[நாம் தமிழர் கட்சியினர் வைக்கும் வாதம் : இஸ்லாம் வந்தேறி மார்க்கம், இறக்குமதி செய்யப்பட மார்க்கம், அதனால் நாங்கள் முஸ்லிம்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதைவிட தமிழர்கள் என்று அடையாளப்படுத்தி கொள்வதையே பெருமையாக (?) நினைக்கிறோம். நாம் தமிழரில் பயணிக்கும் சில முஸ்லிம்கள் தங்களது பெயரை தமிழ் பெயராக மாற்றிக்கொண்டுள்ளனர். இஸ்லாத்தின் அடையாளமே பெயர் தான், அதையே மாற்றிக்கொள்ள நினைப்பது வேதனை அளிக்கிறது. பெயரளவில் முஸ்லிம்கள் என்று கூட சொல்லமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது].
ஈருலக வெற்றி முஸ்லிமாய் வாழ்வதில் தான் உள்ளது என்பதை முஸ்லிம்களே நம்பாத நிலைதான் இன்று சமுதாயத்தில் உள்ளது.
1. இஸ்லாம் என்ற ஆதி மார்க்கம்.
மதம் என்பதே மக்களின் அறியாமையால் வந்த வார்த்தை என்றுதான் சொல்வேன், காரணம் மதம் என்பதே உலகில் இல்லை. மதம் என்று சொல்லக்கூட்டிய ஹிந்து, முஸ்லீம், சீக்கியம், கிறிஸ்துவம் மற்றும் யூதம் இத்யாதி எதுவும் மதம் என்று அவர் அவர்களின் வேத புத்தகங்களில் குறிக்கப்படவில்லை. இஸ்லாம் மட்டுமே இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் என்று குர் ஆன் தெளிவாக எடுத்து இயம்புகிறது. குர் ஆன் தவிர வேறு எந்த வேத புத்தகமும் இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் அல்லது மதம் இது தான் என்று பறைசாற்றவில்லை. ஆக யாரெல்லாம் இறைவன் ஒருவன் என்றும் அவனின் திருத்தூதர் முஹம்மது (ஸல்) என்று ஒப்புக்கொண்டார்களோ அவர்கள் அனைவரும் முஸ்லிம்கள். மற்றவர்கள் முஸ்லீம் அல்லாதவர்கள்.
முஸ்லீம் அல்லாதவர்கள் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இறைவனை உருவ வழிபாடு செய்பவர்களாகவும், ஏசுவை இறைவனின் மகன் என்றும், கடவுளே இல்லை என்ற நாத்திகவாதிகளாகவும் இருக்கின்றார்கள்.
இஸ்லாத்தின் அடிப்படையில் முதல் மனிதன் ஆதம் (அலை) அவர்கள் முதல் இஸ்லாம் உலகில் உள்ளது, அதாவது உலகின் முதல் மனிதனே முஸ்லிம்தான். இதை கிருத்துவம், யூதம் தொட்டு ஹிந்து மதம் கூட ஒத்துக்கொள்கிறது.
2. இஸ்லாம் இறக்குமதி செய்யப்பட மார்க்கமா?
இன்று பல முஸ்லிம்களின் நிலைப்பாடு இஸ்லாம் அராபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. சில தலைமுறைகளுக்கு முன்னர் நாங்களும் ஹிந்துக்கள் தான்.
ஒரு விடயத்தை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும், இஸ்லாம் உலக முதல் மனிதன் தொட்டு உள்ள மார்க்கம். மனிதர்களை வழிப்படுத்த ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைத்தூதர்களை இறைவன் அனுப்பி மக்களை நல்வழிப்படுத்தினான். இஸ்லாத்தில் இருந்து மாறுபட்ட மக்களாக நமது முன்னோர்கள் இருந்து இருக்கலாம் அதற்காக எங்கள் முன்னோர்கள் முஸ்லீம் அல்லாதவர்கள், அராபியாவில் இருந்து வந்த இஸ்லாத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டோம் என்பது வாதம் தவறானது.
ஆக இஸ்லாம் ஒன்றும் இறக்குமதி செய்யப்பட அல்லது வந்தேறி மார்க்கம் அல்ல, அது மண்ணிற்க்கான மார்க்கம், இயற்கையான மார்க்கம் மேலும் உலக மக்கள் அனைவருக்குமான மார்க்கம்.
(மேலும் வரலாறை அறிய, ஆதம் பாலம், இலங்கையில் ஆதமின் காலடி சுவடு மற்றும் லெமூரியா கண்டம் வெள்ளத்தில் மூழ்கிய வரலாறை படிக்கவும்).
3. இஸ்லாம் பற்றிய நாம் தமிழர் கட்சியின் இஸ்லாமியர்களின் நிலைப்பாடு.
