Saturday, December 22, 2018

என் புரட்சி-9-மீண்டும் பாஸ்டனில்

மீண்டும் பாஸ்டனில்
பாஸ்டன் நகரில் ராக்ஸ்பரி ஏரியாவில் மீண்டும் நான். உயிர் பயத்திலிருந்து மீள கஞ்சாவை புகைத்து சுவாசித்தேன். கஞ்சா புகைக்க எனக்கு பழகிக் கொடுத்த ஷார்ட்டியே, நான் கஞ்சாவுக்கு நிரந்தரமாக அடிமையானதைப் பார்த்து பயந்து விட்டார்.
நான்கு ஆண்டுகளாக ஹார்லெம்மில் உயிருக்குப் பயந்த வாழ்க்கையை மறக்க சோஃபியா எனக்கு உதவினாள். என் வருகையால் சோஃபியா மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டாள். பழையபடி அவளுடன் ஊர் சுற்றினேன்.
ஒரு மாதம் பாஸ்டனில் சுற்றித் திரிந்து கொஞ்சம் மாறியிருந்த அந்த நகரின் போக்கை புரிந்து கொண்ட நான், மீண்டும் ஹார்லெம் செல்லும் நினைவைக் கைவிட்டேன். இங்கேயே ஏதாவது பிழைப்பைத் தேடிக் கொள்ளலாம் என முடிவெடுத்தேன்.
என்னைப் போன்ற கலக சிந்தனை கொண்ட கறுப்பினத்தவன் ஒருவனுக்கு பாஸ்டன் சேரியில் என்ன தொழில் தெரியும்?
இங்கேயும் அடியாள் தொழில் செய்யலாம் என முடிவெடுத்தேன்.
அடியாள் தொழிலில் இறங்குவதென்பது புதிதாக ஏதோ ஒரு கடையில் வேலைக்குச் சேர்வது போல சாதாரணமான விஷயம் கிடையாது. அதுவும் பாஸ்டன் போன்ற சேரியில், கறுப்பின தாதாக்களின் மத்தியில் பொடியனான நான் அடியாளாக வலம் வருவது அவ்வளவு எளிதல்ல.
அடியாள் தொழிலில் கொடிகட்டிப் பறக்க, ஒரு அதிரடியான தொடக்கம் தேவை. அந்த தருணத்தை எதிர்பார்த்து வாய்ப்புக்காக காத்திருந்தேன்.
சோஃபியா கொடுத்த பணத்தில், சூதாட்ட விடுதிகளுக்குச் சென்று வந்தேன். ஒரு நாள், பிரபலமான சூதாட்டப் பேர்வழியுடன் சீட்டாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஜான் ஹியூஸ். நகரிலேயே வெல்ல முடியாத சூதாடி அவர்.
முன்பு ராக்ஸ்பரியில் நான் இருந்த போது, ஜான் என்னைச் சீண்டியதுகூட கிடையாது. அதேசமயம், நான் ஹார்லெம்மில் அடியாளாக பரிணமித்ததை விசாரித்து கேட்டு அறிந்துவைத்திருந்தார் ஜான்.
ஜான் ஹியூசுக்கு சொந்தமான விடுதியில், அவருக்கு எதிராகவே இப்போது சீட்டாடினேன். ஒவ்வொருவராக பந்தயம் கட்டி அவரிடம் தோற்று வந்தனர். நான் பந்தயம் கட்டாமல் தவிர்த்துவந்தேன். அதே சமயம் அவர் சீட்டாடும் விதத்தை கவனித்து வந்ததோடு, சரியான நேரத்தில் பந்தயம் கட்ட முடிவு செய்தேன். பந்தயத் தொகையை கணிசமாக உயர்த்தினார் ஜான்.அவருடைய சீட்டாட்டத்தின் போக்கை புரிந்து கொண்ட நான், இதுதான் தருணம் என்று பந்தயம் கட்டினேன்.
