2018-ம் ஆண்டு, இந்திய உயர்கல்வியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்குச் சர்ச்சைகள் நிறைந்திருந்தன. துணைவேந்தர்கள் நியமனம் தொடங்கி கல்வி நிலையங்களில் அரசின் தலையீடுகள் வரை தொடர்ந்து பல நெருக்கடிகள் இருந்துவந்துள்ளன. அப்படி, கடந்த ஆண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளையும் மாற்றங்களையும் பார்ப்போம்...
1. பல்கலைக்கழக மானியக் குழு கலைப்பு:
இந்த ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த புதிய உயர்கல்வி ஆணைய சட்ட மசோதா மிகவும் சர்ச்சைக்குள்ளானது. ஏற்கெனவே உள்ள பல்கலைக்கழக மானியக்குழுவை (யூஜிசி) கலைத்துவிட்டு, புதிய உயர்கல்வி ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும், மற்ற உயர்கல்வி அமைப்புகளான அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஆகியவற்றையும் கலைத்துவிட்டு புதிய உயர்கல்வி ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் அனைத்தையும் கொண்டுவருவது எனத் திட்டமிடப்பட்டது. இந்தப் புதிய சட்டத்துக்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது. புதிய சட்டத்தின் மூலம் பல்கலைக்கழகங்களுக்கான நிதி வெகுவாகக் குறைக்கப்பட்டு, தனியார்மயம் ஊக்குவிக்கப்படும் எனக் குற்றம்சாட்டப்பட்டது.
2. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் சுற்றறிக்கை:
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி இந்திய ராணுவம், பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று `சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' நடத்தியது. மோடி அரசின் மிகப்பெரிய சாதனையாக சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், தேர்தல் காலங்களில் பரப்புரை செய்யப்பட்டது. இந்நிலையில், இதன் இரண்டாம் ஆண்டு தினத்தின்போது பல்கலைக்கழகங்களில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றிய பெருமைகளைக் கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகளையும் நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டும் என யூஜிசி அனைத்து பல்கலைக்கழகங்களும் அனுப்பிய சுற்றறிக்கை மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. கல்வியாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதற்கு பிறகே சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தொடர்பான சுற்றறிக்கை கட்டாயமானது இல்லை என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விளக்கம் அளித்துப் பின்வாங்கியது. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மற்றும் ராணுவத்தை பா.ஜ.க அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
3. சி.பி.எஸ்.சி பள்ளி ஆசிரியர் தேர்வில் இந்தி, ஆங்கிலம், சம்ஸ்கிருதம் மட்டும்:
கேந்திர வித்யாலயா மற்றும் சி.பி.எஸ்.சி உடன் தொடர்புடைய தனியார் கல்விநிலையங்களில் ஆசிரியர் பணிக்கு மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறவேண்டியது அவசியம். இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெறவிருந்த தகுதித்தேர்வுக்கான அறிவிக்கையில் மொழித்தேர்வில் ஆங்கிலம், இந்தி மற்றும் சம்ஸ்கிருதம் மட்டுமே இருந்ததால் சர்ச்சை கிளம்பியது. இதை மத்திய அரசின் இந்தி திணிக்கும் முயற்சிகளில் ஒன்றாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ``தேர்வுகள், வழக்கம்போல 20 மொழிகளிலும் நடைபெறும்'' என அறிவித்தார்.
