Saturday, December 22, 2018

என் புரட்சி-17-சிறையில் பேச்சாளனாக

சிறையில் பேச்சாளனாக
எலிஜா முஹம்மது டெட்ராய்ட் நகருக்கு வரும் போதெல்லாம், அண்ணன் வில்ஃப்ரட் வீட்டில்தான் தங்குவார் என, சிறையில் என்னைப் பார்க்க வந்திருக்கும் போது, அக்கா ஹில்டா சொல்லியிருந்தாள். அவரைக் காண வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது. எலிஜா முஹம்மதுவைக் காணும் நாள் வெகு தொலையில் இல்லை என நான் நம்பினேன்.
நார்ஃபோல்க் சிறையில் நான் வாசித்த புத்தகங்களால் என் மூளையில் உருவான சிந்தனைகள், வெளியேறத் துடிக்கும் நீராவி போல கொதித்தது.
அதற்கு வழியமைத்துக் கொடுத்தது சிறைக்குள் வாரந்தோறும் நடந்த விவாதக் கூட்டங்கள். நானும் விவாதத்தில் பங்கெடுக்க பெயரைப் பதிவு செய்தேன். சிறையிலிருந்து வெளியே வந்த பின்பு, வெள்ளைக்காரனை வாதத் திறமையால் வெல்ல, இந்த விவாதக் கூட்டம் பயன்படும் என முடிவு செய்தேன். அதனால், விவாதங்களில் வெல்வதற்கான தயாரிப்புகளில் இறங்கினேன். புத்தக வாசிப்பின் மூலம் அதிகமான, துல்லியமான வரலாற்றுத் தகவல்கள் என்னிடம் இருந்தாலும், சாமர்த்தியமான பேச்சால் கூட்டத்தை என் பக்கம் இழுக்க வேண்டும் என முடிவு செய்தேன்.
விவாதத்தில் பங்கேற்கும் எதிராளி கேட்கும் கேள்விகளுக்கு, அவரை திருப்திப்படுத்தும் வகையிலும், அவரது வாயை அடைக்கச் செய்யும் வகையிலும் பதில் அளிக்க தனிமையில் பயிற்சி எடுத்தேன். அதே சமயம் ஒரு வெள்ளைக்காரன் போல நானே மாறி, அவன் எப்படியெல்லாம் கேள்வி கேட்க வாய்ப்பிருக்கும் என்றும் பயிற்சி எடுத்தேன்.
விவாத அரங்கில் இந்த வாரத்துக்காக ஒட்டப்பட்ட விவாத தலைப்பு இதுதான்: ‘கட்டாய இராணுவச் சேவை’
விவாதக் களத்தில் எனக்கு தீனி போடும் தலைப்புதான் இது. நான் தயாரானேன். அந்த நாளும் வந்தது. விவாத அரங்கில் கைதிகள் கூடினர். எதிராளி எழுந்து கட்டாய இராணுவச் சேவையின் அவசியம் என்ற கருப்பொருளில் தனது வாதங்களை அடுக்கினார். பார்வையாளர்களும், அதாவது சிறைக் கைதிகளும், அவரின் வாதங்களில் உண்மை இருப்பதாக ஆமோதிக்கும் வகையில் சில நேரங்களில் தலையை அசைத்தனர்.
இறுதியில்…
“இத்தாலி நாட்டு விமானங்கள் மீது, எத்தியோப்பியர்கள் கற்களை வீசித் தாக்கினாங்க.. ஈட்டிகளை எறிஞ்சு தாக்குனாங்க.. அதனாலதான் சொல்றேன் இப்படிப்பட்ட எதிரிகளை எதிர்கொள்ள ஒவ்வொரு அமெரிக்கனும் கட்டாயம் இராணுவப் பயிற்சி எடுத்திருக்கணும்.. நன்றி’ என்று தன்னுடைய வாதத்தை முன்வைத்தார். அவர் ஒரு வெள்ளைக்காரர் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
நான் எழுந்தேன். முதன் முதலாக ஒரு கூட்டத்தின் முன்பாக பேசுவதால் எழுந்த பயத்தை வெளிக்காட்டாமல், என் சிந்தனைகளில் தோன்றியதை வார்த்தைகளாக வெளிப்படுத்தினேன். என் கால்கள் வியர்வையால் நனைந்தன.
