1948ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி அதிகாலை 3.30 மணி. தனது உதவியாளரை அழைத்த காந்திஜி ‘எல்லா முக்கிய கடிதங்களையும் இன்றே கொடுத்து விடுங்கள். இன்றே அவை எல்லாவற்றையும் நான் முடித்து விட வேண்டும்’ என்றார். அவரது பணிகளோடு அவரது வாழ்க்கையும் அன்று முடிவுக்கு வந்தது.
நல்லிணக்கவாதி
சாதி, மத வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் இணக்கத்துடன் வாழவேண்டும் என விரும்பிய மகத்தான மனிதர் காந்திஜி. சுதந்திரத்துக்கு இரண்டு நாட்களே இருந்தன. 1947 ஆகஸ்ட் 13 அன்று மாலை நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் அவர் பேசும்போது ‘இந்தியா -& பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்கக்கூடிய பொறுப்பு நமக்கு உண்டு. எனவே, ஆகஸ்ட் 15ஆம் நாள் முழுக்க உண்ணாநோன்பிருந்து இந்தியாவும் பாகிஸ்தானும் நலம்பெறுவதற்காக பிரார்த்தனை செய்வோம்’ என்று கேட்டுக்கொண்டார்.
ஆகஸ்ட் 15 அன்று தேசமே உற்சாகத்திலிருந்தது. ஆனால் காந்தி கல்கத்தாவில் கலவரத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பெலியகட்டா பகுதியில் இருந்தார். அவரது அமைதிச்செய்தி அங்கே பரவி தெருக்கள் தோறும் இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து மதநல்லிணக்க ஊர்வலங்களை நடத்தினர்.
அரசியல் சுதந்திரம் கிடைத்தது. ஆனால் அது காந்தி விரும்பிய சுதந்திரமாக இல்லை. 1.9.1947 அன்று பத்திரிகையாளர்களை அழைத்தார் காந்தி. கல்கத்தாவின் பல பகுதிகளில் கலவரம் ஓய்ந்தபாடில்லை என்று மிகுந்த வேதனையோடு குறிப்பிட்ட அவர், உண்ணாவிரதத்தைத் தொடங்க இருப்பதை அறிவித்தார். கல்கத்தாவில் அமைதி திரும்பினால் மட்டுமே உண்ணாவிரதத்தை முடிப்பேன் என்றும் திட்டவட்டமாக அறிவித்தார். ராஜாஜி காந்தியைச் சந்தித்தார். “சிறிது காலம் பொறுக்கக் கூடாதா?” கேள்வி எழுப்பினார் ராஜாஜி. ‘முடியாது. காலங்கடந்துவிடும். முஸ்லிம்களை அபாயகரமான நிலையில் விட்டுவிடக் கூடாது” என்று உஷ்ணமாகச் சொன்னார் காந்தி.
மீண்டும் 1948 ஜனவரி 12ஆம் தேதியன்று இந்து, இஸ்லாம் மக்களிடையே ஒற்றுமையை கொண்டு வருவதற்காக சாகும்வரை உண்ணாவிரதத்தை அறிவித்தார் காந்தி. மறுநாளே அவர் உண்ணாவிரதத்தை தொடங்கினார். காந்தி தன் முடிவை மாற்றிக்கொள்ளவேண்டும் என சமூக நல்லிணக்கத்தை விரும்பிய ஒட்டுமொத்த மக்களும் வேண்டுகோள் விடுத்தனர். “அனைத்து மதங்களுக்கு இடையேயும் நல்லிணக்கம் இருப்பதாக நான் உறுதியுடன் நம்பினால் மட்டுமே எனது உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவருவேன்” என்றார்.
“இந்து, இஸ்லாம் மற்றும் சீக்கிய மதங்களுக்கு இடையே ஒரு காலத்தில் சகோதரத்துவம் இருந்தது. அதை இனி காணமுடியாது என்பதை அறியும்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்றார் காந்தி. (ஸ்டான்லே வால்பெர்ட் எழுதி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட “காந்தியின் பேரார்வம்” என்ற நூலில்)
காந்தியின் உண்ணாவிரதம், காங்கிரஸ் ஆட்சியாளர்களையே அதிரவைத்தது. “நாட்டில் வகுப்பு கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நான் தகுதியற்றவன் என பாப்பு (காந்தி) கருதினால் நான் எனது பதவியை ராஜினாமா செய்யத் தயார்” என்றார் சர்தார் வல்லபாய் படேல். வகுப்பு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்து நல்லிணக்கத்தை உறுதி செய்வோம் என நாடு முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் அதிகமான தலைவர்கள் மீண்டும் மீண்டும் காந்தியிடம் உறுதியளித்தனர். இதையடுத்து ஜனவரி 18 ஆம் தேதி தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.
