Friday, March 22, 2019

என்ன செய்தார் எம்.பி? - எஸ்.ஆர்.விஜயகுமார் (மத்திய சென்னை) - 38/100 - ஜூனியர் விகடன் - 19 Dec, 2018

சட்டவிரோதக் கட்டடங்களால் திணறும் போக்குவரத்து
#EnnaSeitharMP
#MyMPsScore
தி.மு.க-வின் கோட்டை, மத்திய சென்னை தொகுதி. முரசொலி மாறன், தயாநிதி மாறன் எனத் தொடர்ந்து ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றார்கள். வி.வி.ஐ.பி தொகுதியாக இருந்த மத்திய சென்னையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக அ.தி.மு.க வெற்றி பெற்றது. அ.தி.மு.க-வின் எஸ்.ஆர்.விஜயகுமாருக்கு வாக்களித்த மக்கள் மாற்றத்தைக் கண்டார்களா? தொகுதியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன? 

தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம், ரிசர்வ் வங்கி, நேரு விளையாட்டு அரங்கம், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், மெரினா கடற்கரை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை,  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்கள் என முக்கியக் கேந்திரங்கள் மத்திய சென்னை தொகுதியில்தான் அடங்கியிருக்கின்றன.

எழும்பூர் ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுநர் முத்துக்குமாரிடம் பேசினோம். “போக்குவரத்து நெரிசல்தான் முக்கியமான பிரச்னை. சாலையைக் கடந்து எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்குள் செல்வதற்கும், வெளியே வருவதற்கும் நடைமேம்பாலமோ, சுரங்கப்பாதையோ இல்லை. இதனால், ரயில் நிலையம் வரும் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்” என்றார்.

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியிடம் பேசினோம். ‘‘அரசியல் கட்சியினரும் அவர்களின் பினாமிகளும் சாலைகள், பூங்காக்கள் உள்ளிட்ட அரசின் பொது இடங்களை ஆக்கிரமிப்பு செய்து, கட்டடங்களைக் கட்டியிருக்கிறார்கள். தொகுதி முழுக்கவே சட்டவிரோதக் கட்டடங்கள் அதிகம். இதனால்தான் மத்திய சென்னை போக்குவரத்து நெரிசலால் திணறுகிறது. நடைபாதைகள் இல்லை. லாட்ஜ், ஹோட்டல் எனப் பெரும்பாலான மக்கள் வந்துபோகும் இடங்களில் பார்க்கிங் வசதிகள் இல்லை. குடிநீருக்குக் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால், குழாயில் தண்ணீர் வருவதில்லை. தொகுதி மக்களின் பிரச்னைகளைக் கண்டுகொள்ளாமல் ஆளும் கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் மட்டும் எம்.பி தீவிரம் காட்டுகிறார்” எனக் கொதிக்கிறார்.
தொகுதியில் உள்ள முக்கியப் பிரமுகர்களிடம் பேசினோம். ‘‘மத்திய அரசின் சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்தால் ‘கூவம் ஆற்றின் நீர் ஓட்டம் தடைப்படும்’ என்று சொல்லி அந்தத் திட்டத்துக்குத் தடை போட்டார் முதல்வராக இருந்த ஜெயலலிதா. இந்தத் திட்டம் நிறைவேறியிருந்தால், சென்னையின் புறவழிச்சாலையில் இருந்து துறைமுகத்துக்குச் சரக்குகளை எளிதாகக் கொண்டுபோயிருக்க முடியும். இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு சொல்லி, இரண்டு ஆண்டுகள் ஆகியும் பணிகள் தொடங்கப்படவில்லை’’ என்றார்கள்.

‘‘குடிசைப் பகுதிகளில் சுகாதாரக் குறைபாடுகள் அதிகம். இதனால், அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தின் தலைசிறந்த அரசு மருத்துவமனைகள் இங்கே இருந்தும் தொற்றுநோய்களால் இங்கு உயிரிழப்புகள் நிகழ்கின்றன. நவீன ஆய்வகங்கள்கூட அரசு மருத்துவமனைகளில் இல்லை. புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு ரத்த மாதிரிகளை அனுப்புகிறார்கள். இதனால் காலவிரயம் ஆகிறது. சென்னையில் நவீன ஆய்வகங்களைக் கொண்டுவர எம்.பி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அரசு மருத்துவமனைகளில் ஊழல் தாண்டவமாடுகிறது.  துறைமுகத்தை மேம்படுத்தும் பணிகளிலும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. வில்லிவாக்கம் பகுதியில் ரயில் பாதைகளைக் கடக்க மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளும் கிடப்பில்தான் உள்ளன. தமிழகத்தில் முதன் முறையாக மத்திய சென்னையில் உள்ள 96 டாஸ்மாக் கடைகளில் ஸ்வைப் மிஷின் கொண்டுவந்திருக்கிறார்கள். டாஸ்மாக் மட்டும்தான் டிஜிட்டல் மயமாக இருக்கிறது” என்றார்கள் முக்கியப் பிரமுகர்கள்.