கூட்டம் என் வார்த்தைகளை கவனமாகக் கேட்டது. கூட்டத்தினரை நம் பக்கம் இழுத்துவிட்டால், இந்த விவாதத்தில் வெற்றி பெறலாம் என நினைத்து கவனமாக என் வாதத்தை அழுத்தமாக எடுத்து வைத்தேன்.
“இத்தாலிக்காரன் விமானத்தில இருந்து குண்டுகளைப் போடுகிறான். அவனுக்கு ரோமின் போப்புடைய ஆசிர்வாதம் இருக்கு.. எத்தியோப்பியக்காரன்ட்ட என்ன இருக்கு? அவனோட கறுப்புச் சதைகள் சிதைக்கப்பட்டு, அவனது உடம்புகள் தூக்கி எறியப்பட்டு மரங்களில் தொங்கும் போது.. கற்கள் இல்லை, ஈட்டி இல்லை.. அவனது உடம்பை எறிந்து அவன் போராடினால் கூட தப்பில்லை! போராடத்தான் செய்வான்!” இப்படி என் விவாதத்தை முடித்தேன்.
சிறைக் கைதிகளான பார்வையாளர்கள் என் வாதத்துக்கு ஆதரவு அளித்தனர்.
ஆனால், நான் ‘கறுப்பு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதால் விவாத விதிமுறைகளை மீறி தவறிழைத்து விட்டதாக கூச்சல் எழுந்தது.
“நான் இனப் பிரச்சினையைக் கிளப்பவில்லை. வரலாற்று உண்மையைத்தான் சொன்னேன்.” எழுந்து நின்று என் பக்க நியாயத்தைச் சொல்லி கூட்டத்தை அமைதிப்படுத்தினேன்.
“வரலாற்று உண்மையா? நீ விவாதத்தை திசைதிருப்புகிறாய்”
“றிவீமீக்ஷீக்ஷீமீ ஸ்ணீஸீ றிணீssமீஸீs எழுதிய ஞிணீஹ்s ஷீயீ ளிuக்ஷீ சீமீணீக்ஷீs புத்தகத்தை படிச்சிருக்கீங்களா? அதுல இந்த உண்மைகள் இருக்கு”
விவாதம் முடிந்தது.
நான் எதிர்பார்த்தது போலவே, சிறை நூலகத்தில் அந்தப் புத்தகம் காணாமல் போய் விட்டது.
அன்று ஓர் உறுதிமொழியை எடுத்துக் கொண்டேன்:
‘சிறையில் இருந்து விடுதலையான பின், வெள்ளையனிடம் அவனுடைய குற்றங்களை முன்வைப்பது.. அந்த முயற்சியிலேயே மரணமடைவது..’
சிறையில் நடைபெற்ற பெரும்பாலான விவாதங்களில் பங்கேற்று வெள்ளையர்களின் உண்மை முகத்தை கைதிகள் முன்பு தோலுரித்துக் காட்டினேன்.
சில நாட்கள் கழித்து தம்பி ரெஜினால்ட் என்னைப் பார்க்க சிறைக்கு வந்தான். நான் மிகவும் மகிழ்ந்தேன். எலிஜா முஹம்மது போதித்த கொள்கைக்கு ஆதாரமாக நான் படித்த புத்தகங்களில் இருந்த தகவல்களை அவனிடம் பகிர்ந்து கொண்டேன். அவன் உற்சாகம் இல்லாமல் நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
அவனுடைய கவனத்தை என் பக்கம் திருப்புவதற்காகவும், அவனது சோர்வைப் போக்கி சுறுசுறுப்பாக்குவதற்காகவும், நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்புக்காக சிறையில் ஆட்களை சேர்க்க நான் எடுத்து வரும் முயற்சிகளை பற்றி விவரித்தேன். இதனையெல்லாம் பொருட்படுத்தாத ரெஜினால்ட்,
“மால்கம்… நாம நினைப்பது போல எலிஜா முஹம்மது அவ்வளவு நல்லவரில்லை!” என்றான் தீர்க்கமாக.
