக்கா யெல்லா கேட்ட இந்த நொடியில், எனது தெருவோர ரவுடி வாழ்க்கை மின்னல் போல என் கண் முன்னே ஒரு கணம் வந்து மறைந்தது. நான் எந்த பதிலும் சொல்லாமல் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன்.
“வேணாம் மால்கம்.. நீ டெட்ராய்ட் போயிடு. வில்ஃப்ரட் அங்க இருக்கான். அந்த ஏரியாதான் உனக்கு சரியா இருக்கும்…” ஹில்டா சொன்னாள்.
ஹில்டா அக்கா வேறொரு பொருளில் இதைத் தெரிவித்தாள். அப்போது அவள் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு, நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பிலும் உறுப்பினராக இருந்தாள்.
“ஆமாம்” அக்கா யெல்லாவும் நான் டெட்ராய்ட் நகருக்கு போவதற்கு சம்மதம் தெரிவித்தார். இது எனக்கு பயங்கர ஆச்சரியமாக இருந்தது.
அக்கா யெல்லா இன்னும் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ளவில்லை. இஸ்லாத்தை பின்பற்றுவதற்கும், நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்பதற்கும் டெட்ராய்ட் நகர் ஏதுவாக இருக்கும் என்ற எண்ணத்தில் அக்கா இப்படி சொல்லவில்லை. போலீஸ் தொந்தரவு அங்கு இருக்காது என்ற எண்ணத்திலேயே அக்கா யெல்லா இதற்கு சம்மதித்தார்.
வெள்ளையர்களுக்கு எதிரான கலகக்காரனாக செயல்பட்ட போது உள்ளூர மகிழ்ந்த அக்கா, இப்போது என்னுள் ஏற்பட்டிருக்கிற மாற்றத்தை ஏற்றுக் கொண்டு அந்த நிலை தொடர வேண்டும் என்று விரும்பினாள். மீண்டும் நான் போக்கிரியாக மாற அவள் விரும்பவில்லை.
அன்றிரவு அக்கா யெல்லாவின் வீட்டில் கழித்தேன். அடுத்த நாள் டெட்ராய்ட் செல்ல தயாரானேன். அக்கா ஹில்டா கொஞ்சம் பணம் தந்து உதவினாள். டெட்ராய்ட் கிளம்புவதற்கு முன்பு, புது மூக்கு கண்ணாடி, சூட்கேஸ், கைக்கடிகாரம் இந்த மூன்று பொருட்களை வாங்கினேன்.
திருமணமாகி குழந்தைகளுடன் வசித்து வந்த அண்ணன் வில்ஃப்ரட், தன்னுடைய வீட்டிலேயே தங்கிக் கொள்ளுமாறு என்னை கேட்டுக் கொண்டான். சிறையில் இருந்து விடுதலையான எனக்கு அந்தக் குடும்பம் தந்த அரவணைப்பு, பாசப் பிணைப்பு மிகுந்த ஒத்தடமாக இருந்தது.
அதிகாலையில் எழுந்து, தொழுது, ஒருவருக்கொருவர் கண்ணியமாக, அவரவர் உரிமைகளை மதித்து நடந்த அந்தக் குடும்பம், இஸ்லாமிய குடும்ப மாதிரியை நேரில் அனுபவிக்கும் வாய்ப்பை எனக்குத் தந்தது. கடிதங்கள் வாயிலாக எலிஜா முஹம்மது போதித்தவற்றை நேரில் உணர்ந்தேன். டெட்ராய்ட் நகரிலிருந்த முதலாம் எண் பள்ளிவாசலுக்கு எலிஜா முஹம்மது வரும்போதெல்லாம், அண்ணன் வில்ஃப்ரட் வீட்டில்தான் தங்குவாரென்று, நான் சிறையிலிருக்கும் போதே தெரிந்து கொண்டேன்.
