சிறைக் கொட்டடியில் கைவிடப்பட்ட முஸ்லிம் ஆயுள் கைதிகள்
கடந்த 01.02.2018 அன்று தமிழக உள்துறையின் சார்பாக அரசாணை எண்: 64 வெளியிடப்பட்டது. பத்தாண்டுகளுக்கு மேல் சிறை தண்டனையை அனுபவித்த ஆயுள் சிறைவாசிகளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிகழ்வை முன்னிட்டு விடுவிப்பதற்கான விதிமுறை கொண்ட வரைவு அது. முன் விடுதலைக்குத் தகுதியான ஆயுள் கைதிகள் குறித்த தகவல்களைத் திரட்டித் தருமாறு மாநிலம் முழுவதும் உள்ள சிறைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதைத் தொடர்ந்து அரசாணையின் அடிப்படையில் சுமார் 1500 கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்தது. தர்மபுரி பேருந்து எரிப்பில் மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட முனியப்பன், நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன் ஆகியோர் சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர்.
ஆயுள் சிறைவாசிகள் பொது மன்னிப்பில் விடுதலை என்பது பொதுச் சமூகத்திற்கு சாதாரண செய்திதான். ஆனால், எப்போது விடுதலை கிடைக்கும் என்று தெரியாமல் அதீத மன உளைச்சலோடும், தீவிர உடல் உபாதைகளோடும் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் உழலும் முஸ்லிம் சிறைவாசிகளின் குடும்பங்களுக்கும் அவர்களுக்காகப் போராடும் மனித உரிமையாளர்களுக்கும் -அது அநீதியின் மையிருட்டில் தென்படும் நீதியின் சிறு ஒளிக்கீற்று. பொது மன்னிப்புப் பட்டியலில் தன் கணவரின், சகோதரனின், தந்தையின், மகனின் பெயர் இருக்காதா என இந்த அறிவிப்பு முஸ்லிம் கைதிகள் குடும்பத்தினரை பரிதவிப்பில் தள்ளியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் தொடங்கி இதுவரை சுமார் 1500க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதில் நால்வர் மட்டுமே முஸ்லிம்கள். அரசாணைப்படி 10 ஆண்டுகள் காலவரையறையைக் கணக்கில் கொண்டால், சிறையில் வாடும் சுமார் 50 முஸ்லிம் ஆயுள் கைதிகளில் அத்தனை பேருமே முன் விடுதலைக்குத் தகுதியானவர்களே! இவர்களில் பலரும் ஏறக்குறைய 20 ஆண்டு காலமாக சிறையில் தவிக்கின்றனர். ஆனால், பிற கைதிகளுக்கு கிடைக்கும் பொது மன்னிப்பு எனும் அரச கருணை முஸ்லிம்களுக்கு மட்டும் கிடைப்பதில்லை.
ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு அடுத்தபடியாக தமிழகத்திலேயே அதிக ஆண்டு காலம் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனைவாசி பாபு. 24 ஆண்டுகளாக சிறையில் அடைந்து கிடக்கும் இவர், இந்த ‘பரோல்’ வருகையில்தான் கோவை உக்கடம் பகுதியில் உள்ள தனது வீட்டில் கடந்த 21.07.2018 இல் இருந்து 10 நாட்களுக்கு -முதன் முறையாக இரவில் தங்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தில், பாபு அனுபவிக்காத நிம்மதியான, அழகான இரவுத் தூக்கம் அவருக்கு இப்போதுதான் கிடைத்திருக்கிறது. அது தன் மகளுடன் கதை பேசிக் கொண்டு எப்போது தூங்கினோம் என தெரியாமல் அவளை அரவணைத்தபடியே உறங்கிப் போவது. பாபுவின் மனைவி ஜாஸ்மின், அந்த வீட்டைத் தனது ஆழ்ந்த அமைதியால் நிரப்பியிருக்கிறார். அவரது பார்வை முன்னறையில் விளையாடும் மகளையும் கணவரையும் தொட்டுத் தொட்டு விலகுகிறது.
“பேச இனி என்ன இருக்கு? பேசித்தான் என்னவாகப் போகிறது? நாங்கள் வாழ்வின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டவர்கள். நீதி என்றென்றைக்குமாக மறுக்கப்பட்டவர்கள். தவறுக்கு தண்டனைதான் நீதி. அந்த தண்டனைக்கு முடிவே இல்லை எனில் அதுவே அநீதியாகாதா? இத்தனை வருஷம் சிறையில் இருந்ததுல அவரோட உடம்பும் மனசும் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. சட்டமும் தண்டனையும் ஒரு மனுஷனுக்கு திருந்தி வாழுற வாய்ப்பைத் தரணும். மறுபடியும் வாழ வாய்ப்பே தரலைன்னா ஒரு மனிதன் எதுக்கு திருந்தணும்? அவர் ஒவ்வொரு நொடியும் அணுஅணுவா செத்துட்டிருக்கார். நாங்க எல்லா கதவுகளையும் தட்டிட்டோம். இனி, மனிதர்களிடம் கேட்க எங்களுக்கு எதுவுமில்லை.” -விரக்திக்கென ஒரு குரல் இருக்குமென்றால் அது இந்தப் பெண்ணினுடையதுதான்.
1997 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட கோயம்புத்தூர் கலவரத்தில் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருந்த சூழலில், அந்நகரில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த வழக்கு விசாரணைக்காக கேரளா, ஆந்திரா உட்பட தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் காவல்துறையால் இழுத்துச் செல்லப்பட்டனர். குறிப்பாக இயக்கவாதிகள், போராட்டக்காரர்கள், ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள் குறி வைக்கப்பட்டனர். ஒன்பது மாத திருமண வாழ்க்கையில், மனைவி 8 மாத கர்ப்பமாக இருந்த சூழலில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் 1998 இல் கைதானார் பாபு.