தி.மு.க எம்.எல்.ஏ-வான ஜெ.அன்பழகனிடம் பேசினோம். “மத்திய சென்னையின் அனைத்து சட்டசபைத் தொகுதிகளிலும் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்-தான் இருக்கிறார்கள். அதனால், அடிப்படை பிரச்னைகளைத் தீர்க்க எம்.எல்.ஏ-க்கள் கோரிக்கை விடுத்தாலும், அதைத் தீர்க்க மாநில அரசும் எம்.பி-யும் ஆர்வம் காட்டுவதில்லை. தொகுதி நிதியை எந்த அளவுக்கு அவர் பயன்படுத்தியிருக்கிறார் என்பதிலும் வெளிப்படைத் தன்மை இல்லை. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, கூடுதல் மேம்பாலங்கள் கட்ட வேண்டும். ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் கால்வாய்கள்தான் இன்னும் இருக்கின்றன. அவற்றை மாற்ற எந்த நடவடிக்கையையும் எம்.பி எடுக்கவில்லை. எட்டு வருடங்களாக அ.தி.மு.க ஆட்சிதான் நடைபெற்றுவருகிறது. பறக்கும் ரயில் சாலைகள் அருகே கஞ்சா விற்பது போன்ற சட்டவிரோதச் செயல்கள் அதிகம் நடக்கின்றன. ‘இருண்டு கிடக்கும் மெரினா கடற்கரையை மேம்படுத்த என்ன செய்யப் போகிறீர்கள்?’ என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. கடற்கரையைச் சுத்தப்படுத்தி உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற வேண்டும். இதைப் பற்றியெல்லாம் எம்.பி-க்கு அக்கறை இல்லை” என்றார்.

‘‘எழும்பூர் - சென்ட்ரல் ரயில் நிலையம் இணைப்புக் கோரிக்கை நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுபற்றி எம்.பி ஆர்வம் காட்டவில்லை. பூங்கா நகர், சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையங்கள், பறக்கும் ரயில் பாதை, சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன், மெட்ரோ ரயில் நிலையம், அரசுப் பொது மருத்துவமனை, சென்னை மருத்துவக் கல்லூரி, ரிப்பன் பில்டிங், தெற்கு ரயில்வே அலுவலகம் என்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைச் சுற்றியிருக்கும் பகுதிகள், மிக மோசமான போக்குவரத்து நெரிசலில் உள்ளன. அண்டர் கிரவுண்டு பார்க்கிங், பாதசாரிகளுக்கு நடைபாதை ஆகியவற்றை உள்ளடக்கி, போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த வசதியை உருவாக்குவது பற்றி பல ஆண்டுகளாகப் பேசி வருகிறார்கள். ஆனால், அதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் இல்லை. ஒரு மணி நேரத்தில் சுமார் 15 ஆயிரம் பாதசாரிகள் கடக்கும் நெரிசல் மிகுந்த பகுதியாகத் திகழும் இந்த இடத்தில் பூங்கா நகர், சென்ட்ரல் ரயில் நிலையம், அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றை இணைத்து ஓர் உயர்மட்ட நடைபாதைப் பாலம் ரூ.39 கோடி மதிப்பில் கட்டப்படும் என 2011-ல் தமிழக அரசு அறிவித்தது. இப்போது வரை அது அறிவிப்பாகவே இருக்கிறது. ரயில் பயணிகள், மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் உட்பட சாலையைக் கடப்பவர்களுக்குச் சுரங்கப்பாதை இருந்தும் அது போதவில்லை. மக்கள் எளிதில் செல்லும் வகையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையின் முக்கியப் பகுதிகளை இணைத்து 1,600 மீட்டர் தூரத்துக்கு நீண்ட ஆகாய நடைபாதை அமைக்கத் திட்டமிடப்பட்டது. அதுவும் செயல்வடிவம் பெறவில்லை. ரயில்வே துறையை அணுகி சென்ட்ரல் ஏரியாவில் நிலவும் பிரச்னைகளைத் தீர்க்க எம்.பி நடவடிக்கை மேற்கொண்டிருக்கலாம். நான்கரை ஆண்டுகள் வீணானதுதான் மிச்சம்’’ என்றார்கள் அந்தப் பகுதி வியாபாரிகள்.

