Friday, February 15, 2019

1983 பிப்ரவரி 18 நெல்லி படுகொலை! - ஆர் எஸ் எஸ் தீவிரவாதம் - அஸ்ஸாம்


அஸ்ஸாமின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நெல்லி, ஒரு இனப்படுகொலையின் பெயரால் உலக வரைபடத்தில் இடம் பிடித்தது. 1983 பிப்ரவரி 18ம் தேதி அஸ்ஸாமிகளான திவா, கோச் பழங்குடியினத்தைச் சார்ந்த வன்முறைக்கும்பல் வாள், பெட்ரோல் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நெல்லியில் நுழைந்து மூவாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்களை கொடூரமாக படுகொலை செய்தது.
கொலை செய்யப்பட்டவர்கள் அடித்தட்டு மக்கள் என்பதால் இந்த இனப்படுகொலை ஒரு அடிக்குறிப்பாக மாறியது. சுதந்திரத்திற்கு பிறகு இத்தகையதொரு இனப்படுகொலை நெல்லியில்தான் அரங்கேறியது. ஆனால் நெல்லியை அனைவரும் மறந்திடவே விரும்பினர்.
கலவரங்கள் உருவாக காரணம், அதுவரை கட்டமைக்கப்பட்ட அல்லது இதர வழிகளில் வலுப்பெற்ற ‘அன்னியர்’ விரோதமாகவோ மண்ணின் மீதான பேராசையாகவோ இருக்கலாம். 1970களின் இறுதியில் அஸ்ஸாம் பகுதியில் அன்னியர் துவேசம் வலுப்பெறத் துவங்கியது. அஸ்ஸாம் வம்சாவழியைச் சார்ந்த உயர்சாதியினர்தாம் ஆல் அஸ்ஸாம் ஸ்டூடண்ட்ஸ் யூனியனின் கீழ் நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமை வகித்தனர்.
கிழக்கு பாகிஸ்தானிலிருந்து (தற்போதைய வங்காளதேசம்) பெருமளவில் குடியேற்றம் நடப்பதாக பிரச்சாரம் செய்வது இந்துத்துவ வலதுசாரிகளின் ஸ்திரமான பரப்புரை என்பதால் அஸ்ஸாம் ஸ்டூடண்ட்ஸ் யூனியனின் போராட்டத்திற்கு தூண்டுகோலாக அமைந்தது சங்பரிவார்கள் என்பதற்கு வாய்ப்பு அதிகம்.
2
1979ம் ஆண்டு போராட்டம் துவங்கப்பட்டு, 1985ம் ஆண்டு அடங்கியது. அஸ்ஸாம் ஸ்டூடண்ட்ஸ் யூனியனின் போராட்டம் துவக்கத்தில் வங்காள மொழி பேசும் அனைத்து மதனத்தினருக்கும் எதிராக அமைந்தபோதிலும் பின்னர் அதில் மத வர்ணம் பூசப்பட்டது. அஸ்ஸாமிகளான முஸ்லிம்கள் துவக்கத்தில் வங்காளிகளாகவும் பின்னர் வங்காள முஸ்லிம்களாகவும் சித்தரிக்கப்பட்டனர்.
வங்காள மொழி பேசும் இந்துக்கள் அஸ்ஸாம் ஸ்டூடண்ட்ஸ் யூனியனின் பார்வையிலிருந்து காணாமல் போயினர். பழங்குடியினர் மத்தியில் குடியேற்றக்காரர்களுக்கு எதிரான போராட்டத்தை முஸ்லிம் எதிர்ப்பு போராட்டமாக மாற்றியதில் ஆர்.எஸ்.எஸ்.ஸிற்கு முக்கிய பங்குண்டு.
மொழி மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் மாறுபட்டிருந்த அஸ்ஸõம் இனத்தவர்கள் இயல்பாகவே இதனால் கிளர்ந்தெழுந்தனர். ஆங்கிலேய ஆட்சி காலத்திலேயே அஸ்ஸாம் மொழிக்கான போராட்டம் துவங்கியது. 1983ல் நீதிமன்றங்களிலும், பள்ளிக்கூடங்களிலும் அஸ்ஸõம் மொழியை உபயோகிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அமெரிக்க கிறிஸ்தவ மிஷனரிகளின் அழுத்தமே அதற்கு முக்கிய காரணம்.
