Thursday, May 13, 2021

தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியமா?

மது நல்லதா? 

தவறான வழியில் கிடைக்கும் பொருளாதாரத்தால் கெடுதல் அதிகம் என்பதற்கு சரியான உதாரணம் மதுமூலம் கிடைக்கும் வருமானம். மதுவை வள்ளுவர் கூடவே கூடாது என்கிறார், மதுவை குடிப்பது விஷத்தை குடிப்பதற்கு சமம். 

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர். (திருக்குறள் 926)

 என்று மது அருந்துபவருக்கும் நஞ்சு அருந்துபவருக்கும் வேறுபாடில்லை என்கிறார்  திருவள்ளுவர்.

அரசே குடிமக்களைக் குடிகார மக்களாக்கி நாளும் நஞ்சுஊட்டுவது கொடுமையினும் கொடுமையன்றோ! இக்கொடுமையை ஒழிக்க மன்பதை ஆர்வலர்களும் மக்களும் சில கட்சிகளும் பல அமைப்பினரும் போராடி வருகின்றனர். ஆனால், மது ஒழிப்புப் போராளிகளை மடியச் செய்யும் அரசு நாடகமாடுகிறது.

2:219. (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (நபியே! “தர்மத்திற்காக) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் “(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக; நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) இவ்வாறு விவரிக்கின்றான்.

தீய குணங்கள் அனைத்திற்கும் மதுப்பழக்கம் தான் வழிகாட்டி என்று எடுத்துரைப்பதுடன் மதுபானம் அருந்தக்கூடாது எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன

மது எல்லா தீமைக்கும் ஆணிவேர் - முஹம்மது நபி (ஸல்)

இப்படி எல்லா வேதங்களும் அறிவியலும் மதுவை கூடாது என்கிறது, ஆனால் தமிழக அரசோ மதுமூலம் மக்களை யோசிக்கவிடாமல் செய்து பணம் ஈட்டுகிறது. 

தமிழக அரசின் மொத்த பட்ஜெட் 2020 ல் 20,54,000 கோடிகள், மதுமூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் 31,000  கோடிகள். ஆக 15%  பட்ஜெட் பணம் மதுமூலம் தமிழக அரசுக்கு வருகிறது. மதுவினால் தமிழகம் அடையும் நன்மையை விட தீமையே அதிகம், ஏதோ சில அதிகார வர்க்கத்தினர் பலனடைய தமிழக மக்களை மதுவுக்கு அடிமையாக்குகிறது இந்த அரசுகள்.   

தமிழகத்தில் மதுவிலக்கின் வரலாறு.

1. 1937 ஆம் ஆண்டு அது. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் ஒன்றாக இருந்த மதுவிலக்கின் மீது பற்றுக் கொண்டிருந்தார் அப்போதைய சென்னை மாகாண முதலமைச்சர் ராஜாஜி. முதல்கட்டமாக திருச்செங்கோட்டை சுற்றியுள்ள 31 கடைகளில் மட்டும் முதலில் மதுவிலக்கை அமல்படுத்தி அதற்குக் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மற்ற பகுதிகளுக்கு நீட்டிப்பதை பற்றி யோசிக்கலாம் என்று பரிந்துரைத்தார். அது அமலுக்கு வந்தது, அடுத்து (இப்போதைய நாமக்கல் மாவட்டத்தின் ராசிபுரம் பகுதியில் ) 22 மதுக்கடைகள் மூடப்பட்டன. மேலும், சேலம், சித்தூர், கடப்பா, வட ஆற்காடு ஆகிய பகுதிகளிலும் மதுவிலக்கை அமல்படுத்தினார்.ஆனால், அண்டைப் பகுதிகளில் இயங்கிக்கொண்டிருந்த மதுக்கடைகளாலும், அதிகரித்த கள்ளச் சாராயப் பிரச்சினகளாலும் இந்த மதுவிலக்கைக் கைவிட நேர்ந்தது. எப்படியானாலும், இந்தியாவில் முதன்முறையாக அமல்படுத்தப்பட்ட மதுவிலக்கு இது என்பது கவனிக்கத்தக்கது.