வில்ஃப்ரட் மேலாளராக பணியாற்றி வந்த பர்னிச்சர் கடையில் விற்பனையாளராக எனக்கு வேலை கிடைத்தது. டெட்ராய்ட் பகுதியிலிருந்த முதலாம் எண் பள்ளிவாசலில் உறுப்பினராகச் சேர்ந்து கொண்டேன். அமெரிக்க கறுப்பர்களிடம் இஸ்லாத்தை அறிமுகப்படுத்திய கீஞி ஃபார்ட், அமெரிக்காவில் நிறுவிய முதல் பள்ளிவாசல் இதுதான். இங்கு வாரந்தோறும் புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பிரசங்கம் நடைபெற்று வந்தது. இதில் முஸ்லிம் அல்லாதவர்களும் பங்கேற்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
நான் முதன்முதலாக அந்தப் பள்ளியில் நிகழ்ந்த பிரசங்கத்தில் கலந்து கொண்டேன். பள்ளிவாசலின் தலைமை இமாம் (விவீஸீவீstமீக்ஷீ) லெமுவேல் ஹஸன், பார்வையாளர்களுக்கு முகமன் (அஸ்ஸலாமு அலைக்கும்) சொல்லிவிட்டு பிரசங்கத்தை தொடங்கினார். அவர் அருகில் இருந்த கரும்பலகையில் இருந்த வாசகங்கள் என் கருத்தைக் கவர்ந்தன. அந்தக் கரும்பலகையில், அமெரிக்க கொடி வரையப்பட்டிருந்தது. அந்தக் கொடியின் கீழ்,
கிறிஸ்தவம்: அடிமை, வேதனை, மரணம்
என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. அதனையொட்டி ஒரு சிலுவைக் குறியீடும், அதன் கீழே இருந்த மரத்தில் ஒரு கறுப்பர் தூக்கில் தொங்குவது போன்றும் வரையப்பட்டிருந்தது.
இந்தக் குறியீடுகளுக்கு எதிரே, அதே கரும்பலகையில், சிவப்பு வண்ணத்தில் பிறையும் நட்சத்திரமும் கொண்ட கொடி ஓவியமாக தீட்டப்பட்டிருந்தது. அந்தக் கொடியின் கீழ்,
இஸ்லாம்: சுதந்திரம், நீதி, சமத்துவம்
என்று பொறிக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்தார் போல கீழே,
நன்மைக்கும், தீமைக்கும் இடையே நடக்கும் இறுதிப் போரில் வெல்லப் போவது எது?
என்றும் எழுதப்பட்டிருந்தது. இந்தக் கேள்வி எனக்குள் உத்வேகத்தை தூண்டியதைப் போலவே, மினிஸ்டர் லெமுவேல் ஹஸனின் உரையும் என்னை வெகுவாக ஈர்த்தது. அதேசமயம் அந்தச் சிறிய பள்ளிவாசலில் இன்னும் ஏராளமான இருக்கைகள் நிரம்பாமல் காலியாக இருப்பது என் மனதை உறுத்தியது.
“வில்ஃப்ரட்… எவ்வளவு சேரிக் கறுப்பர்கள், போதையிலும், தீய பழக்கவழக்கங்களிலும் உழல்கிறார்கள்! ஆனா, இங்க அவங்களெல்லாம் வந்தா நல்லா இருக்குமே…” பள்ளிவாசலுக்கு வராத, இன்னும் நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பில் இணைய ஆர்வம் காட்டாத சேரிக் கறுப்பர்களை நினைத்து கோபப்பட்டேன்.
“உன்னோட வருத்தம் எனக்குப் புரியுது. கொஞ்சம் பொறுமையா இரு மால்கம்.. சீக்கிரமே எலிஜா முஹம்மதுவைப் பார்க்கப் போறோம்” வில்ஃப்ரட் என்னை சாந்தப்படுத்தினான்.
டெட்ராய்ட் பகுதியில், அமைப்பில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க முஸ்லிம்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அல்லாஹ்வே, அமைப்பில் உறுப்பினர்களைச் சேர்த்து விடுவான் என அந்தப் பகுதியில் இருந்த நேஷன் ஆஃப் இஸ்லாம் உறுப்பினர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. இருந்தாலும் விரைவில் எலிஜா முஹம்மதுவைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆர்வமே என்னை சற்று அமைதியாக இருக்க வைத்தது.
1952, ஆகஸ்ட் 31-ம் தேதி. அது தொழிலாளர் தினத்துக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை. அமெரிக்காவில் செப்டம்பர் மாத முதல் திங்கள் கிழமை தொழிலாளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அன்று என் வாழ்க்கையில் பெரும் மாற்றத்திற்கு காரணமான அந்த முக்கியமான நபரை சந்திக்க இருந்தேன்.
டெட்ராய்ட் முதலாம் எண் பள்ளிவாசல் முஸ்லிம்கள் பத்து கார்களில் சிகாகோவுக்குப் புறப்பட்டோம். சிகாகோவிலிருந்த இரண்டாம் எண் பள்ளிவாசலில் நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் தலைவர் எலிஜா முஹம்மது உரையாற்ற இருந்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாங்கள் சென்றோம்.
