Friday, February 15, 2019

என் புரட்சி-22-Fruits Of Islam (FOI) தொண்டர் படை

நான் சந்தித்து வந்த இடர்களை முடிவுக்கு கொண்டு வர ஒரு வழியே இல்லையா என்பதைச் சுற்றியே என் சிந்தனை ஓடியது.
அமெரிக்க கறுப்பர்களின் பிரச்சினைக்கு தீர்வு தனி நாடும், இஸ்லாமும்தான் என்று நேஷன் ஆஃப் இஸ்லாம் பிரச்சாரம் செய்கிறது. இது தீர்வல்ல என்று கருதும், குடியுரிமைகளுக்காகப் போராடும் கறுப்பின தேசியவாதக் குழுக்கள் எங்கள் பிரச்சார வீச்சுக்கு முட்டுக்கட்டை போடுவதாக உணர்ந்தேன். இப்படி கறுப்பர்களின் முன்னேற்றத்துக்காக, நலனுக்காக செயல்படும் சமூக இயக்கங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு சாத்தியமே இல்லையா என்று சிந்திக்கும் போது, வழக்கம் போல வரலாற்றின் பக்கம் என் கவனத்தை திருப்பினேன்.
ஆராய்ச்சியாளனுக்கு வரலாறுதான் சிறந்த தீர்வை அளிக்க முடியும். நாம் நமது போராட்ட வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சினைகளைச் சந்தித்தால், இது போன்ற பிரச்சினைகளை வரலாறு எவ்விதம் கையாண்டிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அதில் ஏதேனும் தீர்வு காணப்பட்டிருக்கலாம் அல்லவா?… அல்லது சிக்கலிலிருந்து விடுபடும் வழிகளாவது நமக்கு தென்படலாம்.
அப்படிச் சிந்திக்கும் போது, எனக்கு சற்றென நினைவுக்கு வந்தது கடந்த ஆண்டு நடைபெற்ற பாண்டூங் மாநாடுதான். 1955ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 18ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை இந்தோனேசியாவின் பாண்டூங் நகரில் பிரம்மாண்டமான ஆசிய, ஆஃப்ரிக்க நாடுகள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. அண்மையில் சுதந்திரம் அடைந்த 29 ஆசிய,- ஆஃப்ரிக்க நாடுகள் முதன்முதலாக ஒன்றிணைந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.
இந்த மாநாடு என்னுள் ஒரு புதிய ஒளிக்கீற்றை பாய்ச்சியதோடு, இதேபோன்றதொரு ஒற்றுமை சாத்தியம்தான் என்ற நினைப்பும் என் சிந்தனையில் கனன்று கொண்டே இருந்தது.
ஹார்லெம் நகரின் எல்லாத் தெருக்களிலும் நான் இஸ்லாமியப் பிரச்சாரம் மேற்கொண்டேன். ‘நான் வாழ்ந்த உலகமான’ அந்த நகரத்தின் மூலை முடுக்குகளில் வசித்து வந்த கறுப்பர்கள் எல்லோரிடமும் இஸ்லாத்தையும் நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பையும் கொண்டு சேர்ப்பதில் எல்லா முயற்சிகளையும் எடுத்தேன்.
ஹார்லெம் நகர ஏழாம் எண் பள்ளிவாசலில் என்னுடைய உரையைக் கேட்க, கூட்டம் அதிகரித்தது. அதேசமயம், நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பில் தங்களை இணைத்துக் கொள்ள கறுப்பர்கள் தயக்கம் காட்டினார்கள். அதற்கு காரணம் எங்கள் அமைப்பின் கட்டுப்பாடுகள்தான்.
அமைப்பில் உறுப்பினர்களை அதிகரிப்பதற்காக கட்டுப்பாடுகளைத் தளர்த்திக் கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல், தறிகெட்ட வாழ்க்கை வாழ்வதுதான் கறுப்பர்களின் இந்த தாழ்ந்த நிலைக்கு காரணம் என்பதற்கு நானே சிறந்த உதாரணமாக இருந்தவன்.
அமெரிக்க கறுப்பர்களின் வாழ்வியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தவே எங்கள் அமைப்பு உழைத்தது. நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பில் இணையும் ஒவ்வொருவரும் மிகுந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.