2. இதனைத் தொடர்ந்து 1948ஆம் ஆண்டுதான் அடுத்த மதுவிலக்குக்கான நேரம் வந்தது. இது மதுவிலக்கின் பொற்காலம் என்றும் இதுதான் பூரண மதுவிலக்கு என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர். காரணம், ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 23 ஆண்டுகள் இந்த மதுவிலக்கு அமலில் இருந்தது. 1948 முதல் 1971 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தது. இதனைச் செயல்படுத்தியவர் 1948ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.

3. அதற்குப் பிறகு, 1971 முதல் 74, 1983 முதல் 87, 1990 முதல் 91 ஆகிய சிறு சிறு கால இடைவெளிகளில் மதுவிலக்கு அமலில் இருந்தது. ஆனால், மதுக் ‘குடி’மக்கள் இதை ஏற்றுக்கொள்வதில் சிக்கல்கள் இருந்தன. கள்ளச் சாராய விற்பனை அதிகரித்தது.

4. தமிழக அரசியலில் நீண்ட நாள்களாய் மதுவிலக்கு அமலில் இருந்தது. அண்ணா முதல்வரான பிறகும் அது தொடர்ந்தது. இந்தியாவில் 1970-ம் ஆண்டுக்குப் பிறகு நிதிநெருக்கடி ஆரம்பித்தது. அப்போது மத்திய அரசு புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. அது என்னவெனில் ``மதுவிலக்கைப் புதிதாய் அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மட்டுமே உதவிப்பணம் நஷ்ட ஈடாக வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தத்திட்டம் வரும் முன்பே குஜராத்திலும், தமிழகத்திலும் மதுவிலக்கு அமலில் இருந்தது. இச்சட்டத்தில் விலக்கு அளித்து தமிழகத்துக்கு உதவிப்பணம் கோரினார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. ஆனால் மத்திய அரசு மறுத்துவிட்டது.

5. தமிழகத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்க மதுவிலக்கை ஒத்திவைக்க ஆலோசித்தனர். கொள்கை சார்ந்த பிரச்னை என்பதால் பல கருத்துகள் கட்சியிலும் வந்தன. நடிகர் எம்.ஜி.ஆரும் நீண்ட யோசனைக்குப் பின் கோவையில் நடந்த தி.மு.க பொதுக்குழுவில் ஆதரவு தெரிவித்ததோடு.. அரசு தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.. நிரந்தரமாக அல்ல என மக்களிடம் தெரிவித்தார். பின்பு 1971-72ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கும்போது 30.8.1971 முதல் மதுவிலக்கு தமிழகத்தில் ரத்து செய்யப்படுவதாக (தற்காலிகமாக) அறிவித்தார். அந்த அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் கே.கே ஷா ஒப்புதல் அளித்தார். இதன்மூலம் ஆண்டுக்கு 26 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சுதந்திரா கட்சி எம்.எல்.ஏ-க்கள் டாக்டர் ஹண்டே, வி.எஸ் ஸ்ரீகுமார், வெங்கடசாமி நாயுடு ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது.

6. ராஜாஜியும், காயிதேமில்லத்தும் முதல்வரின் இல்லத்துக்கே சென்று மதுவிலக்கை வலியுறுத்தினர். அதற்கு தமிழகத்தின் நிதி ஆதாரத்துக்காக, மத்திய அரசு மானியம் கொடுக்காமை, அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு இன்மை ஆகியவையினால் கைவிடப்பட்டது என்றார். மேலும் ``நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழ்நாடு எத்தனை நாளைக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என சட்டப்பேரவையில் கேட்டார். பின்பு நிதிநிலை சீரானபின் மீண்டும் 1973-ல் மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது. செப்டம்பர் 1-ம் தேதி 7000 கள்ளுக்கடைகள் மூடப்பட்டன.

7. எம்.ஜி.ஆர் தி.மு.க-வை விட்டு வெளியேறிய பின் கருணாநிதி மீது சுமத்திய குற்றச்சாட்டில் மதுவிலக்கை நீக்கியதும் ஒன்று.