அதற்கு முன்னரே அவர் ‘தடா’வில் கைது செய்யப்பட்டு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்திருந்தார். பிணையில் வந்திருந்தவர் குண்டு வெடிப்பு வழக்கில் மீண்டும் கைதானார். 2007 ஆம் ஆண்டு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட போது ஊம்பாபு மீதான பயங்கரவாத வழக்குகளில் இருந்து சென்னை உயர் நீதிமன்றம் அவரை விடுவித்தது. ஆனால் ஏற்கனவே பழைய கொலை வழக்கு ஒன்றில் இந்திய தண்டனை சட்டத்தின் 302 ஆவது பிரிவில் வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை மிச்சமிருந்தது. இப்போது வரை அதுதான் அவரது ஆயுளை வதைத்துக் கொண்டிருக்கிறது.
“நான் எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டியவன். ஆனால் இஸ்லாத்தில் தற்கொலை தவறு என்பதால் உயிரோடு இருக்கிறேன். ஒரு கணவனா, தந்தையா, மகனா நான் என் குடும்பத்திற்கு எதுவுமே செய்யல. ஏழு வருஷம் முடிச்ச ஆயுள் சிறைவாசிகளுக்கு பொது மன்னிப்பில் விடுதலை கிடைச்சிருக்கு. நான் முஸ்லிம். அதனாலேயே பொது மன்னிப்பிற்கு தகுதியற்றவன். என் மீது போடப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டாலும் நான் பயங்கரவாதி. என்னோடு கைது செய்யப்பட்ட என் தங்கையின் கணவர் சபூர் ரஹ்மான் 2008 ஆம் ஆண்டு சிறையிலேயே மாரடைப்புல இறந்துட்டார். அவருடைய இரண்டு பெண் குழந்தைகளோடு வாழும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவே இல்லை. நான் சாகுறதுக்குள்ள குழந்தைகளோடு கொஞ்ச காலம் வாழ ஆசைப்படுறேன்.” பாபுவின் குரல் உடைகிறது. மகள் தன் கண்ணீரை பார்த்துவிடாதவாறு முகத்தை திருப்பி துடைக்கிறார்.
அரசியல் சட்டப் பிரிவு 161-இன் படி மாநில அமைச்சரவை தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய முடிவெடுத்து அதை ஆளுநருக்குப் பரிந்துரை செய்தால் அதை ஏற்று அவர் கைதிகளின் விடுதலைக்கு உத்தரவிடுவார். இது மாநில அரசுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் உரிமை. உச்ச நீதிமன்றமோ, மத்திய அரசோ இதில் தலையிட முடியாது. இந்த 161 சட்டப் பிரிவின் கீழ்தான் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த போது திமுக ஆட்சி காலங்களில், அதாவது 1996 ஆம் ஆண்டு முதல், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஆயுள் கைதிகளை விடுதலை செய்யத் தொடங்கினார்.
அதற்கு முன்னர், ஜெயலலிதா தனது ஆட்சியில் 1992 முதல்1994 வரை மூன்று ஆண்டுகள் தன்னுடைய பிறந்த நாளான பிப்ரவரி 24 அன்று ஆயுள் கைதிகளை விடுவித்தார். 2008 ஆம் ஆண்டில் அண்ணா நூற்றாண்டு நிகழ்வை முன்னிட்டு சிறைக் கைதிகள் விடுதலையில் சிறப்பு செய்ய நினைத்த கருணாநிதி, அந்த ஆண்டில் மட்டும் மூன்று தவணைகளில் 1405 பேரை விடுதலை செய்தார்.
ஏழரை ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்தவர்கள் என்பது முன் விடுதலைக்கான – காலத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டது. அத்தருணத்தில் 71 முஸ்லிம்கள் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையை முடித்து விடுதலைக்கு தகுதியானவர்களாக இருந்தனர். 1987 இல் உருவாக்கப்பட்ட மத்திய அரசின் சிறை விதிகள் வன்புணர்ச்சி, கொள்ளை, பயங்கரவாதம், பொருளாதாரக் குற்றங்கள், ஊழல், வெடிமருந்து, கடத்தல், கள்ளச்சாராயம் உள்ளிட்ட குற்றங்களுக்கான சட்டப் பிரிவுகளில் தண்டிக்கப்பட்டோருக்கு பொது மன்னிப்பை மறுக்கிறது. முஸ்லிம்கள் பெரும்பாலும் மதக் கலவர வழக்குகள், வெடி பொருள் தடைச் சட்டம் போன்ற வழக்குப் பிரிவுகளில்தான் தண்டிக்கப்படுகின்றனர். முஸ்லிம்கள் மீது பொதுவாகவே இப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்படுவதற்கு உள்நோக்கம் இருப்பதை உண்மை அறியும் குழு அறிக்கைகள் அம்பலப்படுத்துகின்றன. வெடிகுண்டு எங்கே வைக்கப்பட்டாலும் காவல்துறை உடனடியாக முஸ்லிம் பகுதிக்குள் பாய்கிறது. வெடிகுண்டு உயிர்களை காவு வாங்கும் அளவிற்கு வீரியமற்றதாக இருந்தாலும், குற்றவாளிகளாக்கப்படும் முஸ்லிம்கள் மீதான தாக்குதலில் துளியளவும் வீரியம் குறைவதில்லை.
தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பின் (என்.சி.ஹெச்.ஆர்.ஓ.) தேசிய தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ் உள்ளிட்ட குழுவினர் கடந்த 2016 ஆம் ஆண்டு, ‘மதுரை குண்டு வெடிப்பு வழக்குகளும் காவல்துறையும்’ என்ற தலைப்பில் உண்மை அறியும் குழு அறிக்கையை சமர்ப்பித்தனர். இந்த குழு 2011 -முதல் 2016 வரை மதுரை மாவட்டம் மற்றும் சுற்று வட்டாரங்களில் காவல்துறையினர் பதிவு செய்த 17 வெடிகுண்டு வழக்குகளை ஆய்வு செய்தது. டாஸ்மாக் கடைகள், பேருந்துகள், பொதுக்கூட்ட மேடைகள் முதலான மக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்ட வெடித்த மட்டும் வெடிக்காத குண்டுகள் பற்றிய ஆய்வில் அதிர்ச்சிகரமான பல உண்மைகளை அது கண்டறிந்தது.
