இந்திய
நீதியமைப்பில் கீழமை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம்
என மூன்றடுக்கு மேல்முறையீடு செய்யும் முறை இருந்து வருகிறது.
குற்ற, சிவில்
வழக்குகள் கீழமை நீதிமன்றங்களின் விசாரணை வரம்பில் உள்ளவை.
சட்டங்கள், அரசியலமைப்பு
தொடர்பான விஷயங்களை உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும்
விசாரிக்க முடியும்
அரசியலமைப்பு தொடர்பான மிகவும் சிக்கலான கேள்விகளுக்கு
உச்சநீதிமன்றம் சொல்வதே இறுதித் தீர்வு. உயர்நீதிமன்றங்களின் உத்தரவுகள்
சமயங்களில் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்படும். பல்வேறு சமயங்களில்
உயர்நீதிமன்றங்கள்,
உச்சநீதிமன்றம்
முரண்பட்டுள்ள சம்பவங்களும் இந்திய வரலாற்றில் நிகழ்ந்துள்ளன.
ஏ.டி.எம் ஜபல்பூர் - எமர்ஜென்சி:
முன்னாள்
பிரதமர் இந்திரா காந்தியால் ஜூன் 25,1975 அன்று
அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அரசியலமைப்புச் சட்டம் செயலிழந்தது. அடிப்படை
உரிமைகள் ரத்து செய்யப்பட்டன. நாடாளுமன்றம் இந்திரா காந்தியின் ரப்பர்
ஸ்டாம்பானது. அரசியல் எதிரிகள் காவல்துறையால் சிறைவைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை மீட்டுத்தரக்கோரி ஆட்கொணர்வு
மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்
ஆட்கொணர்வு தொடுக்கும் உரிமையும் ரத்து செய்யப்பட்டுள்ளது, அதுவும்
அடிப்படை உரிமைகளில் தான் வருகிறது என்று அரசு வாதிட்டது. மக்கள் ஆட்கொணர்வு மனு
தொடுக்கும் உரிமையுள்ளதா என பல்வேறு உயர்நீதிமன்றங்களில் வழக்குகள்
தொடுக்கப்பட்டன. அவசர நிலை அமலில் இருந்தாலும் மக்களுக்கு ஆட்கொணர்வு மனு
தொடுக்கிற உரிமை உள்ளது என சென்னை உள்பட ஒன்பது உயர்நீதிமன்றங்கள்
தீர்ப்பளித்திருந்தன.
இந்தத் தீர்ப்புகளை எதிர்த்து மத்திய அரசு
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு
அமர்வு மேல்முறையீட்டை விசாரித்தது. ஏ.டி.எம் ஜபல்பூர் என இந்த வழக்கு
அழைக்கப்பட்டது. இறுதியில் `மக்களுக்கு ஆட்கொணர்வு மனு தொடுக்கிற உரிமை கிடையாது’ என 4 - 1 என்கிற
பெரும்பான்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. எச்.ஆர். கண்ணா மட்டும்
மாறுபட்டு தீர்ப்பளித்தார். ஒன்பது உயர்நீதிமன்றங்களின் உத்தரவுகள்
உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டன. 41 ஆண்டுகள்
கழித்து 2017-ம்
ஆண்டு ஜபல்பூர் வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
சமீபத்திய உதாரணங்கள்:
இதுபோன்று
உயர்நீதிமன்றங்கள்,
உச்சநீதிமன்றத்துடன்
முரண்படுகிற சம்பவங்களை சமீப காலங்களில் நிறைய பார்க்க முடிகிறது.
1.
காஷ்மீர்
மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இணைய, தொலைதொடர்பு சேவைகளும் முடக்கப்பட்டன.
