நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் நிர்வாக வசதிக்காக, நாங்கள் நிர்மானித்த பள்ளிவாசல்களுக்கு எண்கள் வழங்கப்பட்டது.
நான் பாஸ்டன் நகரில் உருவாக்கிய மசூதியின் எண் 11. ஏறக்குறைய பாஸ்டனில் நான் ஆறு மாதங்கள் தங்கி, இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொண்டு பள்ளிவாசலை உருவாக்கினேன். 1954-ம் ஆண்டு மார்ச் மாதம், பிலடெல்பியா பகுதிக்குச் செல்லுமாறு தலைவர் எலிஜா முஹம்மது எனக்கு கட்டளையிட்டார்.
பாஸ்டனைப் போல அல்லாமல், பிலடெல்பியா பகுதி கறுப்பர்கள் விரைவிலேயே என்னுடைய பிரச்சாரத்திற்கு பதில் அளித்தனர். வெள்ளையர்களின் வரலாற்றுத் துரோகத்தை புரிந்து கொண்ட அவர்கள், இஸ்லாம்தான் கறுப்பர்களின் பூர்வீக மதம் என்பதையும் உணர்ந்து கொண்டனர். மே மாத இறுதிக்குள் பிலடெல்பியாவில் 12-ம் எண் பள்ளிவாசலை உருவாக்கினேன்.
என்னுடைய ஓய்வு ஒழிச்சல் இல்லாத இஸ்லாமிய அழைப்புப் பணியின் வேகத்தைப் பார்த்த தலைவர் எலிஜா முஹம்மது, என்னை நியூயார்க் நகரத்திற்கு செல்லுமாறு பணித்தார்.
அமெரிக்காவின் அடையாளமாக நியூயார்க் நகரைச் சொல்லலாம். கல்வி, கலை, கலாச்சாரம் ஆகியவற்றில் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் பிரதிபலிக்கும் நகரம்தான் நியூயார்க். அதேபோல அமெரிக்கச் சமூகத்தின் ஏற்றத்தாழ்வை பிரதிபலிக்கும் நகரமும் நியூயார்க்தான். உலகின் சோபைகள் அனைத்தும் நியூயார்க் நகரை அழகுபடுத்தினாலும், அந்த நகரின் கழிவறை போல சோபையற்று கிடக்கும் பகுதி ஹார்லெம்.
அதிர்ச்சி திருப்பங்களைக் கொண்ட ஒரு திரைப்படத்தைப் போல என் வாழ்க்கை நிகழ்வுகள் அமைகின்றன, அல்லாஹ்வின் நாட்டத்தால்…
நான் ஷைத்தானாக அலைந்து திரிந்த நரகம் ஒன்றில் இருந்து வெளி வந்து முஸ்லிமாக மாறி, மீண்டும் அதே நரகத்திற்கு -& பாஸ்டனுக்கு – இஸ்லாத்தைப் பற்றி பிரச்சாரம் செய்யச் சென்றது போல, இப்போது நான் உழன்ற இன்னொரு நரகத்திற்கு- ஹார்லெம்முக்கு -& வந்திருக்கிறேன். இங்கேயும் இஸ்லாமியப் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன். அதற்கு முன்பாக, என் பழைய நண்பர்களைத் தேடி அலைந்தேன்.
கௌரவமான தொழில், வீடு, குடும்பம் என இருந்தவர்களை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து விடலாம். ஆனால் அடியாளாக, ரவுடிகளாக வலம் வந்தவர்கள் எதிராளிகளின் தாக்குதலால் இறந்து விடுகிறார்கள் அல்லது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள் அல்லது உடல் நலிந்து எந்த வேலையும் தெரியாதவர்களாக, எந்த வேலையையும் செய்ய முடியாதவர்களாக முடங்கி விடுகிறார்கள். கறுப்பர்களின் வாழ்க்கையை வெள்ளைச் சமூகம் இப்படித்தான் சூறையாடி வருகிறது.
பாஸ்டன் நகரில் ஷார்ட்டி போல, ஹார்லெம் வீதிகளில் என்னுடன் சுற்றித் திரிந்தவர் சேமி மாமா. அவரைப் பற்றி விசாரித்த போது சோகமான தகவலே எனக்கு கிடைத்தது. ஒழுக்கம் தவறிய இளம் பெண்ணை திருமணம் முடித்திருந்த அவர், மர்மமான முறையில் இறந்து விட்டதாக கேள்விப்பட்டு வருத்தப்பட்டேன்.