நிகழ்ச்சி தொடங்கியது. அந்தப் பள்ளிவாசலில் இருந்த மேடையின் பின்புறத்திலிருந்து அவர் வந்தார். இதுவரை போட்டோக்களில் பார்த்திருந்த அந்த மனிதரின் உருவத்தை இப்போது நேரில் பார்த்தேன். கறுப்பர்களின் வாழ்வில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வந்திருக்கும் அந்த உயர்ந்த மனிதரை நேரில் பார்க்கப் பார்க்க பரவசத்தால் உற்சாகமானேன்.
என்னுடைய சிறுவயதிலிருந்து இந்த மாதிரி உணர்ச்சிக்கு இதுவரை நான் ஆட்பட்டதில்லை. அவ்வளவு உயரம் இல்லாமலும், மெலிந்த தேகத்தோடும் பாதுகாப்பு வீரர்களோடு நடந்து வந்த அவர் கம்பீரமாக தோற்றம் தந்தார். அவருடைய கூரிய பார்வை எங்களை வசீகரித்தது. டெட்ராய்ட்யிலிருந்து சென்ற நாங்கள் நூறு பேரும், சிகாகோ பள்ளிவாசலைச் சேர்ந்த நூறு பேரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு அந்தச் சக்தி வாய்ந்த மனிதரின் பேச்சைக் கேட்க காத்திருந்தோம். எலிஜா முஹம்மது பேசத் தொடங்கினார். கூட்டம் நிசப்தமானது:
‘அமெரிக்கா என்ற இந்த நரகத்தில், நீக்ரோக்கள் என்று அழைக்கப்படுகிற நம்மை, எவ்வளவு கீழ்த்தரமாக வைத்திருக்கிறார்கள்? நீலக் கண்களைக் கொண்ட அந்த பிசாசுகள், நம்முடைய தாய் தேசத்திலிருந்து நம்மை கடத்தி வந்து அடிமைப்படுத்தி வைத்துள்ளனர். அடிமைத்தளையில் கட்டுண்டிருக்கிறோம் என்ற உணர்வுகூட அமெரிக்க கறுப்பர்களுக்கு இல்லாத நிலையில், அவர்களை அற்ப உல்லாசத்தில் ஆழ்த்தி வைத்திருக்கின்றன வெள்ளைப் பிசாசுகள்’. எலிஜா முஹம்மதுவின் பேச்சில் அமெரிக்க கறுப்பர்களின் அடிமைத்தனம் குறித்த ஆற்றாமை வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த ஆற்றாமையை அப்படியே ஏற்றுக் கொள்ளும் கறுப்பர்களின் தன்மானத்துக்கு முடிவு கட்டி, விடுதலைப் பாதையை அவர் போதித்துக் கொண்டிருந்தார். ஓர் ஆசிரியரைப் போல அல்ல… போர்க் களத்தில் வீரர்களை வழி நடத்தும் தளபதியைப் போல…
“சிந்தனை, ஆன்மீகம், ஒழுக்கம் -இந்தத் துறைகளில் அமெரிக்கக் கறுப்பர்கள் இறந்து போய்விட்டார்கள். இதற்கு காரணமே இந்த வெள்ளையர்கள்தான்.. நம்முடைய மொழியிலிருந்து நம்மை துண்டித்தார்கள். நம்முடைய பண்பாடு என்ன என்பது நமக்குத் தெரியுமா? ஆதிக் கறுப்பர்களின் குடும்ப அமைப்பு நமது நினைவிலிருக்கிறதா? குறைந்தபட்சம் நமது குடும்பப் பெயர்களாவது நமக்கு தெரியுமா?”
மூளையைத் துளைக்கும் கேள்விகளை எங்கள் முன் எழுப்பினார். அங்கிருந்த அனைவரும் சிந்தனை இமைகள் மூடாமல் ஆழ்ந்து நோக்கினோம் அவரது உரையை… நான் இருக்கையின் நுனியில் அமர்ந்து கவனமாக எலிஜா முஹம்மதுவின் பேச்சைக் கேட்டேன்.
அமெரிக்க கறுப்பர்களின் துயரங்களைப் பட்டியலிட்டுக் கொண்டு வந்த அவர் திடீரென என்னைப் பற்றி பேசத் தொடங்கினார். என் பெயரைச் சொல்லாமல் நான் சிறையிலிருந்ததைப் பற்றியும், என்னுடைய முந்தைய தெரு வாழ்க்கையைப் பற்றியும் குறிப்பிட்டார். ஒரு கறுப்பு இளைஞனின் இருட்டுப் பக்கங்களை விவரிக்க விவரிக்க, நான் ஆச்சரியத்தால் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன்.