சூதாட்ட விடுதியில் இருந்த அனைவரின் புருவங்களும் ஆச்சரியத்தால் உயர்ந்தன. நான் தோற்று ஓடப் போவதாக சில சூதாடிகள் நினைத்தனர். சில சூதாடிகளோ, இந்தப் பொடியன், ஹியூஸை தோற்கடித்து, அவனை பழிதீர்ப்பானா என மனதுக்குள் ஏங்கினர். ஜான் ஹியூஸிடம் ஏமாந்த பேர்வழிகளெல்லாம், அவன் தோற்பதையே விரும்பினர்.
ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது. எங்கள் இருக்கையைச் சுற்றி கூட்டம் கூடிவிட்டது.
சிகரெட் புகையை அனாயசமாக வாயிலிருந்து வெளியேற்றிய ஜான், என்னைப் பார்த்து எகத்தாளமாகச் சிரித்தார்.
“என்ன ரெட் தோத்துடுவோம்னு பயம் வந்திடுச்சா”
நான் முறைத்தேன்.
“பரவாயில்ல நீ தோத்திட்டாக் கூட, இந்தப் பணத்தை எல்லாம் நீயே எடுத்துக்கஞ் உனக்கு மட்டும் இந்த வாய்ப்ப நான் தர்ரேன்”
அவனது வார்த்தைகளில் தோல்வி பயத்தைக் கண்டேன். ஜான் என் கவனத்தை திசை திருப்புவதைப் புரிந்து கொண்டு, ஆட்டத்தில் கவனத்தைச் செலுத்தினேன்.
நேர்த்தியாக ஆடிய நான் சாமர்த்தியமாக சீட்டுகளைக் கையாண்டு, பந்தயத்தில் வெற்றி பெற்று ஐந்நூறு டாலர்களை அள்ளினேன். பாஸ்டனில் எனது முதல் வருவாய் இது. சூதாட்டத்தில் ஜாம்பவானான ஹியூஸ், சின்னப் பொடியனிடம் தோற்றதால், அங்கிருந்து விரக்தியோடு புறப்பட்டார்.
“ரெட் இங்க வந்து என்ன கேட்டாலும், எப்ப எது கேட்டாலும் கொடுங்க..” சூதாட்ட ஊழியர்களிடம் கட்டளையிட்டு விட்டு, நடையைக் கட்டினார் ஜான் ஹியூஸ். சிங்கத்தை அதன் குகையிலேயே தோற்கடித்து, பாஸ்டன் நிழலுலகில் என் பெயரை ஓங்கி ஒலிக்கச் செய்தேன். ராக்ஸ்பரி ரவுடிகளின் வட்டத்தில் ‘ரெட்’ என்கிற பெயர் எதிரொலிக்கத் தொடங்கியது.
இன்னொரு நாள், இதே ஜான் ஹியூஸின் சூதாட்ட விடுதியில் மாலுமி ஒருவர் துப்பாக்கியை விற்க என்னை அணுகினார்.
“இது நல்ல பொருளா?” நான் அந்த மாலுமியிடம் கேட்டேன்.
“செக் பண்ணிப் பாருங்க” அவர் பதில் சொன்னார்.
துப்பாக்கியில் ரவைகளைப் போட்டு, டிரிக்கரைச் சுற்றி விட்டு, ஸ்டைலாக உயர்ந்திய நான், சடுதியில் அந்த மாலுமியின் தொப்பை வயிற்றில் துப்பாக்கியைச் சொருகினேன். இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த மாலுமி, பயத்தில் கண்களை வெளியே தள்ளினார்.
“செக் பண்ணிடலாமா” நக்கலாகக் கேட்டேன்.
அரண்டு போன, அந்த மாலுமி ஓடிவிட்டார். அவரால் திருப்பித் தாக்க நடவடிக்கைகள் எடுக்க முடியும். ஆனால் இதனைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல், மூடத்தனமாக துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய என் துணிச்சல், நிழலுகில்மீண்டும் பேசு பொருளாகியது.
