இந்திய விமானப்படைக்கு தேவையான ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் பெருமளவில் ஊழல் புரிந்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் விதமாக ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காத மத்திய அரசு பிரச்சனையை திசை திருப்பும் நோக்கிலேயே இதுவரை பேசி வருகிறது. இந்நிலையில் தி இந்து ஆங்கில நாளிதழில் அதன் முன்னாள் முதன்மை ஆசிரியரும் தி இந்து குழுமத்தின் தலைவருமான என். ராம் எழுதிய இரண்டு கட்டுரைகள் ரஃபேல் ஊழல் விவகாரத்தை மீண்டும் முதல் பக்கத்திற்கு கொண்டு வந்துள்ளன.
1986இல் அப்போதைய ராஜீவ்காந்தி அரசாங்கம் ஸ்வீடன் நாட்டிடமிருந்து போஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல் புரிந்ததாக செய்தியை வெளியிட்டதும் பத்திரிகையாளர் ராம்தான். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது.
இந்திய விமானப்படையை மேம்படுத்தும் நோக்கில் புதிய போர் விமானங்களை வாங்க வேண்டும் என்ற விமானப்படையின் கோரிக்கையை ஏற்று 2007இல் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு புதிய விமானங்களை வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. 126 போர் விமானங்களை வாங்குவதற்காக போர் விமான தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஆறு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டன. இவற்றில் பிரான்ஸ் நிறுவனமான டஸ்ஸால்ட் ஏவியேஷன் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களின் கூட்டமைப்பான ஈரோஃபைட்டர் டைஃப்பூன் ஆகிய நிறுவனங்கள் இந்திய விமானப்படையின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் அமைந்திருந்தன.
குறைந்த விலையில் விமானங்களை வழங்க டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அந்நிறுவனத்திடமிருந்து ரஃபேல் விமானங்களை வாங்குவது என்று 2012ல் தீர்மானிக்கப்பட்டது. மொத்தம் 126 போர் விமானங்களை வாங்குவது என்றும் அவற்றில் 18 விமானங்களை டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து நேரடியாக வாங்குவது, எஞ்சியவற்றை இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் தயாரிக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது. போர் விமானங்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்ப விவரங்களை டஸ்ஸால்ட் நிறுவனம் பொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் வசம் கொடுக்க வேண்டும் என்றும் இறுதி செய்யப்பட்டது. ஆனால் இந்திய அரசாங்கத்திற்கும் டஸ்ஸால்ட் நிறுவனத்திற்கும் இடையே எழுந்த சில கருத்து வேறுபாடுகள் காரணமாக ஒப்பந்தம் நிறைவேறாமல் காலம் கடந்தது.
இந்நிலையில் 2014 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கம் முந்தைய ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு புதிதாக ஒப்பந்தங்களை செய்து கொண்டது. ஏப்ரல் 10, 2015 அன்று பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி திடீரென்று இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். 2016ல் இந்தியாவின் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள வந்த பிரான்ஸ் நாட்டு அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து செப்டம்பர் 23, 2016 அன்று ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
126 விமானங்களுக்கு பதிலாக 36 போர் விமானங்களை மட்டும் வாங்குவது என்றும் அந்த விமானங்களையும் முழுவதுமாக டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து வாங்குவது என்றும் மோடி அரசாங்கம் எடுத்த முடிவு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. ஆட்சிக்கு வந்தவுடன் ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றான ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்னவானது, பொதுத்துறை நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய நல்வாய்ப்பை தடுத்தது ஏன் என்று எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் கேள்விகளை எழுப்பினர்.
இந்தியாவின் பாதுகாப்பு கொள்முதல் விதிகளின்படி இந்தியாவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் வெளிநாட்டு நிறுவனம் குறிப்பிட்ட ஒப்பந்த தொகையில் 30 சதவீதத்தை இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும். இந்தியாவில் பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்க இந்த தொகை பயன்படுத்தப்படும். 7.8 பில்லியன் யூரோக்களுக்கு ரஃபேல் ஒப்பந்தத்தை பெற்றுள்ள டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் அதில் 50 சதவிகிதத்தை இந்தியாவில் முதலீடு செய்ய ஒப்புக் கொண்டது.