“முஸ்லிம்கள் மீது தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்துவதே இது போன்ற வழக்குகளின் நோக்கம். குண்டுவெடிப்பு நடந்தவுடனேயே முஸ்லிம் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து காவல்துறை தாக்குதல் நடத்தி, பலரையும் கைது செய்து விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்ததை மதுரை ஆய்வில் கண்டறிந்தோம். வெடிகுண்டு என்ற சொல் பொதுச் சமூகத்திற்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடியது. நாங்கள் ஆய்வு செய்த வழக்குகளில் பயன்படுத்தப்பட்டவை வெறும் பட்டாசு வெடிகுண்டுகளே! இதை காவல்துறையினரே எங்களுக்கு வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த பட்டாசு வெடிகுண்டுகள் அதிகபட்சம் காகிதம் அல்லது துணியைத் தீப்பிடித்து எரிய வைக்கும். அவ்வளவுதான். ஆனால், அவற்றை கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்களாக காவல்துறை சித்தரித்தது. தீவிரவாதிகளின் ஹிட்லிஸ்ட்டில் மதுரை சிக்கியிருப்பதாகவும் ஊடகங்களில் செய்தியை பரப்பியது. காவலர்கள் பதவி உயர்வு மற்றும் பரிசுகள் பெறுவதற்காக இப்படியான வழக்குகளை புனையும் கொடுமையும் நடக்கிறது” என்கிறார் அ. மார்க்ஸ்.
நிலைமை இப்படி இருக்கையில், இந்த சட்டப் பிரிவுகளையே காரணமாக்கி முஸ்லிம் ஆயுள் சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு ஒவ்வொரு முறையும் மறுக்கப்பட்டு வருகிறது. ஆயுள் தண்டனை பெற்றவர்களுக்கு பொது மன்னிப்பில் பாரபட்சம் காட்டக் கூடாது என 2005 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளதை மனித உரிமையாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். மஹேந்தர் சிங் எதிர் ஹரியானா மாநிலம் என்ற வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பி.சின்ஹா மற்றும் எச்.எஸ்.பேடி ஆகியோர், ‘கைதிகள் தண்டனைக் குறைப்பு விஷயத்தில் மாநில அரசுகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை சட்ட ரீதியான அதிகாரமாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்டனை குறைப்பு, முன் விடுதலை தொடர்பாக இந்திய அரசியல் சட்டம் பிரிவு 161 -ன் படி, விதிமுறைகளை வகுக்க மாநிலங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் அதே சமயம் அந்த விதி முறைகள் பாரபட்சம் மற்றும் பாகுபாடுகள் கொண்டதாக இருக்கக் கூடாதென தீர்ப்பளித்துள்ளனர்.
பயங்கரவாதம் மற்றும் வெடிமருந்து மட்டுமல்ல சாதாரண சட்டப்பிரிவுகளில் தண்டனை பெற்ற முஸ்லிம்களையும் கூட நிரந்தர கைதிகளாக வைத்திருக்கும் வகையிலேயே நமது நீதி அமைப்பு இயங்குகிறது. கோவை கணேசன் கொலை வழக்கு கைதி மற்றும் மதுரை ஜெயப்பிரகாஷ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட அபுதாஹீர் உட்பட சுமார் 30 பேர் இந்திய தண்டனை சட்டத்தின் 302வது பிரிவில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள். முஸ்லிம் என்பதனால் மட்டுமே அவர்களுக்கு முன் விடுதலையும் பொது மன்னிப்பும் மறுக்கப்படுகிறது.
2008 ஆம் ஆண்டு முஸ்லிம் அமைப்புகள், முற்போக்காளர்கள் மற்றும் மனித உரிமைப் போராளிகள் என பல தரப்பிலிருந்தும் தி.மு.க. அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதன் விளைவாக -கடைசி நேரத்தில் -சில நாட்களிலோ, மாதங்களிலோ விடுதலையாகப் போகிற கைதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். ஆனால், தமிழகத்தை உலுக்கிய மதுரை கவுன்சிலர் லீலாவதி கொலைக் குற்றவாளிகள் இச்சமயத்தில் விடுவிக்கப்பட்டனர். அக்குற்றவாளிகள் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்பதாலேயே பொது மன்னிப்பில் விடுதலையாக பத்து ஆண்டுகள் சிறைவாசத்தை முடித்திருக்க வேண்டும் என்ற கால வரையறை எட்டாண்டுகளாக குறைக்கப்பட்டதாக அப்போது கடும் விமர்சனம் எழுந்தது. மு.க. அழகிரியின் ஆதரவாளரான மன்னன் எட்டாண்டுகால தண்டனை காலத்தில் பெரும்பாலும் பரோலில் வெளியிலேயே இருந்தார்.
சிறுபான்மை யினருக்கு ஆதரவானதாகக் கருதப்படும் தி.மு.க.விற்கே முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்வதில் தயக்கமும் குழப்பமும் பாகுபாடும் இருக்கும் போது அ.தி.மு.க.விடம் எதிர்பார்க்க எதுவுமில்லை. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, அவர் ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலையில் துளி ஈடுபாடும் காட்டவில்லை.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில், செய்யாதக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சுமார் ஒன்பதரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அப்துல் நாசர் மதானியின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட போது, மனிதாபிமான அடிப்படையில் மதானிக்கு மருத்துவ உதவிகள் செய்ய தமிழக அரசுக்கு ஆட்சேபனையில்லை என்று அப்போதைய உள்துறைச் செயலாளர் முனீர் ஹோதா உத்தரவு பிறப்பித்தார். கடும் கோபமுற்ற ஜெயலலிதா, முனீர் ஹோதாவை பதவி நீக்கம் செய்ததோடு, தேசத் துரோகி என்றும் வசைபாடினார். ஜெயலலிதா இல்லாத நிலையில் அவர் பெயரை சொல்லி, அவர் வழியில் ஆட்சி செய்யும் இன்றைய அ.தி.மு.க. இவ்விஷயத்தில் சற்றேனும் மாற்றி செயல்படுமா என்பது கேள்விக்குறியே!
“கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 13 பேருக்கு முன் விடுதலை அளித்த 2009 தமிழக அரசாணை இருக்கிறது. சில நாட்களிலோ மாதங்களிலோ தண்டனைக் காலம் முடிந்து வெளியே வரப் போகிற முஸ்லிம் கைதிகளை தி.மு.க. முன் விடுதலை செய்ததில் எங்களுக்கு விமர்சனம் இருக்கிறது. ஆனால், 30 நாட்களாக இருந்தாலும் மூன்றே நாட்கள்தான் எனினும் அதுவும் முன் விடுதலையே! மதப் பிரச்சனை சார்ந்த வழக்குகளில் தண்டிக்கப்பட்டோரை விடுவிக்கலாம் என்பதற்கு இன்று அதுவொரு சிறந்த முன்னுதாரணம். அ.தி.மு.க அரசு தயங்க வேண்டியத் தேவையே இல்லை. முன் விடுதலை என்பது மாநில அரசின் உரிமை. தமிழக அரசு தொடர்ச்சியாக அந்த உரிமையை நிலைநாட்டியே வருகிறது.
பயங்கரக் குற்றங்களில் தண்டிக்கப்பட்ட அரசியல் கட்சியையும் மத அமைப்புகளையும் சேர்ந்த -பலரை தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுமே தமது அதிகாரத்தை பயன்படுத்தி முன் விடுதலை செய்துள்ளன. யாரையாவது சாதி, மத ரீதியாக வடிகட்ட வேண்டியிருந்தால் மட்டும்தான் குற்றவியல் தண்டனைச் சட்டமா, அரசமைப்புச் சட்டமா என்ற தமிழக அரசு தெளிவாகக் குழம்பத் தொடங்குகிறது. சிறுபான்மையினரைப் போலவே தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆயுள் சிறைவாசிகளும் இந்த பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர்” என்கிறார் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடி வரும் அப்துல் கய்யூம். இவர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருப்பூ மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார்.
அண்ணா நூற்றாண்டில் செய்ததைப் போல எம்.ஜி.ஆர். நூற்றாண்டிலும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை -இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே -மனித உரிமை மற்றும் முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தின. மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, சட்டமன்றத்தில் 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடரில் இதற்காகக் குரல் கொடுத்தார். பேரறிவாளன் உள்ளிட்ட ராஜிவ் கொலை வழக்கு கைதிகள், முஸ்லிம் கைதிகள் உள்ளிட்ட ஆயுள் சிறைவாசிகளை விடுவிக்க வேண்டுமென அவர் வலியுறுத்திய போது, தி.மு.க. அரசின் முன் விடுதலைக் கொள்கைக்கு எதிராக சுப்ரமணிய சுவாமி தொடுத்திருந்த வழக்கு நிலுவையில் இருப்பதைச் சுட்டிக் காட்டி அ.தி.மு.க. அரசு மறுத்து வந்தது.
பின்னர் 2016 ஆம் ஆண்டு சுப்ரமணிய சுவாமியின் வழக்கு முடித்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆளும் அ.தி.மு.க. அரசு, 1500 ஆயுள் கைதிகளை விடுவிக்கும் முடிவை அறிவித்தது. ஆனால், விடுதலையாகப் போகிறவர்கள் யார் என்பதற்கான முழுமையானப் பட்டியல் இதுவரையிலும் தயாராகவில்லை அல்லது வெளியிடப்படவில்லை. இது, ஆயுள் கைதிகளை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது. குறிப்பாக, 20 ஆண்டுகளைக் கழித்துவிட்ட முஸ்லிம் கைதிகள் வெடித்துவிடும் நிலையில் இதயத்தை கையில் பிடித்துக் கொண்டு காத்திருக்கின்றனர்.
“சிறையின் நோக்கமே சீர்திருத்தம்தான். ஆனால் அதை வதைக் கூடங்களாக வைத்திருக்கிறோம். ஆயுள் சிறைவாசிகளுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் உரிமைதான் முன் விடுதலை. எப்போதுமே உரிமையில் பாரபட்சம் காட்டக் கூடாது. சிறைவாசிகளின் குற்றப் பின்னணி, சமூகப் பின்னணி என எதையும் பார்க்காமல் -அவர்களது தண்டனை காலத்தின் அடிப்படையில் -விடுதலை செய்யப்பட வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் முதலில் விடுதலை ஆகட்டும். பின்னர் அந்த நீதி முஸ்லிம் கைதிகளுக்கும் கிடைக்கட்டும்” என்கிறார் பேராசிரியர் ஜவாஹிருல்லா.
முஸ்லிம்களுக்கு முன் விடுதலை மறுக்கப்பட விதிமுறைகளே காரணம் என்பது போல தோன்றினாலும் அதில் உண்மையில்லை. இந்திய நீதி அமைப்பு முஸ்லிம்களுக்கு நீதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது என்பதை 2005 ஆம் ஆண்டு முஸ்லிம்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட சச்சார் கமிட்டி அறிக்கை தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தது. பொது மன்னிப்பு மட்டுமல்ல, பொதுவாக சிறைக் கைதிகள் பெறும் எந்த உரிமைகளையும் முஸ்லிம் கைதிகள் பெற முடிவதில்லை.