உரையை முடிப்பதற்கு முன்பாக என் பெயரைக் குறிப்பிட்டு, அந்தச் சகோதரர் இந்த நிகழ்ச்சியில் உங்களோடுதான் இருக்கிறார், இனி அவர் சத்தியத்துடன் போராட்டத்தை தொடங்க வேண்டும் என்றார்.
“எழுந்திருங்க மால்கம்…”
அங்கிருந்த அனைவரின் கண்களிலிருந்தும் பாய்ந்த ஒளிவெள்ளம் என் முகத்தில் குவிந்தது. அந்தக் கூட்டம் முடிந்ததும் எங்கள் பள்ளிவாசலின் தலைமை இமாம் லெமுவேல் ஹஸன், என்னை எலிஜா முஹம்மதுவிடம் அழைத்துச் சென்றார். எங்களை சிகாகோவில் இருந்த அவரது வீட்டிற்கு வரச் சொன்னார். வீட்டிற்குச் சென்ற நான், அவரது எளிமையையும் உபகாரத்தையும் பார்த்து வியந்தேன். விருந்துக்குப் பின், எங்களிடம் இயல்பாக பேசிக் கொண்டிருந்தார்.
“எங்கள் முதலாம் எண் பள்ளிவாசலில் எத்தனை உறுப்பினர்கள் இருப்பார்கள்?” பொறுமை இழந்த நான் கேட்டு விட்டேன்.
“ஆயிரம் பேர் இருப்பாங்களா?” தோராயமாகப் பதில் சொன்னார்.
“போதாதே… என்னைய மாதிரி எவ்வளவு பேர் சேரில இருக்காங்க… அவங்கள இயக்கத்துல சேர்க்க ஏதாவது வழி சொல்லுங்க…” நான் எனது சந்தேகத்தைக் கேட்டு வைத்தேன்.
“இளைஞர்களிடம் அமைப்பை கொண்டு போய்ச் சேருங்கள்… நமது அமைப்பின் கொள்கைக் கோட்பாடுகளைச் சொல்லுங்கள். அவர்கள் முஸ்லிம்களாகி விட்டால், கறுப்பின சமூகத்தில் இருக்கும் வயதானவர்கள் வெட்கத்தின் காரணமாக தானாகவே அந்த இளைஞர்கள் பின்னால் வந்து விடுவார்கள்.”
இந்த வாக்கியத்தை, என் தலைவர் எலிஜா முஹம்மதுவிடம் இருந்து வந்த இந்த வாக்கியத்தை, நான் ஆலோசனையாக எடுத்துக் கொள்ளவில்லை. கட்டளையாகவே பார்த்தேன். இந்தக் கட்டளையை சிரமேற்கொள்வது என அப்போதே தீர்மானித்தேன்.
டெட்ராய்ட் திரும்பிய பின், அண்ணன் வில்ஃப்ரட்டிடமும், தலைமை இமாம் மினிஸ்டர் லெமுவேல் ஹஸனிடமும், நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பை இந்தப் பகுதியில் விரிவுபடுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்தேன். என்னுடைய முயற்சிகளுக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பதாக மினிஸ்டர் உறுதி அளித்தார்.
என் சிந்தனையிலும் செயலிலும் பேச்சிலும் மாற்றத்தைத் தந்த அந்த மனிதரை,- எலிஜா முஹம்மதை -நான் அதிகம் மதித்தேன். அவர் மீது அவர் வைத்த நம்பிக்கையை விட, அவர் மீது நான் வைத்த நம்பிக்கை அதிகம். அந்த நம்பிக்கையை நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பை வளர்த்தெடுப்பதில் காட்டினேன்.
தீவிரப் பிரச்சாரத்தில் இறங்குவதற்கு முன்பாக, அடையாள மாற்றம் தொடர்பான அதிரடியான திட்டம் ஒன்றை செயல்படுத்த தலைமையிடம் அனுமதி கேட்டேன். எனக்கே தெரியாது, அந்த திட்டம்- அடையாள மாற்றம் கறுப்பர்களின் வரலாற்றில் மட்டுமல்ல, அமெரிக்க வரலாற்றிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று!
தொடரும்
-ஃபனான்

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...