ஆண் உறுப்பினர்கள் Fruits Of Islam (FOI) தொண்டர் படையிலும் பெண் உறுப்பினர்கள் Muslim Girls Training (MGT) அமைப்பிலும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். Fruits Of Islam தொண்டர் படையானது இராணுவக் கட்டுப்பாடுகள் கொண்ட பிரிவாகும்.
வாரம்தோறும் திங்கள் கிழமை இரவு பள்ளிவாசலில் வைத்து, Fruits Of Islam தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆன்மீக வழிகாட்டுதலும் தற்காப்புக் கலை பயிற்சிகளும் இந்த வகுப்பில் வழங்கப்பட்டன. பள்ளிவாசலின் தலைமை இமாம் ஒட்டுமொத்த நிர்வாகத்துக்கு பொறுப்பாக இருந்தாலும் Fruits Of Islam தொண்டர் படைக்கு தனிக் கேப்டன் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் நேரடியாக தேசிய தலைமையின் கீழ் இயங்கிய கமாண்டருக்கு தொண்டர் படையின் செயல்பாடுகள் குறித்து பதிலளிக்க வேண்டும்.
*****
‘அட்டென்ஷன்… ’ அந்த அறை குலுங்குவது போல கட்டளையிட்டார் கேப்டன் ஜோசஃப் X. நேர்த்தியாக அணிந்த சீருடையோடு தொண்டர்கள் அணிவகுத்து, அடுத்த கட்டளையை எதிர்பார்த்து அமைதியாக நின்றனர்.
ஏழாம் எண் பள்ளிவாசலின் வெளியே, ஹார்லெம் நகரின் சாலையில் வாகனங்களின் சத்தம் குறைந்து கொண்டே வந்தது. தொண்டர்களின் பயிற்சி வகுப்பைப் பார்வையிடச் சென்றேன். நான் அங்கு சென்றதால், தொடக்கத்தில் எடுக்கப்படும் ஆன்மீக வகுப்பை என்னை எடுக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
‘இன்று நமது வகுப்பை பார்வையிட தலைமை இமாம் சகோதரர் மால்கம் வந்திருக்கிறார். அவர் உங்களுக்கு இன்று சிறப்பு வகுப்பு எடுப்பார்.’ துணைக் கேப்டன் ஜேம்ஸ் 67 X, வகுப்பைத் தொடங்க எனக்கு சைகை செய்தார்.
‘அஸ்ஸலாமு அலைக்கும்’ விரைப்பாக அணிவகுத்து நின்ற சகோதரர்களுக்கு முகமன் கூறினேன்.
‘வ அலைக்குமுஸ்ஸலாம்’ தொண்டர்களின் பதில் ஒரே குரலில் வந்தது.
‘வெள்ளையர்களைப் போன்ற இராணுவ அமைப்பு இது கிடையாது.’ நான் நேரடியாக பேச்சைத் தொடங்கினேன். ‘வெள்ளையர்கள் உயர் அதிகாரிளுக்கு கட்டுப்பட்டு நடக்கும் அடிமை மனநிலையில் இருப்பார்கள். ஆனால் இங்கு ஒவ்வொருவரும் சிந்தனை செய்ய கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே பயிற்சி அளிக்கப்படுகிறது. கறுப்பர்களுக்கு இப்படி ஒரு அமைப்பு, இராணுவக் கட்டுப்பாடு தேவையா என்று நீங்கள் நினைக்கலாம்.
நிச்சயமாக கறுப்பர்களுக்குத்தான் இத்தகைய இராணுவ பயிற்சியுடன் கூடிய அமைப்பு கட்டாயம் தேவை. முதலில், மனதளவில் நீங்கள் முழுமையாக அடிமை மனோபாவத்திலிருந்து வெளியே வர வேண்டும். இதுதான் Fruits Of Islam தொண்டர் படையின் பிரதான நோக்கமாகும். அமெரிக்க வெள்ளையர்கள் நம் இனத்தின் மீது பதிய வைத்திருக்கும் அடிமை முத்திரையை முதலில் நம்மளவில் நாம் போக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு முதல்படி, வெள்ளையன் மேன்மையானவன், அவனது செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள் உன்னதானமானவை,-சிறப்பானவை என்று நம் பொதுப்புத்தியில் பதிய வைக்கப்பட்டுள்ள சிந்தனையை நாம் தூக்கியெறிய வேண்டும்.