பாதுகாப்புத் துறையில் அனுபவமே இல்லாத அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தை இதில் ஒரு பங்காளர் ஆக்கினார் நரேந்திர மோடி. இதன்மூலம் அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு 1.9 பில்லியன் யூரோக்கள் புதிய வருவாயாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 40,000 கோடி கடன் உள்ள அனில் அம்பானியின் மற்றொரு நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் சமீபத்தில் திவால் நோட்டீஸ் கொடுத்ததை நாம் நினைவில் கொள்வது நல்லது.
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட்டை ஓரம்கட்டி விட்டு தனது நண்பர் அம்பானிக்கு பெரும் உதவியை இதன்மூலம் செய்துள்ளார் மோடி. நிறுவனத்தைத் தொடங்கிய பத்தே நாட்களில் இவ்வாறான ஒரு ஒப்பந்தம் அம்பானியை தவிர வேறு யாருக்கும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். தனது எதேச்சதிகார செயல் மூலம் சலுகைசார் முதலாளித்துவத்தின் கதாநாயகன் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் மோடி. ரஃபேல் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ரிலையன்ஸ் குழுமத்தின் பெயர் மோடி அரசாங்கம் பதவிக்கு வந்த பிறகுதான் கொண்டு வரப்பட்டது என்று பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே செப்டம்பர் 2018ல் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார்.
அனில் அம்பானிக்கு ஆதரவு கரம் நீட்டியது ஏன் என்ற கேள்விக்கு பதில் கொடுக்காத மத்திய அரசாங்கம் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிர்ணயித்த விலையை விட ரஃபேல் போர் விமானத்தின் விலையை தற்போது அதிகரித்தது ஏன் என்ற கேள்விக்கும் முறையான பதிலை இதுவரை அளிக்கவில்லை. குறிப்பாக, ஒரு விமானத்தின் விலை என்ன என்பதை இதுவரை வெளிப்படையாக அரசாங்கம் அறிவிக்கவே இல்லை. பிரான்ஸ் அரசாங்கத்துடன் தாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி விலையை வெளியே வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என்று மத்திய அரசாங்கம் காரணம் கூறினாலும் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களைதான் வெளியே தெரிவிக்கக்கூடாது, விலையை தெரிவிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியது பிரான்ஸ் அரசாங்கம். இருந்தபோதும் போர் விமானத்தின் விலையில் ரகசியத்தை இதுவரை பாதுகாத்து வருகிறது மத்திய அரசு. ஆனால் எந்த விபரங்கள் வெளியே தெரியக்கூடாது என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதோ அந்த தொழில்நுட்ப விஷயங்களை அரசாங்கத்தை சார்ந்தவர்களும் அதிகாரிகளும் பல்வேறு மட்டங்களில் வெளிப்படுத்தி உள்ளனர் என்பதை பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒரு ரஃபேல் போர் விமானத்திற்கு 2007ல் நிர்ணயித்த விலை 79.3 மில்லியன் யூரோகள். 2011ல் இந்த விலை 100.85 மில்லியன் யூரோகளாக அதிகரித்தது. டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் பேசி 2016ல் 91.75 மில்லியன் யூரோகளாக விலையை குறைத்ததாக மத்திய அரசு கூறியது. ஆனால் விமானத்தின் இறுதி விலை 2011ன் விலையை விட அதிகரித்தது!