“என்ன சொல்ற ரெஜினால்ட்?” அதிர்ச்சியாக கேட்டேன்.
“அவர் ஒழுக்க ரீதியாக சரியான நடத்தை கொண்டவரில்லை!”
அவரைப் பற்றிய குற்றச்சாட்டுகளை அவன் அடுக்கினான். ஆனால் அதில் எதுவும் குறிப்பாக என் காதுகளில் விழவில்லை.
எனக்கு அப்படியே உலகம் தலைகீழாக புரள்வது போல இருந்தது. இஸ்லாத்தை எனக்குப் போதித்த, எனக்கு ஆதர்சமாக விளங்கிய மனிதரைப் பற்றியா இப்படி சொல்கிறான் இவன் என வியப்பால் ஒரு கணம் ஆடிப்போனேன். இவன்தானே எனக்கு இஸ்லாத்தை, எலிஜாவை, நேஷன் ஆஃப் இஸ்லாமை அறிமுகப்படுத்தினான், இப்போது இவனே இப்படிச் சொல்கிறானே.. நம்பலாமா.. குழப்பத்தில் ஆழ்ந்தேன்.
அவன் சென்ற பின்னால், சிறையில் இருந்த நான் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானேன்.
தம்பிக்கும் எனக்கும் உள்ள ஆழமான உறவைக் குறிப்பிட்டு, ரெஜினால்ட்டை நியாயப்படுத்தி எலிஜா முஹம்மதுக்கு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தை தபால் பெட்டியில் போட்டு விட்டு, இறைவனைத் தொழுதேன். இந்தச் சிக்கலிலிருந்து மனம் வெளியே வருவதற்காக இறைவனிடம் மன்றாடினேன்.
ஒரு சில நாட்கள் கழித்து எலிஜா முஹம்மதிடமிருந்து பதில் கடிதம் வந்தது. வழமையான நலம் விசாரிப்புகளை அடுத்து நான் தம்பியைக் குறிப்பிட்டு எழுதியிருந்ததற்கு இப்படி அவர் பதில் எழுதியிருந்தார்:
உண்மை மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கையின் மீது, நீங்களே இப்போது சந்தேப்படத் தொடங்கியிருக்கிறீர்கள். இதன் பொருள் என்ன? இன்னும் நீங்கள் சத்தியத்தின் மீது முழுமையாக நம்பிக்கை வைக்கத் தொடங்கவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. சத்தியத்தின் மீது சந்தேகம் கொள்ளும் அளவுக்கு உங்கள் பாசம் என்ற பலவீனம் உங்களுக்கு தடையாக இருந்திருக்கிறது.
எலிஜா முஹம்மதுவின் இந்தப் பதில் கடிதம் என்னை வெகுவாகப் பாதித்தது.
ரெஜினால்ட் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவன், நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டேன். அவன் ஒழுக்க ரீதியாக தவறிழைத்ததால், நேஷன் ஆஃப் இஸ்லாம் விதிகளின்படி அமைப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அறிந்தேன்.
விரைவிலேயே இந்த மனச்சிக்கலிலிருந்து வெளியேறிய நான், வழக்கம் போல இஸ்லாத்தை எத்தி வைக்கும் பணியை சிறைக்குள் தீவிரப்படுத்தினேன்.