என் தலையைப் பாருங்கள். காங்க் செய்யப்பட்ட தலை. இந்தத் தலையிலிருந்துதான் நம் அடிமைச் சிந்தனை தொடங்குகிறது. வெள்ளையனைப் போல இருக்க வேண்டும் என்பதற்காக – தலையில் அவ்வளவு வலி எடுத்த போதிலும்- சிகை அலங்காரத்தை வெள்ளைக்காரனைப் போல செய்து கொள்ள சுய அவமரியாதையைப் பொறுத்துக் கொண்டு தலையை காங்க் செய்து கொள்கிறோம்.
இப்படித்தான் உடை, நடை, பாவனை, பேச்சு, மதம் எல்லாவற்றிலும் வெள்ளையனைப் போல நடக்க கறுப்பர்கள் முயல்கிறார்கள். இந்த ‘கலாச்சார அடிமை’த்தனத்திலிருந்து நாம் வெளியே வர வேண்டும். அடுத்ததாக நம் உளவியலை வெள்ளையர்கள் எவ்வாறு கட்டமைத்துள்ளார்கள் என்பதை நாம் அறிய வேண்டும். நாம் கறுப்பர்கள். அடிமைகள்.
கறுப்பர்களின் நிலை அமெரிக்காவில் எப்படி உள்ளது? தலைநகர்ல, வெள்ளை மாளிகைக்கு கொஞ்ச தூரத்துல, கேப்பிடல் ஹில் பகுதிக்குப் போய் பாருங்க…சொற்களில் வர்ணிக்க முடியாத நிலையில் பிச்சைக்காரர்களாக, கை வண்டி இழுப்பவர்களாக, விபச்சாரிகளாக, சூதாடிகளாக… ராத்திரில, தெரு நாய்களோடு அரை நிர்வாண கோலத்துல தூங்குறாங்க… இப்படித்தானே நம்மவர்களின் வாழ்க்கை இருண்டு கிடக்கிறது.
கொஞ்சம் நல்ல நிலையில இருக்கும் கறுப்பர்களும் ஹோவார்ட் யுனிவர்சிட்டி லெவல்ல படிச்சிட்டு என்ன செய்ய முடியுது? செக்யூரிட்டிகளாகவும், ட்ரைவர்களாகவும்… இப்படித்தானே வாழ்க்கையை ஓட்டுறாங்க…
வெள்ளையர்களின் சுகபோகங்களை பார்க்கும் போது நமக்கு எப்படி இருக்கு? என்ன மாதிரியான உணர்ச்சி ஏற்படுது? அப்போது உண்டாகும் தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியே வரவும், வெள்ளையர்களின் அதிகாரத்துக்கு கட்டுப்படும் போது ஏற்படும் குற்றவுணர்ச்சியிலிருந்து வெளியே வரவும் நாம் என்ன செய்கிறோம்? கறுப்பர்கள் என்ன செய்கிறார்கள்? யோசிங்க..’
கறுப்பர்களின் துயரம் தோய்ந்த வாழ்வாதார நிலைகளையும் வெள்ளையர்களின் ஆடம்பரத்தையும் அவர்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி சற்று அமைதியானேன்.
‘நம்மை நாமே போதைக்கு உட்படுத்திக் கொள்கிறோம். கறுப்பு அடிமைகளான நாம போதைக்கு அடிமையாகி இருக்கிறோம். மனஉளைச்சலிலிருந்து தப்பித்துக் கொள்ள ஆண்டாண்டு காலமாக கறுப்பர்கள் போதையிலேயே உழலுமாறு வெள்ளையர்கள் நம் இனத்தைப் பழக்கப்படுத்தி விட்டார்கள். இந்த உண்மையை ஆழமாகப் புரிந்து கொண்டதால்தான் நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பு, உறுப்பினர்களுக்கு புகையிலை, மது உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களை பயன்படுத்துவதை தடை செய்துள்ளது. அதே போல பன்றிக்கறி உள்ளிட்ட உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் எதையும் உட்கொள்வதையும் தடை செய்திருக்கிறது.
