Wednesday, January 9, 2019

என் புரட்சி-19-அழைப்பாளனாக

அடியாள் தொழிலில் அதிரடியான ஒரு தொடக்கம் தேவை என்பதை என் அனுபவத்தில் உணர்ந்திருந்தேன். நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பை மக்கள் முன்பு, குறிப்பாக கறுப்பர்களிடம் கொண்டு செல்வதற்கும் ஓர் அதிரடி தேவை என்பதை உணர்ந்தேன்.
அதற்காக சிந்தித்த நான், நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பில் சேர்ந்து முஸ்லிம்களாக தங்கள் வாழ்க்கையைத் தொடர்பவர்கள், தங்கள் பெயருக்குப் பின்பு, X என்ற எழுத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை பரிந்துரைத்தேன்.
ஆஃப்ரிக்காவிலிருந்து கடத்திவரப்பட்ட கறுப்பினப் பெண்கள், கற்பழிக்கப்பட்டு அதன் மூலம் பிறந்த -அடிமை கறுப்பினப் பெண்களுக்குப் பிறந்த அடிமைக் குழந்தைகளுக்கு வெள்ளை எஜமானனின் பெயர், இணைப்பு பெயராக ஒட்டிக் கொண்டது. காலம் காலமாக இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வந்தது. இதனை மாற்றும் விதமாக, எங்களுக்கு தெரியாத ஆஃப்ரிக்க குடும்ப பெயரை இணைத்துக் கொள்வதற்காக X என்ற எழுத்தை தேர்ந்தெடுத்தேன்.
இப்படி பெயருடன் X என்ற எழுத்தை இணைத்துக் கொள்ள அனுமதி கேட்டு தலைமைக்கு கடிதம் எழுதினேன். அனுமதியும் கிடைத்தது.
மால்கம் லிட்டில் என்ற பெயரின் இறுதியில் இருந்த வெள்ளையனின் பெயரை தூக்கி எறிந்த நான், மால்கம் X என்று என் பெயரை அறிவித்தேன். நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் உறுப்பினர்களும் பெயருக்குப் பின்பு X அடையாளத்தை இணைத்தனர்.
வேலை முடிந்து திரும்பிய பின், டெட்ராய்ட் நகரில் கறுப்பர்கள் எங்கெல்லாம் கூடுவார்களோ அங்கெல்லாம் சென்று, பள்ளிவாசலில் நடைபெறும் பிரசங்கத்தைக் கேட்க வருமாறு அழைப்பு விடுத்தேன். அவர்களிடம் பேசும்போதெல்லாம், சிந்தனை & ஒழுக்க &- ஆன்மீக ரீதியாக அவர்கள் படுகுழியில் வீழ்ந்திருப்பதை அறிந்து கொண்டேன்.
கொஞ்சம் கொஞ்சமாக பள்ளிவாசலுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. சிகாகோவின் தலைமையகத்தில் தலைவர் எலிஜா முஹம்மது அவர்களின் உரையைக் கேட்க மாதந்தோறும் அழைத்துச் செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
நான் ஃபர்னிச்சர் கடையிலிருந்து விலகி, குப்பை லாரி வடிவமைக்கும் GAR WOOD என்ற தொழிற்சாலையில் பணியில் சேர்ந்தேன். இங்கு கொஞ்சம் ஊதியம் அதிகம் கிடைத்தது. என்னுடைய இஸ்லாமிய அழைப்புப் பணியும் இயக்கத்திற்கு ஆட்களை சேர்ப்பதில் நான் காட்டிய ஆர்வமும் டெட்ராய்ட் தலைமை இமாம் லெமுவேல் ஹசனிடம் மிகுந்த நன்மதிப்பை எனக்கு பெற்றுத் தந்தது. ஒரு நாள் பள்ளிவாசலில் பிரசங்கத்தின் போது, என்னை பேச அவர் வற்புறுத்தினார். நான் தயக்கம் காட்டினேன்.
“பிரதர் மால்கம், வாங்க… வந்து உங்க அனுபவத்தையே பேசுங்க…”
அவரே இந்த முடிவை எடுத்தாரா அல்லது எலிஜா முஹம்மது இந்த ஆலோசனையை வழங்கினாரா என எனக்குத் தெரியவில்லை.
“நான் எந்த நிலையில் இருந்து இன்று முஸ்லிமாக மாறியிருக்கிறேன் என்பதைச் சொன்னால், நீங்கள் நம்ப மாட்டீர்கள். நான் வெள்ளைப் பிசாசுகள் பற்றியும் அவர்களின் குரூர புத்தி பற்றியும் உங்களிடம் பேசப் போகிறேன். நான் வெள்ளையனைப் பற்றி பேசுகிறேன் என்றால், யாரோ தெரியாத ஒருவனைப் பற்றி பேசவில்லை.”
கிறிஸ்தவ மதம் கறுப்பர்களிடம் காட்டிய அடக்குமுறை, அடிமை முறையின் மூலம் கறுப்பர்கள் அனுபவித்த கொடூரங்கள்- இதனை விரிவாகப் பேசினேன்.
முதன் முறையாக டெட்ராய்ட் நகர் பள்ளிவாசலில் நான் பேசிய பேச்சைக் கேட்ட, அங்கு கூடியிருந்த எழுபத்தைந்து அல்லது நூறு பேரின் முகங்களில் ஏற்பட்ட கிளர்ச்சி எனக்கு புது அனுபவத்தை தந்தது.
சிறையில் நான் விரிவாகப் படித்த, எனக்கு மிகவும் பிடித்தமான இந்த தலைப்பிலேயே நான் தொடக்க நாட்களில் பேசினேன். சிறையில் நடந்த விவாதங்களில் பங்கேற்றதும் எனக்கு உதவியாக இருந்தது.
1953-ம் ஆண்டு கோடைக் காலத்தில், டெட்ராய்ட் பள்ளிவாசலின் உதவி இமாமாக (Assistant Minister) நியமிக்கப்பட்டேன்.
வேலை முடிந்து, அப்படியே சேரிகளுக்கு நடந்தே சென்று, இஸ்லாமிய அழைப்புப் பணியைத் தொடங்கினேன். சில நேரம் நான் தனியாகச் சென்றேன். சில நேரம் என்னுடன் நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் சகோதரர்கள் உடன் வந்தனர்.
நான் எதிர்கொண்ட கறுப்பர்களிடம், அவர்களின் இழி நிலைக்கு காரணம் யார் என்று பேசினேன். தெருவோர நாட்களில் மடமைத்தனத்தில் தலைமுடியை நான் ‘காங்க்’ செய்து கொண்டது போல, காங்க் செய்து கொண்ட இளைஞர்களிடம் பேசினேன்.
பெரும்பாலான நேரங்களில் நாங்கள் விரட்டப்பட்டோம். ‘கிறுக்குப் பிடித்த கறுப்பர்கள்’ என நாங்கள் ஏளனம் செய்யப்பட்டோம். எங்களது அழைப்பை ஏற்று பள்ளிவாசலுக்கு வந்த கறுப்பர்களின் முன்பாக நானே பேசத் தொடங்கினேன். என்னுடைய அனுபவங்களையே நான் பேசினேன்.
“கடவுளே… இப்படித்தான் வெள்ளையர்களை நாம் இன்றும் அழைக்கும் நிலைமை உள்ளது. இன்னொரு ரொட்டித் துண்டு தர அவர்களிடம் பிச்சை எடுக்கும் நிலையில்தான் கறுப்பனின் நிலைமை அமெரிக்காவில் உள்ளது.
இங்கு கூடியிருக்கும் உங்கள் நிறங்களை சற்று உற்றுப் பாருங்கள். நமது பூர்வீக நிறம் என்ன? கறுப்பு. ஆனால் நம்முடைய தோலின் நிறத்தைப் பாருங்கள். வெள்ளையர்களால் மாசுபடுத்தப்பட்ட கறுப்பு நிறம்தான் நம்மிடம் இப்போது இருக்கிறது.