வெஸ்ட் இண்டீஸ் ஆர்ச்சியை தேடினேன். லாட்டரிச் சீட்டு கடைகளிலும் மது விடுதிகளிலும் ஏறி இறங்கினேன். அவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. வெஸ்ட் இண்டீஸ் ஆர்ச்சி இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க, தெருக்களில் திரிந்த சிலருக்கு பணம் தந்து, தகவல் தரச் சொல்லியிருந்தேன். வெஸ்ட் இண்டீஸ் ஆர்ச்சி ப்ரான்க்ஸ் பகுதியில் இருப்பதாக, வயதான சுகாதாரத் தொழிலாளி ஒருவர் தகவல் தந்தார்.
அவருடைய வீட்டிற்குச் சென்றேன். பலவீனமான நிலையில் இருந்த அவர், என்னைப் பார்த்து சில நொடிகளில் அடையாளம் கண்டு கொண்டார்.
‘ரெட்… எப்படி இருக்க… எவ்வளவு நாளாச்சி உன்னப் பார்த்து… எப்படி… எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா உன்னப் பார்த்ததுல…’
கட்டியணைத்துக் கொண்டேன். கைத்தாங்கலாக அவரை படுக்கைக்கு அழைத்துச் சென்றேன்.
‘எப்போதுமே எனக்கு உன்னைப் பிடிக்கும் ரெட்…’
‘நீங்க என்னைச் சுடுறதுக்கு துப்பாக்கியோட துரத்தினத நினைச்சா இப்பவும் நடுக்கமா இருக்கு…உண்மையிலேயே நான் ஏமாத்தல… லாட்டரில எனக்குத்தான் பணம் விழுந்துச்சி…’
‘ஆமா ரெட்… நீ தப்பு பண்ணியிருந்தா என்னை எதிர்த்திருப்பியா… அத நெனச்சி பின்னாடி நான் ஃபீல் பண்ணினேன். சரி அத விடு… அத நெனச்சி இப்ப என்ன பயன்?’
‘நீங்க அன்னிக்கு என்னை துரத்தலன்னா, இன்னிக்கு நான் மனுசனா மாறியிருக்க முடியாது. உங்களுக்கு பயந்துக்கிட்டு, ஹார்லெம்ம விட்டுப் போனதுனாலதான் எனக்கு இஸ்லாம் அறிமுகமானிச்சி… நான் முஸ்லிமாயிட்டேன்..’
வெஸ்ட் இண்டீஸ் ஆர்ச்சிக்கு இஸ்லாத்தைப் பற்றியும், நேஷன் ஆஃப் இஸ்லாம் பற்றியும் அறிமுகப்படுத்தினேன்.
‘நம்ம மாதிரி தெருவுல சுற்றித் திரிஞ்சவங்கல்லாம், இந்த வெள்ளைச் சமூகத்துக்கு பலியாகிப் போனவங்கதானே…
‘நான் ஜெயில்ல இருக்கும் போது, உங்க திறமையை நினைச்சுப் பார்ப்பேன்… எவ்வளவு பேருக்கு பரிசு விழும் போது, அந்த நம்பரையெல்லாம் எப்படி ஞாபகம் வச்சிருப்பீங்க… உங்களுக்கு இருந்த மூளைக்கு கணக்கோ இல்ல சையின்ஸோ நீங்க படிச்சிருந்தீங்கன்னா, எவ்வளவு பெரிய ஆளா இருந்திருப்பீங்க…’
‘ரெட்… நீ சொல்றது யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம்தான்…’ கறுப்பர்களின் இயலாமையை எண்ணி பெருமூச்சு விட்டோம்.
அவருக்கு கொஞ்சம் பணம் கொடுத்து, உடம்பைக் கவனித்து கொள்ளுமாறு சொல்லிவிட்டு கிளம்பினேன்.
——————ஹார்லெம் நகரில், கறுப்பர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த ஏராளமான கறுப்பின தேசியவாதக் குழுக்கள் செயல்பட்டு வந்தன. எங்கள் அமைப்பின் வளர்ச்சிக்கு இந்தக் குழுக்களே பெரும் தடையாக இருந்தன. இந்தத் தடையை உடைக்கும் விதமாக, சில பிரசுரங்களை அச்சடித்துக் கொண்டு, நானும் அமைப்புச் சகோதரர்கள் சிலரும் ஹார்லெம் வீதிகளில் சுற்றித் திரிந்து கறுப்பர்களை அழைத்தோம்.