கிழக்கு வங்காளத்தில் உயர்சாதி நிலக்கிழார்களின் கொடுமைகளை சகிக்க முடியாமல் ஏராளமானோர் அஸ்ஸாமில் குடியேறியிருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்களாவர். அவர்கள்தாம் யாரும் உபயோகிக்காத நிலத்தை விவசாய நிலமாக மாற்றினார்கள். அதற்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றபோது ஆங்கிலேய அரசு அஸ்ஸாமிகளுக்கும், வங்காளிகளுக்கும் நிலப்பகுதிகளை ஒதுக்கீடு செய்தனர்.
சுதந்திரப் போராட்டக்களத்தில் இருந்த இந்திய தேசிய காங்கிரசும், முஸ்லிம் லீக்கும் 1930களில் அஸ்ஸாம் பகுதியில் செல்வாக்கை பெற்றிருந்தனர். இதன் மூலம் சமூக பிளவு வலுப்பெற்றது. இந்துக்கள் காங்கிரஸின் சக்தி என்றால் முஸ்லிம்கள் லீக்கை ஆதரித்தார்கள்.
1946ல் இப்பிரிவினை மோதலுக்கு வழி வகுத்தது. கேபினட் மிஷன் வந்தபோது அஸ்ஸாம் கிழக்கு வங்காளத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 1947ல் மக்கள் விருப்ப வாக்கெடுப்பின் மூலம் சில்ஹட், கிழக்கு பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது.
சுதந்திரத்திற்கு பிறகு வகுப்புவாத பிரிவினைகள் தணிந்தன. வங்காளிகளுக்கு அஸ்ஸாமிய மொழி பேசுவது எளிதாக இருந்ததால், படிப்படியாக குடியேற்றக்காரர்கள், உள்ளூர்வாசிகள் என்ற வேறுபாடு மறைந்தது.
பிரிவினைக்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் குடியேறிய வங்காள இந்துக்கள், அஸ்ஸாமின் சமூகச் சூழல் மீண்டும் சீர்கெட காரணமாயினர். முஸ்லிம் குடியேற்றக்காரர்கள், வெளிநாட்டினராகவும், இந்து குடியேற்றக்காரர்கள் அகதிகளாகவும் மாறிய பாரபட்சமான அரசியல் நடைமுறை அஸ்ஸாமில் மீண்டும் மோதலுக்கு வித்திட்டது.
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி, பிரிவினையை மூலதனமாக கொண்டது என்ற குற்றச்சõட்டு அன்றே வலுப்பெற்றிருந்தது. கிழக்கு பாகிஸ்தானில் இருந்து குடியேறியவர்களில் இந்துக்களும், முஸ்லிம்களும் அதிகம் இருந்தனர் என்பதுதான் உண்மையாகும்.
அஸ்ஸாமி மொழியை அதிகாரப்பூர்வ மொழியாக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் 1960களில் பழங்குடியினர் மத்தியிலும், வங்காளிகளுக்கிடையேயும் பெரும் கொந்தளிப்பிற்கு வழி வகுத்தது. அன்று அஸ்ஸாமி மொழிக்காக போராடிய அஸ்ஸாம் இலக்கிய அவையின் தலைவர்களுக்கு வங்காள இந்துக்கள்தாம் முக்கிய எதிரிகள். அஸ்ஸாம் மொழிக்கான போராட்டமே பின்னர் பழங்குடியினர் செல்வாக்கு பெற்ற மேகாலயா போன்ற மாநிலங்கள் உருவாக காரணமாகும்.
70களின் இறுதியில் மொழி மற்றும் புவிப் பிரதேசத்தின் அடிப்படையிலான போராட்டம் மதரீதியான பிரிவினையாக திசை மாறியது. இதற்கு முக்கிய காரணம், காங்கிரஸ் கட்சியில் இருந்த உயர்சாதியினர். ஆர்.எஸ்.எஸ்.ஸின் சுயம் சேவகர்கள் வடகிழக்கு பகுதியை மையமாக கொண்டு செயல்படத்துவங்கியது பிரிவினைக்கு வலுவூட்டியது.