ரஃபேல் போர் விமானத்தில் இந்தியாவிற்கு என்று பிரத்யேகமாக 13 மேம்பாடுகளை (மிஸீபீவீணீ ஷிஜீமீநீவீயீவீநீ ணிஸீலீணீஸீநீமீனீமீஸீts) கேட்டது விலை உயர்வுக்கு காரணம் என்று கூறுகிறது மத்திய அரசு. இந்த மாற்றங்களுக்கு டஸ்ஸால்ட் நிறுவனம் நிர்ணயித்த மொத்த தொகை 1.3 பில்லியன் யூரோக்கள். 36 போர் விமானங்கள் வாங்கினாலும் 126 போர் விமானங்களை வாங்கினாலும் 1.3 பில்லியன் யூரோக்கள்தான் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் எதற்காக மத்திய அரசாங்கம் 36 விமானங்களை மட்டும் வாங்குகிறது என்று கேள்வி எழுப்புகிறார் பத்திரிகையாளர் என். ராம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் ஒப்புக்கொண்ட விலையைவிட 41.42 சதவிகிதம் அதிகமான விலை கொடுத்து தற்போது பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் ரஃபேல் போர் விமானங்களை வாங்குகிறது. இந்தியாவின் சார்பாக பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்பட்ட 7 பேர் கொண்ட குழுவில் மூவர் இந்த விலை மிகவும் அதிகமானது என்று கூறி தங்கள் அதிருப்தியை பதிவு செய்தனர். ஆனால் குழுவில் இடம்பெற்ற மற்ற நால்வரும் விலை ஏற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
விமானப் படைக்கு விமானங்கள் தேவையுள்ள நிலையில் எதற்காக 126 போர் விமானங்களுக்கு பதிலாக 36 விமானங்களை மட்டும் வாங்குகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மத்திய அரசாங்கம் திணறிக்கொண்டு இருந்த நிலையிலேயே அடுத்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்தார் பத்திரிகையாளர் ராம். மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்பட்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே பிரதமர் அலுவலகமும் இணை பேச்சுவார்த்தையில் (Parallel Negotiation) ஈடுபட்டது என்பது ரஃபேல் விவகாரத்தில் மற்றுமொரு அதிர்ச்சி.
நவம்பர் 24, 2015 அன்று பாதுகாப்பு அமைச்சகம் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கருக்கு எழுதிய குறிப்பில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. ‘‘நமது பேச்சுவார்த்தைகளை குறைத்து மதிப்பிட்டு பிரதமர் அலுவலகம் இதுபோன்ற பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்வது நல்லது’’ என்று அப்போதைய பாதுகாப்பு துறை செயலாளர் ஜி. மோகன் குமார் தனது கைப்பட எழுதி பாதுகாப்பு அமைச்சருக்கு அந்த குறிப்பை அனுப்பியுள்ளார். இதனை தி இந்து நாளிதழ் ஆதாரத்துடன் பதிவு செய்துள்ளது.
அக்டோபர் 23, 2015 அன்று பிரான்ஸ் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் ஜெனரல் ஸ்டீபன் ரெப் இந்தியாவின் பிரதமர் அலுவலகம் நடத்திவரும் போட்டி பேச்சுவார்த்தை விபரங்களை தனது கடிதத்தில் குறிப்பிட்ட பிறகுதான் இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தெரியவந்துள்ளது. பிரதமர் அலுவலகத்தின் இணைச்செயலாளர் ஜாவித் அஷ்ரப், பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகர் லூயி வசியுடன் அக்டோபர் 20, 2015 அன்று தொலைபேசி மூலம் உரையாடினார் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது. மோகன் குமாரின் குறிப்பில் தனது கருத்துகளை பதிவு செய்த பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர், ‘பிரதமர் அலுவலகமும் பிரான்ஸ் அதிபரின் அலுவலகமும் இதில் நடைபெற்று வரும் முன்னேற்றங்களை கண்காணிப்பது போலிருக்கிறது. பாதுகாப்புச் செயலாளர் இந்த விவகாரத்தை பிரதமரின் தனிச் செயலாளர் உடன் கலந்து பேசி தீர்க்கலாம்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் இருந்து பரிக்கர் லாவகமாக ஒதுங்கிக் கொண்டார் என்று எதிர்கட்சிகள் கூறியுள்ளன. ரஃபேல் ஒப்பந்தம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று