நடிகர் சஞ்சய் தத்தின் வழக்கு பெரும் பாலானவர்கள் அறிந்ததே. 257 மனித உயிர்களைப் பறித்த மும்பை தொடர் குண்டு வெடிப்பில் வீட்டில் ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக 1993 ஆம் ஆண்டு ‘தடா’வில் கைது செய்யப்பட்டு, ஆறு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அடிக்கடி பிணை மற்றும் பரோலில் வெளியே வந்து கொண்டிருந்தார். உச்ச நீதிமன்றம் அவரது தண்டனையை ஐந்தாண்டுகளாகக் குறைத்தது. புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், நன்னடத்தை காரணமாக எட்டு மாதங்களுக்கு முன்பாகவே விடுதலை செய்யப்பட்டார்.
நன்னடத்தையின் அடிப்படையில், முஸ்லிம் கைதிகள் இவ்வாறான சலுகைகளையோ உரிமைகளையோ ஒருபோதும் பெற்றதில்லை. “முஸ்லிம்களை பொருத்தவரை எத்தகைய நன்னடத்தையும் அரசிற்குப் போதாததாகவே இருக்கிறது. சிறையிலேயே செத்து மடியுமாறு அவர்கள் கைவிடப்படுகின்றனர். 1998 ஆம் ஆண்டு நாகூர் ஆலீம் ஜார்ஜ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற சர்புதீன் சிறையில் 17 பட்ட மற்றும் பட்டயப் படிப்புகளை முடித்திருக்கிறார். அவர் முன் விடுதலைக்கு 100 சதவிகிதம் தகுதியானவர் என்றாலும் அவர் விடுவிக்கப்படவில்லை” என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொருளாளர் வழக்குரைஞர் என்.எம். ஷாஜகான்.
முஸ்லிம்கள் குற்றங்களில் சிக்கினால் அதை பயங்கரவாதமாகவும் மதவெறியாகவும் பார்க்கும் காவல் மற்றும் நீதி அமைப்புகள், அதுவே முஸ்லிம்கள் மீது இந்துக்கள் தாக்குதல் நடத்தும் போது அதை சாதாரண குற்றமாகவே கருதுகின்றன. எடுத்துக்காட்டாக, கோவை குண்டு வெடிப்பு நிகழ்வுக்கு காரணமாக அமைந்ததாக -காவல் துறையாலேயே சொல்லப்படும் -கோவை கலவரத்தைச் சொல்லலாம். 1997 ஆம் ஆண்டு நவம்பர் 29 தேதி கோவையைச் சேர்ந்த போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கலவரம் உருவாக்கப்பட்டது. முஸ்லிம்களை குறி வைத்து இந்து அமைப்புகள் நடத்திய தாக்குதலில் 19 முஸ்லிம்கள் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களின் பல கோடி மதிப்பிலான சொத்துகள் சூறையாடப்பட்டன. தமிழகத்தில் இதுவரையிலும் நடந்த துப்பாக்கிச் சூடுகளில் அதிகளவிலான உயிர்கள் பலிகொள்ளப்பட்ட நிகழ்வும் இதுதான். மேலும் நால்வர் மருத்துவமனையில் வைத்து எரித்துக் கொல்லப்பட்டனர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் விசாரணைக் கைதியாக விசாரணையைக் கூட சந்திக்கவில்லை. அவர்களுக்கு உடனடி பிணை வழங்கப்பட்டது. தண்டனை பெறாமலேயே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதே போல, இஸ்லாமியர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த பழனிபாபா கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்ற காரணத்தைக் கூறி நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
இப்படித்தான் ஒரு முஸ்லிம் இந்துவை கொன்றால் அது பயங்கரவாதம் என்றும் அதுவே ஓர் இந்து, முஸ்லிமைக் கொன்றால் சாதாரண விஷயமாகவும் ஆக்கப்படுகிறது. முஸ்லிம்களுக்கு எதிரான மதக் கலவரம், பயங்கரவாதம் போன்ற குற்றங்களுக்காக ஒரே ஒரு இந்து கூட தற்போது சிறை தண்டனையை அனுபவிக்கவில்லை.
பொது மன்னிப்பில் மட்டுமல்ல, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ் வரும் வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகளுக்கு கிடைக்கக்கூடிய உரிமைகளும் விதிகளும் கூட ஒருவர் முஸ்லிம் என்பதற்காக – கண்மூடித்தனமாக மீறப்பட்டு வருவதை மனித உரிமையாளர்கள் தொடர்ச்சியாக சுட்டிக் காட்டி வருகின்றனர்.
பொதுவாக ஆயுள் தண்டனை அல்லது பல ஆண்டுகள் தண்டனை பெற்றவர்கள் உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்து தண்டனை நிறுத்தம் பெற்று பிணையில் விடுதலையாகும் உரிமையை சட்டம் வழங்குகிறது. ஆனால், அந்த உரிமை இதுவரையிலும் முஸ்லிம்களுக்கு வழங்கப்படவில்லை. மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கின் குற்றவாளிகளுக்கு மேல் முறையீட்டில் பிணை கிடைத்தது. பிணை உரிமை மறுக்கப்பட்டதால் முஸ்லிம் சிறைக் கைதிகளின் குடும்பங்கள் நிரந்தரமாக தமது நிம்மதியையும் நம்பிக்கையையும் இழந்தன. ஜாஸ்மினை போன்ற சாதாரண பெண்களைக் கொண்ட குடும்பங்கள் இவ்வழக்குகள், குற்றங்கள், காவல் நிலைய/நீதிமன்ற இயங்குமுறை, சட்டம், நாட்டு நடப்பு, மதப்பின்னணி, சமூக சூழ்ச்சி என எது குறித்த புரிதலுமின்றி பெருஞ்சுழலில் சிக்கிக் கொள்கின்றன. மிக மோசமான கையறு நிலை அவர்களுடையது.