பைத்தியக்காரத் தனம், அடியாட்கள் உலகில் பெயரை மட்டும் பெற்றுத் தருவது கிடையாது. பிறர் பயப்படவும் அதுதான் உதவியது. மது விடுதிக்கு, சூதாட்ட கிளப்புக்கு என எங்கு சென்றாலும் மரியாதை கலந்த பயத்துடன் அனைவரும் என்னைப் பார்த்தனர்.
சூதாட்டத் தொழிலே என் வருவாய்க்கான போதுமான வழியாக இருந்தது. நியூயார்க்கில் பெரிய, பெரிய ஜாம்பவான்களை தோற்கடித்த அனுபவம், பாஸ்டனில் கை கொடுத்தது.
ஏமாளிகள் நிறையப் பேர் இங்கு சூதாடிகளாக இருந்தனர். மாதத் தொடக்கத்தில் கை நிறைய சம்பளம் வாங்கிய கையோடு, சூதாட்ட விடுதிக்கு வந்தவர்களை நடுத் தெருவில் நிற்கவைத்தேன்.
இப்போது நானும் ஷார்ட்டியும் ராக்ஸ்பரி ஏரியாவில் தனியாக ஒரு அறை எடுத்து தங்குவதென முடிவு செய்தோம்.
ரெஜினால்ட் இருக்கும் போது, அக்கா யெல்லாவின் வீட்டுக்குச் சென்றேன். ஹார்லெம்மில் நடந்தவற்றையெல்லாம் சொன்னேன். நான் உயிர் பிழைத்ததைக் கேட்டு ஆச்சரியமடைந்தரெஜினால்ட் கவனமாக இருக்கச் சொன்னான். நான் சூதாடிக் கொண்டு, சோஃபியாவுடன் ஊர் சுற்றிக் கொண்டு ரவுடியாக சுற்றித் திரிவது அக்கா யெல்லாவிற்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் வேறு தொழில் செய்யவோ, அடியாள் தொழிலைக் கைவிடவோ அவள் என்னை கேட்டுக் கொள்ளவில்லை.
நான் செய்து வந்த கிளர்ச்சி அவருக்குப் பிடித்திருந்தது என்றும், கலக எண்ணம் கொண்ட அவளால், ஒரு பெண் என்பதால் தன்னால் செய்ய முடியாததை, தம்பி மால்கம் செய்வதாக எண்ணி மகிழ்ந்தாள் என்றும்தான் நான் புரிந்து கொண்டேன். சூதாட்டத் தொழிலில் வருமானம் வந்தாலும், ஷார்ட்டிக்காக, அவருடைய வாழ்வாதாரத்தை உயர்வதற்காக எதையாவது செய்ய வேண்டும் என்று விரும்பினேன்.
சூதாட்டத்தோடு, இன்னும் பெரிதாக வருமானம் வரும் வகையில், வேறு ஏதாவது தொழில் செய்யலாம் என முடிவு செய்தேன். நிறைய யோசித்த நான், என்ன தொழில் செய்யலாம் என்ற முடிவுக்கும் வந்து விட்டேன். ஆனால், ஷார்ட்டி அந்தத் தொழிலுக்கு ஒப்புக் கொள்வாரா என்ற சந்தேகம் எனக்கிருந்தது.
கட்டுப் பெட்டித்தனமாக வளர்ந்த, அதுவும் இசைக் குழு ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று கனவு கண்ட, அதற்காக கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வந்த ஷார்ட்டி நான் செய்யவிரும்பிய தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்று உறுதியாக நம்பினேன்.
ஆனால் என் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக, என் உயிரைக் காப்பாற்றி பாஸ்டன் நகருக்கு என்னை அழைத்து வந்த ஷார்ட்டி, நான் செய்ய விரும்புவதாக சொன்ன புதிய தொழிலுக்கு எந்தஎதிர்ப்பும் தெரிவிக்காமல் உடனடியாக சம்மதம் தெரிவித்தார்.
நான் அதிர்ச்சியடைந்தேன்.
-ஃபனான்
(தொடரும்)

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...