அஸ்ஸாம் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் இருந்து இளைஞர்களை தேர்ந்தெடுத்து மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் பல்வேறு இளைஞர் மையங்களில் பயிற்சி அளிப்பது தொடர்பாக எம்.எஸ். கோல்வால்கர் தனது ‘Bunch of thoughts” (தமிழில் ஞான கங்கை)ல் குறிப்பிட்டுள்ளார். வனவாசி கல்யாண் ஆசிரமம் போன்ற அமைப்புகள் அவர்களை இந்துக்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டன.
3
வெளிநாட்டு குடிமக்கள் என்ற அஸ்ஸாம் ஸ்டூடண்ட்ஸ் யூனியனின் பிரச்சாரம், குறுகிய உணர்ச்சிகளுக்கு எரியூட்டியது. வெளிநாட்டினர் பிரச்சனையை கிளப்பியபோது அஸ்ஸாம் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் தாங்கள் முற்றிலும் மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொண்டனர். எனினும், அடிப்படையற்ற குற்றச்சõட்டுகளை அவர்கள் எழுப்பினர். இதனால், யாரையும் எதிரிகளாக மாற்றும் சூழல் உருவானது. தொப்பி, தாடி மற்றும் லுங்கி அணியும் முஸ்லிம்கள் அடையாள மயமாக்கலுக்கு பொருத்தமானவர்களாக இருந்தனர்.
1962ம் ஆண்டு சீனா தாக்குதல் நடத்தியபோது பல இடங்களிலும் வெளிநாட்டினர் சீன இராணுவத்தை வரவேற்க காத்திருந்ததாக அஸ்ஸாம் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் 1980இல் வெளியிட்ட ஒரு கட்டுரையில் தெரிவித்துள்ளது. குவஹாத்தி பல்கலைக்கழக ஆசிரியர்கள் அசோசியேசனின் பெயரால் பிரசுரிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களிலும் பிரிவினையை வலுப்படுத்தும் குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தன.
அஸ்ஸாம் ஸ்டூடண்ட்ஸ் யூனியனும், பின்னர் உருவான அஸ்ஸாம் கனபரிஷத்தும் நகரவாசிகளான உயர்சாதியினரின் கட்டுப்பாட்டில் இருந்தன. அவர்கள் தங்களது பிரிவினை அரசியல் நடவடிக்கைகளுக்கு பழங்குடியினரையும் பங்காளிகளாக்க நிலப்பிரச்சனையை கிளப்பினர். விவசாயிகளில் பெரும்பாலோர் வங்காள முஸ்லிம்கள் என்பதால், அவர்கள் கைவசமிருந்த நிலங்கள், பழங்குடியினத்தவருக்குரியது என்ற எண்ணத்தை பரப்புரை செய்வது எளிதானது.
அஸ்ஸாம் பள்ளத்தாக்கில் போடோக்களும், திவாக்களும் அத்தகையதொரு தீய பிரச்சாரத்திற்கு எளிதில் பலியானற்கு பாசிசத்தின் இத்திட்டம் காரணமாக இருந்திருக்கலாம். போடோக்கள் மற்றும் திவாக்களின் பிதாமஹ பூஜையும், அதனோடு இணைந்த சடங்குகளையும் இந்துமயமாக்குவதற்கான முயற்சிகளும் அத்தோடு சேர்த்து நடைபெற்றன. எத்தகைய வழிபாட்டு முறைகளையும் இந்து சமயத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதில் இந்துத்துவ சக்திகள் திறமை வாய்ந்தவர்கள்.
1983ம் ஆண்டு அஸ்ஸாம் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் வெளியிட்ட ஒரு துண்டு பிரசுரத்தில் பழங்குடியினர் அழிவின் விளிம்பில் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. நிலங்களை இழந்ததே அதற்கு காரணம். ஆனால், பழங்குடியினர் தங்களது நிலங்களை இழந்ததற்கு முக்கிய காரணம் கொடிய வட்டிக்கு கடன் கொடுத்த மார்வாடி பணக்காரர்களே என்று ஜி.சி. சர்மா தாக்கூர் சுட்டிகாட்டுகிறார். (G.C Sharma thakur:Land Alienation and indebtedness in the ITDP areas of assam TRI Assam.Guwahati 1986).