“நான் அவரை கல்யாணம் செஞ்சப்ப எனக்கு 17 வயசு. ஒன்பது மாசக் கருவை நான் சுமந்திட்டிருக்கும்போது, ‘நான் இனிமேல் வர முடியுமானு தெரியல’னு சொல்லிட்டுப் போயிட்டார். அந்த வேதனையை வார்த்தையால விவரிக்க முடியாது. யாரும் என் கூட பேச மாட்டாங்க, பழக மாட்டாங்க. நான் வீட்டை விட்டு வெளில போனதே இல்லைங்க. கலெக்டர் ஆபிஸ், நீதிமன்றம், சில அமைப்புகள்னு கைகாட்டுற இடத்துக்கெல்லாம் உதவி கேட்டு ஓடினேன். அவரு எந்த சிறையில இருக்காருனு தெரிஞ்சுக்கவே ரொம்ப நாளாச்சு. மனசுக்குள்ள ஒரு பெரிய எரிமலையைப் புதைச்சுக்கிட்டு என் பையனுக்காக வேலைக்குப் போக ஆரம்பிச்சேன்.
அப்பா பத்தி அவனுக்கு நான் சொன்னதே இல்லை. எட்டாவது படிக்குறப்போ ஒருநாள் ‘அப்பா என்ன பண்ணினாருமான்னு?’ கேட்டான். சொன்னேன். அப்போ இருந்து அப்பாவை பார்க்கணும்னு ஏங்க ஆரம்பிச்சுட்டான். ஆனா அவர் பரோல்ல வரவே பத்து வருஷத்துக்கு மேல ஆகிருச்சு. மகன் பிறந்து 16 வருஷம் கழிச்சு 2014 இல் சுமைனா பிறந்தா. பிணை, விடுதலைக்கெல்லாம் நாங்க ஆசைப்படக் கூடாது. ஏன்னா நாங்க இந்த சமூகத்துல ஒதுக்கப்பட்டவங்க” என்கிறார் ஜாஸ்மின்.
பிணை உரிமையைப் போலவே தண்டனை விதிக்கப்பட்ட ஒன்றரை ஆண்டுகளில் பரோலில் சென்று குடும்பத்தினரைச் சந்திக்க ஆயுள் கைதிகளுக்கும் உரிமை உள்ளது. ஆனால் இதிலும் முஸ்லிம் கைதிகள் பாரபட்சத்தை எதிர்கொள்கின்றனர். பத்தாண்டுகள் கழித்தும் இவர்களுக்கு ‘பரோல்’ கிடைப்பதில்லை. ஆயுள் சிறைவாசிகளுக்கு பாதுகாப்பு காவலர்கள் இல்லாமல் மாதம் 3 நாட்கள், ஆண்டுக்கு ஒரு மாதம், குடும்ப உறுப்பினர் இறந்தால்/நோய்வாய்ப்பட்டால் உடனடி ‘பரோல்’, அமைச்சர் பரிந்துரையின் பேரில் ஒரு மாத ‘பரோல்’ வழங்கலாம்.
ஆனால் ஊம்பாபுவைப் போல பல ஆண்டு தவிப்பிற்கும் போராட்டத்திற்கும் பிறகு பரோல் கிடைக்கப் பெற்ற முஸ்லிம் கைதிகள் கூட ‘எஸ்கார்ட்’ பாதுகாப்புடன்தான் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் எத்தனை நாட்கள் வீட்டில் இருந்தாலும் அத்தனை நாட்களும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் உடனிருக்கின்றனர். இது அக்குடும்பத்தினரின் சமூக உறவை மேலும் பாதிப்பிற்குள்ளாக்குகிறது.
சமீபத்தில் காவல் பரோலில் வந்திருந்தார் அல் உம்மா பாஷா. கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சதிக் குற்றச்சாட்டு அடிப்படையில் தண்டிக்கப்பட்டவர். பாஷாவின் நான்கு மகள்களின் குடும்பத்தினரும் அங்கே கூடியிருந்ததால் அவ்வீடு பெரு மகிழ்ச்சியில் காணப்பட்டது. அன்று மாலை ‘பரோல்’ முடிந்து அவர் சிறை திரும்பியாக வேண்டும். மாலை 6 மணி நெருங்கும் போது காவலர்கள் தயாராகின்றனர். “எந்த மனிதருக்கும் மறுவாழ்வு வாழ தகுதியிருக்கு. பொது மன்னிப்பு என்பது பொதுவானதா இருக்கணும். அதுல ஜாதி, மதம், கட்சி, குற்றப் பின்னணி போன்ற பாரபட்சமெல்லாம் பார்க்கக் கூடாது” என்று சொல்லிக் கொண்டே சிறைக்கு கிளம்புகிறார் 78 வயது பாஷா. அவரது மகள்களும் பேரப் பிள்ளைகளும் காவல் வாகனம் தெருவிலிருந்து மறைகிற வரை பார்த்துக் கொண்டே நிற்கின்றனர்.
பாஷாவின் நான்காவது மகள் முபினா. கணவர் முகமது அலி கைது செய்யப்பட்ட போது அவர் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தார். கருவில் இருந்த அந்த குழந்தைக்கு இப்போது 18 வயது. “அப்பா சமுதாயத் தலைவரா இருந்ததால, அண்ணா, மாமாக்கள்னு எங்க குடும்பத்துல இருந்த எல்லா ஆண்களுமே கோவை குண்டு வெடிப்பு வழக்குல கைது செய்யப்பட்டாங்க. என் கணவர் அப்போ புது மாப்பிள்ளை. பாஷாவின் மருமகன் என்ற ஒரே காரணத்துனால அவரும் கைதானார். விசாரணைனு சொல்லித்தான் அவரை கூட்டிட்டுப் போனாங்க. ரெண்டு வருஷம் வரை அவரு மேல எந்த வழக்கும் போடல. ரொம்ப தாமதமா சதி வழக்கு போட்டு தண்டனை கொடுத்தாங்க.
