இன்றைய ஆலிம்களின் நிலை
நபிமார்களின் வாரிசுகளான நபிமார்களின் நிலை இன்று பல விடயங்களில் பரிதாபத்துக்குரியதாகவே இருக்கிறது. ஆலிம்களின் பொருளாதார வசதியாக இருக்கட்டும், மார்க்கம் தவிர்த்து உள்ள விடயமாக இருக்கட்டும் அவர்கள் பின்தங்கியே உள்ளனர். அதற்க்கு முக்கிய காரணம் அவர்களே தான் என்றாலும் மிகப்பெரிய காரணம் சமுதாயம்.
பள்ளிவாயில்களில் ஜும்மா மேடைகளில் நபிமார்களின் வரலாறையும் ஸஹாபாக்களின் பெருமைகளையும் பேசும் பல இமாம்களால் சமூக அவலங்களை சுட்டிக்காட்ட முடியாமல் போனதற்கு காரணம் அவர்களின் பொருளாதார நிலையும், மார்க்கம் தெரியாத முத்தவல்லிகளால் நாம் மாற்றப்படுவோம் என்ற காரணமும் தான்.
ஒருமனிதனுக்கு தேவையான சமூக ஒழுக்கங்களை போதிப்பதில் ஆலிம்களுக்கு முக்கிய பங்கு உண்டு, சமுதாய சீர்கேட்டையும் ஒழுங்கீனத்தையும் பள்ளிவாயில்களில் பேசி மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டியதும் அவர்களின் கடமை.
பள்ளிவாயில்கள் தொழுகை நடத்தும் இடமாக மட்டும் இல்லை, மேலாக அது மக்களின் அறியாமையை அகற்றும் இடமாகவும், கல்வியை, அறிவை பெருக்கும் இடமாகவும், உடற்பயிற்சி கூடமாகவும், கண்ணியமான முறையில் முஸ்லிம்களுக்கு இடையேயான பிணக்குகளை தீர்க்கும் இடமாகவும் இருந்தது, இன்று சொற்ப இடங்களில் மட்டுமே இருக்கிறது.
இன்றைய சமூகத்தில் மார்க்க கல்வி, உலக கல்வி என்று பிரிக்கப்பட்டதற்கு உலமாக்களே காரணம். பிரிட்டிஷார் இந்தியர்களின் எதிரிகள் அதனால் அவர்களின் ஆங்கிலத்தை படிக்கக்கூடாது என்று பத்வா கொடுத்து கல்வியில் முஸ்லிம்களை பின்தங்கவைத்ததுக்கு மிக முக்கிய காரணம் உலமாக்கள். உண்மையில் இஸ்லாமிய கல்வி, உலக கல்வி ஒன்று இஸ்லாத்தில் இல்லை, முஹம்மது நபி ஸல் அவர்கள் பயனுள்ள கல்வி பயனற்ற கல்வி என்றுதான் சொல்லியிருக்கிறாகள். யா அல்லாஹ் பயனுள்ள கல்வியை தருவாயாக என்று பிரார்திக்கவே சொல்லியிருக்கிறார்கள். அப்படி இருக்க, இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை சொல்லி மக்களை பின்தங்க வைத்துவிட்டனர்.
ஆனால் உலமாக்களின் தியாகத்தை என்றும் நம்மால் மறக்கமுடியாது, மறுக்க இயலாது. முதல் சுதந்திரப்போர் என்று சொல்லக்கூடிய 1857 ல் நடந்த சிப்பாய் புரட்சியாக இருக்கட்டும் அதற்க்கு முன்னோடியாக இருந்த 1806 வேலூர் புரட்சியாக இருக்கட்டும், உலமாக்களின் தியாகத்தை மறுக்கமுடியாது. இன்னும் சொல்லப்போனால் உலமாக்களால் தான் இந்த புரட்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
சிப்பாய் புரட்சிக்கு பிறகு பல மதரஸாக்களில் ஊக்கத்தொகையும் உலமாக்களுக்கான ஊக்கத்தொகையும் நிறுத்தப்பட்டன. பல உலமாக்கள் புளிய மிளாறுகளால் அடித்தே கொல்லப்பட்டனர். புளிய மரங்களில் தூக்கிலிட்டு கொல்லப்பட்டனர். இந்திய சுதந்திரம் உலமாக்கள் இல்லாமல் இல்லை என்றுதான் சொல்லமுடியும்.
அப்படியாபட்ட உலமாக்கள் இன்று தங்களின் கடமைகளை மறந்து இமாம் தொழிலை ஒரு வேலை போல் செய்கிறார்கள். இந்த நிலை மாறாத வரை முஸ்லிம்களால் எதையும் வெற்றிகொள்ளமுடியாது. இன்று பல ஊர்களில் முஸ்லிம்கள் தொழுகை இல்லாமல், குடித்துவிட்டு, சினிமா, கூத்து என்று ஊரை சுற்றிக்கொண்டும் பல தவறுகளில் ஈடுபடுவதற்கு காரணம் இஸ்லாம் இல்லாததே, அந்த இஸ்லாத்தை முறையாக போதிக்காததற்கு உலமாக்களும் ஒரு காரணம்.
2021 சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த உலமாக்களும் ஒரே குரலில் திமுகாவிற்கு ஓட்டு போடவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். தவறில்லை, ஆனால் தமிழர்களின் உரிமைகளை காக்கும் விடயத்தில் திமுக என்ன செய்யும் என்று அனுமானிக்க தவறியதில் தான் தவறு. உதாரணமாக 10 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை கைதிகளாக இருக்கும் கைதிகளை விடுதலை செய்யும் விடயத்திலாவது குறைந்த பட்சம் யோசித்திருக்கலாம்.
முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமாக குறைந்த பட்சம் 14 சீட்டுகளை (6% of 234) முஸ்லிம்களுக்கு ஒதுக்கவேண்டும் என்றாவது கேட்டு இருக்கலாம், எதையும் முன் வைக்காமல் பிஜேபி-அதிமுக ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற ஓட்டை காரணத்தை முன்வைத்து ஜும்மா மேடைகளை திமுக மேடையாக ஆக்கினார்கள், ஆனால் இன்று பிஜேபி யின் பல செயல்திட்டங்களை திமுக நிறைவேற்றிவருகிறது, சிறந்த உதாரணம் புதிய கல்வி கொள்கை.
போனது போகட்டும் இனியாவது உலமாக்கள் மக்களுக்கு நன்மை பயக்கும் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்பதே பெரும்பான்மை மக்களின் ஆவா. குறைந்த பட்சம் திமுக செய்யும் மக்கள் விரோத போக்கை வரும் ஜும்மா மேடைகளில் கண்டிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்.
குறைந்தபட்சம், சிறைவாசிகள் விடுதலை, நீட் தேர்வு மற்றும் இட ஒதுக்கீடு விடயத்தில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
No comments:
Post a Comment