4
பல வேளைகளில் வனங்களை ஆக்கிரமித்த போடோக்களை சட்டரீதியாக வெளியேற்றிய அரசு, அங்கெல்லாம் அஸ்ஸாமிகளை குடியமர்த்தியதை அஸ்ஸாம் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் மறந்துவிட்டது. முஸ்லிம் விவசாயிகள் அன்னியர்கள் என்ற கருத்தை பரப்புரை செய்ததில் அஸ்ஸாம் ஸ்டூடண்ட்ஸ் யூனியனின் பங்கு முக்கியமானது. 1977ம் ஆண்டு வரை அஸ்ஸாம் வம்சா வழியினருக்கும், வங்காள முஸ்லிம்களுக்கும் இடையே நீடித்த நல்லுறவு இத்தோடு தகர்ந்துவிட்டது என்று அமெரிக்க அரசியல் அறிவியலாளர் மைரோன் வெய்னர் கூறுகிறார். (Myron weiner: sons of soil, prinecton,New Jersey 1978)
 வங்காள மொழியை கைவிடத் தயங்கிய இந்து வங்காளி மத்திய தர வர்க்கத்தின் தலையீடு அதற்கு காரணமாக இருக்கலாம். சங்பரிவாரத்தின் வலையில் அவர்கள் எளிதில் சிக்கி விடுவதால் தங்கள் மீதான துவேஷத்தை திசை திருப்ப புதிய பகைமை அவர்களுக்கு உதவியது. உயர்சாதி நிலக்கிழார்களின் குடியானவர்கள் முஸ்லிம்கள் என்பதால் இரு சாராருக்கிடையே அதிருப்தி வளர்ந்து வந்தது. மத்திய வர்க்க வங்காளிகள் எண்ணிக்கையில் குறைந்தது அவர்களது கவலையை அதிகரிக்கச் செய்தது.
குடியேற்றக்காரர்களில்
சோட்டா நாக்பூர் பகுதியில் இருந்து வந்த தோட்டத் தொழிலாளர்களும், இந்தி பேசும் நேபாளிகளும் இருந்த போதிலும் அன்னியமயமாக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் பிரதானமாக முஸ்லிம் வங்காளிகள் ஆவர். சூழ்நிலை மற்றும் புள்ளி விபரங்களின் பின்புலம் இல்லாத பிரச்சாரமே இனப்படுகொலையை நோக்கி நகர்த்தியது.
வங்காள வம்சாவழியைச் சார்ந்த மக்கள்தொகை நிபுணர் சுசாந்தா கிருஷ்ணதாஸ் 1951ம் ஆண்டிற்கு பிறகு அஸ்ஸாம் பிராந்தியத்தில் மக்கள்தொகை பெருக மூன்று காரணங்களை சுட்டிக்காட்டுகிறார். (Myron weiner: sons of soil, prinecton,New Jersey 1978) 1. இயல்பான வளர்ச்சி 2. கிழக்கு பாகிஸ்தானில் இருந்து இந்துக்களின் குடியேற்றம் 3. இந்தியாவின் இதர பகுதிகளில் இருந்து குடியேற்றம்.  முஸ்லிம்கள் பெருமளவில் ஆக்கிரமித்துள்ளார்கள் என்ற கூற்றை புள்ளி விபரங்கள்  மறுப்பதõக தாஸ் உறுதியாக கூறுகிறார்.
மற்றுமொரு வங்காள எழுத்தாளர் அமலேந்து குஹா, அன்னியர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் 13 லட்சத்தை தாண்ட மாட்டார்கள் என்று சுட்டிக்காட்டுகிறார். (Amalendu Guha:Planter Raj to swaraj:freedom struggle and Electoral politics in Assam,ICHR New Delhi 1977) அஸ்ஸாம் கலாச்சாரத்தோடு கலந்து வாழ்வதில் முன்னணியில் இருப்பவர்கள் முஸ்லிம்கள் என்றும் அமலேந்து குஹா தெளிவுபடுத்துகிறார். ஆனால், அஸ்ஸாம் இனவாதிகள், 45 லட்சம் அன்னியர்கள் இருப்பதாக பரப்புரைச் செய்தனர்.