சில கறுப்புக் கோடாலிகள், வெள்ளையர்களிடம் என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக சொல்லிக் கொடுத்ததை அதிகாரிகளின் நடத்தைகளில் அறிந்தேன். அதேபோல, கடிதங்களை தணிக்கை செய்து வந்த அதிகாரிகளும் என் மீது ஒரு கண் வைத்தனர். என்னுடைய சிறைக்காலம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. நான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவதைப் பற்றி, பரோல் கமிட்டி பரிசீலித்து வந்தது.
என்னுடைய இஸ்லாமிய அழைப்புப் பணியால், பரோல் கமிட்டியினர் என்னை விடுதலை செய்வதை தள்ளிப் போடுவார்கள் எனப் பயந்தேன். ஆனால், அதுவே அவர்களை என்னை விரைவில் விடுதலை செய்ய நிர்ப்பந்தித்தது. அதேசமயம், என்னுடைய மதமாற்றும் முயற்சியை தடுக்கும் விதமாக, நார்ஃபோல்க் சிறையிலிருந்து, மீண்டும் சார்லஸ் டவுன் சிறைக்கு என்னை மாற்றினர்.
சிறை வாழ்வை நான் ஆரம்பித்த இடத்திலேயே முடிக்க அல்லாஹ் நாடியிருந்தான் போலும்! மீண்டும் சார்லஸ் டவுன் சிறைக்கு மாற்றப்பட்ட நான், எனது கலகத்தை அங்கும் தொடர்ந்தேன்.
இங்கிருந்த பழைய கைதிகளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. நான் முஸ்லிமாக மாறியதிலிருந்து தாடி வளர்க்கத் தொடங்கியிருந்தேன். நார்ஃபோல்க் சிறையில் குறைவான வெளிச்சத்தில் தொடர்ந்து புத்தகங்கள் வாசித்து வந்ததால், எனக்கு பார்வைக் குறைபாடு ஏற்பட்டிருந்தது. அதனால் கண்ணாடி அணிந்திருந்தேன். என்னுடைய தோற்றத்தால் என்னை உடனடியாக அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.
சிறைக்குள் கைதியாக வந்த ஆரம்ப நாட்களில் இந்தச் சிறையில் இருந்த போது, இங்கு நடக்கும் பைபிள் வகுப்புகளில் நான் கலந்து கொண்டது கிடையாது. இப்போது பைபிள் வகுப்புகள் என் அழைப்புப் பணிக்கான களமாக அமைந்தன. ஞாயிற்றுக்கிழமை. ஹார்வார்ட் திருச்சபையிலிருந்து வந்த ‘முழுமையான பிசாசு’ ஒன்று பைபிளில் இருந்து சில வசனங்களைக் குறிப்பிட்டு கிறிஸ்தவப் பிரசங்கம் செய்தது.
தங்க நிறத்தில் முடியும், நீல நிறக் கண்களும் கொண்ட அந்த வெள்ளை மாணவன், கிறிஸ்தவ மதம் குறித்த ஏராளமான தகவல்களைத் தெரிந்து வைத்திருந்தான். அதனால் அவன் போதித்த விஷயங்களை எந்தக் கேள்வியுமின்றி அங்கு அமர்ந்திருந்த கைதிகள் ஆமோதித்து வந்தனர்.
கேள்வி பதில் நேரம் தொடங்கியது. அந்த வெள்ளை மாணவனை திக்குமுக்காட வைக்கத் தயாரானேன். அங்கு வரும் கறுப்பினக் கைதிகள் இதுவரை, அமைதியாக வெள்ளைக்காரர்கள் எடுத்து வைத்த பைபிள் சங்கதிகளை கேட்டு வந்துள்ளனர். எதிர்த்து கேள்வி கேட்கும் மனோபாவத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காக கேள்விகளை என் பாணியில் கேட்டேன்.
அப்போது அந்த வெள்ளை மாணவன் புனித பவுல் பற்றி சொல்லிக் கொண்டிருந்தான். நான் கையை உயர்த்தினேன்.
“உங்கள் சந்தேகம் என்ன?” சாந்தமாகவும் அன்பாகவும் வினவினான் அந்த வெள்ளை மாணவன்.