இவற்றை
எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் கையாண்ட விதம் கடும்
விமர்சனத்திற்குள்ளானது. ஹேபியஸ் கார்பஸ் வழக்குகளை விசாரிக்காமல் காலம்
தாழ்த்திவந்தன. இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் இணைய சேவை முடக்கப்பட்டதற்கு
எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஐந்து மாதங்கள் கழித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வழங்கியுள்ளது. அதிலும் தடையை முழுவதுமாக நீக்கவில்லை. ஆனால் அஸ்ஸாமில்
விதிக்கப்பட்ட இணையத் தடையை உடனடியாக நீக்க வேண்டுமென கவுகாத்தி உயர்நீதிமன்றம்
தீர்ப்பளித்தது.
2.
காஷ்மீரில்
அரசியல்வாதிகள் வீட்டுச்சிறை வைக்கப்பட்டதை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
பெங்களூருவில் விதிக்கப்பட்ட ஊரடங்கு (144) தடை
உத்தரவு சட்டப்பூர்வமாக செல்லுமா என கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
ஜாமியா மிலியா,
அலிகர்
முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காவல்துறையினர் ஒடுக்குமுறை எதிர்த்து
தொடுக்கப்பட்ட அவசர வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம்
மறுத்துவிட்டது. வன்முறை நின்றால் வழக்கை விசாரிப்போம் என தலைமை நீதிபதி எஸ்.ஏ.
போப்டே தெரிவித்த கருத்து கடும் விமர்சனத்துக்குள்ளானது.
3.
தற்போது
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகளையும் `வன்முறை
நின்றால்தான் விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம்’ என்று மீண்டும் அதே கருத்தை தெரிவித்துள்ளார்.
ஆனால் `இளைய
தலைமுறையினர் போராடக் கற்றுக்கொடுக்கிறார்கள்’ என்று மும்பை உயர்நீதிமன்றம்
இளைஞர்கள் போராட்டத்துக்கு புகழாரம் சூட்டியிருக்கிறது. `போராட்டங்கள்
என்பது உயிர்ப்புள்ள ஜனநாயகத்தின் இன்றியமையாத அம்சம்’ என சென்னை உயர்நீதிமன்றம்
சமீபத்தில் தெரிவித்துள்ளது.
4.
உச்சநீதிமன்றம்
தற்போது குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாத நிலையில்
கர்நாடகா உயர்நீதிமன்றம் அதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. டெல்லி ஷாஹின் பாக்
பகுதியில் நடைபெற்று வருகிற போராட்டத்துக்குத் தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம்
மறுத்துவிட்டது. இவ்வாறு பல சமயங்களில் உயர்நீதிமன்றங்கள் உச்சநீதிமன்றத்தின்
தவறான நிலைப்பாட்டுக்கு எதிர் நிலைப்பாடு எடுத்துள்ளன.
இதுபற்றி முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் கூறுகையில், ``தலைமை
நீதிபதியின் கருத்தை மத்திய அரசுக்கு கூறியதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கீழமை நீதிமன்றங்களில் உள்ளவர்கள் பெரும்பாலும் பொது மக்களோடு இணைந்தே
இருப்பவர்கள். அதனால் அவர்களின் அணுகுமுறை சில நேரங்களில் மாறுபடுவதுண்டு. ஆனால், உச்சநீதிமன்றத்தில்
இருப்பவர்கள் பொது மக்களிடமிருந்து துண்டிக்கப்பட்டவர்களைப் போன்றுதான்
இருக்கின்றனர். அதனால்தான் பெரும்பாலும் அவர்களின் கருத்துகள் இதுபோன்று உள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை
உச்சநீதிமன்றத்துக்கு இருக்கிறது. ஆனால் பெரும்பாலான சமயங்கள் உயர்நீதிமன்றங்கள்
போன்ற கீழமை நீதிமன்றங்கள்தான் அரசியலமைப்பை, மக்களின்
அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னணியில் இருந்திருக்கின்றன. இதற்கு
நெருக்கடியும் ஒரு காரணம். மத்தியில் எந்த அரசு பலமாக இருந்தாலும் நீதித்துறையின்
செயல்பாடு இப்படித்தான் இருக்கும். நெருக்கடி நிலை காலத்தில் அப்படித்தான்
இருந்தது. தற்போதும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைதான் நிலவுகிறது” என்றார்.
No comments:
Post a Comment