4. நீட் அலைக்கழிப்பு:
சி.பி.எஸ்.சி மூலம் நடத்தப்படும் நீட் தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு அண்டைமாநிலங்களிலும், ராஜஸ்தான் உள்ளிட்ட தொலைதூர வட இந்திய மாநிலங்களிலும் தேர்வுமையம் ஒதுக்கப்பட்டிருந்தது, தமிழகத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சி.பி.எஸ்.சி-யின் அலட்சியத்தால் இத்தகைய தவறு நடைபெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தாலும் எந்தவோர் இடைக்கால நடவடிக்கையும் ஏற்படுத்தித் தரப்படவில்லை. நூற்றுக்கணக்கான மாணவர்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுதவேண்டிய அவலநிலை உருவானது. மாநில அரசும் இந்த விவகாரத்தை அலட்சியத்துடன் அணுகியது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
5.. பல்கலைக்கழகங்களுக்கு, தன்னாட்சி அதிகாரம்:
கடந்த மார்ச் மாதம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உட்பட 62 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு முழுத் தன்னாட்சி அதிகாரம் வழங்கியது. இந்தக் கல்வி நிறுவனங்களுக்குத் தங்களுக்கெனப் பாடத்திட்டங்களை வடிவமைத்து, தேர்வுகளை நடத்துவதற்கான சுதந்திரமும், புதிய முன்னெடுப்புகளை கடும் நெருக்கடிகள் இல்லாமல் நெகிழ்வுத்தன்மையுடன் மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தார்கள். ஒரு தரப்பில் இது வரவேற்கப்பட்டாலும் பல்கலைக்கழகங்களின் நிதிச்சுமை அதிகரித்துவிடும் என்றும், கல்விக் கட்டணங்கள் பெருமளவு உயர்ந்துவிடும் என்கிற விமர்சனமும் முன்வைக்கப்பட்டன.
6. நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி: ஆன்லைன் தேர்வுகள்:
சி.பி.எஸ்.சி நடத்திவந்த பேராசிரியர்களுக்கான தேசியத் தகுதித்தேர்வு (NET), பொறியியல் தகுதித்தேர்வு (JEEE) மற்றும் மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) வருகிற ஆண்டு முதல் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி என்கிற அமைப்பின் மூலம் ஆன்லைனில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு ஒரு சாரரால் வரவேற்கப்பட்டாலும், அதிக அளவிலான மாணவர்கள் எழுதக்கூடிய இந்தத் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்துகிறபோது ஏற்படும் தொழில்நுட்பச் சிக்கல்கள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
7. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்:
தேசத்துரோக வழக்கு சர்ச்சைக்குப் பிறகே புகழப்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அவ்வப்போது சர்ச்சைகளில் அடிபடுவது அதிகமாகிவிட்டது. அதன் வரிசையில் ``துணைவேந்தர் ஜகதீஸ்குமார் 2017-ம் ஆண்டு பல்கலைக்கழக வளாகத்தில் பீரங்கியை நிறுத்த வேண்டும்'' எனக் கூறியது பெரும்சர்ச்சையைக் கிளப்பியது. மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி அமைப்புகள் பெருமளவில் வெற்றிபெற்றன. இதையடுத்து ஏ.பி.வீ.பி உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களால் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. பல இடங்களிலும் மாணவர்கள் மோதிக்கொண்டனர். உமர் காலித் உள்ளிட்ட மாணவர்களின் முனைவர் பட்ட ஆய்வைச் சமர்ப்பிக்க டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தபோதும், பல்கலைக்கழக அனுமதி மறுத்து அலைக்கழித்தது. 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேசத்துரோக வழக்கு சம்பவத்துக்காக மூன்று ஆண்டுகள் கழித்து உமர் காலித் மற்றும் கன்னையாகுமார் உள்ளிட்டவர்கள் மீது தற்போது தேசத்துரோகப் பிரிவுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் பரவின.
8. எழுத்தாளர் காஞ்சா அய்லய்யா புத்தக சர்ச்சை:
`டெல்லி பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் பாடத்திட்டத்தில் இருக்கும் எழுத்தாளர் காஞ்சா அய்லய்யாவின் மூன்று புத்தகங்களை நீக்க வேண்டும்' என ஏ.பீ.வி.பி மாணவர்கள் கொடுத்த புகாரின் பேரில், பல்கலைக்கழக அகாடமிக் குழு பரிந்துரைத்தது. கல்வி சுதந்திரத்தின் மீதான தாக்குதலாக இது பார்க்கப்பட்டது. எழுத்தாளர் காஞ்சா அய்லய்யா பா.ஜ.க அரசை, தொடர்ந்து விமர்சித்துவருபவர். அதனால் இதன் பின்னணியில் அரசும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, ராகுல் காந்தி அறிக்கை வெளியிட்டிருந்தார். கல்வி புலத்தைத் தாண்டி அரசியல் அரங்கிலும் இந்தப் பிரச்னை எதிரொலித்தது. - Vikatan
No comments:
Post a Comment