“புனித பவுலின் நிறம் என்ன?” இந்தக் கேள்வியை அவன் என்னிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இது போன்ற குதர்க்கமான கேள்வியை சிறைக்குள் இதுவரை அவன் எதிர் கொண்டிருக்கவும் வாய்ப்பில்லை. அதனால் வாயடைத்துப் போன அவன், பதில் சொல்லாமல் மவுனமாக நின்றான்.
நானே தொடர்ந்தேன்.
“புனித பவுல் கறுப்பு நிறத்தவராகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் அவர் ஒரு யூதர். யூதர்களின் நிறம் கறுப்புதானே?”
அந்த வெள்ளை மாணவனின் முகம் சிவந்தது. யாரைப் பற்றி உயர்வாகப் பேசிக் கொண்டிருந்தானோ, அந்த மனிதர் கறுப்பர் என்றால், அந்த வெள்ளைக்காரன் ஒப்புக் கொள்வானா? எவ்வளவு நேரம்தான் பதில் சொல்லாமல் தவிர்க்க முடியும்? பைபிளையும் கிறிஸ்தவத்தையும் கற்றுத் தேர்ந்தவன் என்ற அந்தஸ்தில்தானே கைதிகளின் முன்பு போதனை செய்து வருகிறான்.
“ஆமாம்!” வேறு வழியில்லாமல் வேண்டா வெறுப்பாக பதில் சொன்னான்.
“அப்படி என்றால் இயேசுவின் நிறம் என்ன?” இடைவெளி விடாமல் தொடர்ந்தேன். “அவரும் யூதர்தானே? நான் சொல்வது சரியா? உண்மையா, இல்லையா?”
அடிமை மனோபாவத்தில் இருந்த கறுப்பினக் கைதிகளும், வெள்ளையினக் கைதிகளும் என்னை முறைத்துப் பார்த்தனர். கைகளில் பைபிளை ஏந்தியிருந்த அந்த வெள்ளை மாணவன் அங்குமிங்கும் உலாவினான். அவன் பதில் சொல்லும் வரை நான் அமராமல் நின்றிருந்தேன். இயேசு வெள்ளை நிறம்தான் என்று பதில் சொல்ல, எந்த வெள்ளையனிடமும் துல்லியமான ஆதாரம் கிடையாது.
“இயேசு பழுப்பு நிறத்தவர்!” அந்த மாணவன் மழுப்பலாக பதில் சொல்லி என்னை அமர வைத்தான்.
நான் நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே அமர்ந்தேன். அதற்கு மேல் அந்த மாணவனை அவமானப்படுத்த நான் விரும்பவில்லை.
அன்று இரவு சார்லஸ் டவுன் சிறையில் என்னைப் பற்றிய பேச்சுதான் கைதிகள் மத்தியில் நிலவியது. இந்த பைபிள் வகுப்பு கலகத்துக்குப் பின்பு சார்லஸ் டவுன் சிறையில் எனக்கு பெரிய அளவில் எளிதாக அறிமுகம் கிடைத்தது. இதே சிறையில், நான் சிறைக்கு வந்த தொடக்க நாட்களில் என்னை ‘சைத்தான்’ எனத் தூற்றி என் கோபத்துக்கு ஆளாகாமல் ஒதுங்கிய கைதிகள், இப்போது மரியாதை கலந்த பயத்துடன் என்னைப் பார்த்தனர்.
அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!
நான் யாரிடமும் வலியப் போய், என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் இல்லை. யாரைப் பார்த்தாலும், நீண்ட நாட்கள் பழகியவரைப் போல இயல்பாக ஹலோ சொல்லிவிட்டு இப்படி பேச்சை ஆரம்பித்தேன்:
“ப்ரதர்… உங்களுக்கு எலிஜா முஹம்மது அப்டிங்கிற மனிதரைப் பற்றி தெரியுமா? நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் தலைவர் அவர்..”
தொடரும்
-ஃபனான்

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...