ஜனவரி 20-ஆம் தேதி காந்தி பிர்லா ஹவுஸுக்கு வந்தடைந்தார். ஒரு சிறிய மேடை காந்திக்காக தயாராக இருந்தது. அந்த மேடையில் இருந்து பேசத் துவங்கினார், மைக் வேலை செய்யவில்லை. இருப்பினும் அவர் தனது பேச்சை தொடர்ந்தார். “இஸ்லாமியர்களுக்கு யாரெல்லாம் எதிரியோ அவர்கள் எல்லோரும் நாட்டுக்கும் எதிரிகளே” என்றார். உடனடியாக மேடைக்கு அருகே குண்டு வெடித்தது.
‘குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடன் பெருங்குழப்பம் ஏற்பட்டது. மக்கள் சிதறி ஓடத் துவங்கினர். மகாத்மா காந்தி மட்டும் தனது இடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார். கை குண்டை வீசிய மதன்லால் பஹாவேவை காவல்துறையினர் கைது செய்தனர். இருப்பினும் அவரது கூட்டாளி தப்பிவிட்டான்’ என, ‘லெட்ஸ் கில் காந்தி’ (Let’s kill Gandhi) எனும் நூலில் துஷார் காந்தி பதிவு செய்திருக்கிறார்.
கொலை முயற்சிகளும் கொலையும்
இதற்கு முன்னரே காந்தியைக் கொலை செய்யும் முயற்சிகள் நடந்தன. 1934ஆம் ஆண்டு ஹரிஜன் யாத்திரைக்காக காந்தி புனே வந்தார். காந்தியும் அவரது நண்பர்களும் இரண்டு கார்களில் பயணம் செய்தனர். காந்தியின் வாகனம் நகராட்சி மன்றத்துக்கு தாமதமாக வந்தது. காந்தி முதல் காரில் வந்ததாக நினைத்துக் கொண்டு அந்த வாகனம் மீது கையெறி குண்டை வீசினார்கள். அந்த குண்டு காருக்கு அருகே வெடித்தது. அந்த தாக்குதலில் யாரும் காயமடையவில்லை. இது முதல் முயற்சி.
1944 ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாத நிலையில் ஓய்வுக்காக அவர் பஞ்ச்கனிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே தில்குஷ் என்ற பங்களாவில் தங்கியிருந்தார். ஒவ்வொரு மாலையும் அவர் உள்ளூர் கிராமவாசிகளுடன் பிரார்த்தனையில் ஈடுபட்டுவந்தார். ஒருமுறை பிரார்த்தனையில் இருந்தபோது இளைஞன் ஒருவன் பட்டா கத்தியுடன் காந்தியை நெருங்கினான். காந்தியின் பாதுகாவலர் பில்லாரே குருஜி சரியான நேரத்தில் அவனது கையில் இருந்து கத்தியைப் பறித்தார். காந்தி அந்த இளைஞனை விட்டுவிடச் சொன்னார். இதனால் அவன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த இளைஞன் நாதுராம் கோட்சேதான் எனக் கூறியுள்ளார் பில்லாரே குருஜி. இது இரண்டாவது முயற்சி.
காந்தியை கொல்ல மூன்றாவது முயற்சி சேவாகிராமில் நடந்தது. 1944 ஆம் ஆண்டு வர்தா நிலையத்தில் காந்தி ரயிலில் ஏறினார். அந்த சமயத்தில் ஒரு சிறுவன் காந்தியை தாக்கினான். காவல்துறை உடனடியாக அவனை பிடித்தது. முதல்கட்ட விசாரணைக்கு பிறகு அந்த சிறுவன் விடுவிக்கப்பட்டான். ‘இந்த நிகழ்வு எங்கும் பதிவு செய்யப்படவில்லை” என்கிறார் காந்தியின் வாழ்கை வரலாற்றை எழுதிய பியாரிலால்.
