சட்டம் இயற்றப்படும் முறையை அறியும் முன் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தின் அவைகளை பற்றி தெரிந்துகொள்வோம்.
நாடாளுமன்றம்
மேலவை கீழவை என்று இரு அவைகள் உள்ளன.
மேலவை : நாடாளுமன்றத்தில் உள்ள இருஅவைகளில் ஒன்று மேலவை, மாநிலங்கள் அவை அல்லது ராஜ்ய சபா என்ற பெயரும் இதற்க்கு உண்டு. இந்த அவையின் (MP) உறுப்பினர்களின் எண்ணிக்கை 250. பதவிக்காலம் 6 ஆண்டுகள். இவர்களை மாநிலங்களில் உறுப்பினர்களான MLA க்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
கீழவை : நாடாளுமன்றத்தின் மற்றொரு அவை கீழவை, இதன் மொத்த (MP ) உறுப்பினர்கள் 552. இவர்களை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பார்கள். இதை லோக் சபா என்றும் அழைக்கலாம்.
சட்டமன்றம்:
ஒன்றிய அரசு செயல்பட சட்டமியற்ற நாடாளுமன்றம் இருப்பது போல, ஒவ்வொரு மாநில அரசும் செயல்பட மாநில சட்டமன்றங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் 22 மாநிலங்களின் சட்டமன்றம் ஒரு அவையை மட்டும் கொண்டது, மற்ற 6 மாநிலங்களில் இரண்டு அவைகள் உள்ளன.
ஆந்திரபிரதேஷ் , பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் உத்தரபிரதேஷ் ஆகிய ஆறு மாநிலங்களின் சட்டமன்றத்தில் இரண்டு அவைகள் உள்ளன.
Legislative Assembly (Vidhan Sabha) - சட்டமன்ற கீழவை - தேர்தல் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.
Legislative Council (Vidhan Parishad) - மாநிலச் சட்டமன்ற மேலவை. இது ஒரு நிரந்தர மன்றமாகும், ஆட்சிக் கலைப்பினால் இந்த மன்றம் கலைக்கப்படுவதில்லை. இதன் உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 வருடங்கள் இதல் மூன்றில் 1 பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இம்மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கீழவை சட்டமன்றங்களின் அல்லது கீழவை சட்டப் பேரவைகளில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையை மிகாமல் இருக்கை இருக்கவேண்டும்.
இந்திய மாநிலங்களவையைப் போன்று இங்கும் சட்டப் பேரவை கீழவையில் முன் மொழிந்த மசோதா, தீர்மானங்கள் மற்றும் திட்டங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு விவாதிக்கவும், விமர்சிக்கவும் படுகின்றன. அரசின் செயல்பாடுகள் விமர்சிக்கவும் படுகின்றன. மேலவை தன்னிச்சையாக சட்டங்களை இயற்றும் உரிமை கிடையாது. கீழவையால் நிறைவேற்றப்பட்ட சட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் உரிமை மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது. இரு அவைகளுக்கும் முரண்பாடு ஏற்படும் போது கீழவையின் முடிவே இறுதியானதாக ஏற்றுக்கொள்ளப்படும்.
சட்டம் இயற்றும் முறை
மாநிலமாக இருந்தாலும் ஒன்றிய அரசாக இருந்தாலும் சட்டம் இயற்றும் முறை ஒன்றுதான்.
ஒன்றிய அரசு சட்டமியற்றும் முறை
புதிய சட்டத்தை உருவாக்க அல்லது திருத்தம் செய்ய துறை அமைச்சரோ அல்லது தனி MP யோ வரைவை கொடுக்கலாம். துறை அமைச்சர் செய்வதை பொது சட்டம் என்றும் தனி ஒரு MP செய்வதை தனி சட்டம் அல்லது தனி நபர் மசோதா என்றும் சொல்லலாம்.
சட்டம் இயற்றி ஒப்புதல் பெரும் வரை மூன்று கட்டமாக நடக்கும்.
முதல் கட்டம் : கீழவையில் துறை அமைச்சரோ அல்லது தனி ஒரு MP யோ சட்டத்தின் வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்.