நாம் தமிழர் கட்சியில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களை தமிழர்களாக அடையாளப்படுத்திக்கொள்வதையே பெருமையாக நினைக்கிறார்கள். காரணம் தமிழ் மொழி தமிழர் கலாச்சாரம் இஸ்லாமிய கலாச்சாரத்தை விட உயர்ந்தது(?) என்றும், தமிழ் மொழி கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்த மூத்தகுடிகளால் பேசப்பட்ட மொழி என்றும் (கல்லும் மண்ணும் தோன்றாத போது மனிதன் எப்படி தோன்றியிருப்பான்?) இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்னாள் வந்தது என்றும் நம்புகின்றனர். நாம் தமிழர் கட்சியில் பயணிக்கும் முஸ்லிம்கள் தங்களின் பெயரை தமிழ் பெயர்களாக மாற்றிக்கொண்டுள்ளனர், தமிழ் வழி திருமணம் செய்துகொள்கின்றனர். இதெல்லாம் சொல்வது இஸ்லாத்தைவிட தமிழ் கலாச்சாரம் உயர்ந்தது என்பதையே.
4. எது உயர்ந்தது? இஸ்லாமா? தமிழ் கலாச்சாரமா?
ஏற்கனவே சொன்னதுபோல இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் என்று குர் ஆன் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் சொல்கிறது. உலகில் பல மொழிகள் பேசக்கூடிய மக்கள் தங்களின் கலாச்சாரத்தை உயர்வாக நினைக்கலாம், தவறில்லை. ஆனால் அந்த கலாச்சாரங்களின் பெருமையால் மறுமை வாழ்வில் வெற்றியடைய முடியாது. எந்த சூழ்நிலையிலும் உண்மையான முஸ்லீம் இஸ்லாத்தை குறைவாக மதிப்பிடமாட்டான்.
5. மற்றகலாச்சாரங்களை இஸ்லாம் ஏற்குமா?
இஸ்லாத்தை பொறுத்தவரை மற்றவர்களின் கலாச்சாரங்களை ஏற்பதில் தவறில்லை. ஆனால் அந்த கலாச்சாரங்கள் இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு எதிராக இருந்தால் (முக்கியமாக இறை வழிபாட்டு விடயத்தில்) ஏற்க கூடாது. இதைத்தான் முஹம்மது (ஸல்) அவர்கள் மற்றவரின் கலாச்சாரத்தை பின்பற்றாதீர்கள் என்று சொல்லியுள்ளார்கள்.
குலதெய்வம், முன்னோர்களை வணங்குவது போன்ற தமிழ்கலாச்சாரங்களை இஸ்லாமியர்கள் ஏற்கமுடியாது. அதே சமயத்தில் சித்தர்களின் மருத்துவமுறை போன்றவற்றை ஏற்கலாம்.
6. முஸ்லிம்கள் நாம் தமிழரின் பயணிக்க என்ன தடைகள்?
எந்த நாட்டில் வாழ்ந்தாலும் எந்த மொழியை பேசினாலும் இஸ்லாம் மட்டுமே ஈருலக வெற்றிக்கு வழி என்பதை மனதார நம்பி ஏற்று பின்பற்றவேண்டும். தமிழர்களாய் ஒன்றிவதையோ தமிழர்களுக்கான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதையோ இஸ்லாம் தடுக்கவில்லை. தமிழ் கலாச்சாரம் இஸ்லாத்தைவிட உயர்ந்தது என்று முஸ்லிம்கள் நினைப்பது முழுக்க முழுக்க வழிகேடு ஆகும், இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக.
உலகில் உள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் மட்டுமே தீர்வு, முஸ்லிம்களாய் வாழ்வோம், ஈருலகத்திலும் வெற்றிபெறுவோம்.
சில எடுத்துக்காட்டுகள்
1. நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு முஸ்லீம் தஞ்சை பெரியகோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு தமிழில் பூசை (?) நடக்கும் இடத்திற்கு சென்று மாலையுடன் காட்சியளித்தது. இவரை அங்கு இழுத்துச்சென்றது நாம் தமிழர் கட்சியின் கொள்கை என்பதே உண்மை.
2. தமிழர் வழியில் திருமணம் - முஸ்லிமாகிய ஒருவர் தமிழர் வழி திருமணம் என்ற பெயரில் திருமணம் செய்துகொண்டார். உண்மையிலேயே அதுதான் தமிழர் வழி திருமணமா? என்றால் இல்லை என்பது வேறு விவாதம், ஆனால் அது இஸ்லாமிய வழிமுறை இல்லை என்பதே திண்ணம்.
3. தமிழ்மொழியில் தங்களின் பெயரை மாற்றிக்கொள்வது, அல்லது ------ என்கிற ----------- என்று தமிழ்ப்பெயரை முன்னிறுத்தி பெருமைகொள்வது போன்றவையும் இஸ்லாத்திற்கு எதிரானதே.