நான்காவது முயற்சி 1945 ஆம் ஆண்டு நடந்தது. மும்பையில் இருந்து புனேவுக்கு ரயிலில் காந்தி வந்துகொண்டிருந்தார். மஹாராஷ்டிராவில் ரயில் கசராவை அடைந்தபோது கற்கள் மற்றும் மரக்கட்டைகள் ரயில் பாதையில் குவிக்கப்பட்டிருந்தன. ரயில் ஓட்டுநர் இந்த கற்களை பார்த்ததும் உடனடியாக தன்னால் முடிந்த வலு கொண்டு பிரேக் போட்டார். இரயில் எஞ்சின்கள் கற்கள் மீது மோதியது. இருப்பினும் பெரும் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டன. காந்தி புனேவை சென்றடைந்ததும் “என்னை யார் கொல்வதற்கு விரும்புகிறீர்களோ தாராளமாக செய்யுங்கள். ஆனால் என்னுடன் வரும் மக்களுக்கு எந்த தீங்கும் இழைக்காதீர்கள்” என்றார்.
1948 ஜனவரி இருபத்தைந்தாம் தேதி காந்தி ஒரு கடிதத்தில் ‘யாராவது ஒருவன் என்னைக் கொல்வானானால் அந்தக் கொலையாளியின் மீது எனக்கு எந்தவிதமான கோபமும் ஏற்படக்கூடாது. நான் ராமநாமத்தை உச்சரித்தபடியே மரணமடையவேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். அடுத்த ஐந்து நாட்களில் காந்தியை அவரது பிரார்த்தனைக்கூட்டத்தில் சுட்டுக்கொன்றான் கோட்சே. ‘ஹே ராம்’ எனச் சொல்லாமலேயே சரிந்தார் காந்திஜி.
சதி
ஜனவரி 30, 1948 அன்று நாதுராம் கோட்சே காந்தியைச் சுட்டவுடன் தகவல் அறிந்து முதலில் படேல் வந்தார்; சற்று நேரத்திலேயே நேரு வந்தார். கவர்னர் ஜெனரல் மவுன்ட்பேட்டன் வந்தபோது கூட்டத்திலிருந்த ஒருவன் “காந்தியை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான்” என்று கத்தினான். அதிர்ந்து திரும்பிய மவுன்ட்பேட்டன் பதிலுக்கு “நீ என்ன முட்டாளா? காந்திஜியைக் கொன்றவன் ஒரு இந்து!” என உரக்கச் சொன்னார். இந்திய வரலாற்றில் காந்தியின் மரணம் பல உயிர்களைப் பலிவாங்கும் ரத்தக்களரியாக உருமாறாமல் தடுக்கப்பட்டது.
‘காந்தி படுகொலைக்கு எந்தவொரு தனி மனிதரும் பொறுப்பு அல்ல, ஆனால் அதற்கு பின்னால் ஒரு பெரிய சதியும், ஒரு அமைப்பும் உள்ளது’ என்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் சோசலிஸ்ட் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோஹியா மற்றும் கம்லாதேவி சட்டோபாத்யா ஆகியோர் குறிப்பிட்டதை கபூர் ஆணையம் சுட்டிக்காட்டியது.
காந்தியைக் கொல்வது என்பது நாதுராம் கோட்சே என்ற தனிமனிதனின் திட்டமல்ல. அது ஒரு கூட்டத்தின் பெருந்திட்டத்தின் ஒரு பகுதி. மதக் கலவரங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது அதன் செயல்திட்டம். மதக் கலவரங்கள் மூலம் மக்கள் மனத்தில் மதவெறியைத் தூண்டி, முஸ்லிம்களை இந்தியாவை விட்டே துரத்தும் திட்டத்தையும் கூடுமானவரை காந்தி முறியடித்தார். ஒவ்வொரு சந்திப்புகளிலும் “மத மோதல்கள் வேண்டாம், மனிதனை மனிதன் வேட்டையாடக் கூடாது” என்று மன்றாடினார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகவே அமையும் என்பதில் காந்தி மிகத் தெளிவாக இருந்தார். இவைதான் அவருடைய கொலைக்கு வழிகோலியது.