இரண்டாம் கட்டம்: சட்டம் பற்றி விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். மொன்றில் இரண்டு மடங்கு MP க்கள் வாக்கு செலுத்தும் போது அது மேலவையின் ஒப்புதலுக்கு போகும், அங்கும் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடக்கும். அந்த அவையில் ஏற்றுக்கொள்ளப்படும் போது அது மூன்றாவது கட்டமான ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
மூன்றாவது கட்டம்: இரண்டு அவையிலும் ஒப்புதல்பெறப்பட்ட சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அல்லது மறுபரிசீலனைக்கு பிறகு சட்டமாக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்படும்.
சட்டமன்றத்தில் / மாநிலங்களில் சட்டம் இயற்றும் முறை:
ஆறு மாநிலங்களில் நாடாளுமன்றத்தில் நடந்தது போன்று நடக்கும், பிறகு அது ஆளுநர் மற்றும் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு சட்டமாகும், மற்ற மாநிலங்களில் ஒரே ஒரு அவை இருப்பதால், பெரும்பான்மை வாக்கெடுப்புக்கு பிறகு ஆளுநர் மற்றும் குடியரசு தலைவரின் ஒப்புதலோடு சட்டமாகும்.
ஆனால் மாநில அரசு இயற்றும் சட்டத்தை உடனே நடைமுறைப்படுத்தாமல் முட்டுக்கட்டை போட மத்திய அரசு முயலும், அதற்க்கு வழிவகை செய்யும் படியாகத்தான் நம் நாட்டின் சட்டங்கள் இருக்கிறது.
மாநில அரசு இயற்றும் சட்டங்கள் குறித்து முடிவெடுப்பதில் ஆளுநர்களுக்கு நான்கு விதமாக அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
1. அச்சட்ட வரைவுக்கு ஒப்புதல் அளிக்கலாம்.
2. விளக்கம் கேட்டு மாநில அரசுக்கு அனுப்பலாம்.
3. குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பிவைக்கலாம்.
4 . மறுபரிசீலனை செய்யச் சொல்லி சட்டத்தைத் திருப்பியனுப்பலாம்.
விளக்கம் கேட்டு அனுப்பிவைக்கும்போது சில திருத்தங்களுடன் அந்தச் சட்ட வரைவு ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்புள்ளது. குடியரசுத் தலைவரின் கருத்து கேட்டு அனுப்பிவைப்பது காலதாமதப்படுத்துவதற்கான சட்டரீதியான ஒரு வாய்ப்பு. ஒப்புதலுக்கான காத்திருப்புக் காலத்தில் சட்டத்தைத் திருப்பியனுப்புவது என்பது சட்டரீதியில் அந்தச் சட்ட வரைவு இறந்துவிட்டது என்பதையே குறிக்கும். மீண்டும் ஒரு முறை அது ஆளுநருக்குப் புதிதாகவே அனுப்பப்பட வேண்டும். ஆளுநரின் இந்தத் தன்விருப்புரிமை அதிகாரம் கேள்விக்கு உட்பட்டது அல்ல.
சில எடுத்துக்காட்டுகள்:
1. கடந்த பிப்ரவரி 26 (26-02-2021) அன்று தேர்தல் அறிவிக்கப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னதாக அவசரம் அவசரமாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தினருக்குத் தற்காலிகமாக 10.5% உள் இடஒதுக்கீட்டுக்கு வகைசெய்யும் அந்தச் சட்ட வரைவுக்கு அடுத்த இரண்டாவது நாளிலேயே ஆளுநர் ஒப்புதல் அளித்து, அதே நாளில் அரசிதழிலும் வெளியாகிவிட்டது. இந்த சட்டத்தின் நோக்கம் தேர்தல் அரசியலுக்கானது என்ற விமர்சனத்தை ஒதுக்கிவைத்துவிட்டுப் பார்த்தால், ஆளுநர் ஒப்புதல் அளிக்கத் தயாராக இருந்தால் மாநிலச் சட்டமன்றங்கள் எந்தவொரு சட்டத்தையும் ஒருசில மணி நேரங்களில் இயற்றி நடைமுறைப்படுத்திவிட முடியும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
2. நான்கு மாதங்களுக்கு முந்தைய நிகழ்வொன்றையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் அவ்வளவு எளிதில் ஒப்புதல் அளித்துவிடவில்லை. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக எதிர்க்கட்சி ஆளுநரை வலியுறுத்தியபோதும் பயனில்லை. ஒன்றரை மாத இழுத்தடிப்புக்குப் பிறகு நிர்வாகரீதியில் அந்த முடிவைச் செயல்படுத்துவதற்கு அரசாணை வெளியானது. உடனே, ஆளுநரிடமிருந்து ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தாமதங்கள்
1. குடியரசுத் தலைவரின் கருத்து கேட்டு அனுப்பப்பட்ட சட்ட வரைவுகளுக்கு உடனடியாக அவர் ஒப்புதல் அளிக்கலாம் அல்லது நிறுத்திவைக்கலாம். குறிப்புகளுடன் மீண்டும் திருப்பியனுப்பவும் செய்யலாம். குடியரசுத் தலைவரால் அவ்வாறு திருப்பியனுப்பப்பட்ட சட்ட வரைவுகளை ஆறு மாத காலத்துக்குள் மாநில சட்டமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு, புதிய சட்ட வரைவை நிறைவேற்ற வேண்டும். இந்தக் கால வரையறை என்பது சட்டமன்றங்களுக்குத்தானேயொழிய ஆளுநருக்கோ அல்லது குடியரசுத் தலைவருக்கோ அல்ல. மறுமுறை இயற்றப்பட்ட சட்ட வரைவுகளுக்கான ஒப்புதல்களுக்கும்கூட இதே வழியில் தாமதங்கள் நேரலாம்.
2. பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தபோது தமது கருத்து கேட்டு ஆளுநர்களிடமிருந்து வந்த சட்ட வரைவுகளில் சுமார் 80% வரைவுகளுக்கு அனுமதியளித்தார். ஒப்புதலை நிறுத்திவைத்துக்கொண்டது 10%, குறிப்புகளுடன் திருப்பியனுப்பியதும் உண்டு. பிரணாப் முகர்ஜியின் காலத்தில் அவ்வாறு கருத்து கேட்டு அனுப்பப்பட்ட மாநிலங்களில் முதலிடம் வகித்தது மஹாராஷ்டிரம், இரண்டாவது கர்நாடகம், மூன்றாவது தமிழ்நாடு. ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கும் டெல்லியிலிருந்து அனுப்பப்பட்ட சட்ட வரைவுகள் எதுவுமே குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற முடியாமல் போனது.
3. சட்ட வரைவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் விளக்கங்கள் கேட்டு அனுப்புவது அவ்வப்போது நடப்பதுண்டு. தங்களது விருப்புரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தித் திருப்பியனுப்புவது வழக்கமில்லை என்றாலும், அதுவும்கூட நடக்கத்தான் செய்கிறது. கடந்த 2018-ல் கேரளத்தில் தொழிற்கல்வி கல்லூரிகள் (மருத்துவக் கல்லூரி சேர்க்கைகளை வரன்முறைப்படுத்துதல்) சட்டத்தை ஆளுநர் தன்னுடைய விருப்புரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தித் திருப்பியனுப்பிவிட்டார்.
அவசரச் சட்டம்
இந்த நேரத்தில் தமிழகம் தழுவிய அளவில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டமும் அதையொட்டி பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டமும் நினைவுக்கு வந்தால் மகிழ்ச்சி. ஒன்றிய அரசின் மிருக வதைத் தடுப்புச் சட்டத்துக்கு மாநில அளவில் கொண்டுவரப்பட்ட திருத்தத்துக்கு உடனடியாக ஆளுநரும் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்தனர். ஆனால், அதற்காக அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் முகாமிட்டு, பிரதமரின் ஆதரவையும் உள் துறை அமைச்சகத்தின் ஆதரவையும் பெற வேண்டியிருந்தது. 2014-ம் ஆண்டிலேயே இத்தகைய அவசரச் சட்டம் ஒன்றுக்கான முயற்சிகள் நடந்தாலும் அதற்கு குடியரசுத் தலைவரிடமிருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை என்பதையும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அப்போது நினைவுபடுத்தினார்.
ஆக என்னதான் மாநிலங்கள் தனக்கான சட்டங்களை இயற்றினாலும், ஒன்றிய அரசின் அனுமதி இல்லாமல் சட்டங்களை நடைமுறைப்படுத்தமுடியாது, அதுபோல மாநில பட்டியலில் உள்ள விடயத்தில் மட்டும் தான் மாநிலங்கள் சட்டங்களை இயற்றமுடியும்.
Reference : சட்டமியற்றும் அதிகாரம் எதுவரை? | power of cm - hindutamil.in