என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். நான் முஸ்லிமாவதற்கு முன்பு, என்னை ‘ரெட்’ என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள். என் தோலின் நிறம் காரணமாக அப்படி அழைத்தனர். இதற்கு யார் காரணம்? என் பாட்டி. என் பாட்டியை அனுபவித்த வெள்ளைக் காமுகன் தந்த நிறம்தான் இது. இது எனக்கு மட்டுமல்ல. உங்களுக்கும் அப்படித்தான்.
இப்படித்தான் அடிமை முறையின் போது, நமது கறுப்பினப் பாட்டிகள், அவர்களின் அம்மாக்கள், அவர்களின் அம்மாக்கள், அவர்களின் அம்மாக்கள் என அவர்கள் அடிமையாயிருந்த வெள்ளைக் காமுகனிடமிருந்து தப்பித்திருக்க முடியுமா?
கொஞ்சம் அந்த நாட்களுக்கு சென்று வாருங்கள். தன்னுடைய அன்னையை, சகோதரியை, மனைவியை, மகளை வெள்ளைக் காமுகன் இழுத்துச் செல்லும் போது, எதுவும் செய்ய வக்கற்றவனாக அந்தக் கறுப்பன், தனது உறவுகளின் ஓலங்களைக் கேட்டபடி அஞ்சி நடுங்கியவனாக ஏதோ ஒரு மறைவான இடத்தில் பதுங்கியபடி இருந்திருப்பானே… அந்த நொடியை நினைத்துப் பாருங்கள். கற்பழிக்கப்பட்ட கறுப்பினப் பெண்களின் கதறல்களை நினைத்துப் பாருங்கள்.
ஒருவித அச்சம் உங்களுக்கு ஏற்படுகிறதா? பதற்றம் ஏற்படுகிறதா? கோபம் ஏற்படுகிறதா?
ஆனால், இந்த உணர்ச்சி, இந்தக் கோபம் கறுப்பர்களுக்கு வராமலும், இந்த உண்மை தெரியாமலும் வெள்ளைப் பிசாசு, இன்றும் நம்மை காயடித்து வைத்திருக்கிறானே!”
இப்படி மனக்குமுறல்களாக என்னுடைய உரை அமைந்து விடும். கறுப்பர்களிடம் அவர்களின் அவலங்கள் குறித்து பேசும் போது என் குரல் கம்மி விடும். சில நேரங்களில் நள்ளிரவு வரை என் பேச்சு நீண்டு விடுவதுண்டு. டெட்ராய்ட் பகுதியில் தீவிரமாக நான் களப்பணியாற்றினேன். இந்தத் தீவிரம் டெட்ராய் நகரில், நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பை அடையாளம் காட்டியது.
தொழிற்சாலையில் வேலையில் இருந்த போது ஒருநாள் மேற்பார்வையாளர் பதற்றத்தோடு வந்து, என்னைப் பார்க்க ஒருவர் வந்திருப்பதாக அச்சம் கலந்த தொனியில் சொன்னார்.
வெள்ளையர் ஒருவர் என்னைப் பார்ப்பதற்காக காத்திருந்தார். அவர் FBI-யிலிருந்து வருவதாக தெரிவித்தார்.
“சொல்லுங்க சார்..” நான் உதாசீனமாகப் பார்த்தேன்.
இதனை எதிர்பார்க்காத அந்த வெள்ளையர், என்னை அச்சுறுத்தும் நோக்கில், தன் அடையாள அட்டையை அனாயசமாக உதறிக் காட்டினார்.
“நீங்க ஏன் இன்னும் கொரியப் போருக்கான கட்டாய இராணுவச் சேவைக்கு உங்க பெயரைப் பதிவு செய்யல?”