கோட்சேயும் ஆர்.எஸ்.எஸ்.சும்
நாதுராம் என்பதற்கு மராட்டியில் மூக்குத்தி என்பது பொருள். கோட்சே சிறுவயதில் மூக்குத்தி அணிந்திருந்தார். அதே பெயரால் அழைக்கப்பட்டார். அவரது இயற்பெயர் ராமச்சந்திரா. 2016 செப்டம்பர் எட்டாம் தேதியன்று எகனாமிக் டைம்ஸிற்கு பேட்டியளித்த கோட்ஸேவின் குடும்ப உறுப்பினர்கள், ‘கோட்ஸே ஆர்.எஸ்.எஸ்.ஸை விட்டு ஒருபோதும் விலகவுமில்லை அல்லது அவர் அங்கிருந்து வெளியேற்றப்படவும் இல்லை’ என்று கூறியிருந்தார்கள்.
கோட்சே நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் காந்தியை கொலை செய்ததை முற்றாக நியாயப்படுத்தினான். காந்தியின் தொடர்ந்த நிலையான முஸ்லிம்களுக்கு ஆதரவான போக்கே தன்னை கொலை செய்ய தூண்டியதாக கூறிய அவன், கடைசிவரை முஸ்லிம்களுக்கு ஆதரவாக அவர் மேற்கொண்ட உண்ணாவிரதமே உடனடியாக அவரைக் கொல்ல வேண்டும் என்ற முடிவுக்கு தன்னைத் துரத்தியதாகக் கூறியிருக்கிறான்.
‘காந்தி கொலைசெய்யப்பட்டது ஏன்? ’ என்ற புத்தகத்தை நாதுராம் கோட்ஸேவின் சகோதரர் கோபால் கோட்ஸே எழுதியுள்ளார். அதில் நாதுராம் கூறியதாக அவர் எழுதியிருப்பது, ‘தேசபக்தி பாவம் என்றால், நான் பாவம் செய்ததாக ஒத்துக்கொள்கிறேன். அது பாராட்டுக்கு உரியது என்றால், அந்த புகழுக்கு உரியவன் நான் என்று நம்புகிறேன். மனிதர்களுக்கான நீதிமன்றம் இருந்தால், நான் செய்தது குற்றமாக கருதப்படாது. நமது நாட்டிற்கும், மதத்திற்கும் நன்மை செய்யும் செயலையே நான் செய்தேன். இந்துக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய, பெருமளவிலான இந்துக்கள் கொல்லப்படுவதற்கு காரணமான கொள்கைக்கு சொந்தக்காரரை நான் துப்பாக்கியால் சுட்டேன்.’
நாதுராம் கோட்சே மற்றும் விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஆகியோரின் வழிவந்த சத்யாகி கோட்ஸே, எகனாமிக் டைம்ஸிற்கு அளித்த பேட்டியில் ‘சங்லியில் நாதுராம் இருந்தபோது, 1932ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர்ந்தார். தனது வாழ்நாள் முழுவதும், அவர் சங்கத்தின் அறிவார்ந்த செயல்பாட்டாளராக இருந்தார். அவர் அமைப்பில் இருந்து வெளியேறவோ, வெளியேற்றப்படவோ இல்லை’ என்று கூறினார்.
1994 ஜனவரி 28ஆம் தேதி, பிரண்ட்லைன் பத்திரிகைக்கு பேட்டியளித்த நாதுராம் கோட்ஸேவின் சகோதரர் கோபால் கோட்ஸே, “சகோதரர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்தோம். நாதுராம், தத்தாத்ரேயா, நான், கோவிந்த் அனைவரும் வளர்ந்தது எங்கள் வீட்டில் அல்ல, ஆர்.எஸ்.எஸ்.ஸில்தான். எங்கள் குடும்பமே ஆர்.எஸ்.எஸ். தான். ஆர்.எஸ்.எஸ்.ஸில் அறிவார்ந்த ஆர்வலராக நாதுராம் இருந்தார். ஆர்.எஸ்.எஸ்.ஸை விட்டு வெளியேறுவதாக தனது அறிக்கையில் நாதுராம் கூறியிருந்தார். ஏனெனில் காந்தியின் படுகொலைக்குப் பிறகு, கோல்வால்கர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.க்கு சிக்கல்கள் ஏற்பட்டதால், அவர்களை காப்பாற்றுவதற்காக நாதுராம் இப்படி அறிவித்தார். ஆனால், ஆர்.எஸ்.எஸ். ஒருபோதும் அவரை வெளியேற்றவில்லை” என்று கூறியிருந்தார். இந்து மகாசபையின் தற்போதைய பொதுச் செயலாளரான முன்னகுமார் ஷர்மா, பிபிசியிடம் பேசுகையில் “கோட்ஸே எங்களை சார்ந்தவர், அதோடு அவர் ஆர்.எஸ்.எஸ்.ஸை சேர்ந்தவர் என்பதையும் ஒப்புக்கொள்கிறோம்” என்கிறார்.