குறிப்பாக விபச்சாரம்… விபச்சாரத்தின் பக்கம் நெருங்கும் நடனம் போன்ற கேலிக்கைகளும்கூட அமைப்பு உறுப்பினர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஒழுக்கமும் கட்டுப்பாடும் நமது இரு கண்கள்.’
அணிவகுத்து நின்ற சகோதரர்களின் ஊடே நடந்து சென்று அவர்களிடம், தொண்டர் படையின் உன்னத நோக்கத்தை எடுத்துரைத்தேன்.
‘நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பும், Fruits Of Islam தொண்டர் படையும் கறுப்பர்களான நமக்கு தேவையா? சொல்லுங்க…’ தொண்டர்கள் அனைவரும் ஒரே குரலில் உரத்து ‘ஆம்’ என்றனர்.
‘அடுத்ததாக… நம் உடல் ஆரோக்கியத்தை நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் நலத்தின் ஒரு பகுதிதான் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது. அது மட்டுமல்ல, உடல் கட்டுக்கோப்பாகவும் திடகாத்திரமாகவும் இருந்தால்தான் வெள்ளையர்களின் அழிச்சாட்டியத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். நம்முடைய உரிமைகளைப் பெற்றுக் கொள்ள கோஷம் மட்டும் போட்டால் போதாது. வெள்ளையர்கள் நம்மைத் தாக்கும் போதும், நம்முடைய உடைமைகளை சேதப்படுத்தும் போதும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டுமா? கைகளைக் கட்டிக் கொண்டு, ஒரு கண்ணத்தில் அறைந்தால், இன்னொரு கண்ணத்தைக் காட்ட நமது இஸ்லாமிய மார்க்கம் நமக்கு கற்றுத் தரவில்லை.
‘Nobody can give you freedom. Nobody can give you equality or justice. If you’re a man, you take it.
‘ஒவ்வொரு தொண்டரும் கராத்தே, குங்ஃபூ, ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும். நம்மையும் நமது அமைப்பின் உடமைகளையும் கறுப்பர் இனத்தையும் பாதுகாக்க நாம்தான் இராணுவமாக செயல்பட வேண்டும்.’
உற்சாகமூட்டும் வார்த்தைகளோடு என்னுடைய உரையை நிறைவு செய்தேன். அதன் பின்னர் தற்காப்பு பயிற்சி வகுப்பு தொடங்கியது. தொண்டர் படையில் உடல் தகுதியின் அடிப்படையில் பயிற்சி வழங்கப்பட்டது. பொதுவாக 16 வயது முதல் 35 வயது வரையிலான உறுப்பினர்களை கட்டாயம் தொண்டர் படையில் சேர்த்துக் கொண்டு பயிற்சிகளை வழங்கினோம். தலைவர் எலிஜா முஹம்மது கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களில் அவருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியையும் இவர்களே கவனித்துக் கொண்டனர். அதே போல, பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்களை கட்டுப்படுத்தும் பணியும் இவர்களின் பொறுப்பே… வெறுமனே உடற்பயிற்சி மட்டும் இங்கு போதிப்பது கிடையாது. ஆணாக ஒரு குடும்பத்தின் பொறுப்புகள், கணவனின் கடமைகள், பெண்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்தல், தந்தையின் அந்தஸ்தில் குழந்தை வளர்ப்பு போன்ற இஸ்லாமிய சமூக அமைப்பில் ஆண்களின் பங்கு குறித்தும் இந்த வகுப்புகளில் போதிக்கப்பட்டது.
தொண்டர் படையின் கேப்டனுக்கு வேறொரு முக்கியப் பொறுப்பும் இருந்தது. பள்ளிவாசலின் உறுப்பினர்களின் நல்லொழுக்கங்களை கண்காணித்து வர வேண்டும். விதிகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்ட உறுப்பினரை தற்காலிகமாக நீக்கி வைப்பது, குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒதுக்கி வைப்பது, அமைப்பை விட்டு நீக்குதல் போன்ற தண்டனைகளை கேப்டனும், பள்ளிவாசலின் தலைமை இமாமும் &- மினிஸ்டர் – உறுதி செய்வார்கள்.

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...