இவர் பொறுப்பேற்ற (1977-80) காலகட்டத்தில் மதுவிலக்கு அமல்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டபோது. ஆனால், மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. 30 வயதுக்கு மேற்பட்டோர் ரூ.25 கட்டணம் செலுத்தி தாசில்தார் அலுவலகத்தில் மது பெர்மிட் பெறலாம் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது. பின்பு 2003-ம் ஆண்டில் ஜெயலலிதா அரசு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் மொத்த விற்பனை விநியோகம் செய்தது.


8. தமிழகத்தில் மதுவிலக்கு வந்தும் வராமல் போய்விட்டது. தமிழக வருவாயில் (30,000 கோடி) பெரும்பாலான வருவாயை இது ஈட்டித்தருவதாலும் பல முக்கியப் புள்ளிகளின் மதுபானத் தொழிற்சாலைகள் இயங்குவதாலும் சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. ஒவ்வோர் ஆண்டும் இதில் எளிதாய் அதிக வருவாய் வருவதால் பிற வருவாய் ஈட்டும் வழிகளைக் காண சுணக்கம் ஏற்படுகிறது. பல தொழிலாளர்கள் இதில் பணிபுரிவதால் மதுக்கடைகளை மூடும்போது வேலையிழக்கும் அபாயமும் உள்ளது. நிச்சயம் மாற்றுவழி கண்டறிந்து வருவாயை பெருக்க வேறு வழி காணப்பட வேண்டும்.


இப்படி மாறி மாறி தமிழக அரசை நடத்த பொருளாதாரம் இல்லை என்று மதுவிலக்கை அமல்படுத்தி நீக்கி என்று அரசியல்வாதிகள் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். கடைசியில் கொரோனாவை காரணம் காட்டி சென்னையில் நான்கு மாதம் மதுக்கடைகளை மூடி வைத்திருந்தனர். 


அந்த நான்கு மாதத்தில் பலரின் வாழ்வில் ஒளி வீசியது, சில எடுத்துக்காட்டுகள் கீழே.


1. வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறும்போது, ‘‘மது இல்லாமல் வாழவே முடியாது என, எந்த வேலைக்கும் போகாமல் எப்போதும் போதையிலேயே இருக்கும் என் கணவர் இதுநாள் வரை வீட்டுக்கு சுமையாகத்தான் இருந்தார். கடந்த 4 மாதங்களாக மதுக்கடைகள் இல்லாததால், அவரிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மது இல்லாமலும் வாழ முடியும் என்பதை உணர்ந்து, தற்போது வீட்டுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்கி வருவது என பொறுப்புள்ள குடும்பத் தலைவராக மாறிஉள்ளார். மதுவிலக்கை அமல்படுத்த இதுவே சரியான நேரம். சென்னையில் இருந்து இந்தப் பணியை அரசு ஆரம்பிக்கலாம்’’ என்றார்.


2. கொடுங்கையூர் எழில் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறும்போது, ‘‘எப்போதும் போதையிலேயே இருக்கும் என்மகன், மதுவில் இருந்து மீள்வான்என்ற நம்பிக்கையே இல்லை. மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், மதுப் பழக்கத்தில் இருந்து மீண்டுள்ளான். அவனுக்கு திருமணம் செய்துவைக்க திட்டமிட்டுள்ளோம். சென்னையில் இனி மதுக்கடையை அரசு திறக்கக் கூடாது’’ என்றார்.


3. தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மது குடிக்கும் பழக்கம் உள்ள ஒருவர் கூறும்போது, ‘‘இதுநாள் வரை காலை எழுந்தவுடன் கை, கால்கள் உதறும். எப்போது பிற்பகல் 12 மணி ஆகும்.. மதுக்கடை திறப்பார்கள் என்று காத்திருப்பேன். இப்போது அந்த எண்ணமே இல்லை. அதனால், குடும்பத்தை பற்றி சிந்திக்க நேரம் கிடைக்கிறது. மது அருந்துவோரின் செயல்பாடுகளால் மதுக்கூடங்கள் மட்டுமின்றி சுற்றுப்புறமும் வழக்கமாக துர்நாற்றமாக இருக்கும். சென்னையில் அந்த துர்நாற்றம் கடந்த 4 மாதமாக இல்லை. இந்த நிலை நீடிக்க வேண்டும் என்றால், மதுக்கடைகளை திறக்கக் கூடாது’’ என்றார்.