ஆறு வருஷம் கழிச்சுதான் அவருக்கு பரோல் கிடைச்சது. சதித் திட்டம் தீட்டினாங்கனு 120 பில சாதாரண பிரிவுலதான் அப்பா, என் கணவர் ரெண்டு பேர் மேலயும் வழக்கு. எங்க அப்பா சமுதாயத்தை இழிவுபடுத்துறவங்களைத்தான் எதிர்த்தார். ஒரு சமுதாயத் தலைவரா அதுதான் அவரோட பணி. அதுக்காகவே அவர் தொடர்ந்து தண்டிக்கப்பட்டார். எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து அவரை சிறையிலதான் பார்த்திருக்கேன். இப்போ அவருக்கு 78 வயசு. இந்த வயசுல கூட கருணை காட்ட மாட்டேங்குறாங்க. என் மகளோட கல்யாணத்துக்குள்ள அப்பாவும் என் கணவரும் விடுவிக்கப்படணும்னு பிரார்த்தனை பண்றேன்” என்கிறார் முபினா.
தமிழகத்தின் மத்திய சிறைகளில் சுமார் அய்யாயிரத்திற்கும் அதிகமான ஆயுள் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நீண்ட கால சிறைவாசத்தை அனுபவிப்பது -ராஜிவ் கொலை வழக்குக் கைதிகளுக்கு அடுத்தபடியாக – முஸ்லிம்களே! இளவயதில் கைதாகி ஒட்டுமொத்த இளமையையும் வாழ்வையும் தொலைத்தவர்களாக முஸ்லிம் கைதிகள் அல்லலுறுகின்றனர். பிணையில் கூட வெளிவராமல் அவர்கள் சிறையிலேயே நோய்வாய்ப்பட்டு செத்து மடியும் கொடுமையும் நிகழ்கிறது. கடந்த மார்ச் மாதம் கோவை மத்திய சிறையில் இருந்த ரிஸ்வான் பாஷா 41 வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார். 20 ஆண்டுகால ஆயுள் தண்டனையில், மரணிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் பரோலில் வந்து அவர் திருமணம் முடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஸ்வானுக்கு முன்னர் முகமது ஒஜீர், சபூர் ரஹ்மான் உள்ளிட்ட சில முஸ்லிம் கைதிகள் சிறையிலேயே உயிரை விட்டுள்ளனர். நோய்வாய்ப்பட்ட ஆயுள் சிறைவாசிகளுக்கும் விசாரணைக் கைதிகளுக்கும் பிணையில் வெளிவர சட்டப்படி உரிமை உள்ளது. ஆனால் பெரும்பாலும் அது நடப்பதில்லை. இருதய நோய், முடக்கு வாதம், மனநல பாதிப்பு போன்ற கடுமையான பிரச்னை உள்ளவர்களுக்கு கூட – முஸ்லிம் என்பதால் -கருணை கிடைக்கவில்லை.
முஸ்லிம் கைதிகள் விடுதலைக்காக குரல் கொடுப்போர் கோவை அபுதாஹீர் உடல்நிலை குறித்து மிகுந்த வேதனையோடு கவனிக்கின்றனர். உடல் உள்ளுறுப்புகள் சிதையும் நோயால் கடந்த 2006 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட அபுதாஹீருக்கு இப்போது 40 வயது. இருபதாண்டுகளுக்கு முன்னர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் பயங்கரவாத வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு, தற்போது 302 ஆவது பிரிவில் ஒரு கொலைக் குற்றவாளியாக சிறையில் இருக்கிறார். உயிர்க்கொல்லி நோயால் அவரது இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து விட்டன. இதயத் துடிப்பு சீராக இல்லை. கை கால்கள், முகம் மற்றும் வயிற்றுப் பகுதிகள் வீங்கிப் போயுள்ளன. மருத்துவ அறிக்கையின்படி அவர் கொஞ்சம் கொஞ்சமாக மரணித்துக் கொண்டிருக்கிறார்.
“உளவுத்துறையோ, காவல்துறையோ என் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை” என்கிறார் அபுதாஹீர். சிறைக் கண்காணிப்பாளர் அவருக்குத் தடையாக வந்தார். நோயால் மரணம் ஏற்படும் சூழல் இருந்தும் அபுதாஹீரின் விடுதலைக்கு சிறை நிர்வாகம் எதிர்ப்புக் காட்டுகிறது. மருத்துவச் சான்றிதழ் இருந்தும், படுத்த படுக்கையாக இருக்கும் அபுதாஹீரால் சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும் என அது நிராகரிக்கிறது!
“எங்க அம்மாவும் அப்பாவும் அபு பரோலில் கூட வர முடியாத நிலையில இருந்தப்போ உயிரிழந்துவிட்டனர். அபுவைப் பற்றிய கவலை தான் அவர்களைக் கொன்றுவிட்டது. அபு கைதாவதற்கு முன்னாடி எங்க வீடு எப்பவும் கல்யாண வீடு மாதிரி கலகலப்பா இருக்கும். இந்த இருபது வருஷமா அது சாவு வீடுதான். அபு உயிரைக் காப்பாத்த முடியுமான்னு தெரியல. ஆனா, அவரை வீட்டுல வச்சு கஷ்டப்படாம பாத்துக்கணும்னு நினைக்கிறேன்.
அவரால நடக்க முடியாது. கண் பார்வை போயிருச்சு. இந்த சூழ்நிலைல அவரோட கடைசி காலத்துலயாவது எங்களோட வாழ்ற வாய்ப்பைத் தரணும். படுத்த படுக்கையா இருக்க ஒருத்தரால சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும்னு சொல்றது நியாயமே இல்லை” என்கிறார், அபுதாஹீரின் சகோதரர் சிக்கந்தர். தி.மு.க.வின் முன் விடுதலைத் திட்டத்திலேயே வெளிவந்திருக்க வேண்டிய அபுதாஹீர் இன்றுவரை எவ்வளவு முயன்றும் தோற்றுத்தான் போனார்.
உடல்நல பாதிப்புகளை மையப்படுத்திய உரிமைகளிலும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு பாரபட்சம் இருப்பதாகச் சொல்லும் மனித உரிமையாளர்கள், பல்வேறு வழக்குகளில் கைதாகும் பிரபலங்கள், அரசியல்வாதிள் ‘திடீர்’ உடல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்தபடியே பிணை வழங்கப்படுவதை சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால், உயிர் போகும் கடைசி காலத்தில் கூட முஸ்லிம் கைதிகளுக்கு அவ்வுரிமை மறுக்கப்படு கிறது.
