பயமின்றி உறுதியுடன் போராடினால் நீதி கிடைக்கும்
ஜார்கண்டில் இரண்டு அப்பாவிகளை கொலை செய்த பசு குண்டர்களுக்கு லத்தேகார் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம் லத்தேகார் மாவட்டத்தில் மார்ச் 2016ல் மஸ்லூம் அன்சாரி மற்றும் இம்தியாஸ் கான் ஆகிய இருவரை பசு பயங்கரவாதிகள் அடித்துக் கொலை செய்து மரத்தில் தொங்க விட்டனர். இதில் இம்தியாஸ் கான் 13 வயது சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பசு பாதுகாப்பு என்ற போர்வையில் பசு பயங்கரவாதிகள் நாடு முழுவதும் அராஜகங்களை கட்டவிழ்த்து விட்ட நிலையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் ஜார்கண்ட் மாநிலத்தில் இவர்களின் அத்துமீறல்கள் அதிகமாகவே இருந்தன. பசு பயங்கரவாதிகளால் மாநிலத்தில் நடத்தப்பட்ட முதல் படுகொலை இதுவாகும்.
கால்நடைகள் வியாபாரம் செய்து வந்த மஸ்லூம் அன்சாரிக்கு தொடர் மிரட்டல்கள் வந்ததன் காரணமாக அவர் தன்னிடமுள்ள கால்நடைகளை விற்றுவிட்டு வேறு தொழில் செய்ய எண்ணியிருந்தார். அவரும் அவரின் தொழில் பார்ட்னரான ஆசாத் கானின் மகன் இம்தியாஸ் கானும் கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு சென்ற சமயத்தில்தான் பசு குண்டர்கள் அவர்களை அடித்து தூக்கில் தொங்க விட்டனர்.
இப்படுகொலைகளில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் உறுதியாக இருந்தனர். கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில், சட்டப் போராட்டத்தில் இவர்கள் உறுதியாக இருந்ததன் விளைவாக தற்போது குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டப் போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருந்தது.
இந்த இரட்டைப் படுகொலையில் ஈடுபட்ட எட்டு குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் டிசம்பர் 21 அன்று ஆயுள் தண்டனை வழங்கியது. பசு குண்டர்களுக்கு ஜார்கண்ட் மாநிலத்தில் தண்டனை வழங்கப்படும் இரண்டாவது வழக்கு இதுவாகும். முன்னதாக ராம்கார்க் பகுதியின் அலீமுதீன் அன்சாரியை படுகொலை செய்த 11 பசு குண்டர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனையை வழங்கியது. அலீமுதீன் வழக்கில் குற்றவாளிகள் மேல்முறையீடு செய்ததை தொடர்ந்து அவர்களின் தண்டனை நிறுத்தப்பட்டு குற்றவாளிகள் தற்போது பிணையில் உள்ளனர். இந்த இரட்டைகொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று இரு குடும்பத்தினரும் ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தால் தங்களின் உயிருக்கு அது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இப்படுகொலைகள் தொடர்பாக தெளிவான ஆதாரங்கள், சாட்சியங்கள் இருந்த போதும் காவல்துறை முதலில் வழக்கில் அக்கறை செலுத்தவில்லை. பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்ததை தொடர்ந்தே அவர்கள் வழக்கு விசாரணையை முறையாக நடத்தினர். வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்கு முன்னரே குற்றம்சாட்டப்பட்ட எட்டு நபர்களும் ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். நேரில் கண்ட சாட்சிகளின் தெளிவான சாட்சியங்கள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் மிதிலேஷ் பிரசாத் சாகு, பிரமோத் குமார் சாகு, மனோஜ் குமார் சாகு, அவதேஷ் சாகு, மனோஜ் சாகு, அருண் சாவோ, விஷார் திவாரி மற்றும் ஷாதேவ் சோனி ஆகியோருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை வழங்கியுள்ளார். ஆனால் முக்கிய குற்றவாளியான உள்ளூர் பாரதிய ஜனதா கட்சி தலைவரான வினோத் பிரஜாபதி இன்னும் தலைமறைவாகத்தான் உள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து டிசம்பர் 26 அன்று இரு குடும்பத்தினரும் டெல்லி பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் மஸ்லூம் அன்சாரியின் மனைவி சாயிரா பீபி, இம்தியாஸ் கானின் தாயார் நஜ்மா பீபி, தந்தை ஆசாத் கான், மஸ்லூம் அன்சாரியின் சகோதரர் அஃப்ஸல் அன்சாரி, பாப்புலர் ஃப்ரண்ட் ஜார்கண்ட் மாநில தலைவர் ஹன்ஜலா ஷேக் மற்றும் வழக்கறிஞர் சைஃபான் ஷேக் ஆகியோர் கலந்து கொண்டனர். நீதித்துறை மீதான நம்பிக்கை இந்த தீர்ப்பிற்கு பிறகு அதிகரித்துள்ளதாக தெரிவித்த குடும்பத்தினர் இச்சட்டப் போராட்டத்தில் ஆரம்பத்தில் இருந்து தங்களுக்கு உறுதுணையாக இருந்த பாப்புலர் ஃப்ரண்டிற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். ஊடகங்களுக்கும் தங்கள் நன்றியை தெரிவித்தனர். இதுபோன்ற கொடுமைகள் இனியும் நடக்கக் கூடாது என்றும் அரசாங்கம் குடிமக்களை பாதுகாப்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.