எம்.பி விஜயகுமாரைச் சந்தித்தோம். “அறுபது அரசுப் பள்ளிகளுக்கு 2.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேசை நாற்காலிகள், அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆடிட்டோரியம்,
திரு.வி.க மேல்நிலைப் பள்ளியில் ஒரு கோடி ரூபாயில் பள்ளிக் கட்டடம், அரசுப் பள்ளி நூலகங்களுக்கு 25 லட்சம் மதிப்பீட்டில் புத்தகங்கள், அரசு நூலகங்களுக்கு எட்டு லட்ச ரூபாய்க்கு நூல்கள், 50 லட்ச ரூபாய்க்கு விளையாட்டு உபகரணங்கள், 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்குக் குடிநீர் சுத்திகரிப்பு வசதிகள், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வாங்க ஒரு கோடி ரூபாய், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு 1.3 கோடி ரூபாய், சேத்துப்பட்டு மற்றும் வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தார் சாலைகள், ஐந்து கோடி மதிப்பீட்டில் மழைநீர் உட்புகாமல் இருப்பதற்குச் சுற்றுச்சுவர், 13 இடங்களில் நிழற்குடைகள் என 25 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியை நூறு சதவிகிதம் செலவழித்திருக்கிறேன். 

தயாநிதி மாறன் எம்.பி-யாக இருந்தபோது திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருந்ததால், 7.5 கோடி நிதியை மத்திய அரசிடமிருந்து பெறமுடியாமல் இருந்தது. அதை வட்டியுடன் சேர்த்துப் பெறுவதற்கு முயன்று வருகிறேன். காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறேன். ஏ.டி.எம்., பார்க்கிங், மருத்துவமனை உள்ளிட்டவற்றுடன் எழும்பூர் ரயில் நிலையத்தை நவீனப்படுத்த வேண்டும் என்றும், எழும்பூர் - சென்ட்ரல் ரயில் நிலையங்களை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறேன். தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் அதிகக் கேள்விகள் கேட்ட எம்.பி-க்களில் நான்தான் முதலிடத்தில் இருக்கிறேன். பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவி கிடைக்கப் பரிந்துரை செய்திருக்கிறேன். தொகுதி மக்கள் மட்டுமல்லாது வெளியூர்களிருந்து அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சை பெற வருபவர்களுக்கும் சிபாரிசு செய்கிறேன். எனது தொகுதியில் கிராமங்கள் இல்லாததால் காஞ்சிபுரம் தொகுதியில் லத்தூர் ஒன்றியத்தில் உள்ள கொடூர் கிராமத்தின் வளர்ச்சிக்காக 25 லட்சம் கொடுத்திருக்கிறேன். மத்திய சென்னைத் தொகுதியில் குற்றங்களைக் குறைக்கும் வகையில் ஒரு கோடி ரூபாய்க்கு சி.சி.டி.வி கேமராக்கள் அமைக்கவுள்ளோம். மத்திய சென்னை தொகுதியில் கூவம் கரையோரம் வசித்த சுமார் இருபதாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கண்ணகி நகர், பெரும்பாக்கம் போன்ற இடங்களில் மாற்று இடம் கொடுத்து, தங்க வைத்துள்ளோம்” என்றார். 

உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

- பா.ஜெயவேல், தமிழ்ப்பிரபா

ஓவியம்: கார்த்திகேயன் மேடி




எம்.பி ஆபீஸ் எப்படி இருக்கு?

தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது பெரியமேடு பகுதியில் எம்.பி அலுவலகம் திறந்தார். அதைத்தான் எஸ்.ஆர். விஜயகுமார் பயன்படுத்துகிறார். ‘எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் சிரமம் இல்லாமல் வெளியேற நடைமேம்பாலம் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் பிரமுகர் ராஜசேகர் மனு அளித்தார். இதுபற்றி ராஜசேகரிடம் பேசியபோது, “மனு கொடுத்ததும் என்னைத் தொடர்பு கொண்ட எம்.பி., ‘குறுகலாகச் சாலை இருப்பதால் திட்டத்தைக் கைவிட்டுவிட்டார்கள். வேறு சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா என ஆய்வு செய்து வருகிறோம்’ என்று சொன்னார்” என்றார்.


No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...