‘கறுப்பர்களை எப்படி வெள்ளையர்கள் கடத்தி வந்தார்கள்?’
‘கறுப்பர்கள் எப்போது, எப்படி அடிமையாக்கப்பட்டார்கள்?’
‘நம் இனப் பெண்களை கற்பழித்தவர்களுக்கு என்ன தண்டனை?’
‘அறிந்து கொள்ள இந்தப் பிரசுரங்களை படியுங்கள்’ என்று அவர்களின் கவனத்தைக் கவரும் வகையில் பிரச்சாரம் செய்தோம்.
அடுத்ததாக, கறுப்பினத் தேசியவாதக் குழுக்கள், குடியுரிமை அமைப்புகள் நடத்திய கூட்டங்களுக்குச் சென்று, அங்கு வந்திருந்தவர்களுக்கு பிரசுரங்களைக் கொடுத்து, கூட்டத்துக்கு அழைத்தோம்.
இப்படியாக ‘ஆள் பிடித்து’ கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர்த்து, ஹார்லெம் நகர கறுப்பர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தினோம். இருந்தாலும், எனக்கு திருப்தி இல்லை. இன்னும் இன்னும் ஆட்களை இயக்கத்தில் சேர்ப்பது குறித்து சிந்தித்தேன்.
ஹார்லெம் நகரின் 7-ம் எண் பள்ளிவாசலில் நடைபெற்ற கூட்டங்களில் சிலர் கலந்து கொள்வதை கவனித்தேன். ஆன்மிக தேடலில் ஆர்வம் காட்டியவர்கள்தான் அவர்கள். எனக்கு ஒரு சிந்தனை உதித்தது.
தேவாலயங்களுக்குச் செல்லும் கறுப்பர்களைச் சந்தித்து, நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பு நடத்தும் கூட்டங்களில் கலந்து கொள்ள அழைப்பு விடுப்பது என திட்டமிட்டேன். அதுவும் பகட்டாக வாழ முயலும் கறுப்பர்கள் செல்லும் சர்ச்களுக்குச் செல்லாமல், சாதாரண கறுப்பர்கள் செல்லும் தேவாலயங்களுக்குச் சென்று அழைப்பு விடுத்தோம். ‘ஆள் பிடிக்கும்’ இந்த செயல்முறை நிறைந்த பலனைத் தந்தது. 7-ம் எண் பள்ளிவாசலில் ஓரளவுக்கு கூட்டம் கூடியது.
‘சகோதர, சகோதரிகளே… உங்களால் என் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைக்க முடியாது.’ என் பேச்சை இப்படி ஆரம்பித்ததும், ஆச்சரியமாகப் பார்த்தனர்.
‘ஆமாம்… சிறுவயதிலேயே என் கண்களில் இருந்த கண்ணீரெல்லாம் வற்றி விட்டது. அதற்கு காரணம் கிறிஸ்தவம்தான்… நான் உங்களை ஒன்று கேட்கிறேன். உங்களுடைய நிறம் என்ன? நீங்கள் கடவுளாக வணங்கும் ஜீஸஸின் நிறம் என்ன?’
அவர்களின் ஆர்வத்தைத் தூண்டினேன்.
‘வெள்ளை நிற தலைமுடியும் நீல நிறக் கண்களும் உங்களுக்கு இருக்கிறதா… ஆனால் ஜீஸஸுக்கும் வெள்ளையர்களுக்கும் இருக்கிறதே?
‘உங்களிடம் ஒன்று கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கூட்டம் முடிந்ததும் நீங்கள் உங்கள் வீட்டிற்குச் சென்று, உங்கள் வீடு, சுற்று முற்றும் பாருங்கள். அதே போல உங்கள் அருகில் இருக்கும் வீடுகளையும் சூழலையும் பாருங்கள். அப்படியே கிளம்பி, வெள்ளையர்கள் இருக்கும் பகுதிக்கு வாருங்கள். அங்கு எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள். சாக்கடையும் குப்பைக் கூளங்களும் நிறைந்த கறுப்பர்களின் சேரிகளோடு ஒப்பிடும் போது, வெள்ளையர்கள் வசிக்கும் பகுதி எப்படி வளமாக இருக்கிறது என்பதைப் பாருங்கள். பார்த்து பிரமித்து விட்டு, அப்படியே நின்று விடாதீர்கள். அங்கு காவலுக்கு நிற்கும் செக்யூரிட்டி உங்களை ரொம்ப நேரம் அங்கு நிற்க விடமாட்டார்.