கண்ணுக்கு தெரியாத பல குடும்பம் இதன்மூலம் நிம்மதியாக வாழ்ந்து வந்தது, ஆனால் மீண்டும் தமிழக அரசு திறந்துவிட்டது. புதிதாக பதவி ஏற்று இருக்கும் திமுக அரசு மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுமா? 


வாகன விபத்தில் (குடியின் காரனாக) சென்னை இந்தியாவில் மூன்றாம் இடத்தில் உள்ளது.


குடித்துவிட்டு வாகனகளை ஓட்டுவதன் மூலம் அதிகமாக விபத்துகள் நடக்கிறது, சென்னை மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஒரு பாவமும் அறியாத அடுத்த வண்டிக்காரனை குடித்துவிட்டு  வண்டி ஓட்டுபவனால் மரணம் அடைவதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? ஆக எப்படி பார்த்தாலும் மது என்பது சாபக்கேடே. 


இந்தியாவில் ஒவ்வொரு 96 நிமிடத்திற்கும் குடியினால் ஒருவர் இறக்கிறார்.


மதுவிலக்கு சாத்தியமா?


மதுவிலக்கு உடனடியாக சாத்தியம் இல்லை, ஆனால் என் சிறிய அறிவுக்கு எட்டியவரை கீழே உள்ளதுபோல செய்தால் சாத்தியமே. 


1. தமிழகத்தில் நடக்கும் ஊழல், லட்சத்தை ஒழித்து, கனிம வளங்களை சரியாக நிர்வகித்தாலே மதுவில் கிடைக்கும் வருமானத்தை விட பல மடங்கு வருமானம் கிடைக்கும். 


2.  தேவையற்ற இலவசங்களை நிறுத்தி அந்த பணத்தை பயன்படுத்தலாம். 


3. மதுக்கடைகளில் உள்ள பார்களை மூடவேண்டும்.


4. ஆதார் கார்டை மதுக்கடைகளில் இணைத்து குறிப்பிட்ட அளவு மதுவை விற்க வேண்டும் & 21 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் விற்க வேண்டும். பின்பு 


5. மதுவின் விலையை உயர்த்தவேண்டும். பிறகு 


6. மதுபானத்தில் உள்ள எத்தனாலின் அளவை குறைக்கவேண்டும்.


7. மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டினால் ஓட்டுநர் உரிமத்தை பறிக்கவேண்டும். 


8. பள்ளிக்கூடத்திற்கு அருகில், ஊரின் நடுவில், வழிபாட்டு இடங்களுக்கு அருகாமையில் உள்ள மதுக்கடைகளை மூடவேண்டும். 


9. மதுபோதையில் செய்யும் தவறுகளுக்கு இரட்டிப்பு தண்டனை வழங்கப்படவேண்டும்.


இந்த நடவடிக்கைகளை 3-4 வருடங்களுக்குள் எடுத்தால், 5 வது வருடம் பூரண மதுவிலக்கை அமல்படுத்தலாம். அல்லது மதுவின் விலையை பலமடங்கு உயர்த்தி எத்தனாலின் அளவை குறைத்தால் மக்கள் தானாகவே மதுவை வாங்காமல் விட்டுவிடுவார்கள்.


மக்களுக்கான அரசு மதுவிலக்கை அமல்படுத்தும்.

No comments:

மது குடிக்கும் 100 இந்தியர்களில் 13 பேர் தமிழர்கள்

13% குடிகாரர்களை கொண்ட தமிழகம் தமிழகத்தில் உத்தேசமாக 2.2 கோடிப் பேர் மதுப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் . இவர்களில் 75% பேர் ...