Wednesday, January 9, 2019

2. எந்நிலையிலும் பள்ளிக்கு சென்று தொழ வேண்டும்

தெருமுனைப் பள்ளிவாசலில் இருந்து மக்ரிபுக்கான பாங்கோசை கேட்டது. ஒளூச் செய்துவிட்டு வந்த முஸ்தபா, மகனைக் கூப்பிட்டார். ‘கரீம். தொழப்போலாம் வா.’
எட்டு வயதுச் சிறுவன் கரீம், ‘அத்தா! கை வலிக்குது. நான் உம்மாவுடன் வீட்டிலேயே தொழுதுக்கிறேன்’ என்று விரலைக் காட்டினான். ஸ்கூலில் விளையாடும்போது தடுக்கி விழுந்து கால் முட்டியிலும் கை விரலிலும் சிராய்ப்பு, அடி. பேண்டேஜ் போடப்பட்டிருந்தது. நேரமாகிவிட்டது என்பதால் மேற்கொண்டு மகனை வற்புறுத்தாமல் சென்றுவிட்டார் முஸ்தபா.
தாயும் மகனும் தொழுது முடித்தார்கள். சோகத்துடன் விரலையே பார்த்துக் கொண்டிருந்த கரீமிடம் உம்மா கேட்டாள். ‘நான் உனக்கு ஒரு கதை சொல்லவா?’
‘ம்…’ என்று ஆர்வத்துடன் உம்மாவின் மடியில் படுத்துக்கொண்டான் கரீம்.
‘நபி (ஸல்) காலத்துல முஸைலமா என்றொரு பொய்யன் இருந்தான். அவன் தான் வாழ்ந்த ஊரில் உள்ள மக்களிடம் நானும் ஒரு நபி. என்னை அல்லாஹ் அனுப்பி வைத்திருக்கிறான்’ என்று பொய் சொன்னான். அந்த ஊர் மக்களும் அவனை நம்பிவிட்டனர். இந்தச் செய்தி நம் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தது. அல்லாஹ்வினுடைய விஷயத்தில் பொய் சொல்வது பெரும் பாவமில்லையா. அதனால் அவனை எச்சரித்து கடிதம் எழுதி அனுப்பினார்கள்.
அந்தக் காலத்தில்தான் ஃபோன், போஸ்ட் ஆபிஸ் எல்லாம் கிடையாதே. அதனால் ஹபீப் இப்னு ஸைது என்கிற சஹாபாவிடம் அதைக் கொடுத்து அனுப்பினார்கள்.
‘சஹாபான்னா யாரும்மா?’ என்று கேட்டான் கரீம்.
‘ரசூல் (ஸல்) அவர்களுடைய தோழர்கள்தான் சஹாபாகள். ஹபீப் (ரலி) அப்பொழுது இளவயது வாலிபர். அவர் உடனே அந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு முஸைலமா இருக்கும் நஜ்து என்ற ஊருக்குச் சென்றார். கரடுமுரடான பாதை எல்லாம் கடந்து சென்று முஸைலமாவிடம் கடிதத்தைக் கொடுத்தார். கடிதத்தைப் படித்ததும் அவனுக்கு கோபம் வந்துவிட்டது. அதனால் ஹபீபைப் பிடித்து சிறையில் போட்டுவிட்டான்.
மறுநாள் முஸைலமா அரண்மனைக்கு வந்ததும் காவலர்கள் அவனிடம் ஹபீபை சங்கிலிகளால் கட்டி இழுத்து வந்தார்கள். நிறைய மக்கள் அங்கு கூடியிருந்தார்கள். ஆனால் ஹபீப் (ரலி) கொஞ்சம்கூட அஞ்சாமல் தைரியமாக நின்றார்கள். அப்பொழுது முஸைலமா அவரிடம் கேட்டான். ‘முஹம்மது யார்? அல்லாஹ்வின் தூதரா?’
‘ஆம். முஹம்மது அல்லாஹ்வின் தூதரென்று நான் சாட்சி கூறுகிறேன்’ என்று ஹபீப் உடனே பதில் கூறினார்.
அதைக் கேட்டு முஸைலமாவுக்கு மிகவும் கோபம் வந்தது. அடுத்த கேள்வி கேட்டான். ‘நான் அல்லாஹ்வின் தூதன்தான் என்பதற்கு நீ சாட்சி கூறுகிறாயா?’ ‘எனக்கு காது கொஞ்சம் மந்தம். நீ சொல்வது எனக்கு கேட்கவில்லை’, என்று அப்பாவியாய் பதில் கூறினார் ஹபீப். முஸைலமாவுக்கு ஏற்பட்ட கோபத்தில் உதடுகள் துடித்தன. ‘ஹபீபின் உடலில் ஒரு பகுதியை வெட்டுங்கள்’ என்று கட்டளை இட்டான்.
‘அல்லாஹ்வே!’ என்றான் கரீம். உம்மா தொடர்ந்தார்.
‘காவலர்கள் வாளால் ஹபீபின் உடலை வெட்டினர். ஒரு பகுதி தரையில் விழுந்தது. இரத்தம் வழிந்தது. ‘முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று நீ சாட்சி சொல்கிறாயா?’ என்று மறுபடியும் கேட்டான் முஸைலமா. ஹபீபுக்கு மிகவும் வலி, வேதனை. இருந்தாலும் உடனே, ‘ஆம். முஹம்மது அல்லாஹ்வின் தூதரென்று நான் சாட்சி கூறுகிறேன்’ என்று கூறினார். ‘அப்படியானால் நான் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி கூறுகிறாயா?’ என்று கேட்டான் முஸைலமா.
‘நான்தான் சொன்னேனே, எனக்கு காது கொஞ்சம் மந்தம். நீ சொல்வது கேட்கவில்லை’ என்றார் ஹபீப். முஸைலமாவுக்கு கோபம் அதிகமாகி ஹபீபின் உடலை மீண்டும் வெட்டச் சொன்னான். மற்றொரு பகுதியும் தரையில் விழுந்தது. மக்களெல்லாம் ஹபீபின் உறுதியையும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்மீது அவர் வைத்திருந்த அன்பையும் கண்டு ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.
மேலும் பலமுறை முஸைலமா அதே கேள்விகளைக் கேட்டும், ஹபீபும் அதே போன்ற பதில்களையே சொல்லிக் கொண்டிருந்தார். கடைசியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஹபீப் (ரலி), ‘முஹம்மது அல்லாஹ்வின் தூதரென்று நான் சாட்சி கூறுகிறேன்’ என்று சொன்னபடியே மரணமடைந்தார். பெரும் சோதனையிலும் அல்லாஹ்வின்மீதும் அவனுடைய நபியின்மீதும் அவருக்கு அளவற்ற நம்பிக்கை இருந்தது. இரத்தம் சிந்தினாலும் அல்லாஹ்வுக்காக உறுதியோடு இருந்தார். பொய்யைக் கண்டு அவர் வளைந்துவிடவில்லை.’
கண்கள் விரிய கதையைக் கேட்டுக் கொண்டிருந்தான் கரீம். சிறிது நேரம் கழித்து இஷா தொழுகைக்கான பாங்கொலி கேட்டது. ‘வாப்பா! தொழப் போலாமா?’ என்று கேட்ட கரீமையும் அவனது பேண்டேஜையும் ஆச்சரியத்துடன் பார்த்தார் முஸ்தபா.
-நூருத்தீன்

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...