ஆர்.எஸ்.எஸ்.ன் பங்கு
காந்தியின் இறுதிக் காலத்தில் அவரது தனிச் செயலாளராக பணிபுரிந்த ப்யாரேலால் நையர், தான் எழுதிய ‘மகாத்மா காந்தி: கடைசி கட்டம்’ என்ற புத்தகத்தில் ‘வெள்ளிக்கிழமையன்று நல்ல செய்தி வரும், எனவே ரேடியோவை தொடர்ந்து கேட்கவும் என்று ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் சில இடங்களில் ஏற்கனவே கூறியிருந்தார்கள். அதுமட்டுமல்ல, காந்தி கொல்லப்பட்ட செய்தி வெளியானதும், ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் பல இடங்களில் இனிப்புகளை விநியோகித்து கொண்டாடினார்கள்’ என்கிறார்.
“துரோகிகள் தேசியத் தலைவர்களாக முடிசூட்டப்படுவதும், தேச பக்தர்கள் இழிவுபடுத்தப்படுவதும் விசித்திரமானது, மிக மிக விசித்திரமானது” என 1939இல் கோல்வால்கர் சொன்னார். இந்து & முஸ்லிம் ஒற்றுமை மிகவும் இன்றியமையாதது என்பதில் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்த காந்தியைத்தான் இவ்வாறு ஜாடை பேசினார் அவர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பத்திரிகையான ‘ஆர்கனைசர்’ 1970 ஜனவரி 11ஆம் தேதி எழுதிய தலையங்கத்தில், ‘நேரு பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதும், காந்தியின் உண்ணாவிரதமும் மக்களிடையே பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது. அத்தகைய சூழ்நிலையில், மக்களின் சீற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் நாதுராம் கோட்ஸே செயல்பட்டார். காந்தியின் படுகொலை என்பது பொது மக்களின் வெறுப்பின் வெளிப்பாடு’ என்று கூறப்பட்டிருந்தது.
கபூர் ஆணையத்தின் விசாரணை அறிக்கையில், அல்வர் நகரில் இருந்த ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தின் நடவடிக்கைகளின் விவரம் பற்றியும் விவரிக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சாமியார் வேடத்தில் அல்வர் இந்து மகாசபையின் செயலாளர் கிரிதார் சித்தாவுடன் தங்கியிருந்தது பற்றிய குறிப்புகள் அதில் உள்ளது. கபூர் ஆணையத்திடம் அந்த வெளிநாட்டு நபர் கூறிய தகவல்களின்படி, ‘காந்தி கொலை செய்யப்பட்ட தகவல் கொண்ட துண்டுப்பிரசுரங்கள் மாலை மூன்று மணிக்கே அல்வரில் அச்சடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் கொலை நடந்தது மாலை 5.00 மணி 17 நிமிடத்தில்தான். (துஷார் காந்தி, பக்க எண்.770)
1948 செப்டம்பர் 11ஆம் தேதியன்று கோல்வால்கருக்கு பதிலளித்த சர்தார் படேல், ‘ஆர்.எஸ்.எஸ். இந்து சமுதாயத்திற்கு சேவை புரிந்துள்ளது. ஆனால் அதன் பழிவாங்கும் உணர்வு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தத் தூண்டுகிறது. உங்களுடைய ஒவ்வொரு உரையிலும் இனவாத நச்சு நிறைந்துள்ளது. இதற்கான விலையாக நம் நாடு காந்தியை தியாகம் செய்ய வேண்டியிருந்தது. இதனால்தான் ஆர்.எஸ்.எஸ்.ஸை தடை செய்யும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது’ என்றார்.
“அனைத்து சாதியை சேர்ந்தவர்களும் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் காந்திக்கு அஞ்சலி செலுத்த ஒன்றாக வந்தார்கள். தனது இறப்புக்கு பின்னரும் மக்களை ஒன்றிணைக்கும் பணியை அவர் செய்திருந்தார்” என்கிறார் துஷார் காந்தி. இந்த நாட்டின் மகத்தான விழுமியமான மதசார்பின்மையின் உன்னதத்தை உணர்த்த வேண்டிய தருணமிது. காந்தி இன்றைக்கும் தேவைப்படுகிறார்.
-ப. திருமலை