படுகொலை செய்யப்பட்ட மஸ்லூம் அன்சாரிக்கு ஐந்து குழந்தைகள். மனைவி சாயிராவின் வயதான பெற்றோரையும் இவர்தான் கவனித்து வந்துள்ளார். தனது பெற்றோருக்கு தான் ஒரே மகள் என்பதால் தற்போது தனது குழந்தைகளையும் பெற்றோரையும் கவனிப்பதில் கடும் சிரமங்களை சந்திப்பதாக சாயிரா பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். ‘வேலை இல்லாத நான் எனது பெற்றோருக்கு பாரமாக அவர்களுடன் வசித்து வருகிறேன்’ என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
13 வயதான தங்கள் மகன் இம்தியாஸ் அப்போது ஆறாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தான் என்று கூறிய இம்தியாஸின் பெற்றோர் தந்தையின் வேலையில் அவருக்கு இம்தியாஸ் உதவியாக இருந்ததாகவும் தெரிவித்தனர். கொலையாளிகள் மீதான பயத்தின் காரணமாக ஆசாத் கான் தனது தொழிலை நிறுத்திவிட்டதன் காரணமாக அவரின் குடும்பம் கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. இம்தியாஸை கொலை செய்தவர்களின் மிரட்டல் காரணமாக அவனின் இளைய சகோதரன் படிப்பை நிறுத்தி விட்டான். “எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால் சிறு விவசாய நிலத்தை தவிர என்னிடம் வேறெதுவும் இல்லை” என்று ஆசாத் கான் கூறினார்.
“பசு பாதுகாப்பு என்ற பெயரில் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் பயப்படக் கூடாது என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். சட்டரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் உறுதியுடன் போராடினால் நீதி நிச்சயம் கிடைக்கும்” என்று அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர். மாநில அரசாங்கம் தங்களுக்கு உரிய நிவாரணத்தை தரவில்லை என்றும் லத்தேகார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கொடுத்த ஒரு இலட்சம் ரூபாய்க்கான நிவாரண காசோலையை தாங்கள் நிராகரித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது மிகவும் குறைவான தொகை என்பதால் அதனை தாங்கள் நிராகரித்ததாகவும் உரிய இழப்பீட்டையும் அரசு வேலையையும் மாநில அரசாங்கம் தங்களுக்கு தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
“உரிய நிவாரணத்தை வழங்கக் கோரி ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் சாய்ரா மற்றும் ஆசாத் கான் சார்பாக இரண்டு ரிட் மனுக்களை பாப்புலர் ஃப்ரண்ட் தாக்கல் செய்துள்ளது. இதனை விசாரித்து நீதிமன்றத்திற்கு ஆலோசனை வழங்குமாறு மாநில சட்ட சேவை ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம். அரசு வேலை கோரி தனி வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் கூறியுள்ளது. குற்றவாளிகள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தால், அதனை உயர் நீதிமன்றத்தில் நாங்கள் எதிர்ப்போம்” என்று வழக்கறிஞர் சைஃபான் ஷேக் கூறினார்.
“இச்சம்வம் நடைபெற்ற மறுதினம் பாகூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மூன்றாவது தினம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்கினோம். 600 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தொடர்ந்து சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டினோம். எதிர்காலத்திலும் நீதிக்கான போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் இவர்களுடன் நிற்கும்” என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஜார்கண்ட் மாநில தலைவர் ஹன்ஜலா ஷேக் தெரிவித்தார்.
No comments:
Post a Comment