ஆத்திரமூட்டிய தேர்தல்
1983ம் ஆண்டு துவக்கத்தில் அஸ்ஸாம் சட்டப்பேரவைக்கும், நாடாளுமன்ற தொகுதிகளுக்கும்  தேர்தல் அறிவித்தது அஸ்ஸாம் கிளர்ச்சியாளர்களுக்கு மிகப்பெரிய தூண்டுகோலாக அமைந்தது. 1983 ஜனவரியில் போராட்டத்திற்கு தலைமை வகித்த பிரபல குமார் மஹந்தாவும், பிறகு புகானும் கைது செய்யப்பட்டனர். பொதுத் தேர்தலை புறக்கணிக்க அஸ்ஸõம் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் அழைப்பு விடுத்தது.
இதனைத்தொடர்ந்து ஏராளமான வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. குண்டுவெடிப்புகள், ஆட்கடத்தல், தொடர்ச்சியான சõலைமறியல், கிளர்ச்சிப் போராட்டங்கள் நடந்ததாக நெல்லி கூட்டுப்படுகொலையைக் குறித்து விசாரணை நடத்திய திவாரி கமிஷன் பதிவு செய்துள்ளது. கமிஷன் அறிக்கையில் முழு வடிவத்தையும் அரசு இதுவரை வெளியிடவில்லை.
தலைநகரான குவஹாத்தியில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள நெல்லி உள்ளிட்ட பிரதேசங்கள் விவசாய கிராமங்களாகும். ஆளிவிதையும், நெல்லும் அங்கு முக்கிய விவசாயமாகும். கிராமவாசிகளில் பெரும்பாலோர் முஸ்லிம்கள். எனினும் திவா  கோச் பழங்குயினரும், அஸ்ஸாம் இந்துக்களும் கணிசமாக உள்ளனர். இந்துக்களில் பெரும்பாலோர் தலித்களாவர்.
தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள கிராமத்தில் நடைபெறும் வாரச் சந்தையில்
விவசõயப் பொருட்கள் விற்பனையாகும். அருகில் உள்ள மலைக்குன்று பகுதிகளில் இருந்து திவா பழங்குயினர் வாரச் சந்தையில் பொருட்கள் பரிவர்த்தனைக்காக வருவார்கள். நெல்லியில் இருந்து 10 கி.மீ வடக்கே உள்ள முஸ்லிம் வசிப்பிடங்களில் தான் கூட்டுப்படுகொலைகள் நடந்தேறின.
1983 பிப்ரவரி 18 வெள்ளிக்கிழமை மிகவும் திட்டமிட்டே கூட்டுப்படுகொலைகள் நடந்தன. வெளியில் உள்ள ஏஜென்சிகளின் தலையீடு மூலமாக இனப்படுகொலை கட்டமைக்கப்பட்ட முறையில் இராணுவ ரீதியான கட்டுப்பாட்டுடன் நடந்தேறியது. வன்முறையாளர்கள் கிராமங்களை சுற்றி வளைத்து முதலில் வீடுகளை தீக்கிரையாக்கினார்கள். கிராமவாசிகள் அபயம் தேட எந்தவொரு கட்டிடமும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே கொலைக்காரர்கள் மூன்று ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை கொலை செய்தனர். அம்பு, வில், கோடாரிகள்தாம் முக்கிய ஆயுதங்கள்.
அஸ்ஸõம் ஸ்டூடண்ட்ஸ் யூனியனுக்கு கூட்டுப்படுகொலையில் உள்ள பங்கினை குறித்து 1983 ஏப்ரல் 10ம் தேதி அன்றைய அஸ்ஸாம் முதல்வர் ஹிதேஷ்வர் ஸைக்கியா சில ஆவணங்களை வெளியிட்டிருந்தார். சிறுபான்மை சமூகத்தை குறித்த அவர்களின் யதார்த்த நிலைப்பாட்டை தெளிவுப்படுத்துவதாக அந்த ஆவணங்கள் அமைந்தன. பத்திரிகையாளரான பார்த்தா பானர்ஜி அஸ்ஸாம் ஸ்டூடண்ட்ஸ் யூனியனின் தலைவர் ஜெய்நாத் சர்மாவுக்கு ஆர்.எஸ்.எஸ். உடனான நெருக்கமான தொடர்பை குறித்து குறிப்பிட்டுள்ளார்.