‘இந்த வளங்களையெல்லாம் நாம் எங்கு பெற வேண்டும் என்று நமக்கு சர்ச்-சும் வெள்ளையர்களும் போதிக்கிறார்களா?’ கேள்வியைக் கேட்டு அவர்களின் முகங்களைப் பார்த்தேன். முழித்தார்கள்.
‘வெள்ளையர்கள் இந்த உலகத்தில் வசதியாக வாழ்வார்கள். ஆனால் நாம் இந்த வசதிகளையெல்லாம் இங்கு அனுபவிக்கக்கூடாது. சொர்க்கத்தில்தான் அனுபவிக்க வேண்டும் என்று…’ நான் வார்த்தைகளை முடிப்பதற்குள் அவர்களே, ‘ஆமாம்… சர்ச்சில் இப்படித்தான் சொல்கிறார்கள்’ என்று ஆமோதித்தனர்.
இப்படி அவர்களின் கவனத்தை நிலைநிறுத்திய பின், இஸ்லாம் மற்றும் நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பைப் பற்றி எடுத்துக் கூறி விட்டு, எலிஜா முஹம்மதுவை பின்பற்ற விருப்பம் உள்ளவர்கள் எழுந்து நிற்கலாம் என்பேன். வழக்கம் போல சொற்ப நபர்களே எழுந்து நின்றனர்.
‘நமக்காக ஏதாவது செய்ய நாமே முன்வராத வரையில், சுதந்திரத்தையும் நீதியையும் நம்மால் வெல்லவே முடியாது’ என்று கூட்டத்தை முடித்தேன்.
ஹார்லெம் நகரில் இருந்த ஏழாம் எண் பள்ளிவாசல் உறுப்பினர்களின் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரித்தது. வாரம்தோறும் புதன்கிழமை, ஏற்கனவே நான் உருவாக்கிய பிலடெல்ஃபியா பகுதி 12-ம் எண் பள்ளிவாசலுக்குச் சென்று உரை நிகழ்த்தினேன்.
‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என் கரத்தைப் பற்றிக் குலுக்கினார், சிறையில் என்னிடம் இஸ்லாம் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்ட ஓஸ்பேர்ன்.
‘வ அலைக்குமுஸ்ஸலாம். எப்படி இருக்கீங்க…’
‘நான் இப்ப மசாசூசெட்டஸ் மாகாணம் ஸ்பிரிங்ஃபீல்ட் பகுதியில் இருக்கிறேன். அங்கு பிரச்சாரத்துக்கு வர முடியுமா?’ உடனடியாக ஒப்புக் கொண்டேன். விரைவிலேயே சகோதரர் ஓஸ்பேர்ன் உதவியோடு, ஸ்பிரிங்கஃபீல்ட் பகுதியில் 13-ம் எண் பள்ளிவாசலைத் தொடங்கினோம்.
அந்தக் கூட்டங்களில் கலந்து கொண்ட ஒரு சகோதரி, ஹார்ட்ஃபோர்ட் பகுதிக்கு வர முடியுமா என்று கேட்டார். வீட்டு வேலை செய்பவர்களுக்கு வியாழக்கிழமை விடுமுறை தினமாகும். அவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்த வருமாறு அழைத்தார். அங்கும் சென்று பிரச்சாரம் செய்தேன்.
இதே போல, அட்லாண்டா பகுதியில் சகோதரர் ஜேம்ஸ் எக்ஸ் மூலம், இஸ்லாமிய பிரச்சாரப் பணியைத் தொடங்கினோம். அங்கு பிரச்சாரம் செய்ய வாடகைக்கு கிடைத்த ஒரே இடம் ஈமச்சடங்கு நடைபெறும் அரங்குதான். அங்கு ஈமச்சடங்குக்கு வந்தவர்களும் எங்கள் கூட்டங்களில் கலந்து கொண்டது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
இப்படி என்னுடைய இஸ்லாமிய அழைப்புப் பணி இடைவிடாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. அப்போதுதான் அந்தப் பெண் என் வாழ்க்கையில் குறுக்கிட்டாள்.
No comments:
Post a Comment