“ஓ.. ஜெயிலுக்குப் போயிட்டு வந்தவங்களையும் இப்ப மிலிட்டரில சேர்த்துக்கிறீங்களா?” துடுக்குத்தனமாகக் கேட்டேன்.
“மிஸ்டர்… இதுவரைக்கும் நீங்க பெயரைப் பதிவு செய்யாம இருக்கிறதுக்கே, உங்களை ஜெயிலுக்கு அனுப்பலாம். ஆனா, அப்படிச் செய்யல… உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு தர்ரேன்.” எச்சரிக்கும் தொனியில் அவர் சொல்லி விட்டுச் சென்றார். கட்டாய இராணுவச் சேவைக்கான பெயர்ப் பதிவு அலுவலகத்துக்கு நான் உடடினயாகச் சென்றேன். அங்கு தந்த படிவத்தில், இராணுவச் சேவையில் ஈடுபட விருப்பமில்லை என்றும், மனசாட்சி அடிப்படையில் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறேன் என்றும் குறிப்பிட்டு, அங்கிருந்த மூன்று அதிகாரிகளிடம் கொடுத்தேன்.
“ஏன் உங்களுக்கு விருப்பமில்லை? நீங்க என்ன காரணத்துக்காக ஆட்சேபனை தெரிவிக்கிறீங்க?” அங்கு வந்த கறுப்பு முஸ்லிம்களிடமிருந்தும் இதேபோல எதிர்ப்பு வந்திருக்கும் என்பதை அவர்கள் கேள்வியில் இருந்து தெரிந்து கொண்டேன்.
“எங்களை ரொம்ப கேவலமா நடத்துற வெள்ளைக்காரங்களுக்காக, நான் போர்ல கலந்துக்கிட்டு சாகுறதுக்கு என் மனசாட்சி இடம் கொடுக்குமா?” அவர்களின் கேள்விக்கு எதிர்க் கேள்வி கேட்டேன். அந்த வெள்ளை அதிகாரிகள் என் கேள்வியால் வௌவௌத்துப் போனார்கள். என்னுடைய படிவத்தை ஒத்தி வைப்பதாக அவர்கள் சொல்ல, நான் திரும்பி விட்டேன்.
சிறையில் நான் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்த போது உளவு அதிகாரிகள் என் மீது கவனம் குவிக்கத் தொடங்கினர். இப்போது டெட்ராய்ட் நகருக்கும் வந்துவிட்டனர். ரகசியமாக என்னை தொடர்ந்து கண்காணித்து வந்த FBI அதிகாரிகள், என் நடவடிக்கைகளை பதிவு செய்வதற்காக தனி கோப்பை பராமரித்து வந்தனர்.
நான் GAR WOOD தொழிற்சாலைப் பணியிலிருந்து விலகி, ஃபோர்ட் மோட்டார் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தேன். அதே சமயம், டெட்ராய்ட் பள்ளிவாசலில் உதவி இமாமாக இருந்ததால், அடிக்கடி தலைவர் எலிஜா முஹம்மதுவைச் சந்திப்பதற்காக, சிகாகோ சென்று வந்தேன். சில நாட்கள் அவருடனேயே தங்கி பயிற்சி எடுத்தேன். ஆன்மிக செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்தினேன். சிறையில் இருந்ததைவிட இப்போது அதிக புத்தகங்களை வாசித்தேன். ஏறக்குறைய ஒரு சீடரின் மீது பாதிப்பு செலுத்துவது போல, அவர் என் மீது தாக்கம் செலுத்தினார்.
இஸ்லாத்தின் மீதும், நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் மீதும் நான் காட்டிய ஈடுபாடு, என்னை இன்னொரு கட்டத்துக்கு கொண்டு சென்றது. எந்த நரகத்தில் இருந்து நான் மீண்டு வந்தேனோ, அதே நரகத்துக்கு மீண்டும் செல்ல தள்ளப்பட்டேன்.
தொடரும்..

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...