 சிவஜாருக்கு அருகே முஸ்லிம்களை தாக்குவதற்கு அஸ்ஸாம் வம்சாவழியினருக்கு தலைமை வகித்தவர் ஜெய்நாத்தின் சகோதரரான தயா சர்மா ஆவார். (இந்தியா டுடே, மார்ச்  31, 1983). தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக முஸ்லிம் கிராமங்களின் வரைபடம் தயாரித்ததன் பின்னணியில் கலவரம் நடத்துவதையே வழக்கமாக கொண்ட சங்பரிவாரத்தின் மூளை செயல்பட்டதை உணரலாம்.
ஆறு மணிநேரத்தில் மூவாயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியர் சேகர் குப்தா இவ்வாறு விவரிக்கிறார். ஒரு துண்டு துணியால் மார்புகளை மறைத்திருந்த ஒரு பெண்மணி விடாமல் அழுது கொண்டிருந்தார். அவளுடைய மார்பகங்களில் ஆழமான காயங்கள். ஆறுமாதம் கர்ப்பிணியாக இருந்த அவருடைய மறைவான பகுதிகளில் அக்கிரமக்காரர்கள் ஈட்டியை குத்தியிருந்தனர். அவரை கடுமையாக காயப்படுத்திய பிறகு வன்முறையாளர்கள் அவ்விடத்தை விட்டு அகன்றனர். இரண்டு வயதேயான தனது குழந்தையை அந்த கொடூரர்கள் கண்டந்துண்டமாக வெட்டியதால் அவர் துயரத்தால் துவண்டு போயிருந்தார். நேரடி சாட்சியான ஹனான்: “அவர்கள் குழந்தையின் கால்களை இழுத்து எறிந்தனர். ஏன் அவர்கள் மரணிக்கவில்லை?” என்று கேட்கிறார். (Shekhar Gupta:Assam:A valley Divided ,Vikas New Delhi 1984). கற்களில் பொறித்தது போன்ற முஹம்மது தமீமுத்தீனின் நினைவுகள்: (பிப்ரவரி 18) காலை 8 மணிக்கும் மாலை 3 மணிக்கும் கோடாரிகள், நாட்டு துப்பாக்கிகள், லத்தி, ஈட்டிகள் சகிதமாக அவர்கள் எங்களை சுற்றி வளைத்தார்கள். முதலில் அவர்கள் குடிசைகளுக்கு தீவைத்தார்கள். பின்னர் திட்டமிட்டபடி கொலை செய்யத் துவங்கினர். எனது கிராமமான பசுந்தரியில் 1819 பேர் கொல்லப்பட்டனர். நானும், எனது சகோதரர் நூர்தீனும் ஒரு குளத்தில் ஒளிந்திருந்தோம். எனது குடும்பத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
ராபிஆ பேகம் வீட்டு திண்ணையில் 17 மாதமே ஆன குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருக்கும் போது கொலைக்காரர்கள் வந்தனர். குழந்தைகள் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். கணவர் சாந்த் அலி வீட்டிற்கு பின்னால் ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தார். திடீரென குழந்தைகள் ஓடி வந்து பயந்தவாறு அம்மாவை சுற்றி நின்றனர். அவர்கள் முன்னால் கத்தி, பெட்ரோல், திரிசூலம் மற்றும் வாளுடன் ஒரு கும்பல் நின்று கொண்டிருந்தது. அவர்கள் திடீரென மூன்று குழுக்களாக பிரிந்தனர். ஒரு கும்பல் சாந்த் அலியை நோக்கி ஓடியது. இன்னொரு கும்பல் வீட்டை தீவைத்துக் கொளுத்தியது. மூன்றாவது கும்பல் தாயையும், குழந்தைகளையும் சரமாரியாக வெட்டி நொறுக்கினர். சாந்த் அலியின் முதுகில் திரிசூலத்தை எறிந்து கொலை செய்தனர்.  (Diganta Sharma Nellie,1983 Jorhat 2007)               

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...