ஆயுள் தண்டனைக்கு எது அளவு என்பது தொடர்ச்சி யான விவாதமாகவே இருந்து வருகிறது. குற்றத்தின் தன்மையைப் பொருத்தோ அல்லது அவர்கள் சமூக, அரசியல், பொருளாதாரப் பின்னணியின் அடிப்படையிலோ ஆயுள் தண்டனைக்கான கால வரையறை மாறுபடுகிறது. ஏழு ஆண்டுகளில் விடுவிக்கப்படுவோரும் உண்டு; கால் நூற்றாண்டு காலம் கடந்து வதைபடுவோரும் உண்டு. ஆனால் விடுவிக்கப்படுவோர் யார், வதைக்கப்படுவோர் யார் என்பதில்தான் பிரச்னை எழுகிறது.
“நாங்கள் மரண தண்டனைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். குற்றத்தின் தன்மை எத்தகையதாக இருந்தாலும் மரண தண்டனை மனிதரின் திருந்தி வாழும் அடிப்படை உரிமையை பறித்துவிடுகிறது என்பதாலேயே நாங்கள் அதைக் கடுமையாக எதிர்க்கிறோம். ஆனால், இங்கே ஆயுள் தண்டனை மரண தண்டனையை விடக் கொடுமையானதாக இருக்கிறது. ஆயுள் என்றால் சாகிற வரை சிறை என்பது ஜனநாயக சமூகத்திற்கான சட்டவிதியல்ல. அது பிரிட்டிஷ் காலத்தில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட கொடுமை. ஆனால் அதை நாம் இன்றும் உயிர்ப்போடு வைத்திருக்கிறோம்
குறிப்பாக ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்கள்தான் நீதி கிடைக்காமல் இதில் வதைபடுகின்றனர். இரண்டு காரணங்களுக்காக மரண தண்டனை ஒழிப்பைப் போல ஆயுள் தண்டனையும் ஒழிக்கப்பட வேண்டுமென நாங்கள் கேட்கிறோம். ஒன்று அது, ஒரு மனிதர் திருந்தி வாழும் வாய்ப்பை முற்றாக மறுக்கிறது; இரண்டாவது அதில் நிலவும் பாகுபாடு. பொது மன்னிப்பில் அந்தப் பாகுபாட்டைத் தொடர்ந்து பார்க்க முடிகிறது” என்கிறார் பேராசிரியர் அ.மார்க்ஸ்.
தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பு (என்.சி.ஹெச்.ஆர்.ஓ.) ஆயுள் சிறைவாசிகள் விடுதலை குறித்து நடத்திய கலந்துரையாடல் கடந்த ஜூலை மாதம் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. பல்வேறு அமைப்புகளின் சார்பில் பங்கேற்ற மனித உரிமையாளர்கள் பலரும் தமிழக சிறைகளில் பல்லாண்டு காலமாக அல்லலுறும் சிறைக் கைதிகளின் நிலை குறித்து, குறிப்பாக முஸ்லிம்கள் மீது காட்டப்படும் பாரபட்சம் குறித்து பேசினர். ஆயுள் சிறைவாசியாக இருந்தவரும், ஆயுள் கைதிகளின் விடுதலைக் காகத் தொடர்ந்து போராடி வருபவருமான தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு, “சாகிற வரை சிறைவாசம் என்பது சிறையின் நோக்கத்தையே சிதைக்கிறது. இன்றைய சூழலில் ஆயுள் தண்டனையை மிகக் கொடூரமான மரண தண்டனை என்றுதான் வகைப்படுத்த வேண்டும். அது அணுஅணுவாக ஒருவரைக் கொல்கிறது. ஆயுள் தண்டனை என்றாலே அது முன் விடுதலையை உள்ளடக்கியதுதான்.
கிருஷ்ணய்யர் போன்ற நீதியரசர்கள் ஏழாண்டு முடித்தவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். முல்லா ஆணையம் எட்டாண்டுகளுக்குப் பிறகு யாரையும் சிறையில் வைக்கக் கூடாது என பரிந்துரைத்தது. முன்பு வரை 14 ஆண்டுகள் முடித்தவர்களை விடுவித்துவிடும் வழக்கம் இருந்தது. தண்டனை வழங்கும் போது குற்றத்தையும், முன் விடுதலைக்கு தண்டனை காலத்தையும் நன்னடத்தையையும் மட்டும்தான் பார்க்க வேண்டும். இரண்டிலுமே குற்றமிழைத்தவர்கள் யார், என்ன மதத்தை அல்லது சாதியைச் சேர்ந்தவர்கள் என பாரபட்சம் பார்க்கக் கூடாது” என்று பேசினார்.
ஒருவரின் தண்டனையை மரணம்தான் முடித்து வைக்குமெனில், அதையும் மரண தண்டனை என்றுதான் அழைக்க முடியும். நீண்ட கால சிறைக் கொட்டடியில் – நொடிக்கு நொடி – மரண தண்டனையை அனுபவிக்கின்றனர் முஸ்லிம் ஆயுள் கைதிகள். நீதியின் அழகே அதில் நிலைநாட்டப்படும் சமத்துவத்தில்தான் அடங்கியிருக்கிறது. அதிலும் இந்தியா போன்றதொரு ஜனநாயக நாட்டில் நீதியில் பாரபட்சம் என்பது அதன் நிழலிலும் கூட இருக்கக் கூடாது. முன் விடுதலைக்குத் தகுதியானோர் பட்டியலில் உள்ள 1500 பெயர்களில் மேலதிகமான ஆண்டுகள் சிறைவாசத்தை முடித்த முஸ்லிம் கைதிகளையும் இணைத்து, தமிழக அரசு இம்முறையாவது மதத்தால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்ட நீதியை மீட்டுத் தருமா?
No comments:
Post a Comment