மனோகர் பரிக்கர் முன்னர் ஒருமுறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்த பேரத்தில் இணைத்தது குறித்து பிரான்ஸ் அதிபர் தெரிவித்த கருத்துகளை தொடர்ந்து, ரஃபேல் விவகாரம் குறித்து நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய அரசாங்கம் இந்தியாவின் சார்பாக ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அக்டோபர் 2018ல் உச்சநீதிமன்றத்திடம் கூறியது. இதனை தொடர்ந்து ரஃபேல் விவகாரத்தில் மேற்கொண்டு விசாரணை எதுவும் தேவை இல்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. பிரதமர் அலுவலகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்காத நிலையில் இந்த விவகாரம் மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்லுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிரதமர் அலுவலகம் மட்டுமின்றி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஜனவரி 2016ல் தன் பங்கிற்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ‘இந்தியாவின் பிரதமர் தேசத்தின் 30 ஆயிரம் கோடியை திருடி விட்டார்’ என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடி இந்த ஊழலில் நேரடியாக பங்கு பெற்றுள்ளார் என்று பத்திரிகையாளர் என். ராம் கூறியுள்ளார். ‘‘மேரா பி.எம். சோர் ஹை’’ (எனது பிரதமர் திருடர்) என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் மக்கள் பதிவு செய்து வருகின்றனர். ஆனால் நாட்டு மக்களுக்கோ எதிர் கட்சிகளுக்கோ மத்திய அரசு எந்த பதிலையும் கொடுக்கவில்லை.
ரஃபேல் விவகாரம் மக்களுக்கு ஒரு பிரச்சனையே அல்ல என்ற ரீதியில் மத்திய அமைச்சர்கள் பேட்டி கொடுத்து வருகின்றனர். இதற்கு முன்னர் பாதுகாப்புத் துறை அமைச்சர்களாக இருந்த அருண் ஜேட்லி மற்றும் மனோகர் பரிக்கர் ஆகியோர் இது குறித்து வாய் திறக்காமல் இருக்க தற்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசாங்கத்தை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ‘பிரான்ஸ் அரசாங்கத்துடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது கண்காணிப்பு கிடையாது, அது தலையீடுதான்’ என்பதை நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கட்சி உணர்த்தியது.
ரஃபேல் விவகாரம் குறித்து கேள்வி எழும் போதெல்லாம் நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானவர்கள் என்று கேள்வி எழுப்புபவர்களை கூறி தேசப்பற்று பின்னால் வழக்கம்போல் ஒளிந்து கொள்கின்றனர் பா.ஜ.க.வினர். தான் ஊழலை ஒழிக்க வந்தவன், ஊழல் நடக்காமல் கண்காணிப்பவன் என்று செல்லும் இடங்களிலெல்லாம் வெட்கமின்று கூறி வருகிறார் பிரதமர் மோடி. ரஃபேல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் வெளியே வந்த போதும் அவற்றுக்கெல்லாம் உரிய பதிலை கொடுக்காமல் தேசப்பாதுகாப்பு, தேச நலன் என்று கூறியும் தங்களின் வார்த்தை ஜாலங்களை பயன்படுத்தியும் மக்களை ஏமாற்றி வருகின்றனர் பிரதமர் மோடியும் அவரது சங்பரிவார் அணியினரும்.
நாட்டை பாதுகாக்கும் பணியில் தங்கள் உயிரை இழந்த இராணுவ வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்குவதில் கூட ஊழல் புரிந்தவர்கள் இவர்கள். தங்கள் தேச துரோக செயல்களை மறைக்கத்தான் இவர்கள் தேசபக்த வேஷம் போட்டு வருகின்றனர். இவர்களின் ஏமாற்று வேலைகளுக்கும் பேச்சுகளுக்கும் இனியும் பலியாகாமல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்ட வேண்டியது நாட்டு மக்களின் கடமை. ‘காங்கிரஸ் கட்சி 60 வருடங்களில் செய்யாததை நாங்கள் 60 மாதங்களில் செய்தோம்’ என்று மோடி கூறுகிறார். 60 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி செய்த ஊழலை இவர் 60 மாதங்களில் செய்துவிட